உலக இந்துப் பேராயத்தில் ஆர்.ஆர்.எஸ்-இன் தலைவர் அசோக் சிங்கால், “பிரித்விராஜ் சௌகான் ஆட்சி புரிந்த எண்ணூறு ஆண்டுகளுக்குப் பின் ஒரு சுயமரியாதை கொண்ட இந்து தில்லியில் ஆட்சி புரிகிறான்”, என்று மோடி பதவியேற்றதை இறுமாப்புடன் பாராட்டிப் பேசினார். அதில் சிந்தனைப் பிரகடனமாக (Thought Paper), இந்தியாவைக் காக்க அழிக்கப்பட வேண்டிய ஐந்து ‘எம்’ (M)கள் -வெளியிடப்பட்டது அவை...

1) மார்க்சியம் (Marxism)

2) முஸ்லிம் பயங்கரவாதம் (Muslim terrorism)

3) மிஷினரிஸ் (Missionaries)

4) மெக்காலேயிசம் (Macaulayism)

5) மெட்டீரியலிசம் (Materialism)

மோடி பதவியேற்பதற்கு முன்னரே, 13- ஏப்ரல் 2014 அன்று பாரதீய சிக்ஷா நித்தி அயோக் (In­dian Education Policy Commission)-க்கு பூமிபூஜை போடப்படுகிறது. அதன் தலைவர் தீனாநாத் பத்ரா. இது ஆர்.எஸ்.எஸ்-ஆல் வழிநடத்தப்படுகிற ஒரு குழு. இக்குழுவைச் சேர்ந்த 1)கிருஷ்ண கோபால் 2) சோனி 3) தத்தாத்ரேயா ஆகிய ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியைச் சந்தித்து மூன்று கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள்.

1) கல்விக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும்

2) பள்ளிகளில் ஒழுக்கத்தைப் போதிக்கக் கூடிய இராமாயணம், மகாபாரதம் எல்லாம் பாடமாக இருந்து நீக்கப்பட்டுவிட்டது. அவை மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும்.

3) தற்போதுள்ள வரலாற்றுப் பாடங்களை எடுத்துவிட்டு, இந்து மத வரலாற்று ஆசிரியர்கள் எழுதிய பாடத்தை வரலாறாக வைக்க வேண்டும்.

அப்படியென்றால், இதுவரை நம்முடைய பாடத்திட்டத்தில் இருப்பது என்ன? 1959-60களில் ஜபல்பூர், கான்பூர் ஆகிய இடங்களில் மத மோதல்கள் நடைபெற்றன. அதற்குப் பின்னர் அன்றைய பிரதமர் நேரு, தேசிய ஒருமைப்பாட்டுக் குழு ஒன்றை பி.சி.இராமசாமி ஐயர் தலைமையில் அமைக்கிறார். அந்தக் குழுவில் வாஜ்பாய் அவர்களும் உறுப்பினராக இருக்கிறார்.

அக்குழு பல்வேறு மோசமான பரிந்துரைகள் கொடுத்தாலும், கல்வி நிலையங்களில் வரலாற்றுப் பாடங்கள் எல்லாம் மதம் சார்ந்ததாக இருக்கிறது. ஆகவே, அப்பாடத்திட்டங்களை எடுத்துவிட்டு, அறிவியல்பூர்வமான வரலாற்றைக் கற்பிக்க ஆய்வாளர்களைக் கொண்டு புதிய பாடத்திட்டத்தை எழுத வேண்டும் என்று பரிந்துரை செய்தது.

