இந்தியா ஒரு துணைக் கண்டம். இந்திய மக்கள் தொகை இன்று 126 கோடி.

இந்துக்கள் 106 கோடி; இஸ்லாமியர், சீக்கியர், கிறித்துவர், பவுத்தர், சமணர் மீதி 20 கோடிப் பேர். இவர்கள் அவரவர் மதக் கோட்பாடு, குடும்ப வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கங் களைப் பின்பற்றி வாழ முழு உரிமை உண்டு.

அந்தந்த மதத்தில் பிறந்தவர்கள் தங்கள் தங்கள் மதத்தைச் சீர்திருத்த முயன்றனர்.

இந்துவாகப் பிறந்த காந்தியார் - (1) இந்து வருணாசிரமத்தை நம்பினார்; ஆனால் தீண்டாமையை எதிர்த்தார்.

(2) இஸ்லாமியர்களை இந்தியர்களாகக் கருதினார்; 1947இல் பாக்கித் தானுக்குச் சேரவேண்டிய பங்குத் தொகையை, பண்டித நேரு அரசு உடனே தரவேண்டும் என வற்புறுத்தினார்.

(3) சென்னை மாகாணத்தில், முதன்முதலாக 1947 நவம்பரில், பிற்படுத் தப்பட்ட இந்துக்களுக்கு மாகாணக் கல்வியிலும் வேலையிலும் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் அளித்த இடஒதுக்கீடு நியாயமானது எனத் தெரிந்த பிறகு, அதை மனமார காந்தியார் ஆதரித்தார்.

வடக்கே ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்க்கர், சவர்க்கர் முதலானோர் - இஸ்லாமியரையும், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டையும் ஆதரித்த காந்தியாரைக் கொலை செய்ய முடிவு கட்டினர்.

தெற்கே டி.எல். வெங்கட்டராம சாஸ்திரி தலைமையில் இடஒதுக்கீடு பற்றிக் காந்தியாரிடம் கோள்மூட்டிய பார்ப்பனர்கள், சென்னையில் இரகசியமாகக் கூடி, “இனிக் காந்தி உயிரோடு இருப்பது பார்ப்பனருக்கு ஆபத்து” என்று 1947 திசம்பரில் முடிவு செய்தனர்.

இவற்றின் விளைவாகவே காந்தியார் 30-1-1948இல் சுட்டுக்கொல்லப் பட்டார். காங்கிரசுத் தலைவர்கள் நீலிக்கண்ணீர் வடித்தனர். காந்தியாரின் சாம்பலைக் கடற்கரை தோறும் சென்று கரைத்தனர். அவரைப் புதைத்த இடத்தில் ஆண்டுதோறும் வழிபாடு நடத்தினர்.

காந்தியார் கொலை செய்யப்பட்டதைக் கண்டனம் செய்த தந்தை பெரியார் - “நம்ம காந்தியைப் பார்ப்பனர்கள் கொன்றுவிட்டனர் - இது அடாதது என்று கூறினதுடன் நில்லாமல் - இல்லாத பெயரான “இந்தியா” என்பதை நீக்கிடு - “காந்தி நாடு” என்று பெயரிடு - இல்லாத “இந்து மதம்” என்பதை நீக்கிடு - “காந்தி மதம்” என்று பெயரிடு” என்று, இந்திய அரசுக்கு வெளிப்படையாகக் கோரிக்கை வைத்தார்.

பண்டித நேரு பார்ப்பனர் முதல் எந்தக் காங்கிரசாரும் பெரியாரின் அக்கோரிக்கையை ஆய்வுக்கே எடுத்துக் கொள்ளவில்லை.

எனவே, குளிர்விட்ட ஆர்.எஸ்.எஸ்.காரர்கள், 1948 பிப்பிரவரியில் பூனாவில், இரகசியமாகக் கூடி, “இனிக் கி.பி.2000க்குள் இந்தியாவில் இராமராச்சியம் அமைக்க வேண்டும். அதற்கு வசதியாக இந்திய சமூகத்தின் எல்லா உறுப்புகளிலும் அமைப்புகளிலும் நாம் ஊடுருவ வேண்டும்” என்று திட்டம் தீட்டினர்.

