நாட்டின் மாபெரும் மனித அவலமாக வெடித்திருக்கிறது, புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சனை. தெருவோரப் போர்வை, கம்பளி, பொம்மை, பஞ்சு மிட்டாய் விற்பனையில் தொடங்கி ஹோட்டல், கட்டுமானத் தொழில்கள், சிறு-குறு தொழிற்சாலைகள், தேயிலை எஸ்டேட்கள் வரை நாடு முழுவதும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள் இந்த புலம்பெயர் தொழிலாளர்கள்.
மோடியின் திடீர் ஊரடங்கினால் வேலையிழந்து, வருமானமின்றி, அரைப் பட்டினியில் தவித்த இம்மக்களை நாதியற்றவர்களாகக் கைவிட்டு விட்டது அரசு! குறைந்த கூலிக்கு இவர்களின் உழைப்பை சுரண்டிக் கொழுத்த முதலாளிகள், நெருக்கடியான நிலையில் அவர்களுக்கு ஒருவேளை உணவளிக்கக்கூட முன்வரவில்லை. "வேலையிழந்த தொழிலாளிகளுக்கு சம்பளம் கொடுங்கள்" என்ற மோடியின் வேண்டுகோளை எந்த முதலாளியும் மதிக்கவில்லை. ஏன் என்று கேட்க மத்திய மாநில அரசுகளுக்குத் துப்பில்லை. மோடிக்காக விளக்கேற்றிய புண்ணியவான்கள், “வாடகை தராவிட்டால் வீட்டைவிட்டு வெளியேறு” என்று துரத்தினர். இவ்வளவுக்கும் மத்தியில் அக்கம் பக்கத்தினரின் தயவில் அரைப் பட்டினியோடு எத்தனை நாள் வாழ்க்கையைத் தொடர முடியும்? நிர்க்கதியான நிலையில் அல்லது மரணத்தின் தருவாயில் தனது உறவுகளைத் தேடுவது மனித இயல்புதானே. அந்த மனநிலைதான் இவர்களை சொந்த ஊரை நோக்கி படையெடுக்க வைக்கிறது.
அரசின் கட்டுப்பாடுகள், போலீசின் அடக்குமுறை ஆகியவற்றைக் கடந்து சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக தங்களின் உயிரையும் பணயம் வைக்கத் துணிகிறார்கள். சுட்டெரிக்கும் கோடை வெயிலில், காற்றோட்டமில்லாத சிமெண்ட் கலவை எந்திரத்தின் உருளைக்குள் அமர்ந்து 14 பேர் 1,380 கி.மீ. தூரம் பயணிக்கிறார்கள். "எப்படி உங்களால் முடிந்தது?" என்ற போலீசின் கேள்விக்கு, “எங்கள் பசியின் வெப்பத்தைவிட கூண்டுக்குள் வெப்பம் தாங்கிக் கொள்ளும் அளவுக்கே இருந்தது” என்று பதிலளிக்கிறார்கள்!
வயதான பெற்றோர், கைக்குழந்தைகளுடன் மூட்டை முடிச்சுகளையும் சுமந்து கொண்டு சாலைகளில் நடக்கிறார்கள். நடக்கும்போதே செத்து விழுகிறார்கள். லாரியில், ரெயிலில் அடிபட்டு சாகிறார்கள். இதையும் கடந்து செல்பவர்களை மாநில எல்லைகளில் தடுத்து நிறுத்தும் போலீசு, “புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் சென்று விடுங்கள்” என்று மிரட்டுகிறது. “சொந்த ஊரில் பிச்சை எடுக்கும் நிலை வந்தாலும் மீண்டும் இந்த ஊருக்குத் (டெல்லிக்கு) திரும்ப மாட்டேன். ச்சே...இதெல்லாம் ஒரு வாழ்க்கையா?”, “என்னவானாலும் சரி... இங்கிருந்து ஒரு அடி கூட நகர மாட்டேன்” என்று எதிர்த்து நிற்கிறார்கள்.
எங்கிருந்து வருகிறார்கள்?
