மராட்டிய, அரியானா சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 90 உறுப்பினர்களைக் கொண்ட அரியானா சட்டமன்றத்தில் பா.ஜ.க. அறுதிப் பெரும்பான்மை பெற்றிருக்கிறது. 288 உறுப்பினர்களைக் கொண்ட மராட்டிய சட்டமன்றத்தில் அது 122 இடங்களைக் கைப்பற்றி மற்ற கட்சிகளைக் காட்டிலும் அதிக இடங்களைப் பெற்றிருக்கிறது. ஆனால் அறுதிப் பெரும்பான்மையை அது பெறவில்லை.

 

இடங்கள்

வாக்கு விகிதம்

மராட்டியம்

2014

2009

2014

2009

பாஜக

122

46

28%

14%

சிவசேனா

63

44

19%

16%

காங்கிரசு

42

82

18%

21%

என்சிபி

41

62

16%

16%

எம்என்எஸ்

1

13

3%

6%

பிற கட்சிகள்

12

17

11%

11%

சுயேச்சை

7

24

5%

16%

மொத்தம்

288

288

100%

100%

         

அரியானா

2014

2009

2014

2009

பாஜக

47

4

33%

9%

ஐஎன்எல்டி

(சௌடாலா)

19

31

24%

26%

காங்கிரசு

15

40

21%

35%

பிற கட்சிகள்

4

8

11%

17%

சுயேச்சை

5

7

11%

13%

மொத்தம்

90

90

100%

100%

மக்களவைத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்று 25 ஆண்டுகளுக்குப் பிறகு முதலாவதாக, தனிப் பெரும்பான்மை பெற்ற ஒரு தனிக் கட்சியாக தில்லியில் ஒரு அரசை அது அமைத்திருப்பதற்கு வெறும் 5 மாதங்களுக்குப் பின்னர் இந்தத் தேர்தல்கள் நடைபெற்றிருக்கின்றன. இராணுவ – தொழில் – நிதித் துறைகளில் இந்தியாவை ஒரு உலக சக்தியாக உருவாக்க வேண்டுமென்ற பெரு முதலாளி வர்க்கத்தின் திட்டத்தில் முக்கிய இடம் வகிக்கும் இந்த இரு மாநிலங்களிலும் பாஜக தலைமையில் அரசாங்கங்கள் அமைய தேர்தல் முடிவுகள், வழி ஏற்படுத்தித் தந்திருக்கின்றன. 

தேர்தல் முடிவுகளை, “மக்களுடைய ஆணை”யென முதலாளி வர்க்க ஊடகங்கள் காட்டி வருகின்றன. ஆனால், அரியானாவில் பாஜக ஒரு சிறுபான்மையான வாக்குகளைக் கொண்டுதான் ஒரு பெரும்பான்மையான இடங்களைப் பிடித்திருக்கிறது என்பதை உண்மைகள் காட்டுகின்றன. பாஜக, அங்கு வெறும் 33% வாக்குகளை மட்டுமே பெற்றிருக்கிறது. 25% வாக்காளர்கள் வாக்களிக்காததை கணக்கில் எடுத்துக் கொண்டால், மொத்த வாக்காளர்களில் வெறும் 25% வாக்குகளை மட்டுமே அதாவது நான்கில் ஒருவர் மட்டுமே பாஜக வேட்பாளருக்கு வாக்களித்திருக்கிறார்கள். ஆளும் கட்சி, மக்களுடைய ஆணை-யைப் பெற்று விட்டதாக கூறிக் கொள்வது என்று சொல்லிக் கொள்வதன் உண்மையான சாரம்சம் இதுதான்.