அதை நிறைவேற்றுவதற்கு வசதியாக, 2014இல் உண்மையில் ஓர் “அரசு” ஆக உள்ள இந்திய ஆட்சி யைத் தம் சொந்த வலிமை கொண்டே அமைத்து விட்டனர்.

இது எப்படி முடிந்தது? இந்தியா முழுவதிலுமிருந்த லோகியா அரசியல்வாதிகளும், அம்பேத்கரிய அரசியல் வாதிகளும், தமிழகத் திராவிட அரசியல் வாதிகளும் 1976-1979இல் கூண்டோடு சோரம் போயினர்.

இவர்கள் மாறி மாறிக் காங்கிரசையும், ஜனதாவை யும், பாரதிய ஜனதாவையும் ஆதரித்துப் பதவிகளை யும், பவிசுகளையும், பணத்தையும், தத்தம் குடும்ப வாரிசு அரசியலையும் நிலைக்க வைக்கப் படாதபாடு பட்டனர்; இன்றும் பாடுபடுகின்றனர்.

இவை பழங்கதைகள். இந்தப் பழங்கதைகளை அடியோடு மாற்றிட முன்வரவேண்டிய பொதுவுடை மைக் கட்சியினர், பார்ப்பனத் தலைமை காரணமாக (1) 1853இல் காரல்மார்க்சு சுட்டிக்காட்டிய மனுநீதி விளைத்த கொடுமையை எடுத்துச் சொல்லி, இந்திய உழைப்பாளிச் சாதிகளை ஒன்றுதிரட்டத் தவறிவிட்டனர்.

(2) அவரே, 1858இல் எழுதிய, “இந்தியாவின் முத லாவது சுதந்தரப் போர்” - என்ற நூலில், “இராமா யணம்-குரங்கு வணக்கம்-பசு வணக்கம் இவற்றைக் கொண்டாடும் இந்தியாவிலும், தெற்கு ஆசியாவிலும் ஒரு பண்பாட்டுப் புரட்சி வருமா என்பது எனக்கு வியப் பளிக்கும் கேள்வியாக இருக்கிறது” என்று எழுதியதை எந்தக் காலத்திலும் உழைப்பாளிகளின் பார்வைக்கு இவர்கள் கொண்டு செல்லவில்லை.

இதுவே, பொதுவுடைமைக் கட்சி மற்றும் திராவிட வாக்கு வேட்டைக் கட்சிகளின் இன்றைய இழிநிலைக் குக் காரணம்.

இவர்களின் இழிநிலை பற்றி சர். சி.பி. இராமசாமி அய்யரும், சி. இராசகோபாலாச்சாரியாரும் தெளிவாகப் புரிந்திருந்தனர். இவர்கள் தந்தை பெரியாரையும் புரிந்திருந்தனர்.

தந்தை பெரியார் :

1)            இராமன் கடவுளல்ல - அவன் புத்திரகாமேஷ்டி யாகத்தில் பார்ப்பானுக்குப் பிறந்தவன் என்பதைச் சான்றுகளுடன் ஊர்தோறும், தெருத்தோறும், நிகழ்ச்சி தோறும் சொன்னார்.

2)            குரங்கு - வணங்கப்படத்தக்கதல்ல;

3)            பசு வணக்கப்படத்தக்கதல்ல என, வாழ்நாள் முழு வதும் பேசினார்.

அவருடைய தொண்டர்கள் இவை பற்றி இன்றும் பேசுகிறோம்.

ஆனால், நம் கண்முன்னர் இன்று நாம் காண்பது என்ன?

