modi rajapaksa 340ஐ.நா பொது அவையில் மோடியும், இராஜபக்சேவும் அண்மையில் பேசியுள்ளார்கள். இதைக் கேட்கும் பொழுது 2006ஆம் ஆண்டு ஐ,.நா அவையில் வெனிசுவேலாவின் அன்றைய அதிபர்.ஹீகோ சாவேஸ் பேசியது தான் நினைவுக்கு வருகின்றது. "“நான் பேசிக் கொண்டிருக்கும் இதே அவையில் ஒரு இரத்தக்காட்டேரி, நேற்று பேசி விட்டுச் சென்றிருக்கிறது. இதோ இந்த இடத்தில் தான். இதே மேசையின் முன்பு தான். இங்கு தான் இன்னும் அந்தப் பேயின் கந்தக நெடி கூட மறையவில்லை” எனக் கடுமையான சொற்களை எறிந்தார் சாவேசு. அப்போதைய அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ்ஷைத் தான் அப்படி குறிப்பிட்டார். ”பயங்கரவாதத்திற்கெதிரான போர்” என்ற பெயரில் ஈராக்கிலும் ஆப்கனிலும் லட்சகணக்கானப் பொதுமக்களையும், பெண்களையும் குழந்தைகளையும் ஈவு இரக்கமின்றி கொன்று குவித்து, வாயில் வழிந்த குருதித் துளிகளைத் துடைத்தவாறு வீர உரை பேசிச் சென்றிருந்தார் புஷ்.

அமெரிக்க அதிபர் புஷ்ஷிற்கு கொஞ்சமும் குறை வில்லாதவர்கள் தான் மோடியும், இராசபக்சேவும். இலங்கையில் ஒரு இலட்சத்திற்கும் அதிக‌மான தமிழர்களைக் கொன்று ஓர் இனப்படுகொலையை நடத்தியவர் தான் இராசபக்சே. இன்றளவும் தமிழர் பகுதிகளில் ஒரு கட்டமைப்பு ரீதியான இனப்படுகொலையை நடத்திக்கொண்டு தான் இருக்கின்றார் இராசபக்சே. வடக்கு- கிழக்கில் இலட்சத்திற்கும் அதிகமான இராணுவம் குவிக்கப்பட்டுத் தமிழர் பகுதியே இராணுவமயமான ஒன்றாக உள்ளது.

அதே போல குசராத்தில் முதலமைச்சராக இருந்த பொழுது இசுலாமிய மக்களின் மீது திட்டமிட்டப் படுகொலையை நடத்தினார் மோடி. அதனால் அவருக்கு அமெரிக்கா விசா வழங்கவேயில்லை, இன்று இந்தியாவின் தலைமை அமைச்சராகி விட்டதால் அரசத் தலைவர் என்ற வகையில் அவருக்கு விசா வழங்கியது அமெரிக்கா. மோடி-இராசபக்சே இருவருக்கும் இந்த ஒற்றுமை மட்டுமில்லை,‘வளர்ச்சி’ என்ற பெயரில் மக்களை அவர்களது வாழ்வாதாரத்திலிருந்து பிடுங்கி பெருமுதலாளிகளுக்கு இலாபம் கொழிக்க வைக்கும் திட்டங்களை இருவரும் செயல்படுத்தி வருகின்றனர். தொழிலாளர்களுக்கு இருக்கும் குறைந்தபட்ச உரிமையையும் பறித்து பெருமுதலாளிகள் மனம் கோணாமல் இருவரும் நடந்து வருகின்றனர்.

இவர்கள் தான் ஐ.நா பொது அவையில் பேசி வந்துள்ளனர். ஐ.நா என்பது என்ன? இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்ற நாடுகள் உலகில் தங்களின் செல்வாக்கை நிலை நிறுத்துவதற்காக உருவாக்கிய அவை. இங்கே அமெரிக்கா, சீனா, இரசியா, பிரான்சு, பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு ’வீட்டோ’ என்ற பெயரில் எந்த தீர்மானத்தையும் தோற்கடிக்கும் அதிகாரம் உண்டு, இதில் அரசத் தலைவர்கள் என்ற பெயரில் இனப்படுகொலை குற்றவாளிகளான மோடியும், இராசபக்சேவும் பேசி வந்துள்ளனர். அதே நேரம் இவ்விருவரின் வருகையை எதிர்த்தும் பல மக்கள் போராட்டங்களும் நடந்துள்ளன. உழைக்கும் மக்களாகிய நாம் மக்களுக்கு அதிகாரமுள்ள உலகளாவிய அமைப்புகளை உருவாக்க வேண்டியதன் தேவையை இது போன்ற நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

Pin It