ஈரோடு, சேலம், கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் இரட்டைக் குவளையை எதிர்த்து கழகம் போர்க்கொடி உயர்த்தியுள்ளது. இப்பகுதிகளில் இரட்டை பெஞ்சுகள் உடைத்து நொறுக்கப்பட்டன. இரட்டைக் குவளை ஒழிக்கப்பட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

தமிழ்நாட்டில் தேநீர்க் கடைகளில் தாழ்த்தப்பட் டோருக்கு ‘தனிக் குவளை - தனி இருக்கை’யைப் பின்பற்றும் தீண்டாமைக்கு எதிரான போராட்டக் களத்தில் பெரியார் திராவிடர் கழகம், தீவிரமாக இறங்கியுள்ளது. திண்டுக்கல், சேலம், கோவை மாவட்டங்களில், இத்தகைய ‘தீண்டாமை’ பின்பற்றப்படும். தேனீர்க் கடைகளின் பட்டியலை கழகத் தோழர்கள் தயாரித்தனர். கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டில் அது வெளியிடப்பட்டது. அதற்குப் பிறகு தான் காவல்துறை விழித்துக் கொண்டது. கழகப் பொறுப்பாளர்களிடம் பட்டியலைப் பெற்றுக் கொண்டு காவல்துறை அதிகாரிகள், அந்தக் கடைகளுக்குச் சென்று நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

சில இடங்களில் தேனீர்க்கடை உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டனர். பெரும்பாலான கடைகளில் இரட்டைக் குவளை முறை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. கழக சார்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் இந்தப் பகுதிகளில் இரட்டைக் குவளை எதிர்ப்புப் பிரச்சாரப் பயணமும் நடத்தப்பட்டது. இரட்டைக் குவளை முறையைத் தொடர்ந்து பின்பற்றும் தேனீர்க் கடைகளில் ‘இரட்டைக் குவளை’ உடைப்புப் போராட்டம் அக்டோபர் 2 இல் நடத்தப்படும் என்று பெரியார் திராவிடர் கழகம் அறிவித்திருந்தது.

இரட்டைக் குவளை முறை நீக்கப்பட்ட பகுதிகளில் தீண்டாமைக்கு எதிராக கழகம் ஆர்ப்பாட்டங்களை நடத்தி மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்கும் என்றும், இரட்டைக் குவளை தொடர்ந்து நீட்டிக்கப்படும் தேனீர்க் கடைகள் முன் திட்டமிட்டபடி உடைப்புப் போராட்டம் நடக்கும் என்றும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிவித்திருந்தார். திட்டமிட்டபடி அக்டோபர் 2 ஆம் தேதி ஆர்ப்பாட்டங்களும், குவளை உடைப்புப் போராட்டங்களும் கழகத் தோழர்களால் நடத்தப்பட்டுள்ள செய்திகள் கிடைத்துள்ளன. செய்திகள் விவரம்:

இரட்டை பெஞ்ச் உடைப்பு : 60 கழகத்தினர் கைது

தொடர்ந்து பல்லடத்திலிருந்து மாவட்டத் தலைவர் சு.துரைசாமி தலைமையில் புறப்பட்ட கழகப் போராட்டக் குழுவினர் முதலில் செம்மிபாளையம் நோக்கிப் புறப்பட்டனர். அங்கு இரட்டைக் குவளை வைத்துள்ள தேனீர்க் கடைக்கு சென்றபோது கடைக்காரர் இரட்டைக் குவளைகளை அப்புறப்படுத்தி விட்டேன், இனிமேல் வைக்க மாட்டேன் என்று உறுதியளித்தார். சூலூர் ஒன்றியத்தில் உள்ள மேற்கு இராசாகவுண்டம் பாளையம் என்ற கிராமத்துக்கு வந்த தோழர்கள் தீண்டாமையை பின்பற்றும் தேனீர்க் கடை நோக்கி சென்றனர். அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

அங்கே தலித் மக்கள் அமருவதற்காக, உயரம் குறைவான ஒரு சிறிய அமரும் பலகையும் பிற சாதியினருக்கு உயரமான பெரிய அமரும் பலகையும் இருந்தது. தலித் மக்களுக்கு தனியாக வைக்கப்பட்டிருந்த அமரும் பலகையைத் தூக்கி வீசி, கழகத் தோழர்கள் அடித்து நொறுக்கினர்.