மராட்டிய மாநிலத்தில் 14%-த்திலிருந்து 28%-மும், அரியானாவில் 9%-இலிருந்து 33%-மும் பாஜக தனது வாக்குகளை அதிகப்படுத்தியிருப்பது, கடந்த ஓராண்டிற்கும் மேலாக பெரு முதலாளி வர்க்கம் திட்டமிட்ட முறையில் நடத்தி வந்திருக்கும் பரப்புரையின் விளைவாகும். நமது சமுதாயத்திலுள்ள எல்லா பிரச்சனைகளுக்கும் ஊழல் அரசில்வாதிகளும், பலவீனமான பிரதமரும், ஒரு கூட்டணி அரசாங்கத்தை நடத்துவதின் கட்டாயங்களுமே காரணம் என முக்கிய தொலைக் காட்சி செய்தி ஊடகங்களும், ஒட்டுமொத்த நிறுவன ஊடகங்களும் பரப்புரை நடத்தி வந்துள்ளன. இந்தப் பரப்புரையின் மூலம், முதலாளித்துவ சீர்திருத்தத் திட்டங்கள் மீதும், தங்களுடைய வாழ்வாதாரம் மற்றும் உரிமைகள் மீது நடத்தபட்டுவரும் தாக்குதல் மீதும் தொழிலாளர்கள், உழவர்கள் மற்றும் பரந்துபட்ட மக்களுடைய கோபத்தைத் திசைதிருப்பி பெரு முதலாளி வர்க்கம், தன்னுடைய அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு நாளும் மீண்டும் மீண்டும் பரப்புரை செய்யப்பட்ட மையக் கருத்து, ஒரு தனிக் கட்சி பெரும்பான்மை கொண்ட அரசாங்கத்தை நடத்தும் ஒரு வலிமை மிக்க பிரதர் தான் இந்தியாவிற்கு தேவை என்பதாகும். இந்திய பெரு நிறுவனங்களுடைய எல்லா பிரதிநிதிகளும் இந்தப் பல்லவியைத் தான் மாற்றமின்றி பாடி வந்தனர்.

 “மோடி போன்ற ஒரு வலுவான தலைவரால் நடத்தப்படும் ஒரு பெரும்பான்மை அரசாங்கம், எல்லா இந்தியர்களுக்கும் நல்ல காலத்தைக் கொண்டுவரும்!” தேர்தலுக்கு முந்தைய பல்வேறு கருத்துக் கணிப்புக்கள் மூலமாகவும், ஊடகங்களின் பரப்புரைகள் மூலமாகவும், இந்தக் கருத்தானது உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள நம்முடைய மக்களுடைய தலைகளில் ஏற்றப்பட்டது. இப்படியாக, நிகழ்ச்சி நிரலை பெரு முதலாளி வர்க்கம் தீர்மானித்து, மக்களுக்கு எதிரிலுள்ள “வாய்ப்புகளை” வரையறுத்திருக்கின்றனர்.

தேர்தல்களுக்கு முன்பாக மராட்டியம் மற்றும் அரியானாவில் முன்பிருந்த பழைய கூட்டணிகளை, பெரும் நிறுவனக் குடும்பங்கள் திட்டமிட்டு உடைத்தனர். அதன் மூலம் போட்டியிடும் ஒவ்வொரு கட்சியும் தத்தம் தனிப்பட்ட வலிமையைக் காட்ட நிர்பந்திக்கப்பட்டனர். இந்த நிறுவனங்கள் தங்களுடைய வலிமையையும், பணத்தையும் பாஜக-வின் பரப்புரையில் முதலீடு செய்தனர்.

பாஜக-வின் நிலை வலுப்படுத்தப்பட்டு, காங்கிரசு கட்சி மற்றும் பிற மாநில அளவிலான கட்சிகளுடைய நிலை பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. மாநிலங்கள் அவையில் பாஜக-விற்கு தற்போது பெரும்பான்மை ஆதரவு இல்லாத நிலையில் இந்த இரு மாநிலங்களுடைய முடிவுகள், பாஜக-வை வலுப்படுத்தும்.

2014 தேர்தல் முடிவுகளின் போக்கையும், ஊழல் குற்றச் சாட்டுகள் மூலமாகவும், ஊழல் வழக்குகளில் நீதி மன்றத் தீர்ப்பின் மூலமாகவும் பல்வேறு அரசியல் தலைவர்களை மதிப்பிழக்கச் செய்து, அவர்களை பலவீனப்படுத்தும் போக்கையும் சேர்த்துப் பார்க்கையில், நமது நாட்டுப் பெரு முதலாளி வர்க்கம் தன்னுடைய ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவதற்கு ஒருங்கிணைந்த முயற்சி மேற்கொண்டு வருவதை வெளிப்படுத்துகிறது.

