இயற்கையாகத் தன்போக்கில் ஓடும் ஆறுகளின் நீரைப் பயன்படுத்தி வேளாண்மை செய்ததன் அடுத்த கட்டமாக, ஏரிகள், குளங்களை உருவாக்கி அவற்றில் ஆற்று நீரையும், மழை நீரையும் தேக்கி வைத்துப் பயன்படுத்தும் முறையைப் பண்டைத் தமிழர்கள் மேற்கொண்டிருந்தனர்.

இது தொடர்பான செய்திகளை, பேராசிரியர்கள் கி.இரா.சங்கரன் (2011,) க.ராஜன் (2008) ஆகியோர் கள ஆய்வின் அடிப்படையிலும், கல்வெட்டுகளின் துணையுடனும் வெளிக்கொணர்ந்துள்ளனர். எஸ்.எம்.ரத்னவேலுவும், பழ.கோமதிநாயகமும் இணைந்து (2006) ஆங்கிலத்தில் நூலொன்றை எழுதியுள்ளனர்.

இவர்களுள் கி.இரா.சங்கரன் புதுக்கோட்டை மாவட்டக் கல்வெட்டுக்களை மட்டுமின்றி, பல அரிய தரவுகளைத் திரட்டி ஆய்வு செய்துள்ளார். மயிலாடுதுறையில் உள்ள கல்லூரி ஒன்றில் வரலாற்றுப் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.

இவர் ‘தமிழக வரலாற்றில் நீர்ப்பாசனம்:

ki.ira.sankaran bookபுதுக்கோட்டை வட்டாரத்தை முன்வைத்து’ (கி.பி.800 முதல் 1800 வரை) என்ற தலைப்பில் ஆய்வு மேற் கொண்டு முனைவர் பட்டம் பெற்றுள்ளார். தமிழரின் நீர்மேலாண்மை தொடர்பான இவரது ஆய்வுக் கட்டுரைகள், ‘ஆவணம்’, ‘சமூக விஞ்ஞானம்’ ஆகிய ஆய்விதழ்களில் வெளிவந்துள்ளன. ஆர்.எஸ்.சர்மா, ரொமிலா தாப்பர் ஆகிய சிறந்த வரலாற்றிஞர்களின் நூல்களைத் தமிழாக்கம் செய்துள்ளார்.

பாசனக் குளங்கள் குறித்த ஆங்கில நூலை எழுதியுள்ள ரத்னவேல் பொதுப்பணித்துறையில் முதன்மைப் பொறியாளராகப் பணியாற்றி நீர் மேலாண் மையில் முப்பத்தாறு ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். அண்ணா பல்கலைக் கழகத்தில் திட்ட ஒருங்கிணைப் பாளராகப் பணியாற்றி உள்ளனர். பாரம்பரிய நீர் மேலாண்மை தொடர்பான ஆய்வுக்கட்டுரைகளை, தேசிய அளவிலான கருத்தரங்கங்களில் வழங்கி உள்ளார்.

இந்நூலின் இணையாசிரியரான கோமதி நாயகம் குறித்த அறிமுகம் சென்ற இதழில் வெளியாகியுள்ளது.

···

இங்கு அறிமுகமாகும் நூல்கள் ஒவ்வொன்றும் கூறும் செய்திகளைத் தனித்தனியாகக் கூறாமல் இவை கூறும் செய்திகள் பொருள் அடிப்படையில் இக்கட்டுரையில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

குளங்கள்

மனித சமூக வளர்ச்சியில் வேளாண்மைக்கு முக்கிய இடமுண்டு. தொடக்ககால வேளாண்மை மழையை எதிர்நோக்கிய வேளாண்மையாகவே இருந்தது. இதையே புன்புல வேளாண்மை என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. உரியபருவத்தில் மழை பெய்யாவிடில் வேளாண்மை அழிவுக்காளானது.

