கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

செப்டம்பர் 11 - பாரதியார் பிறந்த நாள். நியூயார்க் நகரில் 2001இல் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட நாள். 1957இல் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைப் போராளியாக விளங்கிய இம்மானுவேல் சேகரன், பரமக்குடியில் பாரதியார் பிறந்த நாள் விழாவில் உரையாற்றிவிட்டு, வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, இந்து சாதிவெறிபிடித்த கும்பலால் கொல்லப் பட்ட நாள். 2011இல் செப்டம்பர் 11 அன்று இம்மானு வேல் சேகரனின் நினைவிடத்தில் தங்கள் வீரவணக் கத்தைத் தெரிவிக்க வந்த தாழ்த்தப்பட்ட மக்களைத் தடுத்து நிறுத்தியதால் ஏற்பட்ட கலவரத்தில் ஆறு தாழ்த்தப்பட்ட தோழர்களைக் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் செயலலிதா, “1991-1996இல் என்னுடைய ஆட்சிக்காலத்தில் காவல்துறையை நவீனப்படுத்த நடவடிக்கைகளை எடுத்தேன். அதனால் தமிழ்நாடு காவல்துறை, மக்கள் பிரச்சனைகளை மனிதநேயத்துடன் அணுகுவதில் பக்குவமான மாற்றங்களை அடைந்துவருகிறது” என்று 24.8.2011 அன்று அறிவித்தார். காவல்துறை இவருடைய பொறுப்பில் உள்ளது. ஆட்சியில் இருக் கும்போது முதலமைச்சராக இருப்பவர்கள், காவல் துறையின் கடமை உணர்வைப் பாராட்டுகின்றனர். இவர்களே எதிர்க்கட்சியில் இருக்கும் போது ‘காவல் துறை அட்டூழியம் ஒழிக’ என்று முழங்குகிறார்கள்.

காவல்துறையின் அணுகுமுறைகளும் செயல் பாடுகளும் இந்தியாவை ஆங்கிலேயர் ஆட்சி செய்த போது இருந்தது போலவே கிட்டத்தட்ட இப்போதும் இருக்கின்றன. ஒரு சனநாயக நாட்டில் இருக்க வேண் டிய தன்மையில் காவல்துறை திருத்தி அமைக்கப்பட வில்லை. அண்மையில் இங்கிலாந்தில் இலண்டனி லும் மற்றும் சில நகரங்களிலும் கலவரம் நடந்தது. ஊர்திகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. கட்டடங்கள் எரிந்தன. கடைகள் சூறையாடப்பட்டன. ஆனால் காவல்துறை ‘வன்முறையாளர்கள்’ மீது துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை. ஆனால் இந்தியாவிலோ காவல் துறை ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறைக்கான கருவியாகவே பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் பிறப்பின் அடிப்படையிலான சாதி அமைப்பும், அதன் காரணமான உயர்வு-தாழ்வுகளும் சுதந்திரம் பெற்று 64 ஆண்டுகளுக்குப் பிறகும், கட்டுக் குலையாமல் அப்படியே இருக்கின்றன. தீண்டாமை யின் அடிப்படையில், தாழ்த்தப்பட்டோர் மீதான இழிந்த நோக்கு மாறாமல் நீடிக்கிறது. கடைநிலை ஊழியர் முதல், உச்சநீதிமன்ற நீதிபதி வரை சாதிய மனப் போக்குப் புரையோடி இருக்கிறது. காவல்துறை இதற்கு விதிவிலக்காக இருக்க முடியாது. காவல்துறையிடம் ஆயுதமும், அடிக்கின்ற - சுடுகின்ற அதிகாரமும் இருப்ப தால், சாதிய மோதல்களில், குறிப்பாகத் தாழ்த்தப் பட்டோர் மீதான தாக்குதல்களில், மேல் சாதி ஆதிக்கப் போக்குடன் அது செயல்படுகிறது. பரமக்குடியில் தாழ்த் தப்பட்டோர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கும், கொடுமை யாகத் தாக்கப்பட்டதற்கும் மேல்சாதி ஆணவ அதிகாரப் போக்குடன் காவல்துறை செயல்பட்டதே காரணமாகும்.

