உலக அளவில் இயற்கை வளங்கள் அனைத்தும் தனிப்பெரும் முதலாளிய வர்க்கத்தின் லாப வெறிக்காக சூறையாடப்படுகிற சூழ்நிலையில், குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளின் இயற்கை வளங்கள் கட்டுப்பாடினின்றி சூறையாடப்பட்டு, அந்நாட்டு மக்களின் வாழ்வாதாரங்கள் கேள்விக்குறியாகி கொண்டிருக்கின்றன. நீர், நிலம், வனம், கடல், காற்று என அனைத்து வளங்களும் முதலாளிய வர்க்கத்த்தின் நலனுக்காக பாழ்ப்படுத்தப்பட்டுள்ளன. இயற்கை வளங்களைத் தங்கள் தேவையின் பொருட்டு உரிமையோடு அனுபவித்து வந்த மக்களுக்கு அவ்வளங்கள் அனைத்தும் சந்தை பண்டங்களாக மாற்றப்பட்டு, பணமுள்ளவருக்கே இவ்வுலகில் வாழும் உரிமையுள்ளது எனவும், முதலாளிகளின் சந்தை பொருளை வாங்க வசதியற்ற மக்கள் வாழ லாய்க்கற்றவர்கள் என்கிற மானிட குலத்திற்கு எதிரான போக்கை அடைந்திருக்கிறோம். இயற்கை வளங்கள் மீதும் பன்னெடுங்காலமாக உழைக்கும் மக்கள் கொண்டிருந்த பன்மயப்பட்ட பண்பாட்டு உற்பத்தி உறவை வளர்ச்சி என்ற வசிய சொல்லலால் அறுத்தெறிந்து, பணமிருப்பவருக்கே வாழும் உரிமை ஒற்றை பண்பாட்டை உலகம் முழுக்க உருவாக்கி லாபவெறியில் கொழிக்கிறது ஏகபோக முதலாளிய வர்க்கம். வளர்ச்சி என்பது எந்த வர்க்கத்திற்க்கானது? வளர்ச்சி என்ற பெயரில் தமிழக சூழலில் நாம் சந்தித்த பேரிழப்புகள் என்ன? இயற்கை வளங்களின் மூல ஆதாரமான நீர் மீது தமிழர்கள் கொண்டிருந்த பன்மயப்பட்ட பண்பாட்டு உற்பத்தி உறவுகள் என்ன? மூலதன குவிலுக்கான போட்டியில் தமிழக பூர்வக்குடிகளின் நீராதாரங்கள் மீதும் நீராதாரங்கள் மேல் உரிமை பாராட்டும் எளிய மக்கள் மீதும் முதலாளிய நலன் பேணும் அரசுகள் நிகழ்த்திய வன்முறை என்ன என்பதை அணுகுவதுதான் இத்தொடரின் நோக்கமாக இருக்க முடியும்.

kallanai 640சூழலியல் சிக்கல் என்பது ஏதோ தனித்த ஒரு சிக்கலோ, அதற்கென்று தனித்த தீர்வோ ஏதுமில்லை. அரசியல், பொருளாதாரம், சமூக நிலை, கல்வி, பாலினம், சூழலியல் என அனைத்தின் மீதும் தீர்க்கமான தத்துவார்த்த கொள்கைகளைக் கொண்ட உழைக்கும் மக்களுக்கான இறையாண்மை கொண்ட சனநாயக குடியரசை அமைப்பதே இங்கு நிலவுகிற எல்லாவித சிக்கல்களுக்கும் தீர்வு காணுகிற முதல்படியாக இருக்க முடியும்.

