படித்துப் பாருங்களேன்...

முனைவர் பழ.கோமதிநாயகம் எழுதிய 'நீரின்றி அமையாது நிலவளம்' (2013), 'தாமிரவருணி - சமூக பொருளியல் மாற்றங்கள்', பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை

pazha gomathinayagam book 1மனித குலத்திற்கு இயற்கை வழங்கிய ஓர் அடிப்படையான பொருள் தண்ணீர். பயிர்வளம், இயற்கைவளம், விலங்குவளம் என்பனவற்றைச் செழிக்கச் செய்வதுடன் மனிதனின் அன்றாடத் தேவையில் தவிர்க்க இயலாத ஒன்றாகத் தண்ணீர் இடம் பெற்றுள்ளது.

மழையின் வாயிலாகவும், ஆறுகளில் இருந்தும், நிலத்தினுள் இருந்தும் மனித சமூகம் நீரைப் பெற்று வருகிறது. ஆனால் இது திடீரென்று நிகழவில்லை. தொடக்கத்தில் இயற்கையாக ஓடும் காட்டோடைகளில் இருந்தும், ஆறுகளில் இருந்தும் மட்டுமே மனித சமூகம் தண்ணீரைப் பெற்று வந்தது. நீரைத் தேக்கிவைக்கவும், திசை திருப்பவும், பூமியின் உள்ளே இருந்து வெளிக் கொணரவும் படிப்படியாகக் கற்றறிந்தபோதுதான் மனிதசமூகம் வளர்ச்சி பெற்றது. இம்முயற்சியில் ஏற்பட்ட வெற்றியே அச்சமூகத்தின் முன்னேற்றத்தை முடிவு செய்தது. அத்துடன் அதன் நாகரிகம் பண்பாடு என்பனவற்றை வளர்த்தெடுத்தது.

உலகின் தொன்மையான நாகரிகங்கள் ஆற்றங்கரை நாகரிகங்களாகவே இருந்துள்ளன. தமிழகமும் இதற்கு விதிவிலக்கல்ல. பரிபாடலில் வையை ஆறும், சிலப்பதி காரத்தில் காவிரி ஆறும் அழகுற இடம்பெற்றுள்ளன. ‘கான்யாறு’ ‘விரிபுனல்’ என்று ஆறுகளுக்குப் பெயரிட்டனர். தன்போக்கில் ஓடிக்கொண்டிருக்கும் நீரைத் தேக்கி வைக்கும் முறை தமிழக வரலாற்றில் பழமையான ஒன்று. இத்தகைய நீர்நிலைகள், குளம், இலஞ்சி, பொய்கை, ஏரி, வாவி, கூவல், குழி எனப் பல்வேறு பெயர்களில் பண்டைத் தமிழர்கள் அழைத் துள்ளனர். கிணறு வெட்டுதல் தொடர்பான நூல் ‘கூவநூல்’ எனப்பட்டது. இந்நூல் வல்லோர் ‘கூவநூலோர்’ எனப்பட்டனர். வேளாண்மைப் பெருக்கத்திற்கு, காடுகளை அழிப்பதும் குளங்களை வெட்டுவதும் இன்றியமையாதன என்பதனைப் பண்டைத் தமிழர்கள் அறிந்திருந்தனர். இவ்வுண்மையை,

காடு கொன்று நாடாக்கி

குளம் தொட்டு வளம் பெருக்கி

என்ற பட்டினப்பாலைத் தொடர்களால் (283-284) அறியமுடிகிறது. மன்னனது கடமைகளுள் ஒன்றாக நீரைத் தேக்குவதும், திசை திருப்பலும் இடம்பெற்றன. குடபுலவியனார் என்ற கவிஞர்

நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு

உடம்பும் உயிரும் படைத் திசினோரே

என்று பாடியுள்ளார் (புறநானூறு : 18:22-23). நிலம் திருத்தி, நீரின் துணையால் வேளாண்மை செய்வோர் உயிரும், உடலும் படைத்துக்காப்போர் என்பதே இத்தொடரின் பொருளாகும்.