இராமநாதபுர மாவட்டம், பசும்பொன் என்ற ஊரில், முத்துராமலிங்கத் தேவருக்கு ஆண்டுதோறும் அக்டோபர் 30ஆம் நாள் குருபூசை விழா நடைபெறுகிறது. முக்குலத்தோர் பெரும் எண்ணிக்கையில் இவ்விழா வில் கலந்து கொள்கின்றனர். இது அரசு விழாவாக ஏற்பிசைவு வழங்கப்பட்டுள்ளது. அதனால் அமைச் சர்கள் இவ்விழாவில் பங்கேற்கின்றனர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கலந்து கொள்கின் றனர். 2010ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த செயலலிதா, முத்துராமலிங்கத் தேவரின் 103ஆவது குருபூசையில் கலந்துகொண்டார். முத்து ராமலிங்கத் தேவரின் குருபூசைக்கு விரிவான பாது காப்பு ஏற்பாடுகளைக் காவல்துறை செய்கிறது.

தியாகி இம்மானுவேல் பேரவை 1988 முதல் இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள இம்மானுவேலின் நினைவிடத்தில் குருபூசையை நடத்தி வருகிறது. நாக புரியில் உள்ள ‘தீட்சா பூமிக்கு-’ மேதை அம்பேத்கர் 1956இல் பவுத்த மதத்திற்கு மாறிய இடத்திற்கு - அதே நாளில் - இந்தியா முழுவதிலிருந்தும் இலட்சக்கணக்கான மக்கள் ஆண்டுதோறும் சென்று கண்ணீர் மல்க, தங்கள் நன்றியையும் மரியாதையையும் தெரிவிக்கின்றனர். அதுபோல் இம்மானுவேல் நினைவிடத்திற்கு செப்டம்பர் 11 அன்று தென்மாவட்டங்களில் உள்ள சிற்றூர்களிலிருந்தும் நகரங்களிலிருந்தும் தாழ்த்தப்பட்டோர் பெரும் எண்ணிக்கையில் வந்து வணங்கிச் செல்கின்றனர்.

வாழுங் காலத்திலேயே முத்துராமலிங்கத் தேவர் முக்குலத்தோரால் தெய்வமாக மதிக்கப்பட்டார். 1957 இல் முத்துராமலிங்கத் தேவர் தன் சட்டமன்றப் பதவி யைத் துறந்தார். அத்தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில், அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் சார்பில், முத்துராமலிங்கத் தேவரால், வேட்பாளராக நிறுத்தப்பட்ட சசிவர்ண தேவர் வெற்றி பெற்றார். தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டபின், ஒன்பது தாழ்த்தப் பட்டோர் கடத்தப்பட்டதாகப் பரவிய வதந்தியால் முக் குலத்தோருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் இடையில் கடுமையான மோதல்கள் நிகழ்ந்தன. இதில் தாழ்த் தப்பட்டோர் 42 பேர் கொல்லப்பட்டனர். இதன் விளை வாக நடந்த சமரசப் பேச்சு வார்த்தையில், முத்துராமலிங்கத் தேவருக்குச் சமமாக அமர்ந்து இம்மானுவேல் கலந்து கொண்டார். தனக்குச் சமமாகத் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இம்மானுவேல் அமர்ந்து பேசியதால் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடமாட்டேன் என்று முத்துராமலிங்கத் தேவர் சொன்னதாகக் கூறப்படுகிறது (ஃபிரண்ட் லைன், அக்டோபர் 7, 2011).

இந்த அமைதிப் பேச்சுவார்த்தை 1957 செப்டம்பர் 10 அன்று நடந்தது. தங்கள் தெய்வத் தலைவரின் மனம் வருந்தும்படியாக அவருக்குச் சரிநிகர் சமமாக அமர்ந்து பேசிய இம்மானுவேலை இனியும் உயிருடன் விட்டு வைக்கக்கூடாது என்று சாதி வெறியர் முடி வெடுத்தனர். எனவே அடுத்தநாள் - செப்டம்பர் 11 அன்று இரவு இம்மானுவேலுவை வெட்டிக் கொன்றனர்.