இதனால் மழைபெய்யும் காலங்களில் மழை நீரைச் சேமிக்கும் எண்ணம் தோன்றியது. இச்சிந்தனையில் இருந்தே குளங்கள் உருவாயின. குளங்களில் இருந்து விளைநிலங்களுக்கு நேரடியாக நீர் பாய்ச்சி மேற் கொண்ட வேளாண்மையானது நான்கு வகையான பயன் பாடுகளைக் கொண்டிருந்தது. அவை

(I) தண்ணீரைப் பாதுகாத்தல்

(II) வறட்சித் தடுப்பு

(III) வெள்ளத்தைக் கட்டுப்படுத்தல்

(IV) சுற்றுச் சூழலைப் பாதுகாத்தல்

இப்பயன்பாடுகள் கொண்ட குளங்கள், நீரைச் சேகரித்தல், தேக்கிவைத்தல், உபரிநீரை வெளியேற்றல், நீரை வழங்குதல் என்ற நான்கு செயல்பாடுகளை அடிப் படையாகக் கொண்டவை. இவற்றுள் நீரை வழங்குதல் பொருட்டு அமைப்பு ஒன்றை உருவாக்குதலும் அவசிய மானதாகும்.

குளங்களின் வகை

நீரைத் தேக்கிவைக்கப் பயன்படும் குளங்கள், தண்ணீரை எவ்வாறு பெறுகின்றன என்பதன் அடிப் படையில் மழைநீர்க் குளங்கள், ஆற்றுநீர் வரத்துக் குளங்கள் என இருவகையாகப் பகுக்கப்பட்டுள்ளன.

ஆற்றில் இருந்து கால்வாய்கள் அல்லது வாய்க் கால்கள் வாயிலாகத் தண்ணீரைப் பெறும் குளங்களே ஆற்றுநீர் வரத்துக் குளங்களாகும்.

மழைநீரைப் பெற்று நிரம்பும் குளங்கள் மழைநீர்க் குளங்களாகும். மானாவாரிக் குளங்கள் என்றும் இதைக் குறிப்பிடுவதுண்டு. நேரடியாகக் குளத்தின் மேற்பரப்பில் பெய்யும் மழையினால் மட்டுமின்றி, குளத்தின் நீர்ப் பிடிப்புப் பகுதிக்குத் தொலைவில் பெய்யும் மழையின் துணையாலும் இக்குளங்கள் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளும்.

எம்முறையில் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளு கின்றன என்பதன் அடிப்படையில் இவ்வாறு குளங்கள் இரு வகையாகப் பகுக்கப்பட்டுள்ளன. இஃதன்றி பயன் பாட்டின் அடிப்படையிலும் குளங்கள் வேறுபடுகின்றன. வேளாண்மைக்கான பாசனப் பயன்பாடு, குடிநீர்த் தேவை, கோவில் பயன்பாடு என்பன, இப்பயன்பாடு களுள் முக்கியமானவை.

குளத்தின் உறுப்புகள்

நீளம், ஆழம் நீர் தேங்கும் பரப்பளவு நீரைப் பெறும் முறை, வெளியேற்றும் முறை என்பனவற்றில் குளங்களுக்கு இடையில் வேறுபாடு உண்டு.

ஆயினும் தமிழகக் குளங்களின் பொதுவான உறுப்புகளாக அவற்றின் கரை, நீர் வெளியேறப் பயன்படும் மடை, தூம்பு, மிகுதியான நீரை வெளியேற்ற உதவும் கலிங்கு என்பன அமைகின்றன. இன்று வரை இவை நிலைத்து நின்று நம் நீர் மேலாண்மை அறிவுக்குச் சான்று பகர்கின்றன.

