ஐநா மனிதவுரிமைப் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக இந்தியா தலைமை கொடுக்க வேண்டும்;
ஈழத் தமிழர்கள் தொடர்பாக இந்தியாவின் அயலுறவுக் கொள்கையில் தமிழ்நாடு முக்கியப் பங்கு வகிக்க வேண்டும்.
இப்போது நடைபெற்று வரும் ஐநா மனிதவுரிமைப் பேரவை அமர்வில் இந்தியா தலைமை கொடுக்க வேண்டும் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சிறிலங்காவில் பொறுப்புக் கூறல் தொடர்பாக மேலையரசுகள் எடுத்துள்ள முன் முயற்சியில் இந்தியா கைகட்டி வேடிக்கை பார்க்கும் நோக்கராகவே இருந்து விடக் கூடாது என வலியுறுத்தி வேண்டுகிறோம்.
ஒரு தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது - சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் கொண்டுபோய் நிறுத்தும் வகையில் இந்தியா அத்தீர்மானத்திற்குத் திருத்தம் கொண்டுவர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் கொண்டுபோய் நிறுத்தும் படி மனிதவுரிமைகளுக்கான ஐநா உயராணையர் மிசேல் பசலே முன்மொழிந்துள்ளார். நான்கு முன்னாள் உயராணையர்கள், சிறிலங்காவுக்குச் சென்று வந்த பதின்மூன்று முன்னாள் ஐநா சிறப்பு அறிக்கையாளர்கள், தாயகத் தமிழ் அரசியல் தலைவர்கள், தமிழ் சிவில் சமூகத்தார், வல்லுநர் குழு உறுப்பினர்கள், தமிழ் சமயத் தலைவர்கள், புலம்பெயர் தமிழர் அமைப்பினர், பன்னாட்டு அரசுசாரா அமைப்பினர் ஆகியோரும் கூட இவ்வாறே அழைப்பு விடுத்துள்ளனர்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் 2015ஆம் ஆண்டு இதே பொருள் குறித்து முன்னெடுத்த கையொப்ப இயக்கத்தில் 16 இலட்சத்துக்குக் குறையாத மக்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர் என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
13ஆம் திருத்தத்தைச் செயலாக்க வேண்டுமென முன்னதாக இந்தியா ஐநா மனிதவுரிமைப் பேரவையில் கூறியதை நாம் கருத்தில் கொண்டோம். சிறிலங்காவின் மனப்போக்கில் ஓங்கி நிற்கும் சிங்கள பௌத்தப் பேரினவாதம் 13ஆம் திருத்தம் செயலாக்கப்படுவதற்கு இடமளிக்காது என்பதையே வரலாறும் நிகழ்கால நடப்புகளும் போதிய அளவில் மெய்ப்பிக்கின்றன.
உண்மை என்னவென்றால், இந்திய இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஏற்கெனவே பிரிக்கப்பட்டு விட்டன. இன்றைய சிறிலங்கா அரசு குறித்து எங்களுக்குள்ள அச்சமெல்லாம், தமிழ்த் தேசத்தின் தனியியல்புகளை அழிக்கும் முயற்சிகளிலும். இந்திய இலங்கை ஒப்பந்த்த்தில் அங்கீகரிக்கப்பட்ட தமிழர்களின் மரபுவழித் தாயகத்தில் நிலப்பறிப்புச் செய்வதிலும் அது ஈடுபட்டுள்ளது என்பதே.
தமிழர்கள் மீது தொடரும் கட்டமைப்பியல் இனவழிப்பைத் தடுத்து நிறுத்தும் அறக்கடன் இந்தியாவுக்கு உள்ளது. டெல்ஃபித்தீவிலும் அனலைத்தீவிலும் நைனாத்தீவிலும் புதுப்பிக்கத்தக்க மின்விசைத் திட்டங்கள் அமைக்க ஒரு சீனக் குழுமத்துக்கு உரிமைகள் வழங்கப்பட்டிருப்பது தமிழர் இறைமை மீதான வன்தாக்கு மட்டுமல்ல, இந்தியாவின் தேசிய இறைமைக்கே அச்சுறுத்தலும் ஆகும்.
எந்தவொரு நாட்டிலும் அயலுறவுக் கொள்கைகளை வகுப்பதில் உள்நாட்டு மக்கள் தொகுதி ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆகவே ஈழத் தமிழர்கள் தொடர்பான இந்தியாவின் அயலுறவுக் கொள்கையில் தமிழ்நாடு ஒரு முக்கியப் பங்கு வகிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். தமிழ்நாட்டில் வரவிருக்கும் மாநிலத் தேர்தல் அதற்கு ஒரு மேடையமைத்துக் கொடுக்கும் எனப் பெரிதும் நம்புகிறோம்.
இறுதியாக, தமிழ்த் தேசிய இனச் சிக்கலுக்கு நிலையான தீர்வு காணப் பன்னாட்டுச் சமுதாயத்தின் சார்பில் ஒரு பொதுவாக்கெடுப்பு நடத்தப்படுமாறு செய்வதில் இந்தியா தலைமைப் பாத்திரம் வகிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
- நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிரதம அமைச்சர் அலுவலகம்