இத்தகைய வரலாற்றுத் தொன்மை கொண்ட தமிழர்களின் நீர்மேலாண்மை குறித்து வெளியான சில நூல்களை இத்தொடர் அறிமுகம் செய்கிறது. நூல்களின் நுவல்பொருள் பரந்துபட்டது என்பதால் இந்நூல்களின் செய்திகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

1. தொழில்நுட்பம் 2. நீர் உரிமை 3. நீராதாரங்களின் அழிவு

இங்கு அறிமுகம் செய்யும் நூல்கள் ஒவ்வொன்றிலும் இம்மூன்று செய்திகளும் இடம்பெறாவிட்டாலும் இவற்றுள் ஒன்றோ இரண்டோ இடம்பெற்றுள்ளன. இந்நூல்கள் அனைத்தையும் ஒருசேர படித்து முடிப்பின் தமிழகத்தின் நீர் மேலாண்மை குறித்த பரந்துபட்ட, ஆழமான வரலாற்றுச் செய்திகள் நமக்குக் கிட்டுவது உறுதி.

நூலாசிரியர்

இங்கு அறிமுகமாகும் இரு நூல்களின் ஆசிரியர் பழ.கோமதிநாயகம். நீரியல் - நீர்வளப் பொறியியலில் முதுநிலைப்பட்டமும், அமெரிக்காவின் கொலராடோ ஊட்டா பல்கலைக்கழகங்களில் நீர் மேலாண்மையிலும், கல்வி கற்பதிலும், சிறப்புப் பட்டயங்களும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். தமிழகத்தின் நீர்மேலாண்மை வரலாறு குறித்தும் சிக்கல்கள் குறித்தும் ஆங்கிலத்திலும் தமிழிலும் கட்டுரைகளும் நூல்களும் எழுதியுள்ளார்.

மன்னர்களும் நீர் மேலாண்மையும்

இந்தியாவை ஆட்சிபுரிந்த மன்னர்கள் நிதித்துறை, போர்த்துறை, நீர்ப்பாசனத்துறை என்ற மூன்று முக்கிய துறைகளைத் தம் பொறுப்பில் கொண்டிருந்ததாக, கார்ல்மார்க்ஸ் குறிப்பிடுவார். இவற்றுள் முதல் இரண்டு துறைகள் குறித்து எதிர்மறையான கருத்துக்களைக்  கூறும் அவர் நீர்ப்பாசனத்துறை குறித்து சிறப்பாக மதிப்பிட்டுள்ளார்.

மருதநில வேளாண்மை உருவான பின்னர் ‘இறை’ என்ற பெயரில் நிலவரி  வாங்கும் வழக்கம் பரவலானது. இதைப் பெற்றுக் கொள்ளும் மன்னன் தன் பங்கிற்கு நிலங்களுக்கு நீர் வழங்கும் கடமையைச் செய்ய வேண்டியிருந்தது.

இதன் அடிப்படையில் ஆறுகளின் கரைகளைப் பராமரித்தல், அணை கட்டல், வாய்க்கால் வெட்டல், ஏரி, குளங்கள் அமைத்தல் என்பன போன்ற செயல்களை மேற்கொண்டனர்.

இப்பணிகளின் ஊடாகத் தன்போக்கில் செல்லும் நீரைத் தம் விருப்பம்போல் தேக்கிவைக்கும், திசை திருப்பும், தொழில்நுட்பம் உருவானது.

தொல்லியல் சான்றுகள், கல்வெட்டுகள், இலக்கியங்கள் என்பனவற்றில் இது தொடர்பான செய்திகள் காணக்கிடைக்கின்றன. அத்துடன் அவர்கள் உருவாக்கிய நீர்நிலைகள் சில எஞ்சி நின்று நம் பார்வையில் படுகின்றன.

அணை கட்டுதல்

இயற்கையாகத் தன்போக்கில் ஓடி வரும் ஆற்று நீரைத் தடுத்து நிறுத்தி வைப்பதற்கும், அதைத் தாம் விரும்பும் பகுதிக்குக் கொண்டு செல்லவும் பயன்படும் அடிப்படையான தொழில்நுட்பம் அணைக்கட்டுதல் ஆகும்.

