போராடிய மாணவர்கள் இடை நீக்கம்!

தமிழக உயர்கல்வி வளாகங்களில் கருத்துரிமைப் பறிப்பின் சாட்சி!

இன்றைய இந்தியாவின் பழம்பெரும் பல்கலைக் கழகங்களும், உயர்கல்வி நிறுவனங்களும் மாணவர்களின் தொடர் போராட்டக் களங்களாக இருந்து கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடரும் கொல்கத்தா ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர் போராட்டம், பூனே திரைப்படக் கல்லூரி மாணவர் போராட்டம், புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர் போராட்டம் என்று கல்வித் துறையில் தகுதியற்ற ஊழல்வாதிகளையும், இந்துமத அடிப்படைவாதிகளையும் உயர்பொறுப்புகளில் அமர்த்தியதற்கு எதிராக மாணவர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

chennai university students 600

உதவிப் பேராசிரியராக மட்டுமே இருந்த கல்யாணி அவர்கள் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக அமர்த்தப்பட்டதற்கு எதிராக மாணவர்களும், பேராசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதும், அதனால் துணைவேந்தர் கல்யாணியால் ஏவப்பட்ட கூலிப்படையினர் ஒரு பேராசிரியரைக் கொலை செய்ய முயற்சி நடந்ததும் நாம் அறிந்த ஒன்றுதான்.

அதேபோல், இப்போது பாரதிதாசன் பல் கலைக்கழகம், அன்னைத் தெரசா பல்கலைக் கழகங்களில் தகுதியற்ற துணைவேந்தர்கள் பணியமர்த்தப்பட்டதற்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

கல்வி தனியார்மயமாக்கப்பட்டு, வணிகமயமான சூழலில் கல்வி கற்கும் மாணவர்களின் நிலை காசுள்ளவர்களுக்கு மட்டுமே கல்வி என்ற நிலையில் இருக்கிறது என்பதைப் பார்க்கும் அதே நேரத்தில், கல்வி நிலையங்களில் உயர் பொறுப்புகளில் அமர்த்தப்பட வேண்டிய கல்வியாளர்களின் நிலைமையையும் நாம் கவனித்தாக வேண்டும். பல்கலைக் கழகங்களின்துணைவேந்தர் பதவிக்கோ, பதிவாளர் பதவிக்கோ சிறந்த கல்வியாளர்களைக் கொண்டு வருவது என்றில்லாமல் ஆளும் கட்சியின் இரகசிய உறுப்பினராய் இருக்கின்றவர்களுக்கோ அல்லது அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சியின் முக்கியப் புள்ளிகளின் உறவினர்களுக்கோ வழங்கப்படுவதாகவும், கூட்டணி பேரம் பேசும்போது தங்களுக்கு இத்தனை தொகுதிகள் வழங்குவதோடு, சில வாரியப் பொறுப்புகளையும் பல்கலைக்கழகத் துணைவேந்தர், பதிவாளர் பொறுப்புகளைத் தங்களின் உறவினர்களுக்கோ, கட்சிக்காரர்களுக்கோ பேரம் பேசிப் பெறக்கூடிய நிலைமைதான் இருந்துகொண்டிருக்கிறது.

காலனியகால இந்தியாவில் தொடங்கப்பட்ட மிகப் பழம்பெருமைவாய்ந்த சென்னைப் பல்கலைக் கழகத்தின் நிலைமையைப் பார்த்தோமேயானால் இப்போது துணைவேந்தராக இருக்கும் திரு.தாண்டவன், தன்னை ‘அம்மாவின் விசுவாசி’ என்று வெளிப்படையாக அறிவித்துக் கொண்டு செயல்படக்கூடியவர். பல கோடி ரூபாய்களை லஞ் சமாகக் கொடுத்துப் பெற்ற இப்பதவிக் காலத்தில் போட்ட முதலைவிட பலமடங்கு இலாபத்தைத் திருப்பி எடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