நாட்டின் ஒரு பகுதியில் வலுவான ஆதரவு கொண்ட ஒரு மாநில அளவிலான அரசியல் கட்சியோ, ஒரு தலைவரோ, பெரு முதலாளி வர்க்கத்திற்கு ஒரு அச்சுறுத்தலல்ல. பெரு முதலாளி வர்க்கத்தின் மையத் திட்டத்தோடு சார்ந்து போகாத அரசியல் சக்திகள், அமெரிக்க ஏகாதிபத்திய தலையீட்டிற்கும், அவர்களுடைய சூழ்ச்சிகளுக்கும் கருவிகளாக மாறக்கூடிய வாய்ப்பு இருப்பதிலிருந்து அந்த அச்சுறுத்தல் வருகிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியம், ஒருதுருவ உலகைத் தன்னுடைய முழு ஆதிக்கத்தின் கீழ் நிறுவ வேண்டுமென்ற திட்டத்தைக்  நடைமுறைப்படுத்தி வருகிறது. அதை நிறைவேற்ற ஆசியாவைக் கைப்பற்ற வேண்டியது முக்கியமாகும். அதற்காக, தன்னுடைய “ஆசிய மைய”க் கொள்கையோடு, இந்தியா முழுவதுமாக ஒத்துழைக்க வேண்டுமென அமெரிக்கா விரும்புகிறது.

இந்தியப் பெரு முதலாளி வர்க்கம், உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து அதை விரிவு படுத்த வேண்டுமெனப் போராடி வருகிறது. அது மற்ற நாட்டு ஏகபோக முதலாளிகளோடும் போட்டியிட்டு வருகிறது. அன்னிய மூலதனம் நமது நாட்டிற்கு நுழைவதற்கான தடைகளைக் குறைத்து வருவதோடு, இந்திய மூலதனம் அயல்நாடுகளில் முதலீடு செய்வதற்கு உள்ள தடைகளும் குறைக்கப்பட வேண்டுமென ஏகபோக முதலாளிகள் விரும்புகின்றனர்.

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலுள்ள உறவு, கூட்டு சதியும், போட்டியும் நிறைந்ததாகும். அணு தொழில் நுட்பத்தைப் பெறுவதற்காகவும், ஐநா பாதுகாப்புக் குழுவில் சேருவதற்காகவும், அமெரிக்காவுடன் முக்கிய கூட்டாளி என்ற நிலையை இந்திய ஆளும் வர்க்கம் ஏற்றுக் கொண்டது. அதே நேரத்தில், அது மேற்கிலும், மத்திய ஆசியாவிலும் அதனுடைய இடத்தைக் கட்டுப்படுத்தும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முயற்சிகளை அது எதிர்க்கிறது. இராக், லிபியா ஆகிய நாடுகள் அழிக்கப்படுவதும், இரானை முற்றுகையிட்டிருப்பதும், இரானோடு வாணிகம் நடத்துவதற்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்திருப்பதும் இந்தியப் பெரு முதலாளி வர்க்கத்தின் நலன்களைப் பாதித்திருக்கின்றன.

பல்வேறு நாடுகளில் உள்நாட்டு முரண்பாடுகளை அமெரிக்க ஏகாதிபத்தியமும், அதனுடைய கூட்டாளிகளும் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்தி, அந்த நாடுகளை நிலைகுலையச் செய்தும், தங்களுடைய நலன்களுக்கு ஏற்ற ஆட்சி மாற்றத்தைச் செய்தும் வந்திருக்கிறார்கள் என்பதை உலக அளவிலான அரசியல் வளர்ச்சிகள் காட்டுகின்றன. இதை அவர்கள் லிபியாவில் செய்திருக்கின்றனர். சிரியாவில் தொடர்ந்து செய்து வருகின்றனர். யூகாஸ்லாவியாவில் அவர்கள் முன்னர் வகுப்புவாத தேச வெறி சக்திகளைத் தூண்டிவிட்டு, அந்த நாட்டை சிதறுண்டுபோகச் செய்தனர்.

இந்தியாவில் மத்தியிலும், மாநிலங்களிலும் தங்களுடைய நச்சுக் கொடுக்குகளை நீட்ட அமெரிக்க ஏகாதிபத்தியமும், அதனுடைய கூட்டாளிகளும் முயன்றுவருகின்றனர். 1997-இல் ஆந்திர பிரதேச சந்திரபாபுவில் துவங்கி, பல்வேறு மாநில அளவிலான கட்சிகளோடும், முதலமைச்சர்களோடும் தங்களுடைய தொடர்புகளை அண்மைக் காலத்தில் அவர்கள் வலுப்படுத்தியிருக்கின்றனர். குறிப்பிட்ட மாநிலங்களுக்கு கொள்கை அடிப்படையிலான கடன் கொடுப்பதென்ற உலக வங்கியின் அடிப்படையின் மூலம், ஏகாதிபத்தியர்கள் மாநிலங்கள் அளவில் தொடர்புகளை அமைத்துக் கொள்ளவும், கொள்கைகள் மீது செல்வாக்கு செலுத்தவும், பயன்படுத்தி வருகிறார்கள்.

