முஸ்லிம் நாடுகளில் சிரியா, பாலஸ்தீன், ஈராக் போன்ற நாடுகள் ஒரு கொந்தளிப்பான சூழலிலேயே இருக்கின்றன. அதற்கு உள்நாட்டுக் குழப்பங்கள் தான் காரணம் என மேற்பார்வையாக எல்லோரும் பேசுவார்கள். ஏன், இந்தியாவில் கூட இந்துத்துவ சிந்தனை கொண்டவர்கள், "பாருங்கள் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருக்கும் நாடுகளில் எவ்வளவு வன்முறை!" என்று பல நேரங்களில் பேசக் கேட்டிருக்கலாம்.
ஆனால், இப்படியான இஸ்லாமிய நாடுகளில் ஏற்படும் குழப்பங்களுக்கு மூல காரணமாக இருப்பது அமெரிக்கா போன்ற வல்லாதிக்க நாடுகள் தான் என்றால் மிகையாகாது. இதனை தற்போதைய உதாரணங்களுடன் பார்க்கும் போது இதில் உள்ள சதித் திட்டம் புரியும்.
வெள்ளிக்கிழமை 03/01/2020 அன்று ஈரானின் மிக முக்கிய இராணுவத் தளபதியான சுலைமானி ஈராக்கில் அமெரிக்காவின் வான்வெளித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
சுலைமானி யார்?
அமெரிக்காவிற்கும் சுலைமானிக்கும் என்ன சம்பந்தம்? 62 வயதான சுலைமானி ISIS என்ற தீவிரவாத அமைப்பை அழித்ததில் பெரிய பங்கு வகித்து பெரிய பாராட்டுதலுக்கு உள்ளானார்.
ISIS என்ற தீவிரவாத அமைப்பு இஸ்லாமியப் போர்வையில் மறைந்து கொண்டு முஸ்லிம்களைத் தான் அதிகம் கொலை செய்திருக்கிறது. அதனால், இந்த அமைப்பு அமெரிக்காவினால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது எனக் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் ISIS அமைப்பை வீழ்த்தியதில் முக்கிய பங்கு வகித்த ஓர் இராணுவத் தளபதி அமெரிக்காவினால் கொல்லப்பட்டிருப்பது அமெரிக்காவுக்கும், ISIS அமைப்புக்கும் இருக்கும் கள்ள உறவை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
சர்வதேச பத்திரிக்கையாளர் ஒருவர் சொல்லும் போது, அமெரிக்கா சுலைமானியைக் கொலை செய்து ISIS அமைப்புக்கு ஒரு பெரும் பரிசைக் கொடுத்திருக்கிறது என்றார்.
இஸ்லாமிய நாடுகளின் அமைதியின்மைக்கு அமெரிக்கா காரணமா?
சர்வதேச அளவில் முஸ்லிம்களின் தலைமையகமாக இருந்த ஓட்டமன் சாம்ராஜ்ஜியத்தை வீழ்த்திய பிறகு முஸ்லிம் நாடுகள் ஒன்றிணையாமல் இருப்பதற்கும், அரபு நாடுகளில் கிடைக்கும் கச்சா எண்ணெய்க்குப் பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும் அமெரிக்கா போன்ற வல்லாதிக்க நாடுகள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் நாடுகளுக்குள் உள்நாட்டுக் குழப்பத்தை திட்டமிட்டு உருவாக்கியது.
எப்படி ISIS என்ற அமைப்பு அமெரிக்காவால் உருவாக்கப்பட்டு முஸ்லிம்களுக்காகப் போராடுகிறோம் எனக் கூறி, முஸ்லிம்களையே அழித்துத் தள்ளினார்களோ அது போல் சிறு சிறு குழுக்களை உருவாக்கி உள்நாட்டுக்குள் பெரும் குழப்பங்கள் விளைய, அதற்குப் பஞ்சாயத்து செய்து வைப்பதாக அமெரிக்கா உள்நுழைந்து தனது இராணுவத்தை அரபு நாடுகளில் நிறுத்தி மறைமுக ஆட்சியை மேற்கொண்டது.
இப்படி தன் கண்காணிப்புக்குள் எப்போதும் அமெரிக்கா அரபு நாடுகளை வைத்திருக்கிறது. அமெரிக்கர்களின் படைகளுக்கு எதிராக ஏதேனும் உள்நாட்டுக் கிளர்ச்சி உருவாகும் போதெல்லாம் ISIS போல அமைப்புகள் உருவாக்கப்பட்டு அமெரிக்காவுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். ஆனால், சர்வதேச சமூகத்தில் முஸ்லிம்களுக்கும், முஸ்லிம் நாடுகளுக்குமே இந்த அவப் பெயர் கிடைத்தது.
இதன் ஒரு நீட்சி தான் அமெரிக்கா உருவாக்கிய அமைப்பான ISISன் வீழ்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய சுலைமானி கொல்லப்பட்டிருப்பதும் ஆகும்.
சுலைமானியின் இறப்பினால் நிகழப் போவது என்ன?
அமெரிக்கா தன் இராணுவத்தையும், தன் அதிகாரத்தையும் செலுத்த முடியாத பகுதி உண்டென்றால் அது தற்போதைய ஈரான் மட்டும் தான். ஈரான் "இதற்கு தகுந்த பதிலடி கண்டிப்பாக கொடுக்கப்படும்" என அறிவித்திருக்கிறது.
அமெரிக்காவின் திட்டப்படி, இது அமெரிக்காவை பாதிக்கப் போவது கிடையாது. ஆனால், ஈரானின் பதிலடி கண்டிப்பாக சவூதியில் இருக்கும் அமெரிக்க இராணுவத் தளங்களிலேயே தொடங்கும்.
சுலைமானியின் கொலைக்குப் பிறகு மத்திய கிழக்கு நாடுகளில் மேலும் 3000 இராணுவக் கேந்திரங்களை இறக்கியிருக்கிறது அமெரிக்கா. அப்படியென்றால் ஈரானின் தாக்குதலில் பாதிக்கப்படப் போவது அமெரிக்காவின் போர்த் தளங்கள் என்றாலும், முஸ்லிம் நாடுகளின் நிலங்களில் தான் இந்த சண்டை நிகழப் போகிறது.
சுலைமானியின் மரணத்தின் தாக்கம் தான் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் எப்போதும் இல்லாத அளவுக்கு தங்கத்தின் விலை உயர்வுக்கும் காரணம் என்று கூறப்படுகிறது. இனி மத்திய கிழக்கு நாடுகளில் போர்ப் பதற்றம் அதிகமானால், அதன் விளைவுகள் தமிழகத்தில் இருக்கும் நம்மையும் பாதிக்கும் ஒன்றாக மாறலாம்.
தகவல்: அல்ஜெசீராவில் தொடர்ந்து வெளியாகும் கட்டுரைத் தொகுப்பு
- அபூ சித்திக்