பதிவாளராக இருக்கக்கூடிய திரு. டேவிட் ஜவகர் பதவியமர்த்தப்பட்டதற்குப் பின்னாலும் ஒரு செய்தி உண்டு. 2014 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி பேசியபோது சி.பி.ஐ. கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த தா.பாண்டியன் தன்னுடைய மகன் டேவிவ் ஜவகர் அவர்களுக்கு ஒரு துணைவேந்தர் பதவியை ஜெயலலிதாவிடம் கேட்டதும், அதற்கு அவர், “துணை வேந்தர் பதவி தரமுடியாது, பதிவாளர் பதவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்று பதவியை அறிவித்ததும், டேவிட் ஜவகர் தனக்கு துணைவேந்தர் பதவிதான் வேண்டும் என்று பதிவாளர் பதவியில் ஒரு மாத காலம் பொறுப்பெடுக்காமல் இருந்ததும் கடைசி நேரத்தில் சி.பி.ஐ. -அதிமுக கூட்டணி அமையாமல் போகவே, கிடைத்ததை விட்டுவிடக் கூடாது என்று அவசர அவசரமாகப் பதிவாளர் பதவியை ஏற்றுக் கொண்டதும் பல்கலைக் கழக வட்டாரத்தில் எல்லோருக்கும் தெரிந்த இரகசியம்.

இப்படியான ஊழல்மயப்பட்ட இடத் தில்தான் சிறந்த கல்வியாளராகவும், மாணவர்களின் உரிமைக்காகவும், பல்வேறுசனநாயகக்கோரிக்கைகளுக்காகவும் நடக்கும் போராட்டங்களில் பங்கேற்பாளராகவும் விளங்கும் பேராசிரியர் மணிவண்ணன் அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகவியல் துறையில் கடந்த நான் காண்டுகளாகத் துறைத் தலைவராக (பொறுப்பு) இருந்துவருகிறார்.அனைத்துத் தகுதிகளும் இருந்தும் அவரைக் கடந்த நான்காண்டுகளாக துறைத் தலைவராக நியமிக்காமல், துறைத் தலைவர் (பொறுப்பு) பதவியிலேயே வைத்திருந்தனர். ஆயினும் இத்துறையில் இவர் பொறுப்பேற்றப் பின் வெறும் பதினேழு பேர் என்றிருந்த மாணவர்களின் எண்ணிக்கையை 150 க்கும் மேலாக உயர்த்தியுள்ளார். இப்பொழுது அப்பொறுப்பில் இருந்தும் அவரை நீக்கி, ’இராஜீவ் காந்தி கண்டெம்பொரரி ஸ்டடீஸ்’ என்ற துறையின் தலைவராக இருந்த பேராசிரியர் கோடீஸ்வரப் பிரசாத் அவர்களைப் புதிய துறைத் தலைவராக நியமித்திருக்கிறார்கள்.

பேராசிரியர் மணிவண்ணன் தில்லிப்பல்கலைக் கழகத்தில் பல ஆண்டுகள் பேராசிரியராகப் பணிபுரிந்து விட்டு, 2006 முதல் சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். திபெத் தேசவிடுதலைப் போராட்டம், பர்மிய மக்களின் சனநாயக உரிமைப் போராட்டம், தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் எனப் பல்வேறு போராட்டங்களை ஆதரிப்பது, ஈழ மக்களின் மீதான இன அழிப்புப் போருக்கு எதிராக சுமார் ஆயிரம் பக்கங்களைக் கொண்ட ஆவணத்தைத் தயாரித்தது, ஜெனீவாவில் ஐநா மனித உரிமை மன்றத்தில் சர்வதேச நாடுகளைக் கவனம் பெறச் செய்தது என்று தொடர்ச்சியாகச் செயல்பட்டு வருபவராகவும், பல்கலைக்கழகத்தின் உள்ளே மாணவர்களின் போராட்டத்தை ஆதரிப்பவராகவும், குடிநீர், கழிவறை, கணிப்பொறி, இணையம், மாணவர் விடுதிக்கான வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைக் கோரி மாணவர்கள் போராடியபோது, அப்போராட்டங்களில் தன்னையும் மாணவர்களோடு இணைத்துக் கொண்டவர். முறைகேடாகப் பணியமர்த்தப்பட்ட தகுதியற்ற பேராசிரியர்களின் பணிநியமனத்தை இரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்.