அண்மையில் இல்லரி கிளின்டன் இந்தியா வந்த போது, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க முதலமைச்சர்களைச் சந்திப்பதை தனது வருகையின் முக்கிய செயலாக நடத்தியிருக்கிறார். சிரிலங்கா மற்றும் வங்காள தேசத்துடன் இந்தியாவின் உறவு பற்றிய மத்திய கொள்கைக்கு, இம் மாநிலத் தலைவர்களுடைய எதிர்ப்பிற்கு மேலும் எண்ணெய் வார்த்துவிட்டுப் போயிருக்கிறார் அவர்.

நாடுகளை நிலைகுலையச் செய்ய பல்வேறு யுக்திகளை ஏகாதிபத்திய சக்திகள் பயன்படுத்தி வருகின்றனர். தங்களுடைய எதிராளிகளுடைய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதைத் தடுத்து நிறுத்துவதற்காக, பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அரசு அல்லாத அமைப்புகளுக்கு (NGOs)நிதியுதவியளித்து அவர்களுடைய எதிர்ப்பு இயக்கங்களை இரகசியமாக ஆதரித்து வருகின்றனர். ஊழல்களை வெட்டவெளிச்சமாக்குவதன் மூலமும், உளவு நடவடிக்கைகள் மூலமாகவும், தொலைபேசி உரையாடல்களை வெளியிடுவதன் மூலமும் பல்வேறு இந்திய நிறுவன குடும்பங்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் எதிராக ஊடகங்கள் பரப்புரை நடத்தி வருகின்றனர். இவ்வாறு பல முக்கிய இந்திய முதலாளிகளும், அரசியல்வாதிகளும் உயர் அதிகாரிகளும் மதிப்பிழந்து வருகின்றனர். ஊழலுக்கு எதிராகவும், முதலாளிகளும் அரசு அதிகாரிகளும் கை கோர்த்து கொள்ளையிடிக்கும் குரோனி முதலாளித்துவத்திற்கு எதிராகவும் போராடுவது என்ற பெயரிலும், வெளிப்படைத் தன்மை, செயலுக்கு பொறுப்பு ஏற்றுக் கொள்வது, நல்ல ஆளுமை ஆகியவற்றை நிறுவுவது என்ற பெயரிலும் இவையனைத்தும் செய்யப்பட்டு வருகின்றன.

இந்திய பிரச்சனைகளில் எல்லா பக்கங்களிலிருந்தும் அன்னிய ஏகாதிபத்தியர்களின் தலையீடு அதிகரித்து வருகின்ற பின்னணியில் பார்க்கும் போது, 2014-லின் அரசியல் வளர்ச்சிகள், பெரு முதலாளி வர்க்கம் தன்னுடைய ஆதிக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்ளவும், வெளிநாட்டு தலையீடு மற்றும் நிலைகுலைவுக்கான வாய்ப்புக்களைக் குறைப்பதற்காகவும் முழு முயற்சி மேற்கொண்டு வருவதைக் காட்டுகின்றன.

மொத்தத்தில், மராட்டிய, அரியானா மாநிலத் தேர்தல்கள், பெரு முதலாளி வர்க்கத்தின் நிலையை மேலும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. தன்னுடைய ஏகாதிபத்திய நோக்கத்தை முன்னே தள்ளிக்கொண்டு செல்வதற்கு பெரு முதலாளி வர்க்கத்தின் நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட அரசியல் ஏற்பாட்டை நிறுவுவதற்காக அவற்றைப் பயன்படுத்தியுள்ளனர். இது, தொழிலாளர்கள், உழவர்கள் மேல் தீவிர தாக்குதல்களைத் தொடுப்பதற்கும், போட்டி ஏகபோகங்கள் மற்றும் ஏகாதிபத்தியர்களுக்கு இடையில் தீவிர நாய்ச் சண்டைகளுக்கும் வழி வகுக்கும்.