உத்தரப்பிரதேசத்தில் தாத்ரியில், ஒரு கோவிலில் 28-9-2015 இரவு பரப்புரை செய்த ஒருவன், “பசு நம் தெய்வம். பசுவைக் கொன்றவனைக் கொல்லுங் கள்” என்று பேசியதைக் கேட்டு, மதவெறி கொண்ட ஒரு கும்பல். தாத்ரி அடுத்த பிசடா (Pisada) என்கிற சிற்றூரில், முகமது அக்லாக் (Mohammad Akhlaq) (58) என்பவரின் வீட்டுக்குள் புகுந்து அவரைக் குத்திக் கொன்றுவிட்டனர். மாட்டுக்கறி தின்றதாகவும், மாட்டுக் கறியை வீட்டில் சேமித்து வைத்திருப்பதாகவும் கத்திக் கொண்டு, முகமது அக்லாக்கின் மகன் தனிஷ் அக்லாக் என்கிற இளைஞனையும் முரட்டுத்தனமாகத் தாக்கிப் படுகாயப்படுத்திவிட்டுத் தப்பியோடிவிட்டனர்.

1.            அக்கம் பக்கத்தில் காலங்காலமாக வாழும் இந்து மக்கள் இதைக் கண்டிக்கவில்லை.

2.            இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் “தாத்ரி சம்பவத்தை - அரசியல் ஆக்க வேண்டாம்” என்று மட்டும் கூறி ஒதுங்கிக் கொண்டார்.

3.            இந்திய நிதி அமைச்சர் அருண் ஜெய்ட்லியும் இது குறித்து எந்தக் கண்டனமும் தெரிவிக்கவில்லை.

4.            இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் என்கிற பழம்பெரும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் பாரதிய சனதாக் கட்சி அரசுக்கும், ஆர்.எஸ்.எஸ். சுக்கும் பிசடா சம்பவத்தில் தொடர்பு இல்லை என்கிறார்.

5.            தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பொறுப் புத் தலைவர், “இந்த சம்பவம் பற்றிச் சிறுபான் மையினர் ஆணையம் ஏற்கெனவே ஆய்வுக்கு எடுத்துக்கொண்டதால், நாங்கள் இதில் தலையிட விரும்பவில்லை; தலையிட அதிகாரமும் இல்லை” என்று கூறிவிட்டார்.

ஆனால், 28.9.2015இல் உ.பி.யில் நடந்த இந்தப் படுகொலையைப் பற்றி, இந்தியத் தலைமை அமைச்சர், நேற்றுவரை எதுவும் சொல்லாதது ஏன்?

அதுதான், “மவுனம் சம்மதத்துக்கு அறிகுறி” என்கிற இரகசியம் போலும்!

இப்போது அவர் வாய்திறந்தார்; அக்டோபர்-நவம் பரில் பீகாரில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில், பாரதிய சனதாக் கட்சி அடிவாங்கும் என உணர்ந்த அவர், “தாத்ரியில் ஒரு முஸ்லீம் கொல்லப்பட்ட சம்ப வத்துக்கும், பாக்கித்தான் இஸ்லாமியப் பாடகர் குலாம் அலியின் இசை நிகழ்ச்சி இந்தியாவில் நடைபெறக் கூடாது என்று தடுக்கப்படுவதற்கும் இந்திய அரசு எப்படிப் பொறுப்பாகும்?” என்று எந்த நாணயமும் பொறுப்பும் மானிட உணர்வும் இல்லாமல், 14-10-2015 அன்று திருவாய்மலர்ந்துள்ளார்.

இது பொய், பொய், பச்சைப் பொய்யே! நாட்டின் பிரதமர் கூறும் நெஞ்சறிந்த பொய்யே.

இது கடுங்கண்டனத்துக்கு உரியது.

இதற்கும் ஒரு படி மேலே போய், அரியானா பா.ஜ.க. முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் - “மாட்டிறைச்சி தின்னும் முஸ்லீம்கள் இந்தியாவை விட்டு வெளியேறுங் கள்” என்று எச்சரித்து உள்ளார்.

இது தேச விரோத - சனநாயக விரோதக் குற்றமாகும்.

ஏன்?