“தீண்டாமை ஒழிக, சாதி ஒழிக” என்ற முழக்கங்கள் உணர்ச்சிகரமாக எழுப்பப்பட்டன. தீண்டாமை ஒழிப்புக்கான காவல்துறை பிரிவினர் ஏராளமாக குவிந்தனர். காவல்துறையினர் ‘தீண்டாமை’யைத் தடுக்காமல், அதைத் தட்டிக் கேட்ட தோழர்களைத் தடுக்க முயன்றனர். தோழர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

அங்கிருந்து இரட்டைக் குவளை பின்பற்றப்பட்டு வரும் செங்கத்துறை எனும் கிராமத்தை நோக்கி, கழகத் தோழர்கள் புறப்பட்டனர். இது ஜெயலலிதா அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த செ.ம. வேலுச்சாமியின் சொந்த ஊராகும். ஊர் எல்லையிலேயே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். “ஊருக்குள் நுழைய கூடாது கைது செய்கிறோம்” என்று காவல்துறை அதிகாரிகள் தடுத்தனர்.

“தீண்டாமையைத் தடுக்க வேண்டிய காவல்துறை - எங்களைத் தடுப்பதுதான் நீங்கள் செய்யும் சட்டக் கடமையா?” என்று தோழர்கள் கேட்டனர். ஆனால், ஊருக்குள்ளே நுழைய விடமாட்டோம் என்று அறிவித்து, காவல்துறையினர் கழகத் தோழர்களைக் கைது செய்தனர். 60 கழகத்தினர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட கழகத் தோழர்கள் - அஞ்ச மாட்டோம், அஞ்ச மாட்டோம், கருப்புச் சட்டைகள் அஞ்ச மாட்டோம். துணை போகாதே, துணை போகாதே, தீண்டாமைக்கு துணை போகாதே. உடைப்போம், உடைப்போம் இரட்டைக் குவளைகளை உடைப்போம் என முழக்கமிட்டனர். கைது செய்யப்பட்ட தோழர்கள் சூலூர் காவல்நிலையம் கொண்டு போகப்பட்டனர்.

அங்கு மேற்கு ராசாக்கவுண்டம் பாளையத்தில் இரட்டை இருக்கைகளை உடைத்ததற்காக பொங்கலூர் கார்த்திக், சுக்கம்பாளையம் ஆறுமுகம் ஆகிய இரண்டு தோழர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, மற்ற தோழர்களை விடுதலை செய்தனர். களப்பணி ஒருங்கிளைப்பாளர் அங்ககுமார், சூலூர் பன்னீர்செல்வம், பல்லடம் திருமூர்த்தி, ஒன்றியச் செயலாளர் விஜயன், பொங்கலூர் மயில்சாமி, திருப்பூர் சண்முகம், மாணவரணி அமைப்பாளர்கள் கார்த்திகேயன், பனிமலர், தமிழ்ச்செல்வி, அ.ப.சிவா, அனுப்பட்டி பிரகாஷ், முகில் ராசு உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

வெள்ளி மலைப் பட்டினம்

கோவை தொண்டாமுத்தூர் ஒன்றியத்தில் உள்ளது வெள்ளிமலைப்பட்டினம் எனும் கிராமம். கோவையிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ள இக் கிராமத்திலுள்ள தேனீர்க் கடைகளில் இரட்டைக் குவளை முறை பின்பற்றப்படு வதாக தகவல்கள் கிடைத்தன.

கோவை மாவட்ட கழகத் தோழர்கள் - ஆட்சிக் குழு உறுப்பினர் ஆறுச்சாமி தலைமையில், வெள்ளிமலைப்பட்டினம் கிராமத்துக்குத் திரண்டு வந்தனர். தீண்டாமை, சாதி, எதிர்ப்பு முழக்கங்களோடு, தேனீர்க் கடைகளை நோக்கி புறப்பட்டுச் சென்றபோது, பஞ்சாயத்து தலைவர் சுகன்யா ராஜரத்தினம், கழகத் தோழர்களை வந்து சந்தித்தார். இவர் தி.மு.க.வைச் சார்ந்தவர்.

