கடந்த ஜீலை மாதம் பாரதிய சனதா கட்சியின் புதிய தலைவராக குஜராத் மாநில முன்னாள் உள் துறை அமைச்சரான அமித் ஷா ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் தலைவராக இருந்த ராஜ்நாத் சிங் இந்திய ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டதால் பாரதிய சனதா கட்சிக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டார். வழமைப் போலவே, புதிதாக பதவியேற்றுள்ள கட்சித் தலைவரின் கடந்த காலங்களை அசைபோடும் 24 மணி நேர செய்தி ஊடகங்கள், அமித் ஷாவின் திறமைகளையும், தேர்தலுக்கு அவர் வகுத்த உத்திகளையும் சிலாகித்து செய்தி வெளியிட்டன.

*குஜராத் மாநில சட்டமன்ற உறுப்பினராக நான்கு முறை தொடர்ந்து வெற்றி பெற்றவர்.

*தற்போதைய தலைமை அமைச்சரும், முன்னாள் குஜராத் முதல்வருமான நரேந்திர மோடியை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்.

*கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது உத்திரப் பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 71 தொகுதிகளைப் பா.ச.க வெல்லத் திட்டம் போட்டு வேலை பார்த்த சூத்திரதாரி. இவ்வாறெல்லாம், அமித் ஷா-வைத் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் ஊடகங்கள் எல்லாம் ’மறதி நோயில்’ சிக்கி சில விடயங் களை மறந்தும், மறைத்தும் விட்டன.

* 2010 ஆம் ஆண்டு போலித் துப்பாக்கிச்சூடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அமித் ஷா தன்னுடைய அமைச்சர் பதவியை இழந்தார்.

*போலித் துப்பாக்கிச்சூடு வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவர் இருபது நாட்களுக்கு காவல்துறையிடமிருந்து தப்பி தலைமறைவாகி இருந்தார்.

*இந்த போலித் துப்பாக்கிச்சூடு வழக்கின் சாட்சிகளைக் கலைத்துவிடுவார் என்பதற்காக நீதிமன்ற உத்தரவின் பேரில் குஜராத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

amit shah*சொரப்புதின் மற்றும் அவரது மனைவி கொல்லப் பட்ட போலி என்கவுன்டர் வழக்கில் குஜராத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட இவர் மீது, துளசி பிரஜாபதி என்பவரின் போலி என்கவுன்டர் கொலை வழக்கிலும் சி பி ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

*குஜராத்தை விட்டு வெளியேறி இருந்த காலத்தில் தான் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அப்போது உத்திரப் பிரதேச மாநிலப் பொறுப்பாளராக இவர் நியமிக்கப்பட்டதையும், அப்போது நடைபெற்ற முசாபர் நகர் கலவரத்தையும் சேர்த்தே புரிந்து கொள்ள வேண்டும்.

*சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பையும், ஆத்திரத்தையும் தூண்டும் இவரது பேச்சால் உத்திரப் பிரதேச தேர்தல் ஆணையம் இவரது பரப்புரைக்குத் தடை விதித்தது.

*இவர் உள்துறை அமைச்சராக இருந்த போது குஜராத் மாநிலத்தில் ஒரு பெண்ணை உளவு பார்த்த வழக்கிலும் இவருக்கு இருக்கும் தொடர்பு ஊரெங்கும் நாறியது நாம் அறிந்ததே. இவ்வாறான அமித் ஷா-வின் தகுதிகளை மறைத்துவிட்டுதான் இன்று ஊடகங்கள் அவரைக் கொண்டாடி வருகின்றன. 2000 பேரைக் கொன்றால் இந்தியாவின் தலைமை அமைச்சர் ஆகும் வாய்ப்பு இருக்கும் போது, வன்முறை செய்ய உறுதுணையாக இருப்பதும், சில வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டிருப்பதும் அமித் ஷா ஒரு கட்சியின் தலைவராவதற்கு போதுமான தகுதிகள் தானே! இந்த செய்தியை வெளியிட்டிருந்த ஜூனியர் விகடன் , தன்னுடைய செய்திக் கட்டுரையைப் பின்வருமாறு தொடங்கியிருந்தது, ” நண்பனை நாட்டின் தலைமை அமைச்சர் ஆக்கிவிட்டு, கட்சியின் தலைவர் ஆகிவிட்டார் அமித் ஷா. ஒரே நேரத்தில் இரண்டு நண்பர்கள் உச்சமான பதவியை அடைந்திருப்பதுதான் சமீபகால சாதனை!”.

சரியானவற்றின் பக்கம் நிற்க வேண்டிய ஊடகங்கள், ஆளும் வர்க்கத்தின் செய்தி ஊடகமாக வேலை செய்வதையே இது காட்டுகிறது. தன்னுடைய குடும்ப உறுப்பினர்களை அரசின் பல்வேறு பதவிகளில் அமர்த்தி சர்வதிகார ஆட்சி நடத்துகிறார் இராசபக்சே. அதே போல் தன்னுடைய நண்பரை கட்சியின் தலைவராக ஆக்கியுள்ளார் மோடி. உலகின் மிகப்பெரிய சனநாயக நாடு என்று வெளிநாட்டார் ஏமாறும் இந்தியா, சர்வாதிகாரத்தையும், பாசிசத்தையும் நோக்கி வேகமாக நடைபோடுவதன் வெளிப்பாடே பாசிச பாரதிய சனதாவின் தலைவராக அமித் ஷா இருப்பது.

நன்றி : விசை, வலைதளம்

Pin It