சங்ககாலத்திற்கு முந்தைய தொல்காப்பியத்திலும் (பொருள் 65-67) சங்க இலக்கியங்களில் ஒன்றான மதுரைக் காஞ்சியிலும் (725-726) ‘கற்சிறை’ என்ற பெயரில் அணைக்கட்டு குறிப்பிடப்பட்டுள்ளது. கற்களால் கட்டப்பட்டுள்ள பகுதியில் தண்ணீர் சிறைப்பட்டுள்ளதால் இப்பெயரை இட்டுள்ளனர். கற்சிறைகள் என்ற பெயரிலான தொன்மையான, அணைக்கட்டுகளில் இன்றும் நாம் காணக்கூடியதாக ‘கல்லணை’ அமைகிறது.

இது கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் கரிகால் சோழனால் மணற்பாங்கான காவிரி ஆற்றுப்படுகையில் கட்டப்பட்டுள்ளது. இது குறித்து,

மணற்பாங்கான  ஆற்றுப்படுகையில் அணைக் கட்டுகள் கட்டுவது எப்படி என்ற அறிவியல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில்தான் ஆங்கிலேயர்களுக்குத் தெரியவந்தது. பேயர்டு ஸ்மித் என்ற ஆங்கிலேயர் 1853-ஆம் ஆண்டில் கல்லணையைப் பொறியியல் சாதனை என்று குறிப்பிட்டுள்ளார்

என்று கூறும் கோமதிநாயகம், சர் ஆர்தர் காட்டன் என்ற ஆங்கிலப் பொறியாளர்தான் ‘மகத்தான அணை’ என்ற பொருளில் ‘கிராண்ட் அணைக்கட்டு’ என்ற பெயரை இட்டு அழைத்தார் என்று குறிப்பிட்டுள்ளதுடன் இக் கல்லணை குறித்து அவர் எழுதியுள்ள பின்வரும் பகுதியை மேற்கோளாகக் காட்டுகிறார்.

“ஆழம் காண இயலாத மணற்படுகையில் எப்படி அடித்தளம் அமைப்பது என்ற நுட்பத்தை இவர்களிட மிருந்து (கல்லணை கட்டியவர்களிடம்) தான் நாம் தெரிந்துகொண்டோம். இந்தப் பாடத்தைப் பயன் படுத்தி ஆற்றுப் பாலங்கள், அணைக்கட்டு போன்ற நீரியல் கட்டுமானங்களைக் கட்டினோம். எனவே, இந்த மகத்தான சாதனை புரிந்த பெயர் தெரியாத அந்நாளைய மக்களுக்கு நாம் பெரிதும் கடன்பட்டுள்ளோம்.’

இப்படி ஆறுகளில் அணைகட்டி அவற்றின் நீரைத் தேக்கி வைக்கும் தொழில்நுட்பம் மட்டுமின்றி தேக்கிய நீரை வெளியேற்றும் தொழில்நுட்பத்தையும், தழிழர்கள் பெற்றிருந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாசன வாய்க்கால்களில் ஒன்று பாண்டியன் கால். இதைப் பழுது பார்த்த ஹாரஸ்லி என்ற ஆங்கிலப் பொறியாளர் இது தொடர்பாகத் தெரிவித்துள்ள கருத்து வருமாறு:

"பாண்டியன் வாய்க்கால்  மற்றும் பத்மநாபபுரம் புத்தனாறு வாய்க்கால்களை ஆரம்பத்தில் உருவாக்கியவர்களின் வழியில் செல்வது  தொழில்நுட்பக் கண்ணோட்டத்தில் கலப்பில்லா மகிழ்ச்சியைத் தருகிறது. காரணம் இவர் களுடைய திறமையையும், மனித சக்தியையும் மீறிய விடாமுயற்சியும், காட்சியாக நன்கு பதிந்துள்ள தாலும், பாசனப் பொறியியல் கலையின் ஆசானாகவும் திறமையுள்ள மகத்தானவர்களாகவும் நான் கருதுகின்றவர்களின் அடிச்சுவட்டை ஒட்டி நான் அவ்வேலைகளைச் செய்வதில், போதுமென்ற மனநிறைவையும் முழுதிருப்தியும் அடைகிறேன்”.

இவ்வாறு அய்ரோப்பியப் பொறியாளர்களின் கூற்றுக்களை மேற்கோளாகக் காட்டுவதுடன் நின்று விடாமல் தமது அவதானிப்பையும் பின்வருமாறு பதிவு செய்துள்ளார்.

