alex 400கடந்த 201 5 ஜனவரி 25 அன்று  கிரீஸ் நாடாளுமன்றத் தேர்தலில் அலெக்ஸிஸ் ஸ்பிரஸ் தலைமையிலான சிரிஜா கட்சியானது (முற்போக்கு இடதுசாரிகளின் கூட்டணி) பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்திருக்கிறது. பிரதமராக அலெக்ஸிஸ் பதவி ஏற்றிருக்கிறார். இது உலக வல்லரசுகளுக்கும் குறிப்பாக ஐரோப்பிய ஏகப்பெரும் முதலாளிகளுக்கும் அதிர்ச்சியாகவும், அச்சுறுத்தலாகவும் அமைந்திருப்பதுடன், ஐரோப்பிய வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

ஜனநாயகம் கோரும் பல்வேறு இடதுசாரிக் கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி அமைத்திருப்பது வரவேற்புக் குரியது. கிரீஸ் இடதுசாரிகள், ஆட்சி பொறுப்பேற்ற 6 மாதங்களிலேயே யூரோ ஜோன், (ஹியி) சர்வதேச நாணய நிதியத்தின் (மிவிதி) கடன் நெருக்கடி நிர்பந்தத்திற்குள் சிக்கியிருக்கிறார்கள். கிரீஸ் வங்கிகளில் பணம் இல்லாத காரணத்தால் அவற்றை மூட கிரீஸ் அரசு உத்தரவிட்டிருக்கிறது.

ஐரோப்பிய யூனியன் மூலமாக ஐ.எம்.எப். க்கு கிரீஸ் கொடுக்க வேண்டிய கடன் என்பது 11,000 கோடி டாலர். அக்கடனை அடைக்கவேண்டிய கால அவகாசம் முடிந்துவிட்டது. கிரீசின் கடனைச் சரிசெய்ய கடந்த ஒரு வாரமாக பிரஸல்ஸில் ஐரோப்பிய நிதி அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மேலும் அக்கடனிலிருந்து கிரீஸ் அரசை மீட்டெடுப்பதற்கு ((BAILOUT) யூரோஜோன் பல மக்கள் விரோதக் கொள்கை நிபந்தனைகளை முன்வைக்கிறது. பெரும்பான்மையான மக்கள் பலத்தில் வெற்றி பெற்ற இடதுசாரி ஆட்சி, அதனை ஏற்க மறுத்து நிராகரித்திருக்கிறது. அத்துடன் பிரதமர் அலெக்ஸ். “நாங்கள் சரணடைய மாட்டோம், நிபந்தனையை ஏற்கமாட்டோம்“ என்கிற எச்சரிக்கையையும் விடுத்திருக்கிறார். 

இந்நிலையில் கிரீஸ் அரசு மக்களிடைய பொதுவாக்கெடுப்பு ஒன்றை நடத்திட முடிவு செய்திருக்கிறது. மக்களின் முடிவுப்படி யூரோஜோன் நிபந்தனைக்கு அடிபணிவதா? அல்லது நிராகரிப்பதா? என்கிற உச்சக்கட்ட நிலையினை கிரீஸ் அரசு எடுக்கவுள்ளது. ஐரோப்பிய நிதி நிறுவனங்களின் மக்கள் விரோதக் கொள்கையா? மக்கள் வாழ்வாதாரமா? என்பதற்கானப் போராட் டத்தில் பிரதமர் அலெக்ஸிஸ் ஆற்றிய உரை: 

“கடந்த 6 மாதங்களாக கிரேக்க அரசு, கடுமையானப் போராட்டத்தின் ஊடாக, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பொருளாதார ரீதியான திணறலைச் சந்தித்துக்கொண்டே, மக்களின் ஆணையை நிறைவேற்ற முயற்சித்து வருகிறது. நாம் ஐரோப்பியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டிருக்கிறோம். பேச்சுவார்த்தையின் நோக்கமானது, சலுகை (சிக்கன) நடவடிக்கை என்கிற நிபந்தனையை முடிவுக்குக் கொண்டுவருவதும், சமூக நீதியை நிலை நாட்டுவதும் ஆகும். இந்தப் பேச்சுவார்த்தையில், பழைய ஒப்பந்தங்கள் என்னவோ அவற்றையே நிறைவேற்றச் சொல்லி யூரோ ஜோன் வற்புறுத்துகிறது.

