தலித்மக்களுக்கு ஒதுக்கப்பட்ட பாப்பாபட்டி, கீரிப்பட்டி பஞ்சாயத்துத் தலைவருக்கான உள்ளாட்சித் தேர்தலை நடத்தவிடாது தடுத்த ஊர் உசிலம்பட்டி.அங்குள்ள சமத்துவபுரத்தில் தந்தை பெரியார் சிலையை அமைக்கக் கூடாது எனத் தடுத்தார்கள். கடந்த ஆண்டுதான் அங்கு அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாள் கூட்டம் அரங்கிற்குள் முதல்முறையாக நடத்த முடிந்தது. கடந்த ஆண்டு அருண்குமார் என்னும் பள்ளிச் சிறுவன் தலையில் செருப்பை வைத்து நடக்கச் செய்த ஊர் வடுகபட்டி. அண்மையில் தலித் இளைஞனைத் திருமணம் செய்ததால் காவல்துறை துணையுடன் பிரிக்கப்பட்டுக் சாதிவெறியர்களால் கொலை செய்யப்பட்டு உடனே எரிக்கப்பட்ட விமலாவின்(வறட்டுக் கவுரவக் கொலை)ஊர் பூதிப்புரம். இதுபோன்ற பல்வேறு பெருமைகளும் கொண்டதுதான் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம்.

பி.மேட்டுப் பட்டி- பொறுப்பு மேட்டுப்பட்டி. பிறன்மலைக் கள்ளர், நாயுடு, தேவேந்திரர், ஆதிதிராவிடர் மக்கள் வாழும் கிராமம். 15-10-14 அன்று உள்ளூர் மந்தையம்மன் கோவில் திருவிழாவில், ஆட்டப் பாட்டத்துடன் சாமி தூக்கிச் செல்லும்போது கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களில் சிலர் கை நீட்ட, தலித் இளைஞர்களும் பதிலுக்கு கை நீட்டியுள்ளனர். அன்று இரவே தலித் மக்களின் குடியிருப்புகளை அச்சுறுத்துவது நடந்துள்ளது. மறுநாள் பகலிலும் தேவேந்திரர் குடியிருப்புகளுக்குள் சென்று இரவு திருப்பியடித்த இளைஞர்களை அடித்து ஊர்மந்தைக்கு இழுத்து வந்துள்ளனர். அப்பகுதியில் நிலவும் ஊர் சாதிய வழக்கப்படி இளைஞர்களின் தந்தை விழுந்து வணங்கி மகனை அழைத்துச் சென்றுள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) மக்கள் விடுதலை மாவட்டக் குழு உறுப்பினரும், சாதி ஒழிப்பு அமைப் பின் மாநிலக் குழு உறுப்பினருமான தோழர் காசிமாயன் மற்றும் உசிலை வட்ட தலித் மக்கள் கூட்டமைப்புத் தோழர்களுடன் இணைந்து சிந்துப் பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். வழக்குப் பதியாமல் இழுத் தடித்த காவல் ஆய்வாளர் குரு வெங்கட்ராஜ், மாவட்டக் கண்காணிப்பாளர் விஜயேந்திர பிடாரியை தலையிட வைத்த பின்னரே புகாரைப் பெற்றுக் கொண்டார். ஊருக்குள் காவல்துறை வந்தவுடன் ஊர்ப் பெரியவர்கள் என்ற பெயரில் சாதிய மிரட்டல் தொடங்கியது. 17-10-14 அன்று புகார் கொடுத்த தோழர் காசிமாயன் உள்ளிட்டோர் கட்சிப் பாதுகாப்பில் தங்கவைக்கப்பட்டனர். எதிர்த்தரப்புப் புகாரின் பேரில் தோழர் க £சிமாயன், தோழர் அம்மாவாசி உள்ளிட்ட 20 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிந்தது. காவல்துறை, சாதி ஆதிக்க சக்திகளும்சமாதானமாகப் போகவேண்டும் என தலித் சமூகப் பெரியவர்களுக்கு நெருக்கடி கொடுத்தனர். தலித் மக்களுக்கு ஊராட்சி சார்பில் வழங்கப்பட்ட குடிநீர் நிறுத்தப்பட்டது, கடைகளில் பொருட்கள் விற்பனை நிறுத்தப்பட்டது. 18-10-14 அன்று மாலை உசிலம்பட்டி கோட்டாட்சியர் மூ.பாலசுப்ரமணியம் முன்பு, வட்டாட்-சியர் கஜேந்திரன் கலந்து கொண்ட, காவல்துறை ஏற்பாட்டில் சமாதானக் கூட்டம் எனும் பெயரில் 22 ஆம் தேதிக்குள் இணக்கமாக வாழ்வதை உத்தர வாதப் படுத்தத் தவறினால், காவல்துறை 23 ஆம் தேதி யிலிருந்து அமைதியை நிலைநாட்ட சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்கும் என்று அக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக நாளிதழ்களில் வந்தது.