பண்டையத் தமிழர்கள் ஆற்றுநீரை விவசாயத் திற்குப் பயன்படுத்தத் திட்டங்கள் உருவாக்கும் பொழுது ஆற்றின் தனித்தன்மையான நில அமைப்பு, நீர்வளம் பற்றி நன்கு அறிந்திருந்ததால், அவர்களால் உருவாக்கப்பட்ட பாசனத் திட்டங்கள் பல நூற்றாண்டுகள் செயல்பட்டு வந்தன. மக்களும் அரசர்களும் அவற்றை ஈடுபாட்டுடன் பராமரித்தும் மேலான நிர்வாகமும் செய்து வந்தனர்

இத்துடன், தமிழக ஆறுகளின், காவிரி, பெண்ணை ஆறு, பாலாறு, வைகை, தாமிரவருணி ஆகிய ஆறுகள் வாயிலாக நிகழும் பாசனங்கள் குறித்து விளக்கியுள்ளார். ஒவ்வொரு ஆறும் தனக்கெனத் தனித்துவமான பாசன முறைகளைக் கொண்டிருப்பதை நாம் அறியமுடிகிறது.

·          காவிரி ஆற்றில், எல்லாக் காலத்திலும், நீர் கிடைத்து வந்தமையால் நேரடிப் பாசனமுறை நிலவியது.

·          பெண்ணை ஆற்றுப் பாசனப் பகுதி ஏரிப் பாசனமும், குறைந்த அளவு நேரடிப்பாசனமும் கொண்ட பகுதி. வெள்ளக்காலங்களில் மட்டுமே இதன் கிளை ஆறுகளில் நீர் செல்லும்

·          பாலாற்றுப் பாசனம், நேரடிப்பாசனமும், ஏரிப்பாசனமும் கொண்டது. ஆறாகவும் நீர்த்தேக்கமாகவும் அமைந்துள்ளது.

·          வடிநிலப்பகுதியில் பெய்யும் மழை அனைத் தையும் பயன்படுத்தும் வகையில் வாய்க்கால் களையும், ஏரிகளையும் கொண்டது வையை ஆற்றுப் பாசனப் பகுதி.

·          கால்வாய்கள் வாயிலாக நேரடிப் பாசனத் திற்கும், ஏரிகளுக்கும் நீரை வழங்கும் தன்மை கொண்டது தாமிரவருணி ஆற்றுப்பாசனம்.

இவ்வாறு மேற்கூறிய தமிழகத்தின் முக்கிய ஆறுகள் ஒவ்வொன்றும் தனக்கெனத் தனித்துவமான பாசன முறைகளைக் கொண்டிருந்தாலும் இவை அனைத்திற்கும் பொதுவான தொழில்நுட்பங்கள் உள்ளன. அவை வருமாறு:

1.         ஆற்றின் குறுக்கே நீர்த்தேக்கங்கள் கட்டப்பட வில்லை. அதற்குப் பதிலாக பல ஏரிகள் தேர்ந் தெடுக்கப்பட்ட சிறப்பான இடங்களில் தொடர் சங்கிலி அமைப்பில் உருவாக்கப் பட்டன. இவை ஒரு நீர்த்தேக்கத்தின் கொள்ளளவுக்குச் சமமாக பல இடங்களில் உள்ளன. இப்படி உருவாக்கப்பட்ட ஏரிகளை எளிதில் உள்ளூர் நிர்வாகம் என்கிற உயர்ந்த தத்துவத்தின்படி நிர்வாகம் செய்யப்பட்டன.

2.         ஆற்றிலிருந்து ஏரிகளுக்கு நீர் பெறுவதற்கு ஏற்படுத்தப்பட்ட வாய்க்கால்கள் சிறு ஆறு களைப் போன்று பெரியதாக இருந்ததால் ஆற்றின் நீர்வளத்தை அதிக அளவில் தேக்கி வைத்துப் பின் பயன்படுத்த முடிந்தது.

3.         மழைநீரை வடிநிலங்களிலிருந்து நேரடியாகப் பெறும் தொடர் சங்கிலி முறையில் அமைக்கப் பட்டுள்ளதால், வடிநிலப் பரப்பின் நீரை அதிக அளவில் சேகரிக்க முடிகிறது. இதனால் ஆறுகளில் ஏற்படும் வெள்ளம் மட்டுப்படுத்தப் படுகிறது.

