பொறிபறக்க வில்லையா தமிழா! உன்நெஞ்சில்?
பொதுவென இந்தியைத் திணித்தால் இடியாய்த் தாக்கு.
வெறிபிடித்த பா.ச.க.வின் அதிகாரத்தால்
வெந்தணலே வயிற்றை வறுக்குமடா! நீயும்
நெறிபிடித்துப் பொறுத்தது போதுமடா! போடா
‘நீயா? நானா?’ என அறைகூவல் சாற்று.
மறிகடல்முன் ஒருகால்வாய் பெருமைபேச
மறத்தமிழர் விட்டுவைத்தால் வெட்கக்கேடு.

வாய்செத்த சமற்கிருதம் உயிர்பிழைக்க
வழிபலவாய், செயற்கைமூச்சு புகுத்துகின்றார்.
நாய்விற்ற பணம் குரைக்கும் காலம் இஃது
நயவஞ்சப் பாடமாக்கும் முயற்சி தூள்செய்.
தாய்பெற்ற தென்தமிழர், ‘வேடிக்கையாய்த்
தலைமாற்றும் மோடிமத்தான் வித்தை’ ஏற்கார்.
நோய்விற்றால் அதை வாங்கல் அருவருப்பாம்.
நோய்த்தொற்றுப் பரவாமல் விரட்ட வாடா!

போர்க்களத்தில் பாடமெடுத்த கண்ணன் கீதை
பொறியியற் களவகுப்பில் பாடம் ஏனோ?
‘நேர்ப்பாதையும் நெருஞ்சிமுள் பாதையும்
நேர்ச்சியும் (விபத்தும்) நானே’ என்று ஏய்ப்பதற்கோ?
சீர்மறையாய்ப் புவிபோற்றும் திருக்குறள் நம்
திருநாட்டின் நூலாக விடா வன்னெஞ்சர்
நார்நாராய்க் கிழிந்து மண்ணில் மக்கிப்போன
மனுநீதி மீட்டெடுத்துப் புணர வைப்பார்.

கீழடியின் அகழ்வாய்வில் புதுவெளிச்சம்,
சீரடிவைத்த தமிழ்நாகரித் தொன்மை,
வாழ்வடியைக் கி.மு.வுக்கே நடத்திச் செல்லும்.
வழுவடியாய் வரலாற்றை மறைக்க மாற்றார்
காழடியாய் வாயடியாய்க் கையடி செய்தால்
கழிநெடில் தடியால் அடிவாங்குவாரே.
தாழடியால் (தாழ்ப்பாளால்) மறைக்க முடியாப்போது
தமிழடிச்சீர் பாரதச் சீரடியாம்; வெட்கம்!

உமிழுமெச்சில் கூடத் தமிழ்முழங்கும்.
உரப்புலியின் கூட்டமடா தமிழர்கூட்டம்.
குமிழிகூடத் தமிழ்குடித்தால் நிலைத்து வாழும்.
கோடித் தலைமுறை ஆண்மை காட்டும் கூட்டம்.
சுமைக்கோடி தாங்குவோம் என்பதனால் நாங்கள்
சுடுகாடு சுமக்கநீ தருவாய் ‘சும்மாடு’.
இமயமலைப் பெருங்கொழுப்பா உனக்கு? தென்றல்
எழும்பொதிகைத் தமிழடித்தால் பிழைக்க மாட்டாய்.

- பேராசிரியர் இரா.சோதிவாணன்

Pin It