roengko muslims 400gjpgமியான்மரின் ராக்கைய்ன் மாகாணத்தில் ஒரு சிறுபான்மை தேசிய இனமாக ரோஹிங்கிய முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். "வாழ்ந்தார்கள்" என்று எழுதக்கூடிய வரலாற்று காலகட்டத்தை அவர்கள் இன்று வந்தடைந்திருக்கிறார்கள்.

ரோஹிங்கியா முஸ்லிம்கள் பர்மிய மண்ணின் மைந்தர்கள் என ஒரு பிரிவினரும், பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் போது, வங்காள தேசத்திலிருந்து சட்டவிரோதமாக குடியேறிய வங்காளிகளே ரோஹிங்கியா முஸ்லிம்கள் என பர்மிய (பௌத்த) தேசிய வாதிகளும் வாதிடுகின்றனர்.

“பௌத்தத்திற்கு எதிரானவர்கள்” என்று ரோஹிங்கியா முஸ்லிம்கள் சித்தரிக்கப்பட்டு அவர்கள் மீது கொடும் வன்முறையைத் தொடர்ந்து கட்டவிழ்த்து விடுகின்றது  பர்மிய அரசும் அதனைப் பின்னின்று இயக்கும் பௌத்தப் பேரினவாதமும். வரலாற்று அநீதியின் இருண்ட இப்பக்கங்களை உலகம் மிக வேகமாக புரட்டிக் கொண்டிருக்கிறது.

1982-ம் ஆண்டு மியான்மரில் ஜெனரல் நே வின் அரசு, ரோஹிங்கிய இன‌மக்களுக்கான குடியுரிமையை மறுத்து. "ரோஹிங்கியா" என்ற சொல்லைக்கூட பயன்படுத்த அவர்களுக்குத் தடை விதித்தது. "வங்காளிகள்" என்றுதான் அவர்களை அழைக்க வேண்டும் எனச் சட்டம் இயற்றப்பட்டது. இதன் மூலம் மியான்மர் மக்களிடையே இச்சிறுபான்மை இனத்தவரை "வந்தேறிகள்" என அடையாளப்படுத்தி அந்நியப்படுத்தும் திட்டம் வெற்றிகரமாக முடுக்கிவிடப்பட்டது.

ரோஹிங்கியா இன முஸ்லிம்கள்,  ஒரு புத்த மதப் பெண்ணைப் பாலியல் வல்லுறவு செய்துவிட்டார்கள் என ஒரு வதந்தி பரப்பபட்டு, ரோஹிங்கியா இன‌மக்களின் மீது வெறுப்பு விதைக்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டு,ஜூன் 10 ஆம் நாள் மியான்மர் அரசு அவசரநிலை பிரகடனம் செய்ததை அடுத்து,  ராக்கைய்ன் பௌத்தர்கள் அதை வசதியாகப் பயன்படுத்திக் கொண்டனர். ஊரடங்கு உத்தரவினால் வீட்டிற்குள்ளே முடங்கிக் கிடந்த ஆயிரக்கணக்கான ‌ரோஹிங்கியா முஸ்லிம்களைக் கொன்றனர். எஞ்சியவர்களை வீட்டைவிட்டு விரட்டியடித்தனர். வீடுகள், கடைகள், கல்வி நிலையங்கள், வங்கிகள் என அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டன. இராணுவமும் காவல்துறையும் இத்தாக்குதல்களுக்கு துணைநின்றன.

 உள்நாட்டில் வாழ வழியின்றி உயிருக்குப் பயந்து படகுகளில் தப்பியோடிய ரோஹிங்கிய முஸ்லிம்கள் வங்கதேசத்தின் கதவுகளைத் தட்டினர். ஏற்கெனவே 3 லட்சம் அகதிகள் வங்கதேசத்தில் இருப்பதாகச் சொல்லி,  அவர்களை ஏற்க மறுத்துவிட்டது வங்கதேச அரசு. நடுக்கடலில் படகுகளில் உணவின்றி, நீரின்றி எண்ணற்ற மக்கள் உயிரிழந்தனர்.

இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து என ஒவ்வொரு நாட்டின் கதவுகளையும் அவர்கள் தட்டிக் கொண்டே இருக்கின்றனர். இதில் மலேசியா, தாய்லாந்து எல்லைப் பகுதியில் ஆள்கடத்தல் கும்பலிடம் சிக்கி பலர் அவதிப்பட்டும், உயிரிழந்தும் வருகின்றனர். இந்நிலையில் தாய்லாந்து,  மலேசிய எல்லைப்பகுதியில் கைவிடப்பட்ட பல ஆள்கடத்தல் கும்பல்களின் முகாம்களும் அங்கு சடலங்கள் பல புதைக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது. எப்படியும் இறப்போம் எனத் தெரிந்தும் கூட்டங்கூட்டமாக அவர்கள் படகுகளில் ஏறுவதற்கு யார் காரணம்?