இதுபோல ஆயிரம், பத்தாயிரம், லட்சம் பேர்களல்ல, கோடிக்கணக்கான மக்கள் உள்நாட்டிலேயே அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நம்ப முடிகிறதா? கொரோனாத் தொற்றும், ஊரடங்கும் இந்த உண்மையை நமக்கு உணர்த்தி இருக்கிறது. 2011-ம் ஆண்டின் தேசிய மாதிரி சர்வே, “1991-ல் 22 கோடியாக இருந்த புலம்பெயர் தொழிலாளிகளின் எண்ணிக்கை 2011-ல் 45.4 கோடியாக அதிகரித்திருக்கிறது” என்பதுடன், “2021-ல் இது 55 கோடியாக அதிகரிக்கும்” என்றும் மதிப்பிடுகிறது. 45.4 கோடி என்பது நாட்டின் இன்றைய மொத்த மக்கள் தொகையில் சுமார் 59% ஆகும். மேலும் இந்தியாவில் சொந்த நிலமுடைய விவசாயிகளின் எண்ணிக்கையை விட அதிகமானது. இவ்வளவு பெரிய மக்கள்திரள் எப்படி, எங்கிருந்து உருவாகிறது?
“இந்தியாவிலேயே அதிக கிராமப்புற மக்கள் வசிக்கும் மாநிலங்கள் உ.பி., பீகார். இவ்விரு மாநிலங்களில் இருந்துதான் அதிக புலம்பெயர் தொழிலாளர்களும் உருவாகிறார்கள். அடிக்கடி வறட்சிக்கு ஆளாகும் மராட்டியம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஆந்திரா ஆகிய மாநிலங்கள் இதற்கு அடுத்த இடத்தைப் பிடிக்கின்றன. சமூக, பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கிய மாநிலங்களாக அறியப்படும் சட்டீஸ்கர், ஜார்கண்ட், ஒரிசா ஆகிய மாநிலங்களும் இப்பட்டியலில் முக்கிய இடம் பிடிக்கின்றன” என்று 2011 தேசிய மாதிரி சர்வே விவரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களெல்லாம் ‘பீடா-வாயன்கள்’, ‘சங்கிக் கூட்டம்’… நாங்கள் ‘வீரத்தமிழர்கள்’ என்று எவரும் மார்தட்டிக் கொள்ள முடியாது. ஏனென்றால் ‘தன்மானத் தமிழர்’களிலும் 1.69 லட்சம் பேர் பல்வேறு மாநிலங்களில் புலம்பெயர் தொழிலாளிகளாக உள்ளனர். இதுவும்கூட சமீபத்தில் தமிழகம் திரும்ப விண்ணப்பித்தவர்களின் கணக்குதான். உண்மையான கணக்கு 10 லட்சத்திற்கும் அதிகம்.
புலம் பெயர்வின் காரணம் என்ன?
கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாக விளங்கிய விவசாயத்தை பேரழிவுக்கு உள்ளாக்கும் வகையில் நாடு பின்பற்றி வரும் தாராளவாத பொருளாதாரக் கொள்கைகள்தான் இதற்கு அடிப்படைக் காரணம். விவசாயத்தின் அழிவோடு அதனுடன் இணைந்த பல்வேறு சிறு, குறுந்தொழில்களும், கைத்தறி, நெசவு ஆகியவையும் படிப்படியாக அழிந்து போனது. இதனை நம்பியிருந்த திரளான மக்களும், நிலமற்ற கூலி - ஏழை விவசாயிகளும் வேறுவழியின்றி, வேலைவாய்ப்புக்காக நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்ந்தார்கள். தொடர் நட்டம், அதிகரிக்கும் இடுபொருள் செலவு ஆகியவற்றால் விவசாயத்திலிருந்து வெளியேறிய சிறு-குறு விவசாயிகளில் கணிசமானோரும் இப்பட்டியலில் இணைந்து கொண்டனர்.
2017-ம் ஆண்டின் பொருளாதார சர்வே, “2011-2016 வரையிலான 5 ஆண்டுகளில் ஆண்டுக்கு 90 லட்சம் பேர் என்ற அளவில் மாநிலங்களுக்கிடையில் புலம்பெயர்வது நடந்தது” என தெரிவிக்கிறது. அதாவது, அந்நிய முதலீடும், வளர்ச்சித் திட்டங்களும், தீவிர நகரமயமாக்கலும் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதற்கு நெம்புகோலாக இருக்கிறது என்பதுதான் இதன் உட்பொருள்.