கரை

ஒரு குளத்தின் நீர்கொள்ளளவானது அதன் கரையின் வடிவமைப்பையும் உயரத்தையும் சார்ந்தே அமையும். அதோடு அதன் பாதுகாப்பும் கரையின் வலிமையைச் சார்ந்தே அமையும். இவ்வுண்மையை வள்ளுவர் உவமையாகப் பயன்படுத்தி உள்ளார் (குறள்: 523). தன் கிளைஞரை தன்னை விட்டு நீங்காது பார்த்துக் கொள்வதன் அவசியம் குறித்து ‘சுற்றந்தழால்’ என்ற அதிகாரத்தில் (எண் 53) வள்ளுவர் வலியுத்துகிறார். இவ் அதிகாரத்தில் இடம்பெறும் ஒரு குறட்பா

அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளக்

கோடின்றி நீர்நிறைந் தற்று

என்பதாகும். தன் கிளைஞரோடு உள்ளம் கலந்து வாழாத மன்னனின் வாழ்க்கையானது கரையின்றி நீர் நிறைந்த குளத்தைப்போன்றது என்பதே இக்குறளின் பொருளாகும்.

வள்ளுவருக்கு முந்தைய காலத்தவரான கபிலர் பாரியின் பறம்பு நாட்டில், எட்டாம் பிறைச் நிலவின் வடிவில் குளங்கள் அமைக்கப்பட்டதாகக் குறிப்பிடு கிறார் (புறம் 118). இம்முறையால் ‘கரையின் நீளம் குறைவாகவும் கொள் அளவு அதிகமாகவும் அமையும் இது ஒரு சிக்கனமான வடிவமைப்பாகும் (இரத்னவேல், கள்ளபிரான்:33). இம்முறையில் அமைந்த குளங்கள் புதுக்கோட்டை வட்டாரத்தில் இன்றும் காணப்படும் என்று கூறுவதுடன் பாரியின் பறம்பு நாடு அடங்கிய புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருப்புன்னைவாசல் குளத்தின் வரைபடத்தையும் இவ்விருவரும் தந்துள்ளனர்.

இவ்வாறு கரை அமைப்பதின் பயன்பாடு குறித்து

‘ஏரியின் மூன்று திசைகளிலும் பல மடைகள் அமைத்து பாசனப் பரப்பின் நிலவாட்டத்திற் கேற்ப ஏரியின் நீரைக் குறைந்த நீளமுள்ள வாயக்கால்கள் மூலம் பாசனத்திற்கு எடுத்துச் செல்ல இயலும். இதனால் நீர் விநியோகத்தின் சேதாரம் குறையும், நீர் மேலாண்மையும் ஏற்படும்’.

என்று குறிப்பிட்டுள்ளனர் (மேலது:33). இவ்வடிவில் கரை அமைப்பில் செலவு குறையும் என்பது ரத்தனவேல், கோமதி நாயகம் (2006: 20) ஆகிய இருவரது கருத்தாகும்.

குளத்தில் தேங்கும் நீரைப் பாதுகாக்க அமைக்கப் படும் கரையும் பாதுகாக்கப்பட வேண்டியதாகும். குளத்தில் தேங்கும் நீர் அலையாகத் தொடர்ந்து அடிப்பதால் குளத்தின் உட்பகுதியில் கரை பலம் குன்றும். இதைத் தடுக்கும் வழிமுறையாக இப்பகுதியில் கற்களைப் பதித்துள்ளார்கள்

இக்கற்கள் அலைத்தடுப்பானாக அமைந்து நீர் அரிப்பில் இருந்து கரையைப் பாதுகாத்துள்ளன. இக்கற்களுக்கு ‘அலைகற்கள்’ எனப் பெயரிட்டுள்ளனர்.

குளங்கள் அல்லது ஏரிகள் அமைப்பதில் பழந் தமிழர்கள் பின்பற்றிய தொழில்நுட்பம் குறித்து இரத்னவேலுவும் கோமதி நாயகமும் பின்வருமாறு தொகுத்துள்ளனர்.

1) ஏரிக்கரையின் நீளம் குறைவாகவும் ஆனால் அதன் கொள்ளளவு அதிகமாகவும் இருக்கும் படியும் அமைக்கப்பட்டுள்ளன.

2) ராஜசிங்க மங்கலம் ஏரிக்கரையைப் போல் (பாம்பு போல்) அதிக நீளமாக அமைக்கும் வழக்கம் இருந்தது. அவ்விடங்களில் அதிக மடைகள் அமைத்ததின் மூலம் ஏரியிலிருந்து நிலங்களுக்கு நீரைப் பகிர்ந்தளிக்க முடிந்தது.