மியான்மரில் 1.3 மில்லியன் மக்கள் தொகை கொண்ட‌ ரோஹிங்கியா மக்கள் கொடும் ஒடுக்குமுறைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். வாக்குரிமை கிடையாது. உயர்கல்வி, மருத்துவம், வேலை, கடவுச்சீட்டு என எதுவும் அவர்களுக்கு கிடையாது. உள்நாட்டிலேயே ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடம்பெயர அரசிடம் அனுமதி பெற வேண்டும். திருமணம் செய்து கொள்ள இராணுவத்தின் நான்கு எல்லைகளிடமும் அனுமதி பெற வேண்டும். 2 குழந்தைகளுக்கு மேல் அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளக்கூடாது. அவர்கள் நிலங்களை அரசு நினைத்தால் பிடுங்கிக் கொள்ளவும் முடியும். 

பாலம் கட்டுதல், பாதைகளைச் சீரமைத்தல் மற்றும் அபாயகரமான கடினமான வேலைகளில்,  குறைந்த கூலியில் கொத்தடிமைகளாக வேலை செய்ய ரோஹிங்கியா முஸ்லிம்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள். 7 வயது குழந்தைகள் முதல் இத்தகைய தொழில்களில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இது மட்டுமின்றி, காவல்துறை நினைத்தால், எந்நேரமும் இம்மக்களின் வீடுகளில் புகுந்து சோதனை செய்யும். ஒன்றாகக் கூடினால் துப்பாக்கிச் சூடும் நடத்தியும் கொலை செய்யும். 

roenko muslims 450உலகமறிந்த ஆங் சாங் சூயிகி அமைதியாக இருக்கிறார்.  மிக மோசமான இக்கையறு நிலைக்கு நிச்சயம் ஆங் சாங் சூயிகியால் தீர்வு காண முடியும் என தலாய் லாமா தெரிவித்திருக்கிறார். ஆனால், அவரோ 2013 இல் பிபிசிக்கு அளித்த ஒரு நேர்காணலில் வன்முறைக்கு இரண்டு தரப்புமே காரணம் என அநியாயமாக உண்மையை மறுக்கிறார்.

இரு தரப்புமே பாதிப்புகளுக்கு உள்ளாக்கப் படுவதாக அவர் கூறும் குற்றச்சாட்டில் துளியும் உண்மையில்லை. ரோஹிங்கியா மக்களைப் போல, பர்மிய பௌத்தர்கள் நாடு நாடாக நடுக்கடலில் தத்தளிக்கவில்லை. பௌத்தர்கள் ஒருபோதும் மியான்மரின் அகதி முகாம்களில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டதில்லை.

உலகிலேயே கடுமையாக ஒடுக்கப்படும் ஒரு சிறுபான்மை இனமாக, ஐ.நாவால் பர்மிய பௌத்தர்கள் அடையாளப்படுத்தப்படவில்லை. பிறகு ஏன் ஆங் சாங் சுயிகி பேரினவாதப் பௌத்தர்களையும் ஒடுக்கப்படும் ரோஹிங்கியா முஸ்லிம்களையும் ஒரே தட்டில் வைத்து எடை போடுகிறார்.

ரோஹிங்கியா இன மக்கள் ஒடுக்கப்படுவது குறித்துப் பேசினால்,  2016 அதிபர் தேர்தலில் தனக்கு ஆதரவான‌பௌத்த வாக்குகள் குறைந்து விடுமோ என்பது சூயி கியின் கணக்கு. மேலும் தன் கொள்கைகளைவிட  பதவியும் அதிகாரமும் சூயிகிக்கு முதன்மையாகப்படுகின்றன.

கண்ணெதிரே மற்றுமோர் இனப்படுகொலையை நோக்கி இவ்வுலகம் சென்று கொண்டிருக்கிறது. தெற்காசியாவில் நிலவிவரும் இனப்படுகொலை கலாச்சாரத்திற்கு எதிரான விழிப்புநிலையை உருவாக்க வேண்டியது இப்பிராந்தியத்தில் உள்ள கம்யூனிஸ்ட்டுகளின் சர்வதேசியக் கடமையாகும்.

Pin It