ஆறும் பேரும்:

ஆறு என்பது இயற்கையாகச் செல்லும் நன்னீரைக் கொண்ட ஒரு பெரிய நீரோட்டம் ஆகும். ஆறுகள் பொதுவாக மலைப் பகுதிகளில் தொடங்குகின்றன. உற்பத்தியாகி சிறு தொலைவிலேயே ஆவியாகி அல்லது வறண்டு போகும் ஆறு சிற்றாறு. மழை காலத்தில் திடீரென ஒருசில நாட்கள் மட்டும் ஓடும் ஆறு காட்டாறு ஆகும். ஆற்றில் நீரோட்டமானது புவியீர்ப்பு விசையின் காரணமாக ஏற்படுகிறது. சில வேளைகளில் ஆறுகள் இன்னொரு நீர்நிலையை அடையும் முன்பே நிலத்துக்குள் உறிஞ்சப்படுவதோ அல்லது வறண்டு விடுவதோ உண்டு. பெரிய நீரோட்டங்கள் ஆறுகள் என்றும் சிறியவை சிற்றாறுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. எனினும் எதனை ஆறு என்று அழைக்கலாம் என்பதற்கான பொது விதி எதுவும் கிடையாது. மலைக்காடுகளில் இருந்தோ, ஊற்றுக்களில் இருந்தோ, ஏரிகளில் இருந்தோ, மலை பனிக்கட்டிகள் உருகுவதன் மூலமோ, மழை நீர் வழிந்தோடுவதனாலோ அல்லது வேறு பல வழிகளிலோ ஆறுகள் உருவாகக் கூடும். மலைக்காடுகளில் அல்லது பனிமலை உருகி என தனக்கென ஒரு உற்பத்தியிடம் அல்லது பிறப்பிடம் கொண்ட ஒரு ஆறு கடலில் சென்று கலக்கிறது. அவ்வாறு தானாக தோன்றும் ஒரு ஆறு மற்றொரு ஆற்றுடன் கலந்தால் அதை துணையாறு (Tributary) என்பர். நிலமைப்புக்கு ஏற்றவாறு ஒரு ஆற்றிலிருந்து தனியாக அல்லது கிளையாக பிரிந்து பயணிக்கும் ஆற்றை கிளையாறு (Distributary) என்பர். ஆண்டுமுழுதும் நீரோடும் ஆற்றை வற்றாத ஆறு (perennial river) என்றும், சில காலங்கள் மட்டும் நீர் ஓடும் ஆற்றை பருவக் கால ஆறு (Non-perennial river) என்றும் கூறுவார். தமிழக மரபில் இயற்கையாக உற்பத்தியாகி ஓடும் நீரை பேரியாறு. சிற்றாறு, காட்டாறு, ஓடை, ஊற்று, என வகைப்படுத்தி அழைப்பது வழக்கம்.

ஆறும் நதியும் ஒரே பொருளை தருபவையா? பிற்கால இலக்கிய நூல்களில் நதியென்ற சொல் ஆளப்படுகிறது. நதியும் ஆறும் ஒரே பொருளை தருபவை என்ற கருத்துக்கு ஐயமூட்டம் விதமாக "நதியாறு கடந்து நடந்துடனே" (கலிங்கத்துப்பரணி 367) என்ற சொல்லாட்சியை ஜெயங்கொண்டார் கலிங்கத்துபரணியில் பயன்படுகிறார். 'நிலத்தை நீரால் அறுத்துக்கொண்டு ஓடுவதால் அப்பெயர் பெற்றது. நிலத்தைப் பிரிக்குமளவுக்கு ஓடுகின்ற நீர்ப்பாய்வுகள் அனைத்துமே ஆறுகள்தாம். ஆறு நிலத்தை அறுத்து நிற்றலால் அதைக் கடக்க நீங்கள் பரிசல், படகு, ஓடம் போன்றவற்றை நாடவேண்டும். இறங்கிக் கடக்குமளவுக்கு ஓடும் நீர்வழி ஆறு ஆகாது. அவை ஓடைகள். நதி என்பது மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாய்கின்ற ஆறுகளை மட்டுமே குறிக்கும். நம் புவியியற்படி மேற்குத் தொடர்மலையில் தோன்றும் ஆறுகள் பலவும் கிழக்கே வங்கக்கடல் நோக்கிப் பாய்கின்றன. அவ்வாறுகள்தாம் நதிகள் என்று வழங்கப்படும். கிழக்கில் தோன்றி மேற்கு நோக்கிப் பாயும் ஆறு ‘நதம்’ எனப்படும். ஆனால், வழக்கில் ஆற்றுக்கு மாற்றுச்சொல்லாக எல்லாவற்றையும் நதி என்றே வழங்குகிறோம்' என கவிஞர் மகுடேஸ்வரன் கூறுகிறார்.