கடந்த பத்தாண்டுகளில் ஜார்கண்ட், சட்டீஸ்கர், ஒரிசா மாநிலங்களின் கனிம வளங்களைக் கொள்ளையடிப்பதற்காக அந்நிய முதலீடுகள் தாராளமாக அனுமதிக்கப்பட்டது. இதற்கு எதிராகப் போராடிய பழங்குடி மக்களை துணைராணுவமும், போலீசும் அவர்களின் வாழ்விடங்களிலிருந்து துரத்தி அடித்தது. அந்த மண்ணின் மைந்தர்கள் சுமார் 5 லட்சம் பேர் இன்று புலம்பெயர் தொழிலாளிகளாக பிற மாநிலங்களில் சீரழிகின்றனர். வேறுவிதமாக சொல்ல வேண்டுமானால், அவரவர்களின் ‘பிறவிப்பயன்’, ‘தலைவிதியின்’ காரணமாக இவர்கள் உருவாகவில்லை. தனியார்மய- தாராளமய- உலகமய வினையினால் உருவாக்கப்பட்டவர்கள். எனவே ‘வளர்ச்சித் திட்டங்களை’ப் புறக்கணித்து விட்டு புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சனையைப் பேசவோ, புரிந்து கொள்ளவோ முடியாது.
நவீன கொத்தடிமைகளாய்...!
புலம்பெயரும் தொழிலாளர்களில் பெரும்பான்மையினர் பட்டியலின மக்களும், பழங்குடியினரும்தான் என்பதை 2011 சர்வே வெளிப்படையாக அறிவிக்கிறது. வடமாநில கிராமங்களில் இம்மக்களின் வாழ்க்கை எவ்வளவு சித்திரவதையானது என்பதை சமீப காலங்களில் அங்கு நடக்கும் பாலியல் வன்கொடுமை, சித்திரவதை, கொலை சம்பவங்கள் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். புலம்பெயரும் இடங்களில் இதுபோன்ற ஆபத்துகள் இல்லா விட்டாலும். வேறுவிதமான சித்திரவதைகளை இவர்கள் எதிர்கொண்டு தான் வாழ்கிறார்கள்.
புரோக்கர்கள் அல்லது ஒப்பந்ததாரர்கள் மூலமாக இடம்பெயரும் இவர்களுக்கு நிரந்தர குடியிருப்பு வசதி கிடையாது. பெரும்பாலும் தெருவோரங்களிலும், பணியிடங்களிலும் தங்கிக் கொள்கிறார்கள். சிலர் 5, 6 பேர் சேர்ந்து ஒருவீட்டை வாடகைக்கு எடுத்துக் கொள்கிறார்கள். பெரிய நிறுவனங்கள் என்றால் வளாகத்திற்குள் ஒரு 7*7 குடிசையோ, தகரக் கொட்டகையோ கிடைக்கும்.
பணிப் பாதுகாப்போ, உத்தரவாதமோ, சட்டரீதியான உரிமைகளோ இவர்களுக்குக் கிடையாது. உ.பி., பீகார் மாநிலங்களில் கிராமப்புற மக்களின் பிறப்புப் பதிவு விகிதம் முறையே 16% மற்றும் 1.8% என்ற அளவிலேயே உள்ளது. எனவே இங்கிருந்து வரும் புலம்பெயர் மக்களிடம் ஆதார் போன்ற முறையான அரசு ஆவணங்கள் இருப்பதில்லை. ஓரிடத்தில் வேலை முடிந்தால் அடுத்த இடத்திற்கு என்று நாடோடிகளாக ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். நிரந்தர முகவரி கிடையாது. எனவே எந்தவொரு மாநில அரசும் இவர்களை ஆவணப் படுத்துவதில்லை. அரசு மட்டுமல்ல, அரசியல் கட்சிகளும் இவர்களைப் புறக்கணித்தே வந்திருக்கின்றன. எனவே எந்த தொழிற்சங்கத்திலும் இவர்கள் ஒருங்கிணைக்கப்படவில்லை.