அந்தப் பரிந்திரையை ஏற்றுக் கொண்ட நேரு அவர்கள் பிபின் சந்திரா, ரொமிலா தாப்பர் ஆகியோரைச் சரியான வரலாற்றை எழுதக் கேட்டுக் கொண்டார். இவர்களால் எழுதப்பட்ட மதச்சார்பற்ற, ஒரு அறிவியல் பூர்வமான வரலாறு பாடத்திட்டமாக வைக்கப்பட்டது. இந்த வரலாற்றைத்தான் மாற்றி தற்பொழுது புதிய பாடத்திட்டமாக இந்து மதப் பாடத்திட்டத்தை வைக்கக் கோருகிறார்கள். இவர்கள் தற்பொழுது சொல்லுகிற பாடம் என்ன என்பதை புரிந்த கொள்ள குஜராத்தின் கடந்த பத்து ஆண்டுகால பாடத்திட்டத்தைப் பார்த்தால் புரிந்து கொள்ளலாம். குஜராத்தின் பாடத்திட்டமானது,

(அ) வரலாற்றுப் பாடத்தில் :

1) குதுப் மினார் கட்டியது சமுத்திர குப்தன். அதன் பழைய பெயர் விஷ்ணு தம்பா. அதை முகலாயர்கள் வந்துதான் மாற்றி விட்டார்கள்.

2) நமது முன்னோர்களான மனுவும், சத்ருவும் தான் உலகுக்கு உயிர் தந்தவர்கள்.

3) உலகத்தின் முதல் மனிதன் தோன்றியதே பாரத்ததின் ஒரு பகுதியாக இருந்த இன்றைய திபெத்தில் தான்.

4) உலகின் முதலில் தோன்றிய இனம் ஆரிய இனம்தான்.

5) முஸ்லிம் லீக் தோற்றத்தைப் பற்றி இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் பற்றியோ, இந்து மதத் தோற்றத்தைப் பற்றியோ ஒன்றும் இல்லை.

6) 10-ம் வகுப்பு வரலாற்றுப் பாடத்தில் காந்தி கொலை செய்யப்படுகிறார் என்று இருக்கிறது. நாதுராம் கோட்சே பற்றியும் ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்பட்டது பற்றியும் ஒன்றும் இல்லை.

7) ஆனால், 8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் 1947-க்குப் பின்பு பல்வேறு மதக் கலவரங்கள் இங்கு நடக்கிறது. அதை காந்திஜி தடுக்கப் பார்த்தார். அதை பெரும்பான்மை மக்கள் விரும்பவில்லை. அதனால் காந்தி கோட்சேவால் கொலை செய்யப்படுகிறார். (Many people did not like this. Then Gandhi was murdered in the hands of Godse). இப்படியாக காந்தி கொலை பற்றி...

(ஆ) அறிவியல் பாடத்தில் :

1) ஸ்டெம் செல் கண்டுபிடித்தது அமெரிக்கர்கள் அல்ல. மகாபாரதத்தில் காந்தாரிக்குக் குழந்தை பிறக்காமல் இருந்த போது, வசிஷ்டர் நூறு கவுரவர்களை ஸ்டெம் செல் முறை கொண்டு தான் உருவாக்கினார்.

2) தொலைக்காட்சி, யோக வித்யா யோகக் கலை, விதய திருஷ்டி, ஞானக் கண் போன்ற முறைகள் நம்மிடையே இருந்தது. அதில்தான் பாரதப் போரை அஸ்தினாபுரம் அரண்மனையில் அமர்ந்து சஞ்ஜையா என்ற ஒருவன் மூலம் கண் தெரியாத திருதிராஷ்டிரன் அறிந்த கொண்டார். ஆகவே, தொலைக்காட்சி என்பது நம்மிடையே முன்னரே இருந்தது.

3) அனஸ்வரத் என்ற பெயரில் இயந்திர மோட்டார்கள் நம்மிடையே இருந்தது.

4) புஷ்பக விமானம் என்று முன்னரே நாம் விமானங்கள் இயக்கியிருக்கிறோம்.

5) உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை விநாயகருக்கு நாம் முன்னரே செய்திருக்கிறோம் (இதை மோடியே 25.10.2014 அன்று மும்பையின் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் மருத்துவமனை ஆராய்ச்சி மையத்தை திறந்து வைத்து, நாட்டின் தலைசிறந்த மருத்துவர்கள் முன்னிலையில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டார்) -இவையெல்லாம் குஜராத்தின் பாடத்திட்டத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக இருந்து கொண்டு இருக்கின்றது.