4.         ஆற்றிலிருந்து ஏரிகளுக்கு நீர் எடுத்துச் செல்ல உருவாக்கப்பட்ட வாய்க்கால்களும், ஏரியிலிருந்து வயல்களுக்கு நீர் பகிர்ந்து கொடுக்கும் வாய்க்கால்களும் பாசன நீரை எடுத்துச் செல்வதுடன் வடிகால் நீரையும் மீண்டும் உபயோகப்படுத்தப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. (பக்கம். 54)

தமிழர்களின் தொழில்நுட்பம்

pazha gomathinayagam book 2ஆங்கிலக் காலனிய ஆட்சிக்குத் தமிழகம் ஆட்பட்டபோது, அவர்களும் சில புதிய அணைக் கட்டுக்களையும், கால்வாய்களையும் வெட்டினர். அவர்கள் கட்டிய பெரியாறு, மேட்டூர் அணைகளில், அணைகளின் மிகுதி நீர் வெளியேற தமிழர்களின் தொழில்நுட்ப அமைப்பான கலிங்கு போன்ற அமைப்பே உருவாக்கப்பட்டது. ஆங்கிலேயர்களின் வடிவமைப்பில் உருவான வாய்க்கால்கள் வழியாக வரும் நீரை நிலங்களுக்கு வழங்குவதில் தாமதம் ஏற்படும்.

‘பண்டையத் தமிழர்களால் உருவாக்கப்பட்ட வாய்க்கால்களின் வடிவமைப்பு, ஆங்கிலேயப் பொறியாளர்களின் வடிவமைப்பு முறையை விடச் சிறந்தது’ என்பது கோமதிநாயகத்தின் கருத்தாகும். தம் கருத்தை உறுதிப்படுத்தும் வகையில், ஒப்பீட்டு அடிப்படையிலான சான்றுகளைத் தந்துள்ளார்.

அதே நேரத்தில் ஆங்கிலேயர்களின் கட்டுமானத் தொழில்நுட்பச் சிறப்பை முற்றிலும் புறந்தள்ளவில்லை. “ஒரு வடிநிலப்பரப்பின் நீரை மற்றொரு வடிநிலப் பரப்புக்கு எடுத்துச் சென்று பாசனத்திற்கு உபயோகப் படுத்தும் திட்டங்களின் முன்னோடியாக” ஆங்கிலேயர் கட்டிய பெரியாறு அணை உலக அரங்கில் இருப்பதாக அவர் குறிப்பிடுகிறார்.

இதுபோன்று மேட்டூர் அணையானது அது கட்டப்பட்ட காலத்தில் ஆசியக் கண்டத்தில் பெரிய நீர்த்தேக்கமாக இருந்துள்ளது என்றும் குறிப்பிடுகிறார். நீர்த்தேக்கங்கள் கட்டும் வல்லமை பண்டைத் தமிழர் களிடம் இல்லை என்பதும் அவரது கருத்தாகும். தமிழர் களின் அணைக்கட்டுத் திறன் தொடர்பாக ஆசிரியர் கூறும் கருத்துக்கள் வருமாறு:

ஆறுகளின் நீரோட்டம் குறைவாக இருக்கும் காலங்களில், ஆற்றில் மூங்கில், மரக்கொம்பு, நட்டுவித்து, குறுக்கே கட்டி, அதன் முன் இலை, தழை, கற்கள், களிமண், மணல் கொண்டு தடுப்புகள் ஏற்படுத்தி ஆற்றின் நீரை உயர்த்தி வாய்க்கால்களில் அதிக அளவில் செல்லுமாறு செய்து வந்தனர். அவை தற்காலிகமானவை. அதிகம் நீர் வந்தால் அவை உடைந்துவிடும். மீண்டும் மீண்டும் அவை அமைக்கப்பட்டன. இவற்றைக் கொரம்பு என்றழைப்பர். இம் முறையில் அதிகச் செலவும், உழைப்பும் தேவைப்பட்டாலும் இதிலுள்ள தொழில் நுட்பமானது. ஆற்றிலும் வாய்க்காலிலும் மணலைத் தேங்கி நிற்கச் செய்யாது.

