ஓ, பாரிஸ்!
பாரிஸ் அழுகிறது, பாரிசுக்காக உலகமே அழுகிறது!
பாரிஸ் – உலகின் மிக அழகிய நகரம். புரட்சிகளின் தலைநகரம். வரலாற்றின் முதல் சனநாயகப் புரட்சி -- பிரெஞ்சுப் புரட்சி, 1789 -- பாஸ்தில் சிறையுடைப்பிலிருந்து வெடித்துக் கிளம்பியது இங்கேதான்! உலகின் முதல் பாட்டாளி வர்க்கப் புரட்சி– பாரிஸ் கொம்யூன் 1871 --வசந்தத்தின் இடிமுழக்கமாய் எழுந்ததும் இங்கேதான்! உலக வரலாற்றில் பாரிஸ் நகருக்குள்ள பங்கு பற்றி எழுதுவதென்றால் எழுதிக் கொண்டே இருக்கலாம். இப்போது அதற்கு இடமில்லை.
பிரெஞ்சுப் புரட்சி புவிக்கோளத்தைப் புரட்டிப் போட்டுக் கொண்டிருந்த காலத்தில் அதை நேரில் காண பாரிசுக்குப் பயணம் செய்த ஆங்கிலக் கவிஞன் வோர்ட்ஸ்வொர்த் தன் உள்ளக் கிளர்ச்சியை ஒரு கவிதையாக வடித்தான்:
“ அந்த விடியற்போதில் உயிருடன் இருந்தது ஆனந்தம்,எனின் இளைஞனாய் இருந்ததோ விண்ணுலகப் பேரின்பம்! “
சென்ற வெள்ளிக் கிழமை (13.11.2015) இரவு ஈவிரக்கமற்ற பயங்கரவாதத்தின் வல்லூற்றுக் கொலை நகங்கள் பாரிஸ் புறாவைப் பிய்த்துப் போட்ட போது அந்த நரகக் கொடுந்துன்பம் பற்றி வலிதுடிக்கப் பாட வோர்ட்ஸ்வொர்த் இல்லாமற்போனான்! காதல் கொண்ட நாடு (a country in romance) என்று அவன் வர்ணித்த தேசம் சாதல் கொண்ட நாடாகிப் போன வேதனையை வார்த்தைகளில் வடிக்க யாரால் முடியும்?
விதி சுமந்த இரவு
இசையரங்குகளுக்கும் இரவுக் கேளிக்கைகளுக்கும் புகழ் பெற்ற பாரிஸ் நகரத்தின் நடுவில் அமைந்த ‘பத்தக்லான்’ கலையரங்கத்தில் வட அமெரிக்காவின் கலிபோர்னியாவிலிருந்து வந்த ‘மரண உலோகப் பருந்துகள்’ (Eagles of Death Metal)எனும் ராக் இசைக் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. ஆள்நிறைந்த அரங்கில் 1,500க்குக் குறையாத சுவைஞர்கள் இசையில் மயங்கியிருந்த போது இரவு 10.30 அளவில் பின்னாலிருந்து ஒரு வேட்டுச் சத்தம்! முன்னால் அமர்ந்திருந்தவர்கள் இதுவும் இசைக்குழுவினரின் அதிரடி உத்தி என்றுதான் முதலில் நினைத்தார்களாம்! பிறகுதான் எந்திரத் துப்பாக்கிகளோடு பயங்கரவாதிகள் ஊடுருவித் தங்களைப் பிணைக் கைதிகளாகப் பிடித்து சகட்டுமேனிக்குச் சுட்டுக்கொண்டிருப்பதை உணர்ந்தார்களாம். இந்தக் கோரக் கொலைத் தாண்டவம் நள்ளிரவு வரை நீடித்தது. அரசின் ஆயுதப் படையினர் வந்து பயங்கரவாதிகளைச் சுட்டுத் தள்ளி எஞ்சிய பிணைக் கைதிகளை மீட்டுக் காயமுற்றவர்களை வெளியேற்றிப் பிணங்களைக் கைப்பற்றி எண்ணிப் பார்த்த போது, 89 பேர் உயிரிழந்திருப்பது தெரிந்தது. பயங்கரவாதிகளில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டது போக, ஒருவர் மனித வெடிகுண்டாகத் தன்னைத் தானே மாய்த்துக் கொண்டார்.
அதிபரே! இது விளையாட்டில்லை!