3) ஏரிக்கரைகளின் அடிமட்ட அகலம், சரிவு, (Slope) மேல் மட்டம் கரையின் மேல் அகலம், ஏரியின் நீர் கரையின் வழியாக நீர்க் கசிவை தடுப்பதாகவும், பெரும் வெள்ளம் வரும் பொழுது உடையாமல் இருக்கும் வண்ணம் அமைக்கப்பட்டன.

4) ஏரிக்கரையின் மேல்மட்ட அகலம் மனிதர்கள் செல்லுவதற்கும், ஆடு, மாடுகள் செல்லு வதற்கும் ஏற்றவாறு மட்டுமே அமைக்கப் பட்டிருந்தன. சாலையாகப் பயன்படுத்தப்பட வில்லை.

5) ஏரிக்கரைகள் நீரைத் தேக்குவதுடன் ஓடை களின் நீர் மட்டத்தை உயர்த்துவதால், நீர் மேட்டு நிலங்களிலும் பாசனம் செய்ய முடிந்தது.

6) பள்ளமான இடத்தில், இரண்டு மேட்டு நிலங்களை அல்லது குன்றுகளை இணைத்துக் கரை அமைக்கும் பொழுது ஏரி உருவாகிறது. கரையில்லையெனில் ஏரி இல்லை. அவ்விடம் வெறும் நீர் வழித் தடம் அல்லது ஓடை. ஏரியின் கரைகளில்தான், ஏரி நீரை விவசாயத்திற்கு வழங்கும் கட்டுமானமான மடைகளும், ஏரிக்கரையினைப் பாதுகாப்ப தற்காக அமைக்கப்பட்ட உபரிநீரை வெளி யேற்றும் கலிங்கலும் அமைக்கப்பட்டுள்ளதால் கரை ஏரியின் சிறப்பு அம்சமாகக் கருதப்படுகிறது.

மடை

கரையின் துணையால் குளத்தில் தேக்கி வைக்கப் படும் தண்ணீர், பயன்பாட்டிற்காக வெளியேறும் வகையில் அமைக்கப்படுவதே மடை ஆகும். இதில் கதவு ஒன்று இருக்கும். இதைத் திறந்தால் தண்ணீர் வெளி யேறும். ஆனால் விருப்பம் போல், தண்ணீரின் அளவைக் கூட்டவோ குறைக்கவோ முடியாது. தேங்கி நின்ற தண்ணீர் கட்டுப்பாடின்றி வெளியேறும். இதன் அடிப்படையிலேயே ‘மடை திறந்த வெள்ளம் போல’ என்ற உவமை பேச்சுவழக்கில் இடம்பெற்றுள்ளது.

குளங்களில் மட்டுமின்றி, ஆற்றுக் கால்வாய்களிலும் மடை இடம் பெற்றிருக்கும்.

மதகு

இதுவும் மடை அமைப்பில்தான் இருக்கும். ஆனால் தண்ணீர் வெளியேறும் பகுதியில் உள்ள கதவு போன்ற அடைப்பானை வேண்டிய அளவுக்கு மட்டும் திறந்து கொள்ளலாம். இதனால் வெளியேறும் நீரின் அளவைக் கூட்டவோ குறைக்கவோ முடியும்.

குமிழி

ratnavel bookகல்லினால் பெட்டிபோன்ற அமைப்பு உருவாக்கப் பட்டு, அதில் துளையிடப்பட்டிருக்கும். இத்துளையின் வழியாக தண்ணீர் பெட்டி போன்ற அமைப்பில் நுழைந்து வெளியேறும். தேவைப்படின் குமிழியின் வாயை மரத்தால் ஆன சக்கையால் அடைந்து, தண்ணீர் வெளியேறுவதை நிறுத்தி விடலாம்.