தாமிரவருணி  ஆற்றில் எட்டு அணைக்கட்டுகள் பாண்டிய மன்னர்களாலும், நாயக்க மன்னர் களாலும் உயர்ந்த தொழில்நுட்பத்துடன் கட்டப் பட்டுள்ளன. அவற்றுக்கு முன்னால் மணல் சேருவதில்லை. ஆனால், ஆங்கிலேயர்களால் தென்பெண்ணையாற்றின் குறுக்கே திருக் கோவிலூர் அணைக்கட்டும், பாலாற்றின் குறுக்கே பாலாறு அணைக்கட்டும் கட்டப் பட்டன. அவற்றின் முன்னால் மணல் சேர்ந்து இருப்பதைக் காணலாம்.

இதன் தொடர்ச்சியாக தாமிரவருணி ஆற்றில் கட்டப்பட்டுள்ள, கன்னடியன் அணைக்கட்டு, மருதூர் அணைக்கட்டு, திருவைகுண்டம் அணைக்கட்டு ஆகிய மூன்று அணைக்கட்டுகளின் தொழில்நுட்பம் குறித்து விளக்கிச் செல்கிறார். அதன் ஒருபகுதி வருமாறு:

மருதூர் அணைக்கட்டு தொழில்நுட்பரீதியாக உயர்ந்த நிலையில் உள்ளது. ஆனால், ஆங்கிலேயர் களால் உருவாக்கப்பட்ட ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு தொழில்நுட்பக் குறைபாட்டுடன் கட்டப்பட்டுள்ளது. மருதூர் அணைக்கட்டின் தொழில்நுட்பத்தின் அடிப் படையில், பிரான்ஸ் நாட்டின் இருபதாம் நூற்றாண்டின் இறுதியில், ‘வாத்து மூக்கு அணைக்கட்டுகள்’ என்ற சிறிய அணைக்கட்டுகள், வாய்க்கால்களின் நீர் மட்டத்தை உயர்த்தக் கட்டப்பட்டன. இருபதாம் நூற்றாண்டின் மேலைநாட்டினரால் அறியப்பட்ட தொழில்நுட்பம், பண்டைய தமிழர்களால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கடைப்பிடிக்கப்பட்டது தான் என்பது தமிழர்கள் பெருமைப்படத்தக்கது.

இருபத்தொன்பது கட்டுரைகளின் தொகுப்பாக அமைந்துள்ள இந்நூல் தமிழர்களின் நீர்மேலாண்மை குறித்த ஆழமான செய்திகளுடன் நம் கால அவல நிலையையும் ஆங்காங்கே கூறிச் செல்கிறது.

···

மேற்கூறிய நூல் பொதுவான செய்திகளைக் கூற இரண்டாவது நூல் தாமிரவருணி ஆற்றை மட்டுமே மையமாகக் கொண்டது (Conflicts Over Water Resources: A Caste Study From the Thamiravaruni Basin in Tamil Nadu)இது. (“நீர் ஆதாரங்களுக்கான மோதல்கள்: தாமிரவருணிப் படுகையை முன்வைத்து”) என்ற தலைப்பிலான அவரது முனைவர் பட்ட ஆய்வேட்டின் தமிழ் வடிவமாகும். இதழியலாளர் திரு. எம். பாண்டிய ராஜன், வாசிப்புத்தன்மை குன்றாது இதனை மொழி பெயர்த்துள்ளார்.

இந்நூலின் உள்ளடக்கம் குறித்து,   

தாமிரவருணியைச் சார்ந்து 60 ஆண்டுகளில் ஏராளமான சமூக-பொருளியல்-அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல, தாமிரவருணி நெடுகிலும் தலைமடை, நடுமடை, கடைமடைப் பகுதிகளில் ஆய்வுக் கிராமங்களைத் தெரிவு செய்து மாற்றங்களை மிகத் துல்லியமாக மதிப்பிட்டுள்ளார் முனைவர். பழ. கோமதி நாயகம்.

சாதி சார்ந்து தாமிரவருணி தண்ணீருக்காக நடந்த விஷயங்களும் மாற்றங்களும் அலசப்பட்டுள்ளன.