பத்தக்லான் தாக்குதலுக்கு சற்று முன் பிரெஞ்சு தேசிய விளையாட்டரங்கின் வெளியே மனித வெடிகுண்டுகளாக வந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டனர். விளையாட்டரங்கின் உள்ளே பிரெஞ்சு-ஜெர்மன் அணிகளுக்கிடையே நட்புமுறையிலான கால்பந்துப் போட்டி நடந்து கொண்டிருந்தது. விளையாட்டுப் போட்டியைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தவர்களில் நாட்டின் குடியரசுத் தலைவர் பிரான்சுவா ஒலாந்தும் அமைச்சர் ஒருவரும் இருந்தனர். அவர்கள் உடனே பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்கள். போட்டியின் முடிவில் இரு கோல் அடித்து பிரான்ஸ் வெற்றி பெற்றது. பத்தக்லான் கலையரங்கில் ஊடுருவியது போல் இந்த விளையாட்டரங்கில் பயங்கரவாதிகள் நுழைந்திருந்தால்...? எண்ணிப் பார்க்கவே முடியவில்லை!ஏனென்றால் அரங்கில் கூடியிருந்தவர்கள் 80 ஆயிரம்!
இந்த இரண்டு இடங்கள் தவிர இரவு உணவுக் கடைகள் பலவற்றில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களை பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாகச் சுட்டுள்ளனர். ஊடகங்களில் விரிவாக வந்துவிட்ட செய்திகளை நாம் மறுபடியும் பேசிக் கொண்டிருக்கத் தேவையில்லை அல்லவா? தொகுத்துச் சொல்வதானால், கொலையுண்ட அப்பாவிப் பொதுமக்கள், அரசுக் கணக்கின் படி, 129 பேர்! தற்கொலைப் படையாக இத்தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளில் எழுவர் கொல்லப்பட்டு விட்டனர், ஒருவர் மட்டும் தப்பிச் சென்று விட்டார்.
இஸ்லாமிய அரசு – நோக்கமும் வழியும்
பாரிஸ் 13/11 தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஐ.எஸ். என்பது இஸ்லாமிய அரசு (ISLAMIC STATE) என்பதன் சுருக்கம். முழுப் பெயர் இராக்-சிரியா இஸ்லாமிய அரசு (ISIS) அல்லது இராக்-லெபனான் இஸ்லாமிய அரசு (ISIL) என்பதாகும். சிரியாவிலும் இராக்கிலும் சேர்த்து ஒரு பெரும் பரப்பை இந்த அமைப்பு தன் இராணுவக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. ஐ.எஸ். தனது ஆட்சியை இஸ்லாமிய முறை வழுவாத ‘கலிஃபா’ அரசு (கலிஃபத்) என்று சொல்லிக் கொள்கிறது. தேச எல்லைகளைக் கடந்த அனைத்துலக இஸ்லாமிய அரசு அமைப்பதுதான் ஐ.எஸ். குறிக்கோள். இதற்காக அது திரட்டும் படையில் ஐரோப்பா உள்ளிட்ட உலகின் பல பகுதிகளிலிருந்தும் இஸ்லாமிய இளைஞர்கள் சேர்ந்துள்ளனர். சிரியாவில் உள்ள ராக்கா நகரம் இஸ்லாமிய அரசின் தலைநகரமாக இருந்து வருகிறது. ஐ.எஸ். குறிக்கோள் சரியா தவறா என்ற விவாதம் ஒருபுறமிருக்க, எந்தக் குறிக்கோளுக்காகவும் அப்பாவிப் பொதுமக்களைக் கொல்லும் உரிமை எவருக்கும் கிடையாது. அப்பாவிப் பொதுமக்களைக் கொன்றுதான் ஒரு குறிக்கோளை அடைய முடியும் என்றால் அது நல்ல குறிக்கோளாக இருக்கவும் முடியாது.