தூம்பு

இது நீண்ட குழாய் போன்ற அமைப்புடையது. தூம்பு என்ற சொல் சிறிய துவாரத்தைக் குறிக்கும். தூம்பு கை என்பதே மருவி தும்பிக்கை ஆயிற்று என்பர். யானையின் தும்பிக்கை சிறிய துவாரத்துடன் கூடியது என்பது நாம் அறிந்ததே. குளத்தில் உள்ளநீர், கரையின் அடிப்பகுதி வழியாக வெளியே செல்ல தூம்பு உதவுகிறது. சங்க இலக்கியங்கள் ‘சுருங்கை’ என்ற சொல்லால் தூம்பைக் குறிக்கின்றன.

மூங்கில், பனை, ஆகிய மரங்களால் உருவாக்கப் பட்ட தூம்புகள் உண்டு. இவற்றை சில ஆண்டுகளுக்கு ஒரு முறை அகற்றிவிட்டு புதிய தூம்புகளைப் பயன் படுத்துவர்.

கலிங்கு

மேலே குறிப்பிட்டனவெல்லாம் குளத்தில் தேக்கி வைத்த நீரை, பாசனத்தேவைக்காக வெளிக்கொணர உதவும் வகையில் உருவாக்கப்பட்டவை. அதிக நீர்ப் பெருக்கினால் குளம் விரைவாக நிரம்பும் போது தேவைக்கு அதிக அளவில் நீரைத் தேக்கிவைக்க முடியாது. அதிக அளவில் சேரும் நீரை வெளியேற்றா விடில் குளம் உடைந்துபோகும் ஆபத்தும் உண்டு. இதைத் தவிர்க்கும் வகையில், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் குளத்தில் நிரம்பும் நீரை வெளியேற்றும் வகையில் அமைக்கப்படுவதே கலிங்கு ஆகும். இதன் அடிப்படையில் குளத்தின் பாதுகாப்பு அரணாக கலிங்கு அமைகிறது.

கலிங்கின் வழியாக வெளியேறும் உபரி நீர், வாய்க்கால் வழியாகச் சென்று வேறு குளங்களை நிரப்புவதும் உண்டு. இவ்வாறு தண்ணீர் பெறும் குளங்களை மறுகால் குளங்கள் என்பர். இரண்டு வகையான, பயன்பாடுகளை இம்முறை கொண்டு உள்ளது. முதலாவது பயன்பாடு, கலிங்கின் வழியாக உபரிநீர் வெளியேறுவதன் வாயிலாக, மிகு நீரினால் குளத்தின் கரை உடைவது தவிர்க்கப்படுகிறது. இரண்டாவதாக, கலிங்கின் வழியாக வெளியேறும் உபரிநீர் மற்றொரு குளத்தை நிரப்புவதால் நீர் வீணாகாது தடுக்கப்படுகிறது. இப்படித் தொடர்ச்சியாக ஒரு குளத்தின் உபரி நீரால் நிரம்பும் குளங்கள் அடுத் தடுத்து உண்டு. சங்கிலித் தொடர்போன்று அமைந்த இக்குளங்கள் தமிழர்களின் நீர் மேலாண்மைக்குச் சான்று பகரும் வகையில் இன்றும் உள்ளன.

நீர் மேலாண்மை

இவ்வாறு தொழில்நுட்ப அறிவுடன் உருவாக்கப் பட்ட குளங்களின் முக்கிய நோக்கம் வேளாண்மைக்கான தண்ணீரை வழங்குவதுதான். இவ்வாறு வழங்குவதற்கு குளங்களை நிர்வகித்துப் பராமரிக்கும் அமைப்பு தேவையான ஒன்று. இதன் பொருட்டுப் பணியாளர் களை நியமித்து அவர்களுக்கு ஊதியம் வழங்குவதும் அவசியம். இவற்றின் பொருட்டு நிதி ஆதாரங்களை உருவாக்க வேண்டும்.

இப்பணிகள் தொடர்பான செய்திகளைக் கல்வெட்டுகள், செப்பேடுகள் வாயிலாக அறியமுடிகிறது.