தேர்வுகளைக் கண்காணிப்பதற்கு ஆர்.எஸ்.எஸ்-ஸால் பயிற்சி அளிக்கப்பட்ட வித்யபாரத் அமைப்பை உருவாக்கி பள்ளி ஆசிரியர்களோடு இணைத்து பள்ளிகளில் தேர்வுக் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்கள் யாரும் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் அல்ல. பாரதீய அத்யாபக் பரீஷத் என்ற ஒரு அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இது கல்வியை இந்துமயமாக்குவதற்கு ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கிறது. இது ஆர்.எஸ்.எஸ்-இன் துணை அமைப்பாகும்.

1973-இல் பாரதீய இதிகாசனா யோஜனா ஆர்.எஸ்.எஸ்-ஸால் தொடங்கப்பட்டது. இது இந்திய வரலாற்றை மாற்றி எழுதுவதைக் கொள்கையாக வைத்துள்ளது.

2001இல் அப்போதைய பிரதமர் வாஜ்பாயின் ஆட்சியில் இதுபோல் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. அப்பொழுதும் இந்தக் குழுவிற்கு தலைவராக இருந்தது தீனாநாத் பத்ரா தான். அவரைப் பற்றி ஆர்.எஸ்.எஸ்-இன் பத்திரிக்கையான ‘ஆர்கனைசர்’ என்ன கூறியிருக்கிறது என்றால் - An ideal can­didate to lead an agitation; is inevitable with the govt.- ‘‘ஒரு மாற்றை முன்னின்று நடத்துவதற்கு மிகச் சரியான நபர், அரசிற்கு இன்றியமையாதவர்’’ என்று பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறது. இவர்தான், வாஜ்பாய் காலத்திலும் கல்விக் குழுவிற்கான பொறுப்பில் இருந்தார்.

83 வயதான் நிலையிலும், தற்பொழுது மோடி ஆட்சியிலும் பொறுப்பில் இருக்கிறார். சமீபத்தில் பெரும் சர்ச்சைக்குள்ளான வெண்டி டொனிகர் என்ற அமெரிக்க வரலாற்றுப் பெண் பேராசிரியரின் ‘இந்துக்கள் : ஒரு மாற்று வரலாறு’ என்ற நூலை பென்குயின் நிறுவனம் வெளியிட்டது. இந்துக்களின் மத உணர்வைப் புண்படுத்துவதாகவும், வரலாறு திரித்து எழுதப்பட்டதாகவும் கூறி, இதே தீனாநாத் பத்ராதான் ஆர்.எஸ்.எஸ்-இன் உதவியோடு தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்து மதவெறி பாசிஸ்டுகளுக்கு அஞ்சி ’பென்குயின்’ நிறுவனம் அந்நூலை வெளியிடாமல் திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்தது.

குஜராத் மாநிலத்தில் இப்போது இடம்பெற்றுள்ள துணைப் பாடநூல்கள் ஒன்பதில், எட்டு நூல்கள் மோடியின் அணிந்துரையோடு ஆர்.எஸ்.எஸ்-இன் பச்சோ ஆந்தோலன் சமிதியின் தலைவராக இருக்கக் கூடிய இதே தீனாநாத் பத்ராவால் எழுதப்பட்டவை. இந்த தீனாநாத் பத்ரா தான் ரொமிலா தொப்பார், ஆர்.எஸ்.சர்மா, பிபின் சந்திரா போன்ற அறிவியல்பூர்வ வரலாற்றாய்வாளர்களை ‘மார்க்ஸ், மெக்காலே மற்றும் மதராசாக்களின் குழந்தைகள்’ (The Children of Marx, Macaulay and Madarasas) என்று கூறியவர்.

