தமிழ் மொழியின் தொன்மை குறித்துப் புதிதாக யாரும் வந்து விளக்க வேண்டியதில்லை. உலகின் தொன்மையான மொழிகளுள் தமிழும் ஒன்று என்பதை அறிவுலகம் எப்போதோ ஏற்றுக்கொண்டுவிட்டது.

நமது இந்திய அரசு அதனை ஒப்புக்கொள்ளத்தான் இத்தனைக் காலம்... இத்தனைக் களேபரம்! வடமொழிக்கு ஈடாகத் தமிழை வைத்துப்பார்க்க ஏன் இத்துணைத் தயக்கம்? அதிகாரம் சார்ந்த காழ்ப்பும், பணப்புழக்க சமாச்சாரமும்கூட இதற்குக் காரணங்களாக இருக்கக் கூடும். தமிழைச் செம்மொழியென அங்கீகரிக்கிறபோதே இன்னொரு குட்டிக் கலாட்டாவையும் மத்திய அரசு செய்துவிட்டதாகத் தோன்றுகிறது. செம்மொழியின் தொன்மைக்கு நிர்ணயம் செய்திருக்கிற கால அளவு என்பது ஆயிரம் ஆண்டுகள்தான். இதுதான் அந்தக் குட்டிக் கலாட்டா. அதாவது சமஸ்கிருதம்போல அல்லாமல் தமிழ் சற்றே தாழ்வாக வைக்கப்பட்டே செம்மொழி அங்கீகாரமும் வந்துள்ளதாகவே படுகிறது. அதனால்தான் தெலுங்கு மற்றும் கன்னட மொழியினரும் தங்கள் மொழிக்கும் செம்மொழி அந்தஸ்து தரப்படவேண்டும் என்று குரல் கொடுக்கத் தொடங்கினர். மலையாள சகோதரர்களும்கூட இந்தக் கோரிக்கையை முன்வைக்க முனைகின்றதைப் பார்க்க முடிகிறது.

அதாவது, இந்தியாவின் தொன்மையான மொழி சமஸ்கிருதம்தான். போனால் போகட்டுமென்று தமிழையும் ஏற்கிறோம் என்ற வகையில் இந்தக் காரியத்தைச் செய்திருக்கிறபோதே தென்னிந்திய மொழிக்காரர்கள் தங்களுக்குள் ஒரு முரண்பாட்டை வளர்த்துக் கொள்ளட்டுமே என்ற உள்நோக்கத்துடனேயே இந்த ஆயிரம் ஆண்டு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகக் கருத இடமிருக்கிறது. தமிழர்கள் தங்களது தாய் மொழி செம்மொழியென அங்கீகரிக்கப்பட்டது கண்டு அக மகிழ்வார்களா அல்லது இன்னும் பலரும் தங்கள் மொழிக்கும் இதே அந்தஸ்து வேண்டும் என்று போட்டிபோடுவதால் தமிழின் தனிப் பெருமைக்குப் பங்கம் வருகிறதை எண்ணி நொந்துபோவார்களா?

விடுதலையடைந்து 60 ஆண்டுகள் கடந்த பின்னரும் தேசத்தின் வளர்ச்சியென்பது அனைத்துப் பகுதிகளிலும் சமதையாக இல்லாத காரணத்தால் - வளங்கள் யாவும் சமமாகப் பங்கிடப்படாத காரணத்தால் பல வகையான கொந்தளிப்புகளை நாம் கண்டு வருகிறோம். தீவிரவாதம், பிரிவினைவாதம், குறுகிய இனவாதம், மொழிவழி மாநிலங்கள் என்ற வரையறையை மீறிய தனி மாநிலக் கோரிக்கைகள் எனப் பல வகைகளிலும் நமது அரசியல் - சமூகத் தளங்களில் கொதிநிலையென்பது வழமையாகி வருகிறது.

நாடாளுமன்றத்தில் தமிழில் பேச முயலும் அமைச்சருக்குப் பரிகாசமே பரிசாகக் கிடைக்கிற நிலைமைக்கு என்ன காரணம்? நமது நாட்டின் மொழிப் பிரச்சனையில் ஒரு அறிவியல்பூர்வ அணுகுமுறையை நமது மத்திய ஆட்சியாளர்கள் கைக் கொள்ளாதது மட்டுமே காரணம் என்று அடித்துச் சொல்லலாம். தேவ பாஷை என்று வடமொழியைக் கொண்டாடிய ஆட்சியாளர்கள் மற்ற எந்த மொழிக்கும் அதற்குச் சமதையான அந்தஸ்தைத் தர மனம் ஒப்புவதாக இல்லை. அதே நேரத்தில் இந்தி மொழியைத் திணிக்கவும் இன்றளவும் அவர்கள் தவறவில்லை. வடமொழியின் மேல் பக்தியும், இந்தியின் மேல் வெறித்தனமான காதலும் தவிர மற்ற எந்தவொரு மொழியையும் மதிக்கும் மனப்பக்குவம் அற்றவர்களாகவே நமது மத்திய ஆட்சியாளர்கள் பிடிவாதம் காட்டிவந்துள்ளனர்.