அதனை நாங்கள் ஏற்கவில்லை. நாங்கள் சரணடைய மாட்டோம். அது மக்களுக்கு செய்கிற துரோகம். யூரோஜோன் ஒரு முன்வைப்பை முன்வைத் திருக்கிறது. அது கிரேக்கப் பொருளாதாரத்தை ஏற்ற இறக்கத்தோடு நிலையில்லாத் தன்மைக்கு இட்டுச் செல்லக் கூடியதாகவும், மக்களுடைய சனநாயகத்தைக் கேள்விக்குள்ளாக்குவதாகவும் அமைந்திருக்கிறது.

 யூரோ ஜோனின் முன்வைப்பு

தொழிலாளர்கள் சந்தையை (LABOUR MARKET) தளர்த்துவது, ஓய்வூதியத்தை ரத்து செய்வது, பொதுத் துறையில் கூலியைக் குறைப்பது, வாட் வரியை அதிகரிப்பது போன்ற சிக்கன நடவடிக்கையை முன்வைக்கிறது. இவை முன்னோடியாக விளங்கும் ஐரோப்பிய சமூகத்தின் அடிப்படை உரிமைகளை மறுப்பதாக இருக்கின்றது.

இந்த நிறுவனங்களின் நோக்கம் என்பது, சமத்துவத்தைக் கோருவதற்கு மாறாக கிரேக்க மக்களை அவமானப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. இந்த முன்வைப்பானது ஐ.எம்.எப். இன் சிக்கன நடவடிக்கையை வலியுறுத்துகிறது. இந்த தருணத்தில் ஐரோப்பிய நாடுகள் கடன் நெருக் கடியை முடிவுக்குக் கொண்டுவர திட்டவட்டமான முயற்சிகளை எடுக்க வேண்டும். இந்த நெருக்கடி மற்ற நாடுகளையும் பாதித்துவருகிறது. மேலும் இவை ஐரோப்பிய யூனியனின் ஒற்றுமையை சிதைப்பதாகவே அமைந்திருக்கிறது.

europe map 450அருமை கிரேக்க மக்களே!

இத்தகைய தருணத்தில், ஓர் வரலாற்றுக் கடமை நமது தோளின் மீது சுமத்தப்பட்டிருக்கிறது. அவை சனநாயகத்திற்காகவும், தேசிய இறையாண்மைக்காகவும் போராடிய நமது கிரேக்க மக்களின் போராட்டத்தையும், தியாகத்தையும் உள்ளடக்கியதாக இருக்கிறது.

தேசத்தின் எதிர் காலத்திற்காக நாம் ஏற்றிருக்கக்கூடிய இந்த பொறுப்பு என்பது இறையாண்மை கொண்ட கிரேக்க மக்களின் விருப்பத்தின் அடிப்படையிலேயே இதற்கு தீர்வு காண்போம் என்பதேயாகும். இறையாண்மை வழியில் மக்கள் முடிவெடுப்பதை அடிப்படையாகக் கொண்டு பொதுவாக்கெடுப்பு நடத்துவதென நான் முன்வைத்தக் கருத்து அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஜுலை 5 அன்று பொதுவொக்கெடுப்பு நடத்தப்படும். இந்த பொதுவாக்கெடுப்பு என்பது ஐரோப்பிய நிதி நிறுவனங்களின் முன்வைப்புகளை ஏற்பதா? மறுப்பதா? என்பதாக இருக்கும். கிரேக்க மக்கள் முடிவு செய்வதற்கு இன்னும் சிறிது நாள் அவகாசத்தை நீடிக்கக் கோர உள்ளோம்.

கிரேக்க மக்கள் முடிவு என்பது மிரட்டலுக்கும், நிர்ப்பந்தத்திற்கும் ஆட்படாமல் இருக்க வேண்டும். அவை இத்தேசத்தின், அரசியலமைப்பின் உரிமைகளுக்கு உட்பட்டதாகவும், ஐரோப்பாவின் சனநாயகப் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டதாகவும் அமைந்திருக்க வேண்டும்.