தீவிரமடையும் சமூக விரோத தாக்குதல்கள்

பெரு முதலாளி வர்க்கத்தின் சர்வாதிகாரம் உறுதிப்படுத்தப்படுவதால், தாராளமயம், தனியார்மயம் மூலம் உலகமயமாக்கும் திட்டம் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படும் என்று பொருள். பாஜக ஆட்சிக்கு வந்தவுடனேயே, காப்பீடு, ஆயுத உற்பத்தி போன்ற முக்கிய துறைகள் உட்பட நமது பொருளாதாரத்தை அன்னிய முதலீட்டிற்கு மேலும் திறந்துவிட நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது.

வருகின்ற நாட்களில் “இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்” என்ற திட்ட முயற்சிகள் மேலும் தீவிரமாக தொடரும். முந்தைய ஐமுகூ அரசாங்கம் திட்டமிட்ட மும்பை – தில்லி இரயில் மற்றும் தொழிற்சாலை மண்டலம், (மராட்டியம், குஜராத், இராஜஸ்தான், அரியானா, நொய்டா, காஸியாபாத் ஆகியவற்றின் மிகப் பெரிய பகுதிகள் உட்பட) புதிய உற்பத்தி மண்டலங்கள் ஆகியவற்றை விரைவாக நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தில்லியை கொல்கொத்தா-வோடும், மும்பையை பெங்களூரு, ஐதிராபாதுடனும் இணைத்து இது போன்ற மண்டலங்கள் நிறுவப்பட்டு வருகின்றன. அதாவது, இந்திய மற்றும் அன்னிய முதலாளிகள் கூட்டாக நமது நாட்டையும், உழைப்பையும் சுரண்டுவதும், கொள்ளையடிப்பதும் முன்கண்டிராத அளவில் அதிகரிக்கும்.

மராட்டிய, அரியானா முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே கூட, பிரதமர் மோடி, “உழைப்பாளருக்கே வெற்றி” என்ற ஏமாற்றுத் தனமான முழக்கத்தின் கீழ் ஒரு புதிய தொழிலாளர் கொள்கைச் சீர்திருத்த திட்டத்தை வெளியிட்டு இந்திய மற்றும் அன்னிய முதலாளிகளுக்கு சலுகைகளை அறிவித்தார். இப்போது இருப்பதைக் காட்டிலும் உழைப்பை மேலும் தீவிரமாக முதலாளிகள் சுரண்டுவதற்கு வழிவகுக்கும் திட்டமாகும் இது. அதிகப்படியான வரைமுறைகளை அகற்றுவது என்ற பெயரில், நமது நாட்டில் இருக்கும் தொழிலாளர் உரிமைகளுக்கு குறைந்தபட்ச சட்டப் பாதுகாப்பையும் நீக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது. தொழிலாளர்களுடைய புகார்களை ஆய்வு செய்வதற்காக தொழிற்சாலைகளை தொழிலாளர் ஆய்வாளர்கள் பார்வையிடும் செயல்முறைக்கு முடிவு கட்டுவதன் மூலம் முதலாளி வர்க்கத்திற்கு ஆதாயத்திற்காக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆய்வாளர்களுக்கு கையூட்டு கொடுப்பதற்குக் கூட அவசியமின்றி, வேலை நிலைமைகள், தொழிலாளர்களுடைய பதிவேடு, விடுமுறை, வேலை நேரம், ஊதியம் ஆகியன பற்றிய தொழிற் சட்டங்களை வெளிப்படையாகவே மீற முடியும்.

முதலாளி வர்க்கத்தின் தொழில் கொள்கை சீர்திருத்தங்களில், ஒப்பந்தத் தொழிலாளர்கள், தற்காலிகத் தொழிலாளர்கள் மற்றும் பயிற்சித் தொழிலாளர்களை அதிக அளவில் பயன்படுத்துவது, தொழிலாளர்கள் தங்களுக்கு விருப்பமான தொழிற் சங்கங்களை அமைத்துக் கொள்வதை மிகக் கடுமையாக ஆக்குவது போன்றவையும் அடங்கும்.