எக்காரணத்துக்காகவும் அப்பாவிகளைக் கொலை செய்வதை இஸ்லாமிய மார்க்கம் ஏற்றுக் கொள்ளவில்லை. எந்த மதத்தின் அடிப்படையில் ஆனாலும் சரி, சமயஞ்சார்ந்த அரசு காணும் முயற்சி மாந்த குல வரலாற்றின் முற்போக்குத் திசைவழிக்கு எதிரானது என்பதே வரலாற்றுப் பாடம். பாகிஸ்தானின் இஸ்லாமிய அரசும், அதிலிருந்து விடுபட்ட வங்க தேசத்தின் மதச் சார்பற்ற அரசும் – சிங்கள பௌத்த சிறிலங்காவும் சமயச் சார்பற்ற தமிழீழ விடுதலைப் போராட்டமும் – நேபாளத்தில் நடந்து வந்த இந்துதத்துவ மன்னராட்சியும், இப்போது மலர்ந்துள்ள மதச் சார்பற்ற மக்களாட்சியும் –இஸ்ரேலின் யூதவெறி அரசும், அதிலிருந்து தாயக மீட்புக்காகப் போராடும் மதங்கடந்த பாலத்தீன விடுதலைப் போராட்டமும் – முன்னாளைய யூகோஸ்லாவியா உடைந்து உருவாகியுள்ள தேசிய அரசுகளும்... இவையெல்லாம் சமயஞ்சார்ந்த தேசியங்களின் பிற்போக்குக்கும் மொழியினஞ்சார்ந்த தேசியங்களின் முற்போக்குக்கும் நம் காலத்திய கண்கூடான சான்றுகள்.
சிலுவைப் போர்?
ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கண்களை மறைக்கும் பழைமைத் திரை அவர்களை வரலாற்றுப் போக்குக்கு எதிராக நிறுத்தியுள்ளது. அவர்கள் இன்னமும் பதினொன்றாம், பதினாறாம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட நடுவக் காலத்தின் (Middle Ages) சிலுவைப் போர்க் காலத்திலேயே வாழ்ந்து கொண்டிருப்பதை அவர்கள் வெளியிடும் அறிக்கைகள் உணர்த்துகின்றன. பாலத்தீனம், குர்து, காசுமீரம் உள்ளிட்ட தேசங்களின் மக்கள்தொகை பெரும்பாலும் முஸ்லிம்களாக இருப்பினும், இந்தத் தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்களை ஏற்க ஐ.எஸ்.சுக்கு மனமில்லை. அமெரிக்கா உள்ளிட்ட வல்லாதிக்கங்களை (ஏகாதிபத்தியங்களை) எதிர்ப்பதாக ஐ.எஸ். பயங்கரவாதிகள் சொல்லிக் கொண்டாலும், தேசிய விடுதலைப் போராட்டங்களை எதிர்ப்பதிலும் சிதைப்பதிலும் அவர்கள் அறிந்தோ அறியாமலோ வல்லாதிக்கங்களின் கைகருவிகளாகச் செயல்படுவதை அக்கறையுள்ள எந்த அரசியல் மாணவரும் எளிதில் உய்த்துணரலாம்.
ஐ.எஸ்.சுக்கு எதிராக குர்திய விடுதலைப் படை
ஐ.எஸ். பயங்கரவாதிகளைக் களத்தில் எதிர்த்து நிற்பது குர்திய விடுதலை இயக்கப் படைகளே தவிர, அமெரிக்காவோ பிரித்தானியாவோ பிரான்சோ இஸ்ரேலோ அல்ல. சிரியா, லெபனான், இராக் ஆகிய அரபு நாடுகளின் பிற்போக்கு அரசுகள் தங்கள் ஆட்சிப்புலத்தில் பெரும்பரப்பை ஐ.எஸ்.இடம் இழந்து பரிதாபமாய் நிற்கின்றன. இந்த அரசுகள் பிழைத்துக் கிடக்கவே வல்லாதிக்க அரசுகளின் வான் குண்டு வீச்சைத்தான் நம்பியுள்ளன. எரிகிற வீட்டில் பிடுங்கியது இலாபம் என்று உருசிய வல்லரசும் குட்டையைக் குழப்பும் வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறது. ஐ.எஸ்.இடமிருந்து கொபானே நகரை மீட்க குர்திஷ் விடுதலைப் படை நடத்திய வெற்றிகரமான வீரப் போர்தான் ஐ.எஸ். பயங்கரவாதிகளைத் தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கையையே ஐ.எஸ். எதிரணியினருக்குத் தந்தது. இப்போதும் துருக்கிக்குள் ஊடுருவ முடியாமல் சிரியா எல்லையில் ஐ.எஸ். படையைத் தடுத்து நிற்பது குர்திஷ் விடுதலை வீரர்கள்தாம்.
அல் கொய்தா வழியில் ஐ.எஸ்.
