பாரதிய ஜனதா கட்சியின் நாகரிகமற்ற ஆட்சியில் இந்த நாட்டு மக்கள் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். மதவாத நீர் ஊற்றி இந்த நாட்டை விஷச் செடி நிறைந்த காடாய் மாற்றி வருகின்றனர். இந்த விஷச் செடிகளின் வேர்கள் மனித உயிர்களை உறிஞ்சுகின்றன.
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சராய்கேலா – கர்ஸவன் மாவட்டத்தில் ஜூன் மாதம் 18ம் தேதி தப்ரெஸ் அன்சாரி எனும் 22 வயது இளைஞன் திருடச் சென்ற போது கையும் களவுமாக மாட்டிக் கொண்டான். ஊர்ப் பொதுமக்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’, ’ஜெய் அனுமான்’ என்று கூறச் சொல்லி வற்புறுத்தி, தாக்கிய காட்சி சமூக வலைதளங்களில் பரவிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்ட அன்சாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
திருட வருகிறவன் கூட இந்துவாக இருக்க வேண்டும் என்கிற அளவிற்கு இவர்களிடம் மதவாதம் முற்றிப் போயிருக்கிறது. மனங்களில் மனிதநேயம் வற்றிப் போயிருக்கிறது.
இந்த நாட்டின் பிரதமர், தேர்தல் பரப்புரையின் போது ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று சொன்னார். மக்களவையிலும் பா.ஜ.க வினர் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கூச்சலிட்டனர். மதச் சார்பின்னமையைப் பாதுகாக்க வேண்டிய மக்களைவயிலேயே இப்படி அத்துமீறுபவர்கள் பிறகு எப்படி நாட்டில் மதச்சார்பின்மையைப் பாதுகாப்பார்கள்?
அண்மையில் அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையில் நேரடியாகவே இந்திய அரசும் பா.ஜ.க வும் சிறுபான்மையினர் நலனுக்கு எதிராகச் செயல்படுவதைச் சுட்டிக்காட்டியது.
இன்னும் பல்வேறு அமைப்புகளும், ஊடகங்களும் இதனைச் சுட்டிக்காட்டியிருக்கின்றன. இந்த நாட்டில் இன்று பிரதமராக இருப்பவருக்குச் சில ஆண்டுகளுக்கு முன் மதக் கலவரத்திற்காக விசா மறுத்தது அமெரிக்கா. இப்படிப்பட்ட வரலாற்றுப் பெருமை மிக்கவர் மோடி. இப்படிப்பட்டவர் உதிர்க்கும் வார்த்தைகள்தான் ‘ஜெய் ஸ்ரீராம்’, ’ஜெய் அனுமான்’. இந்த முழக்கங்களைக் கேட்டாலே பக்தர்களுக்குக் கூட இனி பயம் தான் வரும்.
மன்னர்கள் காலத்திலும் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடந்திருக்குமா என்று தெரியவில்லை. தங்களை “மக்கள் காவலர்கள்” என்று சொல்லிக் கொண்டார்கள். சொந்த நாட்டிலேயே மக்கள் அச்சத்தோடு வாழும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறார்கள். புதிய இந்தியாவை உருவாக்குகிறோம் என்று சொல்லிப் பழைமைவாதத்தையும் பயங்கரவாதத்தையும் பயிரிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
மனிதனை மனிதன் அடித்துக் கொல்லும் காட்டுமிராண்டித் தனத்தைச் செய்பவர்கள் யாரும் இது வரை முறையாகத் தண்டிக்கப்படவில்லை என்று புள்ளி விவரங்கள் சொல்கின்றன. ‘ஜெய் ஸ்ரீராம்’ ’ஜெய் அனுமான்’ என்று சொல்லி விட்டால் வரம் கிடைக்கிறதோ இல்லையோ, இவர்களுக்கு பிணை கிடைத்துவிடுகிறது. இன்னும் தீவிரமாக மதக் கலவரங்களைச் செய்தால் பெரிய பெரிய பதவிகள் கிடைக்கும்.
ஒரு குடும்பத்தையே ஒருவர் உயிரோடு எரித்தார். அவர் மத்திய அமைச்சர். அவர் உரக்கச் சொல்கிறார் ‘ஜெய் ஸ்ரீராம்’.
குஜராத்தில் நடந்த மதக் கலவரங்களுக்காக முதலமைச்சராக இருந்தவருக்கு ஒரு வளர்ந்த நாடு அந்த நாட்டிற்குள் வருவதற்கான அனுமதி மறுத்தது. அவர் இன்று பிரதமர். அவரும் உரக்கச் சொல்கிறார் ‘ஜெய் ஸ்ரீராம்’.
திருட வந்தவனைக் காட்டுமிராண்டித் தனமாக அடித்தவர்களும் உரக்கச் சொல்கிறார்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’.
வன்முறை முழக்கமே ‘ஜெய் ஸ்ரீராம்’.
இனி இந்த நாட்டில் வன்முறை ஒழிய வேண்டும் என்றால், முதலில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்னும் முழக்கத்தை ஒழிக்க வேண்டும்.
இந்த முழக்கம் இனிவரும் தலைமுறையின் காதுகளில் கேட்காமல் இருக்கட்டும். அவர்கள் மனிதர்களாக அரவணைப்போடு வாழட்டும்!