தமிழ் மொழிக்காகப் பரிந்து பேசுபவராக அறியப்படும் பா.ச.கவின் எம்.பி. தருண் விஜய், பா.ச.கவின் பத்திரிக்கையான ‘பஞ்சசான்யா’வின் ஆசிரியர். ரொமிலா தொப்பார், ஆர்.எஸ்.சர்மா போன்ற வரலாற்றாய்வாளர்களைப் பற்றி ‘பஞ்சசான்யா’வில் இவர் எழுதும்போது அந்த ஆய்வாளர்களை மூன்று ‘றி’க்காக ஆசைப்படுபவர்கள் என்று குறைசொல்கிறார்.

முதலாவது பைசா ((Paisa பணம்), இரண்டாவது ‘பவர்’ ((Power அதிகாரம்), மூன்றாவது ‘பிரஸ்டீஜ்’ ((Pres­tige -கௌரவம்) - இம்மூன்று விசயங்களுக்காகத்தான் வரலாற்று ஆய்வாளர்கள் இருக்கிறார்கள் என்று கொச்சைப்படுத்தினார்.

‘‘அயோத்தி இராமர் கோவில் கர சேவையின் போது முலாயம் சிங் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியானவர்கள் எத்தனைப் பேர்? உத்தரப் பிரதேசத்தில் ஏன் முலாயம் சிங் யாதவை நவீன கால இராவணன் என்று கூறுகிறார்கள்?’’ - என்று பொது அறிவுப் பாடத்தின் கேள்வித்தாளில் கேள்விகளாக வைத்து நீதிமன்றம்வரை சென்றது உலகம் அறிந்ததே.

என்.சி.இ.ஆர்.டி (NCERT - National Council for Education, Research and Training) எனப்படும் தேசிய கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கழகத்தின் தலைவராக வாஜ்பாய் காலத்தில் நியமிக்கப்பட்டிருந்த கே.ஜி.ரஸ்தோகி, தான் எழுதிய தன்வரலாற்றுப் புத்தகத்தில் (biography), தேசப் பிரிவினையின் போது ஒரு பகுதிக்குச் சென்றிருந்ததாகவும், அப்போது ஒரு அழகான இஸ்லாமியப் பெண்ணை கலவரக்கார இந்து இளைஞர்கள் தங்களுக்குள் யார் அவளை எடுத்துக் கொள்வது என்று போட்டி போட்டுக் கொண்டிருந்ததாகவும், நம்மவர்களுக்குள் இவ்வளவு முரண்பாடு வந்துவிட்டதே என்று எண்ணி இவர் வருத்தமடைந்ததாகவும், உடனே தன்னுடைய கைத்துப்பாக்கியை எடுத்து அந்த இஸ்லாமியப் பெண்ணை சுட்டுக் கொன்று விட்டதாகவும், அதற்குப் பின்பு, அந்த இளைஞர்கள் கலைந்து சென்று விட்டார்கள் என்றும், இதன்மூலமாக இந்து இளைஞர்களிடையே வந்த சண்டையைத் தீர்த்து விட்டதாகவும், இந்துக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்திவிட்டதாகவும் பதிவு செய்திருக்கிறார்.

ஐ.சி.ஹெச்.ஆர் (ICHR - Indian Council of His­torical research) எனப்படும் இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கழகத்தின் தற்போதைய தலைவராக இருக்கக்கூடிய சுதர்சன் ராவ் என்ற ஆர்.எஸ்.எஸ்-காரரைப் பற்றி இதுவரை எந்த வரலாற்றுப் பேராசிரியரும் கேள்விப்பட்டதே இல்லை. அவர் எந்த ஆராய்ச்சியிலும் ஈடுபட்டதும் இல்லை என்று பேராசிரியர் ராமச்சந்திர குஹா எழுதியிருக்கிறார். இந்த சுதர்சன் ராவ் பத்திரிக்கைகளுக்கு அளித்த பேட்டியில், மேற்கத்திய ஆய்வாளர்கள் வரலாற்றாய்வில் சான்றாதாரங்களை முதன்மையாக வைத்தே முடிவுக்கு வருகிறார்கள்.