"இவர்களில் 70 சதவீதம் பேர் 16 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள். பெரும்பாலானவர்கள் மேல்நிலைக் கல்வியை தாண்டவில்லை. இவர்களின் சராசரி மாத வருமானம் 10,000 ரூபாய்க்குள் இருக்கிறது. இதில் 50% பேர் 5000 ரூபாய்க்கும் கீழாக சம்பாதிக்கிறார்கள்" என்கிறது 'அஜீவிகா' என்ற (புலம்பெயர் தொழிலாளர்களின் மத்தியில் செயல்படும்) தன்னார்வ அமைப்பு.
கார்ப்பரேட்களின் கவலை...!
விவசாயம், அரசு, அரசியல் கட்சிகள், அரசியல் சட்டம் என்று அனைத்தாலும் கைவிடப்பட்டு, அந்நியமான இடங்களில் அலைந்து திரியும் நாடோடி வாழ்க்கைக்குத் தள்ளப்பட்டுள்ள இந்தப் பெரும் மக்கள்திரள், நம் வளர்ச்சித் திட்ட முதலாளிகளுக்குக் கிடைத்த பெரும் வரப்பிரசாதம்.
நாளொன்றுக்கு 12 மணி நேர வேலை செய்ய வேண்டும். தேவைப்பட்டால் அதற்கு மேலும் வேலை செய்யத் தயாராக இருக்க வேண்டும். ஆனால் நாங்கள் கொடுப்பதுதான் சம்பளம். பிஎஃப், பயணப்படி, இ.எஸ்.ஐ., இன்சூரன்ஸ் எனக் கண்டதையும் கேட்டு எங்களைத் தொந்தரவு செய்யக்கூடாது! விபத்தில் கை, கால் ஊனமானால், இறந்தால் நாங்களாக மனமிரங்கிக் கொடுப்பதை வாயை மூடிக் கொண்டு வாங்கிக் கொள்ள வேண்டும்! கட்சி யூனியன், உரிமை என்று எவனும் எங்களிடம் சட்டம் பேசக் கூடாது! இவைதான் கார்பரேட் முதலாளிகள் தங்களின் முதலீடுகளுக்கு அரசுகளிடம் கேட்கும் ‘அமைதியான’ ‘பாதுகாப்பான’ பணிச்சூழல்!
இந்த ‘அமைதியான’ ‘பாதுகாப்பான’ பணிச்சூழலுக்கு புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்நிலைதான் மிகவும் பொருத்தமாக இருக்கிறது. இவர்களின் எண்ணிக்கை எந்தளவுக்கு அதிகரிக்கிறதோ அந்தளவுக்கு குறைந்த கூலியில் வேலை செய்ய ஆள் கிடைக்கும் என்பதுதான் கார்ப்பரேட்டுகளின் சூத்திரம். ஆகவேதான், “கிராமத்திலிருந்து வெளியேறுபவர்களின் வேகம் (ஆண்டுக்கு 90 லட்சம் என்ற அளவு) போதாது. இது மேலும் அதிகரிக்கப்பட வேண்டும்” என்று கார்ப்பரேட்டுகளின் கவலையைப் பிரதிபலிக்கிறது நிதி ஆயோக்.
சென்னை அதானியின் துறைமுக நிர்வாகம், தன்னிடமுள்ள 7000 புலம்பெயர் தொழிலாளிகளுக்கு ஊரடங்கு காலத்தில் சம்பளம் கொடுக்காததிற்கு கூறிய காரணம், “சம்பளம் கொடுத்தால் ஊருக்கு ஓடி விடுவார்கள். எங்களுக்கு தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுவிடும்” என்பதுதான். ரயில்வே முன்பதிவுக்கு “ஆதார் கட்டாயம்” என்பதும், நடந்து செல்பவர்களை வழிமறித்து “வந்த இடத்திற்கே மீண்டும் சென்று விடு” என்று போலீசு மிரட்டுவதும், வாகன வசதி கேட்டுப் போராடுவர்களை கண்ணீர்ப் புகை குண்டு வீசி விரட்டுவதும், “பசி பட்டினியுடன் சாலைகளில் யாரும் நடந்து செல்லவில்லை” என்று சொலிசிட்டர் ஜெனரல் உச்ச நீதிமன்றத்தில் புளுகுவதும், கண்டெய்னருக்குள் ஒளிந்து செல்பவர்களைத் துப்பறிந்து போலீசு கைது செய்வதும், கொரோனா தொற்றிலிருந்து இவர்களைக் காப்பாற்றும் கருணையினால் அல்ல. “அடிமைகள் ஊருக்கு ஓடி விடுவார்கள்” என்ற கார்ப்பரேட் கவலையில்தான்...