நீர்ப்பாசனத் தொழில்நுட்பம் கி.பி.750 வாக்கி லேயே நன்கு வேரூன்றி விட்டதாக கி.இரா.சங்கரன் கூறுகிறார். இத்தொழில் நுட்பத்திற்குச் சான்று பகர்வதாக இன்றும் சில குளங்களில் குமிழி மடைகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இடைக் காலத்துக் கல்வெட்டுக்களில் பயின்று வரும் ‘மடை’, ‘வாய்த்தலை’, ‘தூம்பு’ போன்ற சொற்கள் சங்க இலக்கியங்களிலும் காணப்படுவதை அவர் சுட்டிக் காட்டுகிறார்.

குளத்து நீர்ப்பாசனம் தொடர்பான செய்திகள் அடங்கிய கல்வெட்டுகள் கி.பி.ஆறாம் நூற்றாண்டின் பின்பகுதியில் இருந்து பாண்டி மண்டலத்தில் கிடைப் பதாக அவர் கூறுகிறார். கி.மு. இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த முதலைக்குளம் பிராமிக் கல்வெட்டில் இடம் பெறும் ‘செய்தவர்’ என்ற சொல்லின் அடிப்படையில் அப்போதே குளம் வெட்டும் முறை உருவாகிவிட்டதாக பழ.கோமதிநாயகமும், இரத்தினவேலுவும் குறிப்பிடு கின்றனர்.

மதகின் வாயிலாக ஆற்றுநீரை ஓடைக்குத் திருப்பியமை, மரத்தினால் ஆன மடைக்கு மாறாக, கல்லினால் ஆன மடை அமைந்தமை தொடர்பான கல்வெட்டுச் செய்திகளையும் அவர் வெளிக்கொணர்ந் துள்ளார்.

இவ்வாறு அமைக்கப்பட்ட குளங்களைப் பராமரிக்கவும் பயன்படுத்தவும் ‘கிராம அவைகளில், சில அமைப்புகளை உருவாக்கியிருந்தனர். குளங்களையும், அதன் நீரைப் பயன்படுத்தலையும் முறைப்படுத்த ‘ஏரிவாரியம்’ என்ற அமைப்பு இருந்துள்ளது. பராமரித்து வெளியேறும் உபரி நீரை முறைப்படுத்த “கலிங்கு வாரியம்” என்ற அமைப்பு இருந்துள்ளது.

நம் பாரம்பரிய நீர் மேலாண்மை குறித்து, தமிழ் இலக்கியங்களில் இடம்பெறும் செய்திகளையும், இச்செய்திகள் அடங்கிய கல்வெட்டுக்களையும். க.ராஜன் தமது நூலில் தொகுத்துத் தந்துள்ளார். இவற்றை ஒரு சேரத் தொகுத்து நம் பாரம்பரியம் எவ்வளவு தொன்மையானது, நுட்பமானது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

நீர் உரிமை

நீர் மேலாண்மையுடன் தொடர்புடைய ஒரு முக்கிய கூறு நீர் உரிமையாகும். தண்ணீரைத் தேக்கி வைத்துக் குமிழி அல்லது மடைகள் வழியாக வெளி யேற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியானது. தண்ணீரைக் கட்டுப்படுத்தவும், சமூகத்தைக் கட்டுப்படுத்தவும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் பயன்பட்டிருக்க வேண்டும் என்பது கி.இரா.சங்கரனின் கருதுகோளாக உள்ளது.

இதை நிறுவும் வகையில் அவர் ஆய்வை மேற் கொண்டுள்ளார். இது வேறுபாடான ஓர் ஆழமான ஆய்வாகும். தம் ஆய்வுக்கான களமாக, புதுக்கோட்டை வட்டாரத்தை அவர் தேர்வுசெய்துள்ளார். கல்வெட்டு களும், இன்றும் இப்பகுதியில் காணப்படும் குளங்களும் இவரது ஆய்வுக்கான தரவுகளாக அமைந்துள்ளன. இவரது ஆய்வின் வாயிலாக வெளிப்பட்ட சில முக்கிய செய்திகள் வருமாறு:

1)குளங்களில் உள்ள நீரின் மேலான பகிரும் உரிமை, நிலப்பரிமாற்றத்தின் போது குளங் களையும் சேர்த்தளிப்பது என நில உரிமை இருவகையில் இருந்துள்ளது.