“இரட்டைக்குவனை முறையை உடனே நிறுத்தக் கோரி, பஞ்சாயத்தில் நாங்களே தீர்மானம் போடப் போகிறோம். இரட்டைக் குவளையை எடுக்காவிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றி, எங்கள் கிராமத்தில் உள்ள 144 தேனீர்க் கடைகளுக்கும் தீர்மானத்தை அனுப்ப முடிவு செய்துள்ளோம். இதையே நீங்கள் வாக்குறுதியாக ஏற்று, போராட்டத்தைக் கைவிடுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்தார். “நீங்கள் வாக்குறுதி தந்ததுபோல் இரட்டைக் குவளை நீக்கப்படாவிட்டால், மீண்டும் நாங்கள் உடைப்புப் போராட்டத்தை நடத்துவோம்” என்று தோழர்கள் கூறி, சாதி தீண்டாமைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

காந்தி பிறந்த நாளுக்கு கூடிய கிராம சபை கூட்டத்தில் கிராம மக்களே அப்பகுதி யிலுள்ள தேனீர்க்கடைகள், பேக்கரி கடைகளில் ஒரே குவளை வைக்க வேண்டும், இரட்டைக் குவளை வைத்தால், கிராம சபை நடவடிக்கை எடுக்கும் என்று தீர்மானம் நிறைவேற்றினர். ஆர்ப்பாட்டத்தில் கழகத்தின் பொறுப்பாளர்கள் இராசக்குமார், வே. கோபால், சா. கதிரவன், பொள்ளாச்சி பிரகாசு, பன்னீர்செல்வம், சிங்கை மனோகரன் உட்பட ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்.

காரத் தொழுவு

உடுமலை ஒன்றியம் காரத்தொழுவில் அக்.2 ஆம் தேதி காலை கழகத்தின் மாவட்ட செயலாளர் கருமலையப்பன் தலைமையில், சீவானந்தம் (மடத்துக்குளம் ஒன்றிய கழக செயலாளர்) முன்னிலையில் கழகத்தின் சார்பில், எழுச்சியுடன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆதித் தமிழர் பேரவை, விடுதலை சிறுத்தைகள் அமைப்பினரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். கழகத்தின் போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து காரத்தொழுவு காவல் நிலையத்தில் காவல் துறையினர், தேனீர்க் கடை நடத்துவோரை முதல் நாளே அழைத்து, கூட்டம் ஒன்றை நடத்தினர். ‘

இரட்டைக் குவளை’யை வைக்க மாட்டோம் என்று அவர்களிடம் காவல்துறை எழுதி வாங்கியுள்ளது. காவல்துறை அதிகாரிகள் கழகத் தோழர்களிடம், இதைத் தெரிவித்தனர். இதைத் தவிர, அந்தப் பகுதியில் இரட்டைக் குவளை முறை இருந்தால், அந்தப் பட்டியலைத் தந்தால், ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை எடுப்பதாக கழகத்தினரிடம் உறுதி கூறினர்.

மசக் கவுண்டனூர்

ஈரோடு மாவட்டம் குமராயனூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மசக் கவுண்டனூர், பாப்பாத்திக்காடு, காளியாக் கோயில் ஆகிய இடங்களில் உள்ள 11 தேனீர்க் கடைகளில் இரட்டைக் குவளை முறை தொடர்ந்து அமுலில் உள்ளது. அக்டோபர் 2 ஆம் தேதி காலை ஈரோடு மாவட்டக் கழகத் தலைவர் நாத்திகசோதி தலைமையில் கழகத் தோழர்கள் மசக்கவுண்டனூரில் இரட்டைக் குவளை முறையை நடைமுறைப்படுத்தும் குமார் என்பவர் தேனீர்க் கடையை நோக்கிப் புறப்பட்டனர். அங்கே 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். இரட்டைக் குவளையை சட்டவிரோதமாக செயல்படுத்திக் கொண்டிருப்பதைத் தடுக்காமல், குவளையை உடைக்கச் சென்ற தோழர்களைத் தடுத்தனர்.

கழக மாவட்டத் தலைவர் நாத்திக சோதி - “எங்களை ஏன் தடுக்கிறீர்கள்? ஊருக்குள் எந்தக் கடையிலும் இரட்டைக் குவளை இருக்கக் கூடாது. அதைத் தடுக்காமல் எங்களை ஏன் தடுக்கிறீர்கள்! அப்படியே நீங்கள் எங்களைக் கைது செய்ய முடிவு செய்துவிட்டால், நாங்கள் சிறைக்குப் போகத் தயார். அதற்கு முன், எங்களை ஊருக்குள் அனுமதியுங்கள். நாங்கள் மக்களிடம், தீண்டாமை, சாதிக் கொடுமைகளை விளக்கிப் பேச வேண்டும் என்று கேட்டார். காவல்துறை அதிகாரிகள் அனுமதிக்க முடியாது என்று மறுத்தனர். இதற்கிடையே நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கழகத் தோழர்களுக்கு ஆதரவாகத் திரண்டு வந்து விட்டனர்.