கிரேக்க சகோதரர்களே!

சமூக, பொருளாதாரரீதியாக நாம் மீண்டெழ முயற்சித்தாலும் அதற்கு எந்த வாய்ப்புகளையும் வழங்காமல் நம்மை மிரட்டலுக்கு உள்ளாக்கி சிக்கன நடவடிக்கையை ஏற்பதற்கு நிர்ப்பந்திக்கப்படுகிறோம். நான்  உங்களிடம் கோருவது சர்வாதிகாரத்திற்கு எதிராகவும், கடுமையான சிக்கன நடவடிக்கைக்கு எதிராகவும், நாம் சனநாயக முறையில் தீர்க்கமாக பதிலளிக்க வேண்டும். சனநாயகத்தின் பிறப்பிடமான கிரேக்க நாட்டிலிருந்து ஒரு பெரும் சனநாயக ரீதியிலான பதிலை அவர்களுக்கு அளிப்போம்.

உங்களின் சனநாயக தேர்வு எதுவாக இருந்தாலும் தனிப்பட்ட முறையில் நான் அதனை மதிக்கிறேன். உங்களின் தேர்வு நமது நாட்டின் வரலாற்றை மதிப்பதாகவும். கண்ணியமான செய்தியை உலகத்திற்குத் தெரிவிப்பதாகவும் அமையும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.

இந்த முக்கியமான தருணத்தில் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது என்னவென்றால், ஐரோப்பாவானது அனைத்து மக்களின் பொது இருப்பிடமாக இருக்கிறது. இங்கு எவரும் உரிமையாளரும் கிடையாது. விருந்தினரும் கிடையாது. கிரேக்க நாடு ஐரோப்பாவின் அங்க-மாகவும், ஐரோப்பா, கிரேக்க நாட்டின் அங்க-மாகவும் அமைந்திருக்கிறது. நாம் ஒரு சரியான முடிவுகளை எடுக்க தேசிய ஒற்றுமையையும் பொறுமையையும் கடைபிடிக்க வேண்டும் என்று உங்களை உரிமையுடன் அழைக்கிறேன்.

நமக்காக நமது வருங்கால சந்ததியினருக்காக, நமது கிரேக்க வரலாற்றுக்காக, நமது இறையாண் மைக்காக, மற்றும் நமது மக்களின் கண்ணியமிக்க வாழ்விற்காக அழைக்கிறேன்’’ என்றார்.

இத்தகைய ஏகாதிபத்தியத்தின் கடிவாளங்களை சவாலாக எதிர்கொண்டுவரும் கிரீஸ், சிரிஜா கட்சியானது, “மக்கள் மக்கள் மட்டுமே வரலாற்றைத் தீர்மானிக்கிறார்கள்’’ என்கிற மாவோவின் கூற்றுக்கிணங்க பொதுவாக்கெடுப்புக்கு அரைகூவல் விடுத்தது. சவாலை ஏற்ற கிரேக்க மக்கள் சூலை 5 அன்று நடந்த பொது வாக்கெடுப்பில் ஐ.எம்.எப். நிபந்தனைகளை ஏற்க வேண்டாம் என்று இடதுசாரி முன்வைப்புக்கு ஆதரவாக 61 சதவீதம் வாக்களித்து ஐரோப்பாவில் ஒரு புதிய மாற்றத்தைத் தொடங்கி வைத்துள்ளார்கள்.

குறிப்பு:

யூரோ ஜோன் (eurozone) என்பது ஐரோப்பாவின் யூரோ நாணயத்தைப் பிரதானமாகப் பயன்படுத்தும் நாடுகளை உள்ளடக்கிய ஒரு பொருளாதார நிறுவனம். கிரீஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், ஐயர்லாந்து, பிரான்ஸ், நெதர்லாந்து, போர்ச்சுகல் உள்ளிட்ட 19 நாடுகள் இந்நிறுவனத்தில் அங்கம் வகித்து வருகின்றன.

Pin It