1.1.2012 முதல் அமல்படுத்த வேண்டிய ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தக் கோரி கடந்த 20.7.2015 தொடங்கி 27.8.2015 வரை 39 நாட்கள் என்.எல்.சி. தொழிலாளர்கள் போராடினார்கள். இப்போராட்டத்தில் நிரந்தர தொழிலாளர்களின் தொழிற் சங்கங்களிடையே ஒற்றுமை பேணப்பட்டது.

24.7.2015 - ஜனநாயக தொழிற்சங்க மையம் (DTUC), சி.ஐ.டி.யூ உள்ளிட்ட 10சங்கங்கள் அடங்கிய தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக பட்டினிப் போராட்டம் நடத்தப்பட்டது. அன்றைய போராட்டத்தில் DTUC தலைவர் எல்.ராஜேந்திரன், பொதுச் செயலாளர் எஸ்.வேலு, பொருளாளர் பி.மனோகரன், சி.பி.எம்.எல். மக்கள் விடுதலையின் கடலூர் மாவட்டச் செயலாளர் தோழர் ராமர் ஆகியோர் உரையாற்றினர். நெய்வேலிக்குள்ளேயே போராடுவது அறைக்குள் போராடுவது போலாகும். 5000 ரூபாய்க்கு சென்னையில் அல்லல்படுகின்ற இளைஞர்களின் கோரிக்கைகளுடன் என்.எல்.சி தொழிலாளர்கள் இணைகின்ற போதுதான் உண்மையான தீர்வு கிடைக்கும் என்று தோழர் இராமர் பேசினார்.

28.7.2015-அன்று நடக்கவிருந்த மனித சங்கிலிப் போராட்டம் தள்ளி வைக்கப்பட்டு கூட்டமைப்பு சார்பாக அப்துல் கலாமுக்கு இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது.

30.7.2015 - தில்லியில் நடந்த முத்தரப்புப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. 10% க்கு மேல் ஊதிய உயர்வு தர முடியாது என நிர்வாகம் கூறியது. சலுகைகள், உரிமைகளைப் பறிப்போம் என நிர்வாகம் அறிவித்தது.

1.8.2015 -கோரிக்கைகளில் முரண்பாடு இருப்பினும் அனைத்து தொழிற்சங்கங்களுடன் இணைந்து போராட முடிவெடுத்தது கூட்டமைப்பு.

8.8.2015 -5000 பேர் பங்குபெற்ற உண்ணாவிரதம்

9.8.2015, 10.8.2015 -அனைத்துக் கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டல். பா.ம.க. நிறுவனர் இராமதாசு, தரைவழி கப்பல் போக்குவரத்து இணை அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வை.கோ, சி.பி.ஐ(எம்) அ. சவுந்தர ராசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் ஆகியோரைத் தொழிற்சங்கப் பிரதி¬நிதிகள் சந்தித்து ஆதரவு திரட்டினர். இச்சந்திப்பில் DTUC தோழர்கள் எல்.இராஜேந்திரன் மற்றும் வேலு ஆகியோர் பங்குபெற்றிருந்தனர். முதல்வரை சந்திக்க நேரம் கொடுக்கவில்லை.

11.8.2015 -தொ.மு.ச. தலைவர் திருமாவளவன் பணிநீக்கம். நமது தோழர்கள் எல்.இராஜேந்திரன், வேலு உள்ளிட்ட 50 பேருக்கு சார்ஜ் மெமோ கொடுத்தது நிர்வாகம்.

12.8.2015 -இதைக் கண்டித்து நிரந்தர, ஒப்பந்த தொழிலாளர்கள் இணைந்த அனைத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் நடந்தது.

14.8.2015 -அன்று முதல் கால வரையற்ற பட்டினிப் போராட்டம் தொடங்கியது. தோழர்கள் இராஜேந்திரன், உள்ளிட்ட 97 தொழிலாளர்கள் பங்கேற்பு

15.8.2015 - கூட்டமைப்பு நிறுவனம் நடத்திய சுதந்திர தினக் கொண்டாட்டத்தைப் புறக்கணித்தது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் அவர்தம் குடும்பங்களும் உண்ணாவிரத இடத்தில் திரண்டனர். நமது கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் தோழர் இராமர் அன்று மாலை உரையாற்றினார்.

