தவளைகள் மழையைக் கொண்டு வந்தன. தர்க்கத்திற்குள் அகப்படாமல் வானத்தை நம்பியே விவசாயிகள் நிலத்தில் விதைக்கிறார்கள். கால மழைப்பருவம் தப்பாமல் பெய்வதை நம்பியே செடி கொடிகள், புற்கள், தட்டான், வண்ணத்துப்பூச்சிகள், பறவைகள் எனப் பல உயிர்களும் வானம் பார்த்துக் கிடக்கின்றன.

எருமைகளும் பசுக்களும் காளைகளும் நாய்களும் பூனைகளும் பழக்கிய உறவுகள் மனித உறவைப் பேணி வளர்க்கின்றன. கண்மாய்கள் நிரம்பி நீர்ப்பூச்சிகள் தண்ணீர்மேல் ஓட மடை வழி தண்ணீர் வயலுக்குள் நுழைகிறது. சிறுவர்கள் ஊரணியில் கண்சிவக்கக் குதியாட்டம் போட்டு நீர் விளையாடிக் கழிக்கிறார்கள்.

statue 600மொச்ச.. மொச்ச என மூதாட்டி தன் தனிமை வாழ்வின் இராகம்பாடித் தெருவில் கூவுகிறாள். இரவின் ஒளியில் காணி தட்டி நிலாப்பூ பறித்து வட்டமாய் அமர்ந்து சிறுவர்கள் நிலாச் சோறு உண்கிறார்கள். இரண்டாம் சாமத்தில் நாய்கள் ஊளையிடுவதை மறந்து அலுப்பில் கிராமம் தூங்கிக் கிடக்கிறது.

அதிகாலையில் அமைதிக்குள் நாயனமும் கொட்டும் உருமியும் முழங்க மாரியம்மன் கோயில் திருவிழாவின் செய்தியை அதிர்கின்றன. கிராமம் சுறுசுறுப் பாகிறது. பித்துப் பிடித்தவர்களைப் போலக் கொட்டுச் சத்தத்தின் இசையில் ஊரே லயித்துக் கிடக்கிறது. மனம் ஆங்கலாய்ப் பற்று கொட்டுக்கேற்ற வகையில் குதியாட்டம் போடுகிறது.

ஊர் முழுக்கப் பரவிய கண்ணுக்கு தெரியாத நெசவால் இசையொலி ஊரை ஒன்றாக்குகிறது. இதுதான், இப்படித்தான் என்று அர்த்தமற்ற இசைக் கோவையின் தாளகதியில் மந்திரத்தால் கட்டுண்ட ஓருடலாய் கொட்டுக் குதியாளமும் நாயணத்தின் தலையசைப்பும் மகுடிக்கு மயங்கியப் பாம்பாய் ஒரே மனமாய்க் கிராமத்துச் சனங்கள் பொட்டலில் கூடுகிறார்கள்.

இசைக்கலையின் ஒலித் துணுக்குகள் உருவாக்கிய மேஜிக் குறித்தே ஒரு கலைமனம் தொடர்ந்து லயித்துக் கொண்டிருக்கிறது. மனிதன் சோற்றால் அடித்தப் பண்டமல்ல. மகிழ்ச்சியும் சுதந்திரமும் ஆதாரமான தேவைகள் என்பது உயிர்களின் இயல்பு. மகிழ்ச்சியைப் பொதுவாக்கக் கலைமனமும் கலையும் சதா இயங்கிக் கொண்டிருக்கிறது. மனிதனின் இயற்கை குறித்த ஆய்வுகளின் கண்டுபிடிப்புக்களால் அறிவியல் வளர்ந்தப் பின்னும் அறிவியலால் இட்டு நிரப்ப முடியாத ஆழ்ந்த இருண்மையானப் பகுதிகள் வெளிச்சத்திற்கு வராமல் கிடக்கின்றன.

ஓர் இசைக் கோவை குதியாட்டத்தை, தலையாட்டலை, அழுகையை, பயத்தை, கோபத்தை உருவாக்குவது மனிதனின் உணர்வு சார்ந்தது. உணர்வு உருவாக்கத்தில் கலையின், இலக்கத்தின் பங்கு மகத்தானது. தொட்டிலின் சீரான அசைவில் ‘ரே ரே ரே ரேய்’ அம்மாவின் தாலாட்டுப் பாடலில் குழந்தை தூங்கிப் போவதிலிருந்து மனிதனின் சாதாரணமான உணர்வுகள் கலை சார்ந்தவை என்பது விளங்கும். அறிவியலோ, தத்துவமோ, அரசியலோ கலையால்தான் வளப்பட முடியும். கலைஞர்கள் மகிழ்ச்சி என்ற உணர்வை மட்டுமல்ல, உணர்வெழுச்சியை உருவாக்க வல்லவர்கள்.

இசையோடு பாடல்களை உருவாக்கி மக்களைத் திரட்டியப் புரட்சிப் பாடகர் கத்தார் ஓர் எடுத்துக்காட்டு. தமிழ் இலக்கியங்கள், கலைகள் வழியாகத்தான் கடந்த ஐம்பதாண்டு காலமாக அரசியலில் இருக்கும் திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்துள்ளனர் என்பது ஒரு தகவலாக மட்டுமே இருப்பது பொறுப்பற்ற செயலே ஆகும். கலை வளர்க்க, இலக்கியம் பயில ஆக்கப்பூர்வமான முயற்சிகள் உருவாக்க வேண்டும்.

Pin It