கடந்த அய்ந்தாண்டுகளாக, ஆண்டிற்காண்டு, செப்டம்பர் 11 அன்று இம்மானுவேல் நினைவிடத்தில் நடைபெறும் குருபூசையில் கலந்து கொள்வதற்காக வரும் தாழ்த்தப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டேயிருந்தது. இதை மேலும் வளரவிடாமல் தடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஆதிக்க சாதிவெறி யர்களிடம் இருந்தது. இந்நிலையில், மண்டலமாணிக்கம் என்ற ஊரில், முத்துராமலிங்கரை இழிவுபடுத்தும் வாசகங்கள் சுவரில் எழுதப்பட்டன. மண்டலமாணிக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பாச்சேரியில் உள்ள பள்ளர் (தேவேந்திரகுல வேளாளர்) சமூகத்தைச் சேர்ந்த - 12ஆம் வகுப்பு படிக்கும் பழனிகுமார் என்ற மாணவன் தான் இதை எழுதினான் என்று சாதிவெறிக் கும்பல் கருதியது. அதனால் 9.9.2011 அன்று பழனிகுமாரை வெட்டிக் கொன்றது.

இதனால் தாழ்த்தப்பட்ட மக்கள் மனம் கொதித்தனர். எனவே தாழ்த்தப்பட்ட மக்கள் செப்டம்பர் 11 அன்று குருபூசையில் கலந்துகொள்வதற்குக் காவல்துறை பல தடைகளை ஏற்படுத்தியது. தேவேந்திரகுல வேளாளர் (பள்ளர்) சமூகத்தின் அமைப்பான தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டிய னைப் பரமக்குடியில் இம்மானுவேல் நினைவிடத் திற்கு வரவிடாமல், தூத்துக்குடியிலேயே கைது செய்தனர். ஜான் பாண்டியனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி, பரமக்குடி அருகில், மதுரை-இராமநாதபுரம் நெடுஞ்சாலையில் அய்ந்து சந்திப்பில், தாழ்த்தப்பட்ட மக்கள் சாலை மறியல் செய்தனர்.

தலித் மாணவன் பழனிகுமார் படுகொலை, தியாகி இம்மானுவேல் குருபூசையில் கலந்து கொள்ளவிடா மல் ஜான் பாண்டியன் கைது ஆகியவற்றால் பாதிக்கப் பட்டிருந்த தாழ்த்தப்பட்ட மக்களின் உணர்வுகளைக் காவல்துறை அதிகாரிகள் புரிந்துகொள்ளத் தவறினார் கள். அதனால் காவல்துறையின் விதிகளை மதிக் காமல், காட்டுமிராண்டித் தனமாகக் காவல்துறை யினர் அங்கு கூடியிருந் தோர் மீது தாக்குதல் நடத் தினார்கள். காவல்துறை ஊர்திகள் எரிக்கப்பட்டன. காவல்துறையினரை நோக்கி கற்கள் வீசப் பட்டன; சில பெட்ரோல் கையெறி குண்டுகளும் எறியப்பட்டன. எனவே தற்காப்புக்காகக் காவல் துறையினர் துப்பாக்கியால் சுட நேரிட்டது என்று எல்லா ஆட்சியாளர்களையும் போலவே முதலமைச்சர் செயலலிதாவும் சட்டமன்றத்தில் கூறினார்.