இதனைத் தொடர்ந்து, காவல்துறை கழகத் தோழர்களை ஊருக்குள் அனுமதித்தது. நாத்திகஜோதி திரண்டிருந்த மக்களிடையே ‘தீண்டாமை’க் கொடுமைகளை விளக்கிப் பேசினார். இரட்டைக்குவளையை பின்பற்றும் கடைகளுக்கு எச்சரிக்கை செய்தார். கழகத் தோழர்களை காவல்துறை தடுத்து நிறுத்திய செய்தி அருகில் இருந்த கொளத்தூர் பகுதி கழகத் தோழர்களுக்கு தெரிந்து, சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

கழகம் தீண்டாமைக்கு எதிராக வெளியிட்ட துண்டறிக்கைகளை அப்பகுதி முழுதும் வீடு வீடாகச் சென்று வழங்கினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கழகத்தோழர்கள் நாத்திகசோதி (மாவட்டத் தலைவர்), விஜயகுமா¢ (ஈரோடு நகரக் கழகத் தலைவர்), அழகேசன், செந்தில், உத்திரசாமி, சுந்தரமூர்த்தி, தம்பி ஆகிய 8 தோழர்களை காவல்துறை கைது செய்தது. அவர்கள் வெள்ளித் திருப்பூர் காவல் நிலையத்துக்கு கொண்டு போகப்பட்டனர்.

ஈரோட்டில்

2.10.07 செவ்வாய் கிழமைக் காலை 10.30 மணிக்கு ஈரோடு நகராட்சி அலுவலகம் முன்பு கழகத்தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், மாவட்டக் கழகச் செயலாளர் இராம. இளங்கோவன், மாநில நிதிக் குழு உறுப்பினர் பொன்னுச்சாமி, மாவட்ட துணைத் தலைவர் கா.சு.வேலுச்சாமி, மாவட்ட அமைப்பாளர்கள் சதுமுகை. பழனிச்சாமி, வெ. குமரகுருபரன் ஆகியோர் முன்னிலையிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் ஆர்ப்பாட்டத்திற்கு வந்தவர்களை வரவேற்று பேசினார். அடுத்து ஆதித் தமிழர் பேரவையின் அமைப்பாளர் பெருமாவளவன் கருத்துரையாற்றினார். ஆதித் தமிழர் பேரவையின் மாவட்ட செயலாளர் வீர. கோபாலன், தமிழ் தேசிய பொதுவுடைமைக் கட்சியின் மாவட்ட செயலாளர் இளங்கோ ஆகியோருக்குப் பின்னர் கழகத் தலைவர் இறுதியுரையாற்றினார்கள்.

தலைவர் கொளத்தூர் மணி தனது உரையில், பெரியார் பெயரைச் சொல்லி ஆட்சி நடத்தும் ‘கலைஞர்’ அவர்களின் ஆட்சியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து அநீதி இழைக்கப்படுவதும், ஆதிக்க சாதிகளின் அடாவடிப் போக்கால் இன்னமும் தமிழக கிராமங்களில் தேனீர்க் கடைகளில் இரட்டைக் குவளை முறை நிலவி வருவதும், அதனைப் போக்க வேண்டிய, களைய வேண்டிய அரசு அதனை விடுத்து, இரட்டைக் குவளையை உடைக்கும் கழகத் தோழர்களை, பெரியாரின் உண்மைத் தொண்டர்களை தொடர்ந்து கைது செய்து நடவடிக்கை எடுப்பதும் மிகுந்த கண்டனத்திற்குரியது.