ஆனால், உண்மையிலும் இந்தியாவின் தமிழ், உருது, வங்கம், பஞ்சாபி என்று ஒவ்வொரு மொழியுமே தனக்கென்ற வளமையான இலக்கியப் பாரம்பரியத்தைக் கொண்டதாகவே வளர்ந்துள்ளது. இருந்தும் அவற்றிற்கு என்ன விதமான மரியாதை கிடைத்துள்ளது? அவையெல்லாமே பிரதேச மொழிகள் பட்டியலில். அதாவது வட்டார மொழிகள்தாம் அவை. இந்திய மொழியென்றாலே அது இந்திதான். சமஸ்கிருதமோ தேவ மொழி அந்தஸ்தில், எல்லா மொழிகளுக்கும் உச்சியில். ஆனால், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகள் பிரதேச மொழிகள். இந்தி சினிமா தான் இந்தியாவின் சினிமா. அதனைவிடத் தரமிக்கதாக இருந்தாலும் தமிழ், வங்காள, மலையாளப் படங்கள் எல்லாமே பிரதேச மொழிப் படங்கள்தாம். அப்படியென்றால் இந்தி பேசும் மாநிலங்கள் மட்டும்தான் இந்தியாவா? மற்ற மொழி பேசும் மாநிலங்கள் எல்லாமே என்ன கணக்கில், எந்த தேசப் பட்டியலில் சேரும்?

இந்தப்படியான அறிவுக்கும், அறிவியலுக்கும் புறம்பான இமாலயத் தவறினை நமது மத்திய ஆட்சியாளர்கள் தொடர்ந்து செய்துவந்ததன், வருவதன் பலனைத்தான் நாம் இப்போது அறுவடை செய்துவருகிறோம். இந்தியா என்பது அதிஅற்புதமானதொரு தேசம். பல்வேறு மொழிகள், பண்பாடுகள் சங்கமித்துள்ள தனி உலகம் இந்தியா. இந்த தேசத்தில் செல்வ வளங்களுக்குக் குறைவில்லை. இங்கிருக்கும் மனித வளத்திற்கு அளவில்லை. ஆனால் இவற்றை மனித நேயத்துடனும், அறிவியல் கண்ணோட்டத்துடனும், தேச பக்தியுடனும் கையாண்டிருந்தால் நமது தேசம் இந் நேரம் நவீனமடைந்திருக்கும். ஆனால் மக்களை ஏதாவதொரு மடமைக் கொடும் இருளிலே இருத்திவிட்டு, அதனால் அவர்களிடம் விழிப்புணர்வில்லாமல் செய்ததன் மூலமாக சுயநலப் பேயாட்டத்தையே அரங்கேற்றிவிட்டனர் ஆட்சியாளர்கள். இந்த அநீதியின் விளைவாகத்தான் தேசப்பற்றின்றி எதிர்வினைகள் தீவிரவாதம் என்ற பெயரில் அன்னிய, ஏகாதிபத்திய ஆதரவுடனும், தூண்டுதலுடனும் நமது அன்றாடக் காட்சியாகியிருக்கின்றன.

மொழி உள்ளிட்ட அனைத்துவிதமான பிரச்சனைகளையும் அறிவுப்பூர்வமாக அணுகத்தவறிய பெருங்குற்றத்திற்கான தண்டனையை அனுபவித்து வருகிறோம்.

இந்த லட்சணத்தில் நாடு இருக்கிறபோதுதான் நமக்கு உலகத் தமிழ் மாநாடுகள், உலகச் செம்மொழி மாநாடுகள் எல்லாம் கேட்கிறது. என்ன செய்ய, கிடப்பது கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மனையில் வைப்போமே! யார் கேட்கப் போகிறார்?