வருகின்ற நாட்களில் தொழிலாளர்களுடைய அறிவும், உடல் உழைப்பும் மேலும் தீவிரமாக சுரண்டப்படும், அவர்களுடைய உரிமைகள் மேலும் வெட்டிக் குறைக்கப்படும். அவர்களுடைய கூலி, ஊதியங்களின் வாங்கும் சக்தியை பண வீக்கம் தொடர்ந்து அரித்து வரும்.

தொழிலாளி வர்க்கத்தின் கட்சிகள் மற்றும் தொழிற் சங்கங்களின் ஆதரவோடு உழவர்கள், பழங்குடி மக்கள் மேற்கொண்ட பெருந்திரள் எதிர்ப்பு, ஏகபோக முதலாளிகள் நிலத்தைக் கைப்பற்றும் வழிமுறையை தடுத்து நிறுத்தியிருக்கிறது. இவ்வாறு தடைபட்டுள்ள எல்லா திட்டங்களையும் ஒரு விரைவு வழிமுறையின் மூலம் அங்கீகரிப்போமென மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் வாக்குறுதியளித்து வருகிறது. நிறுவனங்கள் நிலத்தைக் கைப்பற்றுவதை இது தீவிரப்படுத்தும். மேலும் நிலத்தை உழுபவர்களுடைய உரிமைகளை மேலும் மீறப்படுவதோடு, இயற்கைச் சூழல் மேலும் அழிக்கப்படும்.

வேளாண்மை உற்பத்தியிலும், வாணிகத்திலும், நிறுவனங்களுடைய ஆதிக்கம் பெருகி வருவதாலும் உலக சந்தையோடு ஒருங்கிணைக்கப்படுவதாலும், பல பெரிய வணிக ஏகபோகங்கள் கொள்ளை இலாபம் அடிக்கப் போகிறார்கள். மற்றொரு பக்கம், சந்தைகளின் நிலையற்ற சூழ்நிலையாலும் பண்டங்களில் நிலவும் பெரும் ஊகங்களாலும், அடிக்கடி நிகழும் இயற்கை பேரிடர்களாலும் கோடிக்கணக்கான உழவர்கள் மேலும் கடனாளிகளாகவும், பாதுகாப்பற்ற சூழ்நிலைக்கும் தள்ளப்படுவார்கள்.

பெரு முதலாளி வர்க்கத்தின் சர்வாதிகாரம் உறுதிப்படுத்தப்படுதல், தொழிலாளர்கள், உழவர்கள் மற்றும் உழைக்கும் பெரும்பான்மையான நமது மக்களுடைய வாழ்வாதாரத்திற்கும், உரிமைகளுக்கும் எதிராக தீவிரமான தாக்குதல்களுக்கு முன்னோடியாகும்.

முடிவுரை

பாஜக-வின் தேர்தல் வெற்றிகளை, மக்களுடைய விருப்பமென பிரபலப்படுத்தி வருகிறார்கள். ஆனால் அது உண்மையில் பெரு முதலாளி வர்க்கத்தின் திட்டமிட்ட செயலின் விளைவாகும். 2014 தேர்தல்கள், இன்றுள்ள சனநாயக அமைப்பும், அதனுடைய அரசியல் வழிமுறையும், பொருளாதார அடிப்படையில் மிகவும் சக்தி வாய்ந்த வர்க்கத்தின் விருப்பங்களை முழு சமுதாயத்தின் மேல் திணிப்பதற்காக வடிவமைக்கப்பட்டதாகும் என்பதை வெளிப்படுத்துகின்றன.

மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை பெற்ற பாஜக, மராட்டிய, அரியானா மாநிலத் தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்றிருப்பதும், 2013-இலிருந்து ஏற்பட்டுவரும் பிற அரசியல் மாற்றங்களையும் பார்க்கும் போது, பெரு முதலாளி வர்க்கம் தன்னுடைய தலைமையை உறுதிப்படுத்தியும், நமது நாட்டின் அரசு அதிகார கடிவாளத்தின் மேல் தன்னுடைய பிடியை வலுப்படுத்தியும் வருவதைக் காட்டுகின்றன. அமெரிக்காவும், பிற ஏகாதிபத்திய சக்திகளும் தலையிட்டு இந்திய அரசியலை நிலைகுலையச் செய்யக்கூடிய பலவீனமான இடங்களை அகற்றுவதற்காக அது செயல்பட்டு வருகிறது.