2)ஒவ்வொரு விளைநிலமும் அதனதன் தேவைக் கேற்ப நீர்பெறும் உரிமையைக் கொண்டிருந்தது.

3)இப்பகுதியில் ஆட்சியாளர்கள் மட்டுமின்றி தனியார்களும் நீர்நிலைகளை உருவாக்கி உள்ளனர், என்பதற்கான கல்வெட்டுச் சான்றுகள் கிடைத்துள்ளன.

4)இப்பணிகளின் விளைவால் பயிர் விளைச்சல் பெருகியதுடன் அரசு வருவாயும் பெருகியது. ஏன் எனில் குளங்களில் இருந்து நீரைப் பெறும் நிலங்கள் அதிக வரிவிதிப்பிற்கு ஆளாயின. இவ்வரி ‘முழுக்கடமை’ எனப்பட்டது.

5)நீர் நிலைகளின் எண்ணிக்கைப் பெருக்கம் வேளாண் விரிவாக்கத்தை உருவாக்கியது.

6)நீரை வெளியேற்றும் மதகுகளுக்கு மாற்றாக மடைகள் குமிழிகளின் அறிமுகத்தால் விருப்பம் போல் நீரைவிடவும் நிறுத்தவும் முடியும். இதனால் நீர்வழங்குதல் முறைப் படுத்தப்பட்டது.

70நீரை முறைப்படுத்தி வெளியேற்றியும், புதிய குளங்களை வெட்டியும் பணியாற்றியவர்கள் சமூகத்தின் முதல் தளத்தில் இடம்பெற்றதுடன் அரையன் என்ற பட்டத்தையும் பெற்றனர்.

8)‘நாழிகை’ என்னும் நேர அளவின்படி நீர் விடப்பட்டுள்ளது. இந்நாழிகை நேரங்கள் ஊருக்கு ஊர் வேறுபட்டிருந்தன.

நூல்கள் உணர்த்தும் செய்தி

ஆறு, குளம், ஏரி, கிணறு என்பனவற்றின் நீரைப் பயன்படுத்தி பண்டைத் தமிழர்கள் வேளாண்மை செய்து வந்துள்ளனர். இந்நீர்நிலைகளின் உருவாக்கம், நீரை வெளியேற்றவும், நீரை இறைக்கவும் பயன்படுத்திய கருவிகள் என ஒவ்வொன்றிலும் தொழில் நுட்ப அறிவு இடம்பெற்றுள்ளது. இவ்வுண்மையை இலக்கியம், கல்வெட்டுகள் மட்டுமின்றி தொல்லியல் சான்றுகளும் வெளிப்படுத்துகின்றன.

இக்கட்டுரையில் சுட்டப்படும் நூல்கள் அனைத்திலும் இடம்பெற்றுள்ள செய்திகள் இங்கு அறிமுகம் செய்யப் படவில்லை. தமிழர்களின் நீர்மேலாண்மை தொடர்பான ஒரு சிறிய அறிமுகம் மட்டுமே இங்கு மேற்கொள்ளப் பட்டுள்ளது.

இந்நூல்களைத் தனித்தனியாக அன்றி ஒரு சேர வாசிப்பின் நம் நீர் மேலாண்மை அறிவின் தொன்மையும், நுட்பமும் குறித்த வரலாற்றுச் செய்திகளை நாம் அறியமுடியும்.

இவ்அறிதல், நம் காலத்தில் நிகழும் நீர்நிலை அழிப்பு அவலத்தை தடுத்த நிறுத்தவேண்டியதை நாம் உணரும்படிச் செய்யும். கடந்த காலத்தைக் குறித்த புரிதலை மட்டுமின்றி நிகழ்காலத்தில் நாம் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளைச் சுட்டிக்காட்டுவதும்தான் வரலாற்று வாசிப்பின் பயனாக இருக்க வேண்டும்.