“தமிழும் வடமொழியும் இந்த நாட்டின் இரு கண்கள்” என்பார் தமிழறிஞர் வா.செ. குழந்தைசாமி. இந்தப் புரிதல் அறிவியல்பூர்வமானது. தமிழரல்லாத, வடமொழி ஆதரவாளரல்லாத பிறரிடத்தும் இந்தப் புரிதல் உண்டாகவேண்டும். இந்தப் புரிதலுக்கு ஒருவர் வர அவருக்கு எவ்விதமான காழ்ப்பும், பகைமையும் தடையாக இருக்கக்கூடாது. இந்தியாவின் மற்ற மொழிகளெல்லாம் இந்த இரு மொழிகளிடதே நிறையக் கடன்பட்டவைதாம் என்கிற முடிவுக்கு வருவதொன்றும் மற்ற அந்த மொழிகளையெல்லாம் தாழ்த்துவதாக ஆகாது. இந்தவிதமான கருத்தினை எல்லோரும் ஏற்கும் காலம் எப்போது வரும்? என்றைக்கு மொழிகளிடத்தே மத்திய ஆட்சியாளர்களுக்கு பாரபட்சமற்ற அணுகுமுறை ஏற்படுகிறதோ அன்றைக்குத்தான் இது சாத்தியம். விடுதலையடைந்த காலத்திலேயே தொடங்கியிருக்கவேண்டிய திருப்பணி இது. காலம் கடந்த நிலையில், இந்த இருபத்தோராம் நூற்றாண்டின் அறிவியல் யுகத்திலேனும் நாம் நவீன சிந்தனைகளை நமதாக்கிக் கொள்ளவில்லையெனில் கால வெள்ளம் நம்மை கண்காணாத படு பாதாளத்தில் வீசியெறிந்துவிடத்தான் செய்யும் என்பதை உணரவேண்டும்.

ஆக, நமது நாட்டின் இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளும் சமமான அந்தஸ்தும், தகுதியும் பெற்றவையே என்றும், தமிழும், வடமொழியுமே இந்த தேசத்தின் இரு செவ்வியல் மொழிகளாகும் என்றும் புரிந்துகொண்டு, அதற்கொப்பவே திட்டங்கள் வகுக்கப்படவேண்டும். நாடாளுமன்றத்தில் அவரவர் தாய் மொழியில் பேச உரிமை உள்ளிட்ட அனைத்துவிதமான சம உரிமைகளும் அனைத்து மொழிகளுக்கும் தரப்படுவதோடு, எல்லா மொழிகளுமே நம் தேசத்துச் சொத்துக்கள் என்ற வகையில் அவற்றின் வளர்ச்சிக்கு அனைத்து வகைகளிலும் நிதி ஒதுக்குவதும், திட்டமிடுவதும் உடனடித் தேவைகளாகும்.

ஒவ்வொரு இந்தியனும் தன் தாய் மொழி வழி கல்வி பெறுவதோடு தன்னாலியன்ற அளவுக்கு பிற இந்திய மொழிகள் பலவற்றையும் கற்றறிந்துகொள்ள ஊக்குவிக்கப் படல் வேண்டும். அதே நேரத்தில், நமது செவ்வியல் மொழியான தமிழை மற்ற இந்திய மொழி மக்களும் அறிந்துகொள்ள வடமொழிக்குத் தரும் முக்கியத்துவத்தைத் தமிழுக்கும் மைய அரசு தரத்தான் வேண்டும். அரசின் நேர்மறையான அணுகுமுறையின் பயனாக தமிழ் இந்த தேசத்தின் செவ்வியல் மொழி என்பதும், தமிழ் இந்த நாட்டின் பொதுச் சொத்து என்பதும் தமிழரல்லாத இந்தியர் எல்லோர் உள்ளங்களிலும் உருவாகச் செய்ய வேண்டும். இப்படிப்பட்டதொரு திசை வழியையும் நடக்கவிருக்கும் செம்மொழித் தமிழ் மாநாடு தேசத்திற்குக் காட்டவேண்டாமா?

இந்திய மண்ணில் இதுவரையில் நடத்தப்பட்டிருக்கும் ஏனைய உலகத் தமிழ் மாநாடுகளைப் போலவே இந்தச் செம்மொழி மாநாடும் வெறும் ஆரவார வானவேடிக்கைச் சமாச்சாரமாகப் போய்விடும் அபாயம் இருப்பதாக ஏற்கனவே அக்கறையுள்ள பலரும் அச்சம் வெளியிட்டுள்ள நிலையில், தமிழ் வளர்ச்சிக்கு உருப்படியாக ஏதாவது செய்யும் எண்ணம் நமது மத்திய - மாநில அரசுகளுக்கு இருக்குமானால் இந்தியாவின் செவ்வியல் மொழிகளின் தனித்துவத்திற்காகவும்; இந்திய மொழிகளின் சமத்துவத்திற்காகவுமல்லவா முக்கியமாகத் திட்டமிடவேண்டும்? செய்வார்களா?

- சோழ. நாகராஜன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It