கோட்பாட்டிலும் செயற்பாட்டிலும் ஒசாமா பின் லேடன் நிறுவிய அல் கொய்தாவின் தொடர்ச்சிதான் ஐ.எஸ். பேய் எட்டடி பாய்ந்தது, பேய்க்குட்டி பதினாறடி பாய்கிறது. அல் கொய்தாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் நிலப்பகுதி ஏதும் இருக்கவில்லை. ஐ.எஸ். சிரியாவின் ராக்காவைத் தலைநகராகக் கொண்டு எண்ணெய் வளமுள்ள ஒரு பெரிய நிலப்பரப்பையே தன் படைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு உலகையே அச்சுறுத்தி வருகிறது.
ஐ.எஸ். வளர்ந்தது எப்படி?
ஐ.எஸ். மிகக் குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய பயங்கரவாத ஆற்றலாக வளர்ந்ததன் வரலாற்றுக் காரணிகள் ஆழ்ந்து விரிந்த ஆய்வுக்குரியன. அரசியல்-வரலாற்று மாணவன் என்ற முறையில் என்னைப் பொறுத்த வரை, இரு முக்கியக் காரணிகளைக் குறிப்பிடலாம்.
இரண்டாம் உலகப் போர் முடிந்ததிலிருந்து நடுக் கிழக்கு (Middle East) அல்லது மேற்காசியா எனப்படும் இந்தப் பூபாகம் ஒரு வெப்பப் புள்ளியாகவே இருந்து வருவதற்கு அடிப்படைக் காரணம் இப்பகுதியின் அள்ள அள்ளக் குறையாத இயற்கை வளமே. மணற்போர்வை மூடி வைத்த கறுப்புத் தங்கம்! சயோனிச இஸ்ரேலிய அரசை ஏற்படுத்தியதும், பாலத்தீனர்களைத் தாயகம் விட்டுத் துரத்தியதும், இராக் மீது படையெடுத்ததும், அரபு நாடுகளில் பிற்போக்கு மன்னராட்சிகளுக்கும் கொடுங்கோலாட்சிகளுக்கும் முட்டுக்கொடுத்து வருவதும், இறுதியாகப் பார்த்தால், மேலை வல்லாதிக்கங்களின் எண்ணெய்வளக் கொள்ளைக்காகவேதான். பாலத்தீன மக்களின் தாயக மீட்புப் போராட்டத்தை முறியடிக்க அமெரிக்கா உள்ளிட்ட வல்லாதிக்கங்கள் தோண்டிய கிணற்றிலிருந்துதான் (பெட்ரோலியக் கிணறு!) அல் கொய்தா, ஐ.எஸ். போன்ற பூதங்கள் கிளம்பின. நாம் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் இன்னுங்கூடக் கிளம்பப் போகின்றன.
அரபு வசந்தமும் ஐ.எஸ்.சும்
இரண்டாவதாக, சனநாயகம் பற்றி மூச்சிரைக்கப் பேசும் மேலைநாடுகள் அரபு நாடுகளில் சனநாயகம் துளிர் விடுவதைக் கூட சகித்துக் கொள்வதில்லை. கடந்த 2010 இறுதியில் துனிசியாவில் மலர்ந்து எகிப்து, லிபியா, ஏமன், சிரியா என்று நாடு நாடாகப் படர்ந்த அரபு வசந்தத்தை அரவணைத்துப் பாதுகாத்திருந்தால் பயங்கரவாதத்தை முளையிலேயே கிள்ளியிருக்க முடியும். எகிப்திலும் சிரியாவிலும் அரபு வசந்தத்தைச் சீரழிக்க ஆயுத மோதல்களை வளர்த்து விட்ட அமெரிக்க, பிரித்தானிய, பிரெஞ்சு, உருசிய வல்லரசுகள் ‘அய்யகோ ஐ.எஸ்.!’ என்று இப்போது புலம்புவதில் பொருளில்லை. திணை விதைத்தால் திணை அறுக்கலாம், வினை விதைத்தால்...?
தீர்வு என்ன?
இப்போதும் கூட பாலத்தீனம், குர்து உள்ளிட்ட தேசிய விடுதலைப் போராட்டங்களின் வளர்ச்சியும், அரபு நாடுகளின் சனநாயக மலர்ச்சியும்தான் அல் கொய்தா, ஐ.எஸ். பயங்கரவாதத்தை வேரறுத்து வீழ்த்தும் என்பதில் ஐயமில்லை. மதவாதத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் சரியான மாற்று மொழிவழித் தேசியமும் முழுமையான சனநாயமும்தான் என்பதற்கு ஐரோப்பிய வரலாறும், குறிப்பாக பிரெஞ்சுப் புரட்சியின் வரலாறுமே போதிய சான்றுகள்.
இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பின் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் பேசிய அதே அடாவடி மொழியில்தான் இப்போது பிரெஞ்சு அதிபர் ஒல்லாந்தும் பேசிக் கொண்டிருக்கிறார். புகை போட்டுப் பிடிப்பதும்... துரத்தித் துரத்தி வேட்டையாடுவதும்... சட்டங்கருதாமல் தீர்த்துக் கட்டுவதும்! இவை பயங்கரவாதிகளுக்குப் பிடித்தமான சொற்றொடர்கள், நினைவிருக்கட்டும்! பல பத்தாண்டு காலப் பட்டறிவில் விளைந்த பன்னாட்டுச் சட்டங்களையும் நெறிமுறைகளையும் கடந்த சில ஆண்டுகளில் வல்லரசுகளே மதியாமற்போனது பயங்கரவாதத்தின் வளர்ச்சிக்கு ஒரு காரணம் என்பது நினைவிருக்கட்டும்!
குடிப் பயங்கரவாதமும் அரசப் பயங்கரவாதமும்
குற்றவாளிகளைப் பிடித்துக் கூண்டிலேற்றுவதும் சட்டப்படி நீதியை நிலைநாட்டுவதும் தேவை. ஆனால் ஒரு தாக்குதலைச் சாக்கிட்டு, உள்நாட்டில் அடக்குமுறையையும் உலக அளவில் போர்ச் செயல்களையும் விரிவுபடுத்துவதும் தீயை அணைக்க பெட்ரோல் ஊற்றும் முட்டாள்தனமாகவே கடந்தகாலத்தில் அமைந்தன, எதிர்காலத்திலும் அமையும். ஐ.எஸ். போன்ற அமைப்புகளின் குடிப் பயங்கரவாதத்துக்கு (INDIVIDUAL TERRORISM) வல்லரசுகளின் அரசப் பயங்கரவாதம் (STATE TERRORISM) தீர்வாகாது. பார்க்கப் போனால், குடிப் பயங்கரவாதம் பறித்ததைப் போல் மிகப் பல மடங்கு மனித உயிர்களை அரசப் பயங்கரவாதம் பறித்துள்ளது என்பதே வெள்ளிடை மலையாகத் துலங்கும் மெய்.
உலகமே பாரிசுக்காகக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்க, ஒரு கண்ணீர் வடிவத் தீவிலிருந்து வந்துள்ள மணிமொழிகளை எடுத்துக் காட்டாமல் இந்தக் கட்டுரையை முடிக்க இயலாது. தீக்குண்டத்துக்கு நடுவிலும் கோமாளிகளின் சேட்டை இல்லாமலா? சிறிலங்காவின் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா சொல்கிறார்: “பயங்கரவாதத் தாக்குதல்களால் தடுமாறி வரும் பிரித்தானியா, அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் இலங்கையில் பயங்கரவாதத்தை இல்லாது ஒழித்த சிறிலங்கா அரசாங்கத்தினை மலர் மாலையிட்டு வணங்க வேண்டும்.” இவரே இப்படியென்றால், “ஓருயிரும் சாகாமல்” போர் நடத்தி வாகை சூடிய மகிந்த இராசபட்சே திருவாய் மலராமல் இருப்பாரா? அவர் சொல்கிறார்: “பயங்கரவாதத்தை உறுதியாக வெற்றி கொள்வதில் உலகளாவிய உறுதிப்பாடு தேவைப்படுவதை பிரான்சில் நடந்துள்ள பயங்கரவாதத் தாக்குதல் மீண்டும் அழுத்தமாக வெளிப்படுத்தியுள்ளது”உண்மைதான், மொத்தத்தில் சில நூறு உயிர்களைப் பறித்த ஐ.எஸ். பயங்கரவாதத்தை வெற்றி கொள்வது எப்படி என்று பல்லாயிரம் தமிழர்களை இனக்கொலை செய்த இராசபட்சேயிடம்தான் பாடம் கற்க வேண்டும்! குப்புறத் தள்ளிய குதிரை குழி பறித்தது போதாதென்று மாலைமரியாதையும் கேட்கிறது! வல்லரசுகளே! வரிசை மீறாதீர்கள்!
- தியாகு, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்