என்கிறார் பாண்டியராஜன். தாமிரவருணி ஆற்றை மையமாகக்கொண்டு நடைபெற்ற பொருளியல் மாற்றங் களையும், மேம்பாட்டையும் இந்நூல் ஆராய்கிறது. ஆய்வுக்கு உதவும் முறையில் தாமிரவருணிப் பாசன அமைப்பின் வளர்ச்சி, தண்ணீர் பயன்பாடு தொடர்பான காலத்தைப் பின்வருமாறு நூலாசிரியர் வரிசைப்படுத்தி உள்ளார்.

1.         ஆங்கிலேயருக்கு முந்தைய காலம்           - 1850 வரை

2.         ஆங்கிலேயர் காலம்      - 1850-1947

3.         நாட்டின் விடுதலைக்குப் பின்         - 1947-1970

4.         தற்போதைய நிலை     - 1970-2000

இக்காலப் பகுப்பிற்குள் தம் ஆய்வை மேற் கொண்டுள்ள இவர், அரசு, அமைப்பு தொடர்பான ஆவணங்களுடன் மட்டுமின்றி விரிவான கள ஆய்வையும் மேற்கொண்டுள்ளார். தாமிரவருணி ஆற்று நீர் மேலாண்மையை மையமாகக் கொண்ட, தொழில் நுட்பச் செய்திகளை மட்டுமே உள்ளடக்கிய ஒரு நூலாக இந்நூல் அமையவில்லை.

தாமிரவருணி ஆற்றுப்படுகையின் வளர்ச்சி, இதன் அடிப்படையில் உருவான சமுதாய மோதல்கள் என்பன நூலில் முக்கிய இடத்தைப் பெற்று சமூகவியல் ஆய்வு நூலாக இந்நூலை மாற்றி உள்ளன.

ஒரே சாதியின் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான மோதலாக, பேய்க்குளம், கோரம்பள்ளம் விவசாயிகளின் நீர் உரிமைச் சண்டையை மிக நுட்பமாக அவர் ஆய்வு செய்துள்ளார்.

பகாசுரத் தொழில் நிறுவனங்கள் தாமிரவருணி ஆற்றின் நீரை உறிஞ்சும் கொடுமையையும் விளக்கி உள்ளார். இது தொடர்பான புள்ளி விவரங்களையும் அவர் முன்வைக்கிறார். நூலின் முடிவுரையில் அவர் முன்வைக்கும் பின்வரும் கருத்துக்கள் ஆழமானவை. சிந்தனையைத் தூண்டுபவை.

எந்தவொரு பாசனத் திட்டத்திலும் தலை மடையில் இருப்பவர்களால் தான் தண்ணீரில் கூடுதலான பங்கைப் பெறமுடியும் என்பது பொதுவான அம்சம். ஆனால், இது எப்போதுமே உண்மையாக இருக்க வேண்டும் என்பது அவசியமல்ல. தண்ணீர் வழங்கலில் இருக்கும் செல்வாக்கைப் பொறுத்து, சில சூழ்நிலைகளில் தங்களுக்கு உரிய பங்கைவிடவும் கூடுதலான தண்ணீரைக் கடைமடைப் பகுதி விவசாயிகளால்  பெறமுடியும். இதுவே ஒரு புதுவிதமான மோதலுக்கு வழிவகுத்துவிடுகிறது. தாமிர வருணியில் நிலைத்திருக்கும் மோதல்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது.

விவசாயிகளிடையே சமமாகத் தண்ணீர் பகிர்ந்து கொள்ளப்படாவிட்டால், எப்போதும் மோதலில் தான் முடியும். பாரம்பரியமான ஒரு வேளாண் சமுதாயத்தில், மற்றவர்களைக் காட்டிலும் தாழ்த்தப்பட்ட (எனப்பட்ட) சாதியினரால் கூடுதல் தண்ணீரைப் பெற முடிந்தால் அதுவே மோதலைத்  தீவிரப்படுத்திவிடுகிறது.