முகமது அக்லாக்கைக் கொன்ற குற்றச்சாட்டின் பேரிலும், தனிஷ் அக்லாக்கைப் படுகாயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரிலும் - 12.10.2015 திங்கள்கிழமை கைது செய்யப்பட்ட 17 வயது இளைஞன் உள்ளிட்ட ஒன்பது பேரும் - ஒரே குரலில் தாங்கள் கொலைக் குற்றம் செய்ததை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

மேலும் முகமது அக்லாக் வீட்டின் தரைத்தளத்தி லும், முதல் மாடியிலும் இருந்த குளிரூட்டிப் பெட்டிகளில் மாட்டுக்கறி பதுக்கப்பட்டிருக்கிறதா என்று சோதித்துப் பார்த்தோம் - அப்படி எதுவும் இல்லை என்றும் அந்த 9 பேரும் கூறியிருக்கிறார்கள்.

இவர்களுக்காக எதிர்வழக்காடி, இவர்களை மீட்டிட, அங்குள்ள பஜ்ரங் தள் (குரங்குப் படை), விசுவ இந்து பரிசத் என்கிற இரண்டு அமைப்புகளும் பொறுப்பு ஏற்கும் என்று, உள்ளூர் பஜ்ரங் தள் செய்தித் தொடர் பாளர் பால்ராஜ் டங்கர் (Balraj Dungar) 12.10.2015 அன்று, “டைம்ஸ் ஆஃப் இந்தியா” நிருபரிடம் கூறியுள் ளார்.

“சாக்குக்குள் இருந்த பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது” - என்பது இதுதான்.

அதாவது ஆர்.எஸ்.எஸ்.இன் எடுபிடிகளான நாங்கள் தான் அக்லாக்கைக் கொன்றோம் என்பதைக் குற்ற வாளிகள் ஒத்துக்கொண்டார்கள். இதுதான் உண்மை.

இவ்வளவும் நடந்த பிறகு, உ.பி. பட்டியல் வகுப்பி னரின் பச்சையான எதிரியும், முஸ்லீம் வாக்கு வங்கி யை நம்பியே அரசியலில் நீடிக்கும் சமாஜிவாதிக் கட்சி யின் அரசு, கொலையுண்ட முகமது அக்லாக் குடும்பத்தி னருக்கு ரூ.45 இலக்கம் இழப்பீடு கொடுத்து, இப்போ தைக்கு முஸ்லிம் வாக்கு வங்கியைத் தக்கவைத்துக் கொள்ள முயற்சிக்கிறது.

உ.பி. பட்டியல் வகுப்புத் தலைவர் மாயாவதி, தன் “சமார்” சாதி வாக்குகளைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டு-பார்ப்பனர், சத்திரியர், வைசியர் சாதிகளுடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதலமைச்சராக வர முயலுகிறார். அவருடைய கட்சி பதவிக்கு வந்தால், இந்த மேல்சாதியினருக்கு ஏழ்மை அடிப்படையில் இடஒதுக்கீடு தரப்படும் என்று பீகாரில் தேர்தல் பரப்பு ரையில் உறுதி கூறியுள்ளார். அவருடைய உ.பி. மேல்சாதி வாக்கு வங்கி இனி, பாரதிய சனதாவுக்கே வாக்களிக்கும்.

இவ்வளவும் இந்தியாவிலுள்ள 15 கோடி இஸ்லா மியர்களுக்கும் எதிரான போக்குகள் - நிலைமைகள் என்பதை நாம் ஒவ்வொருவரும் கவலையுடன் சிந்திக்க வேண்டும்.

ஏன்?

1. புதுதில்லியில் 2015 செப்டம்பர் 3, 4, 5-இல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அனைத்திந்தியக் குழு கூடியது. அதன் 15 துணை அமைப்புகளின் மூத்த செயற்பாட்டாளர்கள் 93 பேரும், பிரதமர் மோடியும் மற்றும் 12 அமைச்சர்களும்; பா.ச.க. தலைவர் அமித் ஷாவும், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகத் தலை மையில் கூடிப்பேசினர். 4-9-15 வெள்ளிக்கிழமை பிரதமர் மோடி பேசினார். “ஆர்.எஸ்.எஸ்.சின் குறிக் கோளைக் கடைசி இந்தியக் குடிமகன் வரையில் கொண்டு போய்ச் சேர்க்க பா.ச.க. அரசு பாடுபடும்” என்று உறுதி கூறி மோடி பேசினார்.