இரட்டைக் குவளை வைத்துள்ள தேனீர்க் கடை உரிமையாளர்களை கைது செய்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு, ‘பெரியார்’ ஆட்சி என பிரகடனப்படுத்திக் கொள்ளும் கலைஞரின் அரசு பெரியார் தொண்டர்களை கைது செய்வது என்ன நியாயம்? ஆகவே தயவுசெய்து இனிமேல் ‘கலைஞர்’ அவர்கள் பெரியாரின் பெயரைச் சொல்லாதீர்கள். ‘பெரியார்’ பெயரைச் சொல்வதற்கு உங்களுக்கு எந்தத் தகுதியும் இல்லை என்று குறிப்பிட்டார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் சொன்ன தலைவர், சேது சமுத்திரத் திட்டம் பற்றி குறிப்பிடுகையில் இந்தத் திட்டம் உடனே தாமதமின்றி நிறைவேற்றப்பட வேண்டும். ‘கலைஞரின்’ தலைக்கு காவிக் கூட்டம் விலை பேசுவதற்கு காரணம், இராமாயணம், இராமன் குறித்த பெரியாரின் கருத்துக்களை, பகுத்தறிவுக் கொள்கைகளை தி.மு.க. பின்பற்றாமல், பரப்பாமல் விட்டதுதான். தி.மு.க. பெரியாரின் கொள்கைகளை பிரச்சாரம் செய்ய வேண்டும். ‘கலைஞர் பாசறை’ போன்ற அமைப்புகள் தொடர்ந்து பகுத்தறிவுப் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். அதுவே இந்த பிரச்சினைக்கு தீர்வாக இருக்க முடியும் என தனது கண்டன உரையில் குறிப்பிட்டார். இறுதியாக ஈரோடு நகரச் செயலாளர் லெமூரியன் நன்றி கூறினார்.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட அமைப்பாளர் இரகுநாதன், மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் செல்வக்குமார், தாராபுரம் செயலாளர் குமார், முருகேசன், இராசேந்திரன், இராஜா மணி, காங்கேயம் பாண்டியன், ஈரோடு ரவி, சுப்ரமணியன், சிவா, மாது, லக்காபுரம் துரை, கொளப்பலூர் தலைவர் கொ.கி.சுப்ரமணியன், மாவட்ட இளைஞரணி தலைவர் தாமோதரன், பிரபாகரன், துரை, கோபி நகர அமைப்பாளர் குணசேகரன், ஜெய ராமன், கீழ்வானி சுந்தரம், காசிபாளையம் கருப்ணன், செயக்குமார், பாலு, கடக்கரை தலைவர் அருளானந்தம், கலைச்செல்வன், சிவராஜ், எலத்தூர் அழகிரி, கிளாகுளம் செயலாளர் செந்தில் குமார், செல்வம் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்களும், ஆதித்தமிழர் பேரவைத் தோழர்களும் கலந்து கொண்டனர்.

ஒட்டன்சத்திரத்தில் கழகத் தலைவர் பங்கேற்பு

அக்.2 ஆம் தேதி மாலை 5 மணியளவில் ஒட்டன்சத்திரத்தில் இரட்டைக் குவளை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம், மாவட்டத் தலைவர் துரை. சம்பத் தலைமையில் நடைபெற்றது. ஆதித் தமிழர் பேரவை மாவட்டத் தலைவர் வெள்ளை பாண்டியன், தமிழக தலித் விடுதலை இயக்க நிறுவனர் தலித் சுப்ரமணி, மதுரை மாவட்ட பெரியார் திராவிடர் கழக பொறுப்பாளர்கள் தமிழ்ப்பித்தன், விடுதலை சேகர், ஸ்டாலின், வெண்மணி, அகராதி, முருகேசன், பெரியார் நம்பி, முருகானந்தம், காந்தி, மருதமுத்து, கதிரவன், நல்லதம்பி உட்பட ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ஆர்ப்பாட்ட இறுதியில் கண்டன உரையாற்றினார

புகார் தந்த 11 வயது சிறுவன்

வெள்ளிமலைப் பட்டினத்தில் - தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை முறை உள்ளது. பஞ்சாயத்துத் தலைவராக உள்ள தி.மு.க.வைச் சார்ந்த சுகன்யா ராஜரத்தினம் முதலில் மறுத்தார். பிறகு ஒப்புக் கொண்டார். ஆனாலும் காவல் நிலையத்தில் - புகார் தர அக்கிராமத்தில் வாழும் தலித் மக்கள் முன் வர அஞ்சினர். கழகத் தோழர்கள் போராட்டம் நடத்தியபோது, தலித் பெரியவர்கள் அஞ்சி ஒதுங்கி நின்ற போது, அஜித் என்ற 11 வயது சிறுவன் (தந்தை பெயர் பட்டி) துணிந்து முன் வந்து இரட்டைக் குவளை இருப்பதாக புகார் கொடுத்தான். ஆபாந்துரை காவல் ஆய்வாளர் புகாரைப் பதிவு செய்து கொண்டார்.