கன்னியாகுமரி கோதை ஆறு முதல் சென்னை ஆரணி ஆறு வரை தமிழகத்தில் சிறிதும் பெரிதுமாக 33 ஆற்றுப்படுகைகள் உள்ளது என பொதுப்பணித்துறை புள்ளிவிபரம் சொல்லுகிறது. சர்வதேச விதியின்படி 80 கி.மீ அதிகமான நீளமுடைய ஆறுகளைத் தான் ஆறு என்று கணக்கிடுவார்கள். கால்வாய் மற்றும் வாய்க்கால் மனிதனால் கட்டப்பட்டது அல்லது வெட்டப்பட்டது.

ஆறுகளுக்கு பெயரிட்ட பன்டைய மக்கள் ஆற்று நீரின் தன்மை, அது உற்பத்தியாகுமிடம், நிலம், அது கலக்குமிடம், அது செல்லும் ஊர் பெயர்கள் ஆகியவற்றை கொண்டு பெயரிட்டுள்ளனர். சில ஆறுகளுக்கு பெண்பால் பெயர் சூட்டியுள்ளனர்.

குடகு நாட்டு மலை சங்ககாலத்தில் பொன்படு நெடுவரை என்று போற்றப்பட்டது (ஆவூர் மூலங்கிழார் - புறநானூறு 166). பொன் போலத் தோன்றும் மலை என்பது பொருள். பொன்படு நெடுவரையில் தோன்றிப் பாய்வதால் காவிரி ஆற்றிற்கு பொன்னியாறு என்றும் பெயரிட்டனர். பால் போன்ற வெண்ணிறமுடைய நீரோடுவதால் பாலாறு என்று பெயரிட்டுள்ளனர். நொய்யல் என்கிற ஊர் அருகே பொன்னியாற்றில் கலக்கும் ஆற்றை நொய்யல் என்று பெயரிட்டுள்ளனர். வேம்பாறு கடலில் கலக்குமிடத்து உள்ள ஊர் வேம்பாறு. அடையாறு கடலில் கலக்குமிடத்தில் உள்ள ஊரின் பெயர் அடையாறு. இந்த ஊரில் பாய்வதால் ஆறு இப்பெயர் பெற்றதா அல்லது இந்த ஆறு பாய்வதால் இந்த ஊர் இப்பெயர் பெற்றதா என்பது ஆய்வுக்குரியதே.