‘‘இந்தியா போன்ற தொன்மையான நாகரீகமும் கலாச்சாரமும் கொண்ட பகுதியில் வாய்வழிக்கதைகளைவும் தகவல்களையும் சான்றுகளாக கொள்வது தவிர்க்க இயலாதது”, “சனாதன வருணாசிரம தருமங்கள் இந்திய சமூகத்தில் அமைதியையும் ஒழுங்கையும் நிலைநாட்டியது, அவரவர் கடமையை அவரவர் செய்வதே வருணாசிரம தருமமாகும், இது மதங்கள் தோன்றுவதற்கு முன்பே இந்தியாவில் இருந்துவருகிறது” என்று இந்துத்துவத்தையும் சாதியவாதத்தையும் உயர்த்தி பிடிக்கிற ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்தான் இன்றைக்கு இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கழகத்தின்(ஐ.சி.ஹெச்.ஆர்) தலைவராகும் தகுதியைப் பெற்றிருக்கிறார்.

2015-ம் ஆண்டு சனவரியில் நடைபெற்ற இந்திய அறிவியல் பேராயத்தில் இந்திய பல்கலைக்கழகங்களின் சமஸ்கிருதத் துறை பேராசியர்களைக் கொண்ட ‘‘சமஸ்கிரதத்தின் வழி வேத அறிவியல்” என்ற அமர்வு நடைபெற்றது. அந்த அமர்வில் ‘‘வேத காலத்திலேயே விமானத் தொழில்நுட்பம் (வைமானிக சாஸ்திரம்), உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, குவாண்டம் இயற்பியல், அணு இயற்பியல் நம்மிடையே இருந்தது.

அதை அறிந்து கொள்ள நாம் அனைவரும் சமஸ்கிருத மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும். மேற்கொண்ட அறிவியல் அனைத்தும் இசுலாமிய படையெடுப்பினாலும், காலணி ஆட்சியாளர்களாலும் அழிக்கப்பட்டது” என்று சொன்னார்கள். அறிவியலுக்கு முரணான தவறான கோட்பாடுகளை (pseudo sci­ence) உண்மையான அறிவியல் என்று நம்மிடையே பரப்புவதற்கான நச்சு விதையைப் பேராயத்தில் தூவிவிட்டுச் சென்றார்கள்.

முன்னரே சொன்னது போல், இந்துத்துவ சக்திகள் தங்களுக்கு எதிரியாக காட்டியிருக்கக்கூடிய மெக்காலே கல்விமுறையை அவர்கள் எதிர்ப்பதற்கான அடிப்படை பழைய முறைசாரா, வேதக்கல்வி, குருகுலக்கல்வி, திண்ணைக்கல்வி, சாதி அடிப்படையிலான தொழில் கல்வி என்ற மத்திய கால இந்துமத நிலவுடமைக் கல்விமுறையை ஒழித்ததே.

அதே நேரத்தில் மெக்காலே கல்விமுறையின் நோக்கம் காலணியச் சார்பு, ஏகாதிபத்திய கங்காணிகளையும் கணக்காளர்களையும் படைப்பாற்றல் இல்லாத எந்திரமயமான தொழில்நுட்ப வல்லுனர்களையும், மனப்பாட எந்திரமாக மாணவர்களையும் உருவாக்க வேண்டும் என்பதே.

ஆகவே ஒரு புதிய சனநாயக சமூகத்தை உருவாக்க, படைப்பூக்கமுள்ள புதிய இளம் தலைமுறையை உருவாக்க நம்முடைய முதன்மையான பணி இந்த வேதகால கல்வியை எதிர்த்துப் பாசிச இந்துத்துவ சனாதனவாதிகளிடமிருந்து கல்வியை மீட்பதும், காலனியகால அடிமைகளை உருவாக்கும் இப்போதைய மெக்காலே கல்விமுறையில் இருந்து மீட்பதுமே.

அறிவியல் பூர்வமான படைப்பாக்கமிக்க மதசார்பற்ற சனநாயக கல்விமுறையை கொண்டுவருவதே. அதற்கான இன்றைய இளம் தலைமுறை மாணவர்களை அணியமாக்குவோம், அதை நோக்கி நம்முடைய செயல்பாடுகள் இருக்கட்டும்.

Pin It