ஆகவே அவருடைய அரசியல் நடவடிக்கையை முடக்கவு ம், பழிவாங்கவு ம் பல்வேறு முயற்சிகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்தது நிர்வாகம். அவர்மீது ஆதாரமற்ற இருபத்தியேழு குற்றச்சாட்டுகளை வைத்து பணி ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் ஒருவரின் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் கமிசன் அமைத்ததாகவும், அந்த விசாரணையில் பதிமூன்று குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகவும், பத்து குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்றும், நான்கு குற்றச் சாட்டுகளுக்கு முகாந்திரம் இருக்கிறதென்றும் ஆட்சிமன்றக் குழுவிற்கு ஒரு அறிக்கையை துணைவேந்தர் தாண்டவன் தாக்கல் செய்தார். சில ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்களால் அவ்வறிக் கையின் மீதான கேள்வியெழுப்பட்டவுடன், அக்கூட்டத்தொடரிலிருந்து அவ்வறிக்கையை இடைக்காலமாகத் திரும்பப் பெற்றுக் கொண்டார். அந்த ஒரு நபர் ஆய்வுக்குழு என்பதே ஆட்சிமன்றக் குழுவால் நியமிக்கப்பட்டது அல்ல. பணி ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி என்பவர் ஒரு கல்லூரியின் தாளாளராகத் தற்போது இருக்கிறார் என்பதை மறைத்துவிட்டனர். அக்குற்றச்சாட்டுகளின் மீதான விசாரணையில் குற்றஞ்சாட்டப்பட்ட பேராசிரியர் மணிவண்ணனிடம் இதுவரை எவ்வகையான குற்றச்சாட்டுகளுக்கான விளக்கங் களையும் கோராமலேயே விசாரணையை முடித்திருக் கிறார்கள்.

இப்படியான பல்வேறு விதிகளை மீறிய பல்கலைக் கழக நிர்வாகத்தின் செயல்பாடுகளைக் கண்டித் துப் போராடிய மாணவர்கள் பத்துபேர் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாக வியல் துறையில் வகுப்புகள் அனைத்தும் காலவரையற்று விடு முறை விடப்பட்டிருக்கிறது.

இப்படியான சனநாயக விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து கல்வி நிலையங்கள் சனநாயகப் பூர்வமான கல்வியாளர்களின் இடமாகத் திகழ நாம் தொடர் போராட்டங்களில் ஈடுபட வேண்டிய தேவை இருக்கிறது.

பேராசிரியர் மணிவண்ணனை உடனடியாகத் துறைத்தலைவர் பதவியில் அமர்த்த வேண்டும்.

இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர்கள் மீதான நடவடிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகவியல் துறைக்கு விடப்பட்ட காலவரையற்ற விடுமுறையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

பல்கலைக்கழகத்தில் புதிதாக நிரப்பப்பட்ட பணிநியமனங்கள் மீதான ஒரு முழுமையான விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும்

துணைவேந்தர், பதிவாளர் பதவிகள் போன்ற பணிநியமனங்களில் பல்கலைக்கழகமானியக் குழு அந்தந்த மாநில அரசுகளின் அதிகார வரம்பை மீறாமல் ஒரு பொது விதியை உருவாக்க வேண்டும். பல்கலைக்கழக மானியக் குழு (UGC), பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுக்கள்(Syndicate), பல்கலைக்கழக பொதுப்பேரவை (Senate) போன்ற உரிமைகள் நிறைந்த மன்றங்களில் சமூகக் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ச்சியாகக் கண் காணிக்க வழிவகை செய்யப்பட வேண்டும்.

உயர்கல்வித் துறையில் நாற்றமெடுக்கும் ஊழலையும் கல்லூரி, பல்கலைக் கழக வளாகங்களில் ஆசிரியர், மாணவர்களின் கருத்துரிமைப் பறிப்புக்கு எதிரானப் போராட்டங்கள் வளாகத்திற்கு வெளியே நடக்கத் தொடங்கியுள்ளது. இதை வளர்த்தெடுத்து ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்; தரமான உயர் கல்வியை உறுதி செய்வோம்; பேராசிரியர், மாணவர்கள் கருத்துரிமையை, போராடும் உரிமையை உயர்த்திப் பிடித்து வளாக சனநாயகத்தை வளர்த்தெடுப்போம்.

Pin It