தமிழக அரசு வணிக வரி மற்றும் பதிவுத் துறையின் 21.07.2011 தேதியிட்ட அரசாணை எண் 89, கேளிக்கை வரிச்சலுகை பெற திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் சூட்டப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன், கீழ்க்கண்ட தகுதி வரையறைகளை நிர்ணயம் செய்து ஆணை வெளியிட்டது.
 
(1) அவ்வாறான திரைப்படம், திரைப்பட தணிக்கை வாரியத்திடமிருந்து "U" சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

(2) திரைப்படத்தின் கதையின் கருவானது தமிழ் மொழி மற்றும் பண்பாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்க வேண்டும்.

(3) திரைப்படத்தின் தேவையைக் கருதி பிற மொழிகளைப் பயன்படுத்தும் காட்சிகளைத் தவிர பெருமளவில் திரைப்படத்தின் வசனங்கள் தமிழ் மொழியில் இருத்தல் வேண்டும்.

(4) திரைப்படத்தில் வன்முறை மற்றும் ஆபாசங்கள் அதிக அளவில் இடம் பெறுமேயானால் அத்திரைப்படம் வரி விலக்கு பெறப்படுவதற்கான தகுதியை இழக்கும்.

இந்த அரசாணை வெளிவந்த பிறகு ஆபாசக் காட்சிகள் நிறைந்த - வன்முறை வெறியாட்டக் காட்சிகள் நிறைந்த பல வணிக ரீதியான திரைப்படங்களுக்கு தமிழ் நாடு அரசு கேளிக்கை வரி விலக்கு அளித்துள்ளது. இதன் மூலம், மக்கள் நலப் பணிகளுக்கு தேவைப்படும் கணிசமான அரசு வருவாயை தமிழ் நாடு அரசு இழந்துள்ளது. கேளிக்கை வரி விலக்கு பெறுவதற்கு வேண்டிய - அரசு நிர்ணயித்துள்ள மேற்கண்ட வரையறைகள் இல்லா விட்டாலும், ஆட்சியாளர்களுக்கு மிகவும் வேண்டிய நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அல்லது இயக்குனர்கள் வெளியிடும் படங்களுக்கும், ஆட்சியாளர்களை சரியான வகையில் "கவனித்துக்" கொள்ளும் நபர்கள் தயாரிக்கும் படங்களுக்கும் இந்த கேளிக்கை வரி விலக்கு முறைகேடாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் மிக மோசமான வன்முறைக் காட்சிகளும், ஆபாசக் காட்சிகளும், - சமூக விரோத மற்றும் மக்கள் விரோதக் காட்சிகளும் நிறைந்த பல வணிக ரீதியான திரைப்படங்களுக்கு தமிழ் நாடு அரசு முறைகேடாக - சட்டத்திற்கு எதிராக கேளிக்கை வரி விலக்கு அளித்து, அதன் மூலம் -கோடிக்கணக்கான மக்கள் வரிப் பணத்தை திரைப்படத் துறையின் பண முதலைகளுக்கு ஏய்த்துள்ளது.

கேளிக்கை வரி விலக்கு பெறுவதற்கு தமிழக அரசு நிர்ணயித்துள்ள மேற்கண்ட வரையறைகளில் தெளிவுப்படுத்த முடியாத வரையறை "தமிழ்ப் பண்பாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததாக திரைப்படம் இருக்க வேண்டும்" என்பதுதான். தமிழ்ப் பண்பாடு என்று ஒன்று இருக்கிறதா? அல்லது இந்து மதப் பண்பாட்டை தமிழ்ப் பண்பாடு என்று அரசு நினைக்கிறதா? அப்படியென்றால் தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட இஸ்லாமியத் தமிழர்களின் பண்பாடு மற்றும் கிறித்துவத் தமிழர்களின் பண்பாட்டை தமிழ்ப் பண்பாடு என்று கருதி - இஸ்லாமியத் தமிழர்கள் மற்றும் கிறித்துவத் தமிழர்களின் பண்பாட்டைப் பேசும் படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்படுமா? அல்லது கடவுள் மறுப்பை - மத மறுப்பைப் பேசும் தமிழர்களின் பண்பாட்டை தமிழ்ப் பண்பாடாக ஏற்று கடவுள்-மத மறுப்புப் பண்பாட்டை பேசும் படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்படுமா?

மேலும், தமிழர்களுக்குள்ளேயே சாதிக்கு சாதி பண்பாடு மாறுபடுகிறது. திருமண வாழ்வில் பிணக்கு காரணமாக எளிதாக தாலியை எறிந்து விட்டு - திருமண உறவை வெட்டி விடும் வழக்கமுள்ள சில மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதீயப் பெண்களின் பெண்ணியப் பண்பாடு தமிழ்ப் பண்பாடாக கேளிக்கை வரி விலக்குக்கு ஏற்றுக் கொள்ளப்படுமா? அல்லது "தாலியே பெண்ணுக்கு வேலி" என்று தாலி செண்டிமெண்டை ஆணாதிக்க உணர்வுடன் பிரச்சாரம் செய்யும் பார்ப்பனியப் பண்பாடு கேளிக்கை வரி விலக்குக்காக தமிழ்ப் பண்பாடாக ஏற்கப்படுமா?