20-10-14 அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் மீ.த.பாண்டியன், மாவட்டச்செயலாளர் தோழர் ஆரோக்கியமேரி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் திவ்யா, காசிமாயன், அம்மாவாசி, தவசி மற்றும் உசிலை வட்ட தலித் மக்கள் கூட்டமைப்பு சார்பில் வழக்கறிஞர்கள் தெய்வம்மாள், இராஜா, விடுதலைச் சிறுத் தைகள் மாவட்டத் துணைச் செயலாளர் தோழர் தென்னரசு சமத்துவப் படை மாவட்டச் செயலாளர் தோழர் பாண்டி ஆகியோர் கோட்டாட்சியரைச் சந்தித்தோம். எஸ்.சி - எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைக் கைது செய்யாதது, எதிர்ப் புகாரைப் பெற்றுக் கொண்டது, பாதிக்கப்பட்டவர் மீதே வழக்குப் போட்டது, 16 ஆம் தேதிஅன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டு 22 ஆம் தேதி வரை சமாதானமாகப் போக காவல் துறையே வலியுறுத்துவதும், 107 சி.ஆர்.பி.சி. போட்டு 23 ஆம் தேதி அன்றுதான் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்று தள்ளிப் போடுவதும் எந்த வகை நியாயம்? என்று கேட்டோம். அதற்கு, ”அனைத்தும் காவல்துறை ஏற்பாடு! என் முன்னிலையில் நடைபெற்றது என்பதைத் தவிர எனக்கு சம்பந்தம் கிடையாது” என்றார் கோட்டாட்சியர். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பகுதி செய்யாமல் சாதி ஆதிக்கத்திற்கு துணை நிற்பதாகவே காவல் துறையும், மாவட்ட நிர்வாகமும் இருக்கின்றது.

ஊரில் பொது மந்தையில் விழுந்து கும்பிட நிர்ப் பந்தம் உள்ள நிலையில், அதிகாரிகள் முன்னிலையில் ஊர்- சாதிக்காரர்களுடன் சமமாக முதன் முறையாக இருக்கைகளில் அமரும் வாய்ப்பு மட்டுமே இந்தப் பேச்சுவார்த்தையின் விளைவாக உள்ளது. உசிலம்பட்டி வட்டார தலித் மக்களின் நிலை இதுவாகத்தான் உள்ளது. இந்த நிலையில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தையே நீக்க வேண்டுமாம்! காவல்துறையும், சாதி ஆதிக்க சக்திகளும் ஒன்றிணைந்து வழக்குப் பதிவு செய்ய மறுப்பதும், பதிவு செய்வதாக இருந்தால் எதிர்தரப்பு மனு பெற்று சமரசமாகப் போவதற்கும், 107 போட்டு சமாதானமாகப் போக நிர்ப்பந்திப்பதும் நடக்கின்றது.

இவைதான், இந்த அரசு சட்டம் - ஒழுங்கைப் பராமரிக்கும் லட்சணம்! தர்மபுரிகளும், உசிலம்பட்டிகளும், பூதிப்புரங்களும், வடுகபட்டிகளும் சாதி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டங்களின் மூலம்மாற்றியமைக்கப்பட வேண்டும். நிலவக் கூடிய சாதியச் சூழல் எஸ்.சி.- எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைக் கறாராக அமுலாக்க வலியுறுத்தும் தமிழ்நாடு தழுவிய முன்னெடுப்புகளைக் கோருகிறது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டமும், திருமங்கலம் வட்டமும், பேரையூர் வட்டமும் இதுபோன்ற சாதிய அடக்குமுறைகளைக் கொண்டதாக நீடிக்கிறது. பாப்பாபட்டி, கீரிப்பட்டி போல் உசிலம்பட்டி வட்டத்தில் உள்ள சாதி ஆதிக்க யதார்த்தம் சாதிய இறுத்தலின் தீவிரத்தை உணர்த்துகிறது.

Pin It