என்ன செய்யப் போகிறோம்?
உலக சந்தையைக் கைப்பற்றும் முதலாளித்துவப் போட்டியில் பொருள்களின் உற்பத்திச் செலவைக் குறைப்பது முக்கியமானது. இதனை மனித உழைப்பிற்கான ஊதியத்தைக் குறைப்பதன் மூலமாகவே முதலாளித்துவம் சாதித்துக் கொள்ள விரும்புகிறது. இதற்காக நவீன கொத்தடிமைகளான இந்த புலம்பெயர் தொழிலாளர்களை ரிசர்வ் பட்டாளமாக வைத்துப் பராமரித்து வருகிறது முதலாளித்துவம். வளரும், பின்தங்கிய நாடுகள் அனைத்திலும் இத்தகைய புலம்பெயர் தொழிலாளர்கள் திட்டமிட்டு வளர்க்கப்பட்டு வருகிறார்கள்.
நாடு முழுவதும் ஒரே ரேசன் கார்டு திட்டம், மூன்று மாதங்களுக்கு 5 கிலோ இலவச அரிசி - கோதுமை திட்டம், குடும்பத்திற்கு 1000 ரூபாய் சலுகை, இலவசக் காப்பீடு திட்டம் போன்ற அரசின் நலத் திட்டங்கள் அனைத்தும் இக்கொத்தடிமைகளை உயிருடன் தக்க வைப்பதற்கான திட்டங்கள் தவிர வேறில்லை. மோடியின் 5 ட்ரில்லியன் பொருளாதார வளர்ச்சிக் கனவும், 20 லட்சம் கோடி பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களும், கார்பரேட் நலனை குறிக்கோளாகக் கொண்டவை. இவற்றால் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறையப் போவதில்லை... மேலும் அதிகரிக்கவே செய்யும்.
நலிந்து கிடக்கும் விவசாய, பொருளாதாரப் பிரச்சனைகளின் தீர்வில்தான் புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சனைக்கான தீர்வும் இருக்கிறது. ஆனால் உணவுப் பொட்டலத்தையும், தண்ணீர் பாட்டிலையும் கொடுத்து இவர்களை ரயிலேற்றி விட்டால் பிரச்சனை முடிந்துவிடும் என்பதுபோல அனைத்து அரசியல் கட்சிகளும் நாடகமாடுகின்றன. “தங்களது வேலைவாய்ப்பைப் பறிக்க வந்த அந்நிய ஆக்கிரமிப்பாளர்கள்” என்று இனவாதம் பேசும் கட்சிகள் பிரச்சனையைத் திசைதிருப்புவதன் மூலம் கார்பரேட் நல அரசியல் - பொருளாதாரக் கொள்கைகளை மூடி மறைக்கிறார்கள்.
காட்டுமிராண்டி கால சித்தாந்தங்களையும், ஏகாதிபத்திய அடிமைப் புத்தியும் கொண்ட ஆர்.எஸ்.எஸ். கும்பலால் இப்பிரச்சனையைத் தீர்க்கவே முடியாது. நவீன அறிவியல் சிந்தனைகளையும், சமூக அறிவியலையும் தன்னகத்தே கொண்டுள்ள மார்க்சியக் கண்ணோட்டத்தால் மட்டுமே இது போன்ற சமூகப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்.
நேற்றைய கூலி ஏழை விவசாயிகள்தான் இன்றைய புலம்பெயர் தொழிலாளர்கள். இன்றைய சிறு - குறு விவசாயிகளும், சிறுதொழில் புரிவோரும், வேலையில்லாப் பட்டதாரி இளைஞர்களுமாக இருக்கும் நாம் நாளை இந்தப் பட்டியலில் இணையப் போகிறோமா? அல்லது மோடி அரசு அமுலாக்கி வரும் நாசகார பொருளாதாரக் கொள்கையை மோதி, வீழ்த்தும் போராட்டத்தில் இணையப் போகிறோமா? நாம் எடுக்கும் முடிவில்தான் நமது எதிர்காலம் இருக்கிறது!
- தேனி மாறன்