16.8.2015-3 ஆம் நாள் காலவரையற்ற பட்டினிப் போராட்டம். நமது கட்சியின் தலைவர் தோழர் ஜெ.சிதம்பரனாதன் உரையாற்றினார். மோடி அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை விமர்சித்துப் பேசினார்.

17.8.2015 -35 தொழிலாளர்கள் மயங்கி விழுந்து மருத்துவமனையில் சேர்க்கப் பட்ட நிலையில் சி.பி.ஐ. யின் பொதுச் செயலாளர் முத்தரசன் பட்டினிப் போராட்டத்தை முடித்து வைத்தார்.

18.8.2015முதல்26.8.2015வரை-காலவரையற்ற பட்டினிப் போராட்டம் தொடர் பட்டினிப் போராட்டமாக மாற்றப்பட்டு தொடர்ந்தது.

தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் தமிழகத்தைச் சேர்ந்த 48 அ.தி.மு.க. எம்.பி.க்கள் நிலக்கரி துறை அமைச்சர் சுரேஷ் கோயலுடன் பிரதமர் மோடியைச் சந்தித்தனர். உடன் அண்ணா தொழிற்சங்கத் தலைவர் செயலாளர் இருந்தனர். ஆனால், என்.எல்.சி ஏன் இன்னும் அரசிடம் இருக்கிறது என்று பிரதமர் மோடி கேட்டதாக பின்னர் தெரியவந்தது.

25.8.2015 அன்று மாலை நிர்வாகம் பேச்சு வார்த்தைக்கு வந்தது. 10 சதவிகித ஊதிய உயர்வு, ஒரு இன்கிரிமெண்ட் சேர்ந்து 3 இன்கிரீமெண்ட் (இன்றிலிருந்து) தான் என்கின்ற பேச்சுவார்த்தையின் முடிவைக் கூட்டமைப்பு ஏற்கவில்லை. பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகிவிடும் நிர்வாகம் ஊடகங்களுக்கு அறிவித்தது. பேச்சுவார்த்தையில் இருந்த இரண்டு தொழிற்சங்களை அழைத்து கையெழுத்திடாவிட்டால் சமரச முயற்சி தோல்வி என்று அறிக்கை தந்து தீர்ப்பாயத்திற்கு அனுப்பிவிடுவோம். 6 மாதம் ஒரு வருடம் என ஆகும் என்று நிர்வாகம் மிரட்டியது.

இதை ஏற்றுக் கொண்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதைவிட இதை ஏற்காமல் வேலைக்கு திரும்புவோம் என்று கூட்டமைப்பு முடிவெடுத்தது. 27.8.2015 அன்று இரவுப் பணிக்கு செல்வதென்றும் பத்து நாட்களுக்குள் நிர்வாகம் முடிவெடுக்க வில்லை என்றால் மீண்டும் போராட்டம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

போராட்டத்தின் படிப்பினைகள்:

• இது ஒரு பின்னடைவே. நிர்வாகம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் உற்பத்தி தடைபடாமல் பார்த்துக் கொண்டது. கடந்த ஆண்டு நடந்த ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டத்தை நிரந்தர தொழிலாளர்கள் ஆதரிக்கவில்லை. மேலும் ஒப்பந்த தொழிலாளர்கள் எந்த தலைமையின் கீழும் வலுவாக அணி திரட்டப்பட்டு இல்லை.

• ஊடகங்களில் தொழிலாளர்கள் பெறும் ஊதியத்தை மட்டும் வெளியிட்டனர். ஆனால், மிகச் சொற்பாக இருக்கும் அதிகாரிகள் வாங்கும் இலட்சத்திற்கு மேலான சம்பளத்தைப் பற்றி அதிகம் பேசவில்லை. இது வெகுமக்களிடையே தொழிலாளர் ஏற்படும் ஆதரவைக் குலைத்தது.

• இடதுசாரி தொழிற்சங்கத்தின் தேவை என்பதை தொழிலாளர்கள் உணரத் தொடங்கியுள்ளனர். 

Pin It