முன்னேறிய நாடுகளின் குடிமக்களான அமெரிக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் போல மாட்டிறைச்சி உண்ணும் தாழ்த்தப்பட்ட தமிழர்களின் உணவுப் பண்பாடு தமிழ்ப் பண்பாடாக ஏற்கப்படுமா அல்லது இறைச்சி உணவை மறுக்கும் சைவ வேளாளர்கள் மற்றும் பார்ப்பனர்களின் பண்பாடு கேளிக்கை வரி விலக்குக்காக தமிழ்ப் பண்பாடாக ஏற்கப்படுமா? இப்போது மேற்கத்திய நாடுகளில் உள்ள தம்பதிகள் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் "living together" முறைக்கு முன்னோடியாக - திருமணம் என்ற ஏற்பாடு இல்லாமல் - தாலி கட்டிக் கொள்ளாமல் "யாயும் ஞாயும் யாராகியரோ - எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்" என்று சாதி வேறுபாடு பார்க்காமல் சேர்ந்து வாழ்ந்த - குறுந்தொகை காலத்து தமிழனின் - தமிழச்சியின் காதல் தமிழ்ப் பண்பாடா? அல்லது சாதி - குலம் - கோத்திரம் - ஜாதகம் - நாள் - நட்சத்திரம் பார்த்து ஊரைக் கூட்டித் தாலி கட்டித் திருமணம் செய்யும் தற்கால சாதித் தமிழனின் பண்பாடு தமிழ்ப் பண்பாடா?

ஆகவே, "தமிழ்ப் பண்பாடு" என்று ஒன்றும் இல்லாத ஒரு நிலையில், திரைப்படங்களின் கேளிக்கை வரி விலக்குக்காக "தமிழ் பண்பாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததாக" திரைப்படம் இருக்க வேண்டுமென்று தமிழ் நாடு அரசு கூறுவது, ஆட்சியாளர்கள் விருப்பத்திற்கு வேண்டியவர்களின் திரைப்படங்களுக்கு வரி விலக்கு வழங்குவதற்காக ஆட்சியாளர்கள் ஏற்படுத்தியுள்ள வெற்றுச் சாக்காகும்! மேற்கண்ட சூழ்நிலையில், கேளிக்கை வரி விலக்கு பெறுவதற்காக எதை "தமிழ்ப் பண்பாடு" என்று அரசு கருதுகிறது என்று தமிழ் நாடு அரசு தெளிவுபடுத்தி வரையறுக்க வேண்டும். அவ்வாறு, தமிழ்ப் பண்பாட்டை வரையறுக்க முடியாது என்பதே உண்மை.

"திரைப்படத்தில் வன்முறை மற்றும் ஆபாசங்கள் அதிக அளவில் இடம் பெறுமேயானால் அத்திரைப்படம் கேளிக்கை வரி விலக்கு பெறப்படுவதற்கான தகுதியை இழக்கும்" என்று தமிழ் நாடு அரசின் அரசாணை கூறுகிறது. ஆனால், மிக அதிக அளவில் வன்முறைக் காட்சிகளும், கொலை செய்யும் காட்சிகளும் இடம் பெற்ற, குறிப்பாக நீதி மன்றம், சட்டம் மற்றும் அரசியல் சாசனம் என்று எந்தக் கட்டுப்பாட்டுக்கும் உட்படாமல் காவல் துறை அதிகாரிகள் சகட்டு மேனிக்கு கண்டவர்களை கொலை செய்யும் காட்சிகளும் - "போலி என்கவுண்டர்" கொலைகள் செய்யும் காட்சிகளும் நிறைந்த "சிங்கம் 2" திரைப் படத்திற்கு 04.07.2013 தேதியிட்ட அரசாணை எண் 345 மூலம் தமிழ் நாடு அரசின் வணிக வரி மற்றும் பதிவுத் துறை கேளிக்கை வரி விலக்களித்துள்ளது. இது கேளிக்கை வரி விலக்குக்காக தமிழ் நாடு அரசு நிர்ணயித்துள்ள சட்ட வரைமுறைகளை .மீறும் செயலாகும்.

கேளிக்கை வரி விலக்கு பெறுவதற்கு வேண்டிய - அரசு நிர்ணயித்துள்ள வரையறைகள் இல்லா விட்டாலும், ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்களின் திரைப்படங்களுக்கு இந்த கேளிக்கை வரி விலக்கு முறைகேடாக வழங்கப்படுகிறது என்பதை இது காட்டுகிறது. இது போன்று மிக மோசமான வன்முறைக் காட்சிகள் நிறைந்த பல வணிக ரீதியான "மசாலா" திரைப்படங்களுக்கு தமிழ் நாடு அரசு முறைகேடாக கேளிக்கை வரி விலக்கு வழங்கி தமிழ்நாடு அரசு கஜானாவை காலி செய்துள்ளது - கண்டனத்திற்குரியது.

ஆகவே, சாதி ஒழிப்பு, மத வெறி எதிர்ப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு, ஆணாதிக்க ஒழிப்பு, குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, கல்வி உரிமை போன்று மற்றும் ஏனைய மனித உரிமைகள் குறித்து பேசும் மிக அருமையாக வெளிவரக் கூடிய திரைப்படங்களைத் தவிர, அல்லது நோய்த் தடுப்புக்காக உடல் நல மற்றும் மன நல விழிப்புணர்வு ஏற்படுத்தும் மருத்துவச் செய்திகளைக் கூறும் திரைப்படங்களைத் தவிர, ஏனைய திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு வழங்குவதை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.

- மருத்துவர் இனியன் இளங்கோ (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It