ஒரே ஆற்றுக்கு அது பாயுமிடத்திற்கு ஏற்ப வெவ்வேறு பெயர்களை சூட்டும் வழக்கமும் உண்டு. ஒரே ஆற்றுக்கு பல்வேறு பெயர்கள் தமிழக மக்கள் வழங்கியிருக்கிறார்கள். மதுரை அழகர்மலையில் உற்பத்தியாகும் உப்பாறு வெவ்வேறு பெயர்களால் அது செல்லும் ஊர்களின் பெயராலோ அல்லது வேறு பெயர்களாலோ அழைக்கப்படுகிறது. அதனை சிலம்பாத்தோடை, பதினெட்டங்குடி ஓடை, உப்பாறு என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. அதே போல மதுரை திருமங்கலம் பகுதியில் பாயும் குண்டாறுக்கு, தெற்காறு , மலட்டாறு என்று செல்லுமிடம் பொறுத்து மக்களால் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. உப்பாறு, பொருநை / பொருந்தல், மணிமுத்தாறு, பாலாறு, குண்டாறு, மலையாறு, மஞ்சளாறு, வெள்ளாறு, சிற்றாறு என்ற பெயர்களை கொண்ட ஆறுகளை தமிழகத்தில் பல இடங்களில் பார்க்கலாம். திருநெல்வேலி மற்றும் மதுரையில் பாயும் இரு வேறு ஆறுகளுக்கு குண்டாறு என ஒரே பெயரை சூட்டியுள்ளனர். அமராவதிக்கும் தாமிரபரணிக்கும் சங்க இலக்கியம் பொருநை என குறிப்பதையும் காண முடிகிறது.

ஒன்றை ஆக்கவோ அழிக்கவோ அல்லது வசப்படுத்தவோ எத்தனிக்கும் போது முதலில் அப்பொருளின் பெயரை மாற்றுவதில் இருந்து துவங்க வேண்டுமென சொல்வார்கள். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஆறுகளின் தமிழ் பெயர்கள் சமஸ்கிரதமயபடுத்தபட்டுள்ளதை நாம் பரவலாக பார்க்க முடியும். காவிரி ஆறு உற்பத்தியாகும் குடகு நாட்டு மலை சங்ககாலத்தில் பொன்படு நெடுவரை என்று போற்றப்பட்டது (ஆவூர் மூலங்கிழார் - புறநானூறு 166 ). பொன் போலத் தோன்றும் மலை என்பது பொருள். பொன்படு நெடுவரையில் தோன்றிப் பாய்வதால் காவிரியாற்றை பொன்னியாறு என்றும் கூறுவர். காவிரி என்ற சொல்லின் பொருள் 'தோட்டங்களின் வழியாகப் பாய்ந்து வருவது' என்பதாகும். இதன் வடமொழி வடிவம் காவேரி ஆகும். தற்போது தாமிரவருணி என்று அழைக்கப்பெறும் ஆற்றின் தமிழ் பெயர் பொருநை என்பதாகும். இந்த ஆற்றை வடமொழி மகாபாரதமும், வால்மீகி ராமாயணமும் தாமிரபரணி என்றே குறிக்கிறது.

காவிரியின் துணையாறான அமராவதி ஆற்றின் பண்டைய பெயர் ஆன்பொருனை என்பதாகும். கொடைக்கானல் மலைப்பகுதியை பழனி மலைத்தொடர் என்று அழைப்பர். அம்மலையில் உற்பத்தியாகும் ஆறு பழனியாறு. காலப்போக்கில் அதை பன்னியாறு என்று மருவி, சமஸ்கிரப்படுத்தும் போது அதை வராகநதி என்று மாற்றிவிட்டனர். மதுரை அழகர்மலையில் உற்பத்தியாகும் சிலம்பாறு நூபுர கங்கை என்று சமஸ்கிரத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அசுவமா நதி, கமண்டல நதி, அர்ஜுனா நதி, வசிட்டா நதி, சண்முகா நதி, கொசஸ்தலை நதி என்று சமஸ்கிரதமயப்படுத்தப்பட்ட ஆறுகளின் பெயர்களை அடுக்கிக் கொண்டே போகலாம். பல ஆறுகளின் பழைய தமிழ் வழக்கு பெயர்களை மக்களே மறந்துவிட்டனர். ஆறுகளை மீட்டெடுப்பது என்பது இழந்த அதன் இயற்கை சூழலை மட்டுமல்ல. அதன் வரலாற்றையும்தான்.அடுத்த சந்திப்பில் சங்க இலக்கியம் காட்டும் ஆறுகள் குறித்து பேசுவோம்.

- தமிழ்தாசன்

Pin It