ஆனால் காவல்துறையினர், மனித உயிர்க ளென்று மதிக்காமல், பழிவாங்கும் நோக்கத்துடன் மறியல் செய்த தாழ்த்தப்பட்ட மக்களைச் சுட்டனர். செயலலிதாவின் தோழி சசிகலா, முக்குலத்தோர் வகுப் பைச் சேர்ந்தவர் என்பதால், தமிழக முதல்வரின் ஆதரவும், பாதுகாப்பும், தமக்குக் கிடைக்கும் என்று காவல்துறை உயர் அதிகாரிகள் கருதியிருக்கக்கூடும் என்று அரசியல் ஆய்வாளர்கள் சிலர் கருதுகின்றனர். ஆயினும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், ஆளும் மேல்சாதி ஆதிக்க வர்க்கம், தாழ்த்தப்பட்டோர் எழுச்சி யை - போராட்டங்களை முளையிலேயே கிள்ளி எறிந்திட வேண்டும்; அவர்களுக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்ற சாதி ஆணவத்துடனேயே செயல்படுகிறது. அதனால்தான் அதேநாளில், மதுரை சிந்தாமணியில் ஜான் பாண்டியன் கைது செய்யப் பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் மீது காவல்துறை சுட்டதில் இருவர் படுகாயம் அடைந்தனர்.

காவல்துறை சுட்டதில், ஆர். கணேசன் (65), டி. பன்னீர்செல்வம் (50), பி. ஜெயபால் (20), எஸ். வெள்ளைச்சாமி (65), தீர்த்தகனி (25), முத்துகுமார் (26) ஆகியோர் மாண்டனர். இவர்கள் அனைவரும் கூலித் தொழிலாளர்கள். இவர்களின் இடுப்புக்கு மேல் பகுதியில் குண்டு பாய்ந்து இறந்துள்ளனர். காவல் துறையின் தடியடியாலும் துப்பாக்கிச் சூட்டினாலும் காயமடைந்தவர்களைக் காவல்துறை கைது செய்து மீண்டும் அவர்களைக் கொடுமைபடுத்தியது. ஓராயிரம் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது, கொலை முயற்சி, கொடிய ஆயுதங்களைக் கொண்டு தாக்கியது. வெடிகுண்டு வைத்திருந்தது, என்று பல்வேறு கொடிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற நீதிபதி கே. சம்பத் தலைமையில் பரமக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து ஆராய விசாரணை ஆணையத்தைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒரு இலட்சம் இழப்பீடு தொகை அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

புரட்சியாளர் அம்பேத்கர் 1945இல் எழுதிய “காங்கிரசும், காந்தியும் தீண்டப்படாத மக்களுக்குச் செய்தது என்ன?” என்ற நூலில், “இன்னொரு வாதம் சில நேரம் முன்வைக்கப்படுகிறது. இந்த வாதத்தின் அடிப்படை என்னவென்றால், தீண்டாமை மறைந்து போய்க் கொண்டிருக்கிற ஒன்றாம். இது வாதமே அல்ல. ஆனால் சிலர் இந்த வாதத்தினால் ஈர்க்கப்பட லாம் என்பதால் அதனை அம்பலப்படுத்த விரும்புகிறேன்”.

“இந்த வாதத்தை எழுப்புகிறவர்கள், ‘என்னைத் தொடாதே’ என்ற முறையிலான தீண்டாமைக்கும், சமூகப் பாகுபாட்டில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் மனப்போக்கு என்ற முறையிலான தீண்டாமைக்கும் இடையில் வேறுபடுத்திப் பார்ப்பதாகத் தெரியவில்லை. இரண்டும் அறவே வெவ்வேறானவை. ‘என்னைத் தொடாதே’ என்ற முறையிலான தீண்டாமை நகரங் களில் பைய்யப் பைய மறைந்து கொண்டிருக்கலாம்; ஆயினும் அது குறிப்பிடத்தக்க அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதா என்பது பற்றி எனக்குச் சந்தேக மே! ஆனால் தீண்டப்படாத மக்களுக்கு எதிராகப் பாகு பாடு காட்ட வேண்டும் என்ற அளவில் இந்துக்களிடம் ஒரு மனப்போக்காக இருக்கிற தீண்டாமையானது, கற்பனைக் கெட்டக்கூடிய காலத்திற்குள் நகரங்களி லோ, கிராமங் களிலோ மறைந்து போகாது என்று நான் உறுதியாகக் கருதுகிறேன்” என்று தெள்ளத் தெளிவாக விளக்கியி ருக்கிறார்.