பெரு முதலாளி வர்க்கத்தின் அதிகாரம் உறுதிப்படுத்தப்படுவதற்கு, தொழிலாளர்கள் மற்றும் உழவர்களுடைய வாழ்வாதாரம் மற்றும் உரிமைகள் மீது தீவிரமான தாக்குதல் என்று பொருளாகும். தாராளமய, தனியார்மயத்தின் மூலம் உலகமயமாக்கும் திட்டத்தின் வாயிலாகவும், அரசு பயங்கரவாதத்தோடும், மக்களுடைய எதிர்ப்பைத் தவிர்ப்பதற்கான திசை திருப்பலான அரசியல் மூலமாகவும் பெரு முதலாளி வர்க்கத்தின் ஏகாதிபத்திய நோக்கங்கள் தீவிரமாக செயல்படுத்தப்படும் என்று அதற்குப் பொருள். பொருளாதாரம் இராணுவமயமாக்கப்படும் என்றும், நியாயமற்ற ஏகாதிபத்தியப் போர்களில் இந்தியா சிக்கிக் கொள்ளும் அபாயம் அதிகரிக்கும் என்றும் இதற்குப் பொருள்.

இந்தியப் பொருளாதாரம், உலக ஏகாதிபத்திய அமைப்போடு அதிவிரைவாக ஒருங்கிணைப்பதற்கு, சந்தைகளுக்காகவும், நமது நாட்டிலுள்ள கச்சாப் பொருட்களுடைய ஆதாரத்திற்காகவும் இந்திய மற்றும் அன்னிய பன்னாட்டு நிறுவனங்களுடைய போட்டாபோட்டி மோசத்திலிருந்து படுமோசமாக மாறும் என்று பொருள். ஊழல்களின் வெட்டவெளிச்சத்தின் மூலமும், படுகொலைகள் மூலமாகவும் போட்டியிடும் ஏகாதிபத்திய நலன்கள் மோதிக்கொள்ளும்.

பெரு முதலாளி வர்க்கம், இந்தியாவை மிகவும் அபாயகரமான பாதையில் இழுத்துச் செல்கிறது. இந்த அபாயகரமான சமூக விரோத தாக்குதல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இப் போக்கிற்கு எதிராக தொழிலாளர்களும், உழவர்களும் ஐக்கியப்பட வேண்டும். பொருளாதார, அரசியல் அமைப்பின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண நாம் ஒரு மாற்றுத் திட்டத்தையொட்டி அணி வகுக்க வேண்டும்.

இன்றுள்ள அமைப்பில், தேர்தல்கள் மூலம் நம்முடைய பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியுமென எவ்வித மாயையும் நாம் கொண்டிருக்க முடியாது. அரசியல் அமைப்பையும், பொருளாதாரப்  போக்கினையும், நம்முடைய அயல்நாட்டுக் கொள்கையையும் முழுவதுமாக மாற்றியமைக்க நாம் அணி திரள வேண்டும். இந்திய மறுமலர்ச்சிக்காக, நம்முடைய சொந்த திட்டத்தோடு ஒரு சக்திவாய்ந்த அரசியல் சக்தியாக நாம் ஆக வேண்டும்.

பின்பற்றப்பட்டு வரும் முதலாளித்துவ-ஏகாதிபத்திய போக்கிற்கு மாற்று எதுவும் இல்லையென ஆளும் வர்க்கம் கூறி வருகிறது. இது ஒரு அப்பட்டான பொய்யென கம்யூனிஸ்டு கெதர் கட்சி சொல்கிறது. அதற்கு ஒரு மாற்று இருக்கிறது. அது, முதலாளி வர்க்க ஆட்சியை மாற்றி, தொழிலாளர் – உழவர்களுடைய ஆட்சியை அமைப்பாதாகும்.

தாராளமயம், தனியார்மயம், உலகமயத் திட்டத்திற்கு மாற்று, அனைவருடைய வளமையையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில் பொருளாதாரத்தைத் திருத்தியமைப்பதாகும். பொது மக்களுடைய பணமும், மக்களுடைய இயற்கை வளங்களும் கொள்ளையடிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்துவதன் மூலமும், வாணிகம், நிதி மற்றும் இயற்கை வளங்களை தேசியமயமாக்கி அவற்றின் மீது மக்களுடைய கட்டுப்பாட்டைக் கொண்டுவருவதன் மூலமும், முதலாளித்துவ ஏகபோகங்களுக்குக் கொடுக்கப்படும் எல்லா வகையான அரசு உதவிகளையும், உத்திரவாதங்களையும்  விலக்கிக் கொள்ளவதன் மூலம் அந்த மாற்றைக் கொண்டுவர முடியும்.