ஏற்கெனவே டேராடூன் கூட்டத்தில் பேசிய பா.ச.க. தலைவர் அமித்ஷா - “இன்னும் 30 ஆண்டுகளுக்கு பா.ச.க. இந்தியாவை ஆளவேண்டும் என்பதே நம் இலக்கு” என்று அடித்துக் கூறிவிட்டார்.

2. ஆர்.எஸ்.எஸ். குறிக்கோளை நிறைவேற்றுவதற் காக 1995இல் கோவாவில் ராம் நாதி என்கிற கிராமத் தில் அமைக்கப்பட்டது, “சனாதன் சன்ஸ்தா”. மருத்து வர்களான ஜயந்த்-குண்டா வாழ்க்கைத் துணைவர் களே அதன் நிறுவுநர்கள்.

“இந்து ராஜ்யத்தை இந்தியாவில் நிறுவுவதே நம் குறிக்கோள். நம் போர் புனிதமானது. இது புரட்சி கரமான போராக இருப்பது தவிர்க்க முடியாதது. இதில் ஈடுபடுவோர் போரில் இறந்தால் மோட்சம் அடைவர்; வென்றால் - இந்த உலகத்தைக் கட்டி ஆள்வர்” என்று கற்பிக்கப்பட்டிருக்கிறார்கள் (You will claim heaven if you die in this Crusade and if you win, you will win the Earth).

இந்த மனிதக் கொலைக் கொள்கை கொண்ட சனாதன் சன்ஸ்தா அமைப்பைச் சேர்ந்த சமீர் கெய்க் வாட் என்பவர் தான், கோல்ஹாப்பூரில், 16-2-2015 இல் பொதுவுடைமைப் பகுத்தறிவாளர் கோவிந்த் பான்சரேயைச் சுட்டுக்கொன்றவர்களுள் முதன்மைக் குற்றவாளி.

இந்தியாவில் 2023இல் இந்து சாம்ராஜ்யத்தை நிறுவிட இந்த அமைப்பினர் உறுதி பூண்டுள்ளனர்.

அதாவது தங்களின் குறிக்கோளான இராமராஜ் யத்தை இந்தியாவில் அமைத்திட எல்லாம் வல்ல ஒரே கருவியான இந்திய அரசைக் கைப்பற்ற வேண்டும். இதுவே சரியான ஒரே தீர்வு என்பதை 1948இல் உணர்ந்த ஆர்.எஸ்.எஸ்.-2014இல் அதை அடைந்து விட்டது. இது ஏகாதிபத்திய இந்தியா.

நம் இலக்கு எது?

பண அச்சடிப்பு, பாதுகாப்பு, செய்தித்தொடர்பு - இவற்றை மட்டும் இந்தியக் கூட்டாட்சியிடம் தந்துவிட்டு, “மற்றெல்லா உரிமைகளையும் பெற்ற தன்னுரிமை உள்ள மொழிவழிக் குடிஅரசுகள் ஒருங்கிணைந்த உண்மையான கூட்டாட்சியாக இந்தியாவை மாற்றி அமைப்பதுதான்.”

இதில் நமக்கு உறுதி வேண்டும்.

இதுபற்றி மார்க்சிய - லெனினிய - மாவோ இயக் கொள்கையாளர்களும், திராவிட இயக்கத்தினரும், அம்பேத்கரிய இயக்கத்தினரும், லோகியா வழியின ரும் மற்றும் இஸ்லாமிய - கிறித்துவ மதத்தினரும் ஆர அமரச் சிந்தித்து இனிமேலும் செயல்பட வேண்டும்.

இதில் மிகப் பெரிய பொறுப்பு பெரியார் கொள்கை யினருக்கும் பொதுவுடைமைக் கட்சியினருக்கும் உண்டு.

1-11-2015            - வே. ஆனைமுத்து

Pin It