சாதி இந்துக்கள் எல்லோரும் பார்ப்பானைப் பிறவியிலேயே உயர்ந்தவன் என்று ஏற்றுக்கொள்கின்றனர். அதேசமயம் தாழ்த்தப்பட்டவர்களைப் பிறவியிலேயே இழிந்தவர்கள் என்றுதான் கருதுகின்றனர். இந்த இரண்டு எதிர்நிலைகளைத் தகர்க்காத வரையில், சாதி ஒழிப்பில் ஒரு தப்படிகூட எடுத்து வைக்க முடியாது.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்ட வேண்டும் என்று இந்துக்களிடம் ஒரு மனப்போக்காக இருக்கின்ற தீண்டாமைதான், 1957இல் முதுகுளத் தூரில், 1967இல் கீழ்வெண்மணியில் சாதிவெறியர் கள் தலித்துகளைக் கொல்வதற்குக் காரணமாக இருந்தது. அது பரமக்குடி வரை தொடர்ந்து நீண்டு கொண்டே இருக்கிறது.

இப்போது உள்ளாட்சிக்கான தேர்தல்கள் அறிவிக் கப்பட்டு உள்ளன. மேலவளவுத் தாழ்த்தப்பட்ட உள்ளாட்சி மன்றத் தலைவர் முருகேசன் படுகொலை, பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டகச்சி யேந்தல் ஆகிய ஊராட்சி மன்றத் தேர்தல்களில் தலித் துகள் தலைவராகப் பதவி ஏற்க விடாமல் தடுத்தது போன்ற கொடுமைகள் பல்வேறு வடிவங்களில் தொடர் கின்றன.

நெல்லை மாவட்டம் தாழையூத்து ஊராட்சித் தலை வராக மிகுந்த நேர்மையுடன் திறம்பட செயல்பட்ட அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்த கிருஷ்ணவேணி 13.6.2011 அன்று கொடுமையாகத் தாக்கப்பட்டார். இதற்குமுன் நெல்லை மாவட்டத்தில் நக்கலமுத்தன் பட்டி ஊராட்சித் தலைவராக இருந்த ஜக்கையனும், மருதன்கிணறு ஊராட்சித் தலைவராக இருந்த சரவணனும் சாதிவெறியர்களால் கொல்லப்பட்டனர். இவ்விருவரும் அருந்ததியர் வகுப்பினர்.

தலித் மக்கள், எழுச்சி பெற்று சம உரிமைக்காகப் போராடுவதைச் சாதி இந்துக்கள் ஒடுக்க முனைகின்ற னர். சமூகம், கல்வி, பொருளியல், வாழ்க்கைத் தர நிலைகளில் தாழ்த்தப்பட்ட மக்களின் வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாத சாதிவெறியர்கள், தாக்கு தலில் ஈடுபடுகின்றனர். மராட்டியத்தில் கயர்லாஞ்சில் இதன் அடிப்படையில்தான் போட்மாங்கே குடும்பம் கொடிய முறையில் கொலை செய்யப்பட்டது.

இறுக்கமாக இன்றளவும் நீடிக்கின்ற சாதிய அமைப்பைத் தகர்த்திட வேண்டும். தந்தை பெரியாரும், டாக்டர் அம்பேத்கரும் விரும்பியது போல, சூத்திர உழைப்புச் சாதிகளில் உள்ள மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களும், வர்க்க நிலையில் தாம் ஒன்றே என்ற நிலையை உணர்ந்து, சாதி உணர்வைக் கடந்து தங்கள் விடுதலைக்காக ஒன்றிணைந்து போராட வேண்டும்.

தலித்துகளை முன்னிலைப்படுத்தி ஒன்றிணைக்காத எந்தவொரு மக்கள் புரட்சியும் வெற்றி பெறாது. அதேபோல் சாதி இந்துக்களில் உள்ள முற்போக்குச் சக்திகளின் ஆதரவுடன் நடைபெறாத எந்தவொரு தலித் புரட்சியும் வெற்றி பெறாது.