இன்றுள்ள முதலாளி வர்க்க சனநாயகம், பாராளுமன்ற இறையாண்மைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதற்கு மாற்று, பாட்டாளி வர்க்க சனநாயகமாகும். அது இறையாண்மை பாராளுமன்றத்திலோ, அமைச்சரவைக் குழுவிலோ, இந்திய குடியரசுத் தலைவரிடமோ இருக்கக் கூடாதெனவும், அது மக்கள் கைகளில் இருக்க வேண்டுமென்ற கொள்கை அடிப்படையில் அமைந்ததாகும். அப்படிப்பட்ட தொரு அமைப்பில், அரசியல் வழிமுறையானது, வேட்பாளர்களை மக்கள் தங்களிடையிலிருந்து தெரிவு செய்து முன்வைக்கவும், அவர்களைத் தேர்ந்தெடுக்கவும், அப்படித் தேர்ந்தெடுத்தவர்கள் தங்களுக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டவர்களாகவும், எந்த நேரத்திலும் அவர்களைத் திருப்பியழைக்கவும் கூடியதாக இருக்கும். மேலும், அது சட்டங்களை மக்கள் முன்வைக்கவும், கருத்துக் கணிப்பின் மூலம் முக்கிய முடிவுகளை அங்கீகரிக்கவும் வழி முறைகளைக் கொண்டிருக்கும்.

இன்றுள்ள ஏகாதிபத்திய, சந்தர்ப்பவாத அயல்நாட்டுக் கொள்கைக்கு மாற்றானது, நம்முடைய அண்டை நாடுகளோடும், உலகிலுள்ள எல்லா நாடுகள் மற்றும் மக்களோடு நல்லுறவை வளர்ப்பதாகவும், ஏகாதிபத்திய எதிர்ப்பு ஐக்கியத்தைக் கட்டும் கொள்கை அடிப்படையிலும் இருக்கும். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் ஐக்கியமும், ஒருவருக்கொருவர் மரியாதையும் கொண்டதாக இருக்கும்.

பெரு முதலாளி வர்க்கத்தின் தாராளமய, தனியார்மய, உலகமயமாக்கும் முயற்சிக்கு எதிராக சமரசமற்றுப் போராடவும், இந்த மாற்றுத் திட்டத்தையொட்டி ஒன்றுபடவும், எல்லா தேசிய இனங்களையும், சமூகங்களையும் சேர்ந்த தொழிலாளர்கள், உழவர்கள், பெண்கள், இளைஞர்கள் நாம் முன்வர வேண்டும். இந்தப் போராட்டத்தின் மூலம், இந்தியாவின் மன்னர்களாக ஆவதற்கு நாம் கூட்டாக தயாரிக்க வேண்டும்.

கம்யூனிஸ்டுகள் நாம், தொழிலாளி வர்க்கத்திற்கும், உழவர்களுக்கும், எல்லா ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் இந்த மாற்றுத் திட்டத்தைத் தந்து ஆயத்தப்படுத்துவதன் மூலம் இந்தியாவின் தற்போதைய ஆபத்தான ஏகாதிபத்தியப் போக்கைத் தடுத்து நிறுத்த அவர்களை அரசியல் ரீதியாக ஐக்கியப்படுத்த இயலும். அதன் மூலம் அவர்கள், புரட்சிக்கும், பாட்டாளி வர்க்க சனநாயகத்திற்கும், சோசலிசத்திற்கும் பாதையைத் திறக்க முடியும்.

தொழிலாளர் விரோத, உழவர் விரோத, சமூக விரோத, தேச விரோத தாராளமய, தனியார்மய, உலகமயமாக்கும் திட்டத்தை முறியடிக்க அணிதிரள்வோம்!

இறையாண்மையை மக்களிடம் கொண்டு சேர்க்கவும், அனைவருக்கும் வளமையையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய பொருளாதாரத்தைத் திருத்தியமைக்கவும் மாற்றுத் திட்டத்தையொட்டி ஒன்றிணைவோம்!

(இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி மத்தியக் குழுவின் அறிக்கை, அக்டோபர் 27, 2014)

Pin It