மீண்டும் ஒருமுறை கூற வேண்டுமானால், ஒரு பாசனத்திட்டத்தின் ஒழுங்குமுறை விதிகளின் அடிப்படையில் தண்ணீர் வழங்குவது, மிகவும் சக்தி வாய்ந்த பயனாளர்களின் விருப்பத்துக்குப் பொருந்திச் செல்லாவிட்டால், அந்த பயனாளர்கள், பாசனத்திட்டத்தை நிர்வகிப்பவர்களின் ஒத்துழைப்புடன், தங்கள் விருப்பத்தை நிறை வேற்றிக் கொள்ளும் வகையில், எப்போதும் வெற்றிகரமாக, விதிகளை மாற்றி அல்லது அழித்தே விடுவார்கள்.

இயற்கை வளங்களுக்கான மோதல்கள் என்பது, வளர்ச்சியின் பிரிக்க முடியாதோர் அங்கம். வளர்ச்சி பற்றிய திட்டமிடுதலின் போது, இந்த மோதல்களைப் பற்றியெல்லாமும் ஆராய்வது முக்கியம். மோதலின் முக்கியமான நோக்கம், தண்ணீர்ப் பகிர்வு என்கிறபோது, அதையரு தொழில்நுட்பப் பிரச்சினையாகவும் தொழில் நுட்ப அடிப்படையில் (வெறும் கணக்குகளை அடுக்குவதன் மூலம்) தீர்க்கக் கூடியதாகவும் பார்க்கக்கூடாது. இந்த மோதல்கள் யாவும் சமூக-பொருளியல் காரணிகளின் வெளிப்பாடுகளே. வேளாண் பொருளியலில் தண்ணீரைப் பெறுவதும் தண்ணீர் வழங்கல் முறை மீதான கட்டுப்பாடும் அதிகாரத்துக்குரிய தீர்மானகரமான ஆதாரமாக விளங்குகிறது.

ஒரு பாசனத்திட்டத்தில், கிடைப்பதை விடவும் தேவைகள் அதிகமாகும்போது, தண்ணீருக்கான போட்டி மிகவும் தீவிரம் பெறுகிறது. பின்னர், இது தண்ணீரைக் காப்பாற்றுவதற்கான அதிகாரம் சம்பந்தப்பட்டதாகிறது. தங்கள் நலன் சார்ந்த மோதல்கள் தவிர்க்க முடியாதவை. அனைத்து ஆற்றுப் படுகைகளும் தண்ணீரை முழுவதுமாகப் பயன்படுத்திக் கொள்ளும் ஒற்றைப் புள்ளியான இறுதி இலக்கை நோக்கியே நகரும்; அங்கிருந்து, அதன் பிறகு, மோதல்கள் தோன்றும்.  வேகமான நகர்ப்புற வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, மக்கள் தொகைப் பெருக்கம் ஆகியனவற்றெல்லாம் இந்த நடைமுறையை விரைவுபடுத்தும். ஏற்கனவே நிலவும் சமூக மற்றும் பொருளாதாரப் பதற்றங் களைத் தண்ணீர்ப் பற்றாக்குறை மேலும் மோச மடையச் செய்யும். புதிதாக சமூக மற்றும் பொருளாதாரப் பதற்றங்களைத் தண்ணீர்ப் பற்றாக்குறை உருவாக்கவும் கூடும்.

எனவே பரந்துபட்ட வளர்ச்சிப் பார்வையுடன் இதுபோன்ற பதற்றங்களை எதிர்பார்த்து, தகுந்த கொள்கையுடன் கூடிய தலையீட்டின் மூலம் முன் கூட்டியே நடவடிக்கை எடுப்பது அல்லது தணிப்பது என்பது முக்கியமானது. பொதுவாக இவற்றில் சம்பந்தப்பட்டவர்கள் குறிப்பாக, விவசாயிகள் எந்த அளவுக்குப் பங்கெடுத்துக் கொள்கிறார்கள் என்பதைப் பொருத்துதான் இதுபோன்ற நடவடிக்கைகளின் வெற்றி அமையும்.

இவ்விரு நூல்களையும் வெளியிட்ட பாவை பப்ளிகேஷன்ஸ் தி.இரத்தினசபாபதியும், துணைநின்ற இதழியலாளர் எம். பாண்டியராஜனும் பாராட்டுதலுக் குரியவர்கள்.

அடுத்த இதழில் ஏரிகள், குளங்கள் குறித்த தமிழர்களின் நீர்மேலாண்மை அறிவைக் காண்போம்.

- தொடரும்

Pin It