சென்ற ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மோடி தலைமையில் ஆட்சிக்கு வந்த பாரதிய சனதா கட்சி, மகாராஷ்டிரா, அரியானா போன்ற மாநிலங்களிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆட்சிக்கு வந்த ஆறே மாதங்களில் மாட்டிறைச்சிக்கு தடை கொண்டு வந்து தங்களுடைய இந்துத்துவ விசுவாசத்தைக் காட்டியுள்ளன மாகாராஷ்டிரா, அரியானா அரசுகள்.

வழமையாகவே, வரலாற்றைப் புரட்டுவதில் நிபுணத்துவம் கொண்டது இந்துத்துவக் கும்பல். கால்நடைகளைக் கொல்வது பாவம், இந்துக்கள் யாரும் வேதகாலங்களில் மாட்டிறைச்சி சாப்பிடவில்லை என்னும் கட்டுக் கதைகளை அடுக்கிப் பரப்புரை செய்யும் இந்தக் கும்பல், தங்களுடைய இந்துத்துவத் திட்டத்தின் அடிப்படையிலேதான் மாட்டிறைச்சியையும், இறைச்சிக்காக கால்நடைகள் கொல்லப்படுவதையும் தடை செய்துள்ளனர்.

பார்ப்பனர்கள் உள்ளிட்ட அனைத்து சாதியினைச் சேர்ந்த மக்களும் மாட்டிறைச்சியை உணவாக சாப்பிட்டதற்கான ஆதாரங்கள் வரலாறு முழுக்க இருக்கின்றன. ஆனால், அந்த உண்மைகளை மூடி மறைத்து மாடுகளுக்கு புனிதம் கற்பிக்கும் வேலையைத் தொடர்ந்து செய்கிறது இந்துத்துவக் கும்பல்.

இந்த தடை பண்பாட்டு அடிப்படையில் மட்டுமின்றி, பொருளாதார அடிப்படையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். விவசாயத்தை நம்பியிருக்கும் மக்கள் தங்களுடைய வருவாய் பாதிக்கும்போது தங்களுடைய கால்நடைகளைப் பயன்படுத்தியோ அல்லது இறைச்சிக்கு விற்றோதான் சிறிது பலனடைவர். மூப்படைந்த, விவசாயத்திற்கு பயனளிக்காத கால்நடைகளை வைத்துக் கொண்டு இருப்பது விவசாயிகளுக்கு பெரும் சுமையையே தரும். இப்படியான சூழ்நிலைகளில் கால்நடைகளை இறைச்சிக்காக விற்பது என்பது காலங்காலமாக நடந்து வரும் ஒன்று. ஆனால், இப்போது கொண்டு வரப்பட்டிருக்கும் தடையால், விவசாய ஏழை மக்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது அன்றாட நிகழ்வாகிப் போன நாட்டில், அவர்கள் வைத்திருக்கும் கால்நடைகளால் விவசாயிகள் பெறும் பலன்கள் பற்றி சிந்திப்பதை விடுத்து இதுபோன்ற தடைகளைக் அரசுகள் கொண்டு வருவது இந்துத்துவ அடிப்படையில்தான். இத்தனைக்கும் விவசாயிகள் தற்கொலை அதிகமாக நடக்கும் மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்டிராவில் தான் இந்த தடை!

தலித்துகள், இசுலாமியர்கள் போன்ற சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழும் உழைக்கும் மக்களுக்கு, மாட்டிறைச்சி மூலம் தான் புரதச்சத்து கிடைக்கிறது. மற்ற இறைச்சி வகைகளை ஒப்பிடும் போது விலை குறைவாக இருக்கும் மாட்டிறைச்சியை உட்கொண்டுதான் புரதச்சத்தைப் பெறுகின்றனர் அடித்தட்டு மக்கள். இப்போது கொண்டு வரப்பட்டிருக்கும் தடை அடித்தட்டு மக்களின் நல்வாழ்வையும் கேள்விக்குறியாக்குகிறது.

பொருளாதார அடிப்படையில் கார்ப்பரேட்டு முதலாளிகளின் நலன்களுக்காக ஏவல் செய்யும் பாரதிய சனதா அரசு, சமூகத் தளத்தில் இந்துத்துவத் திணிப்பை மேற்கொண்டு, பார்ப்பனீய, அரசாகவே செயல்பட்டு வருகிறது என்பது தெட்ட தெளிவாகிறது.

Pin It