கறுப்பு மை குறிப்புகள் 10

"அணு உலை இருந்தா நாங்க வாழ முடியாது. இனி எங்களுக்கு அடுத்தால வர்ற சந்ததியெல்லாம் கைகாலு ஊனப்பட்டு செத்துப் போகணும். அணு உலை இல்லாம வாழ்றதுக்கு எங்களுக்கு ஒரு வாழ்க்கை வேணும். இந்த கடலுக்குள்ள நாங்க எப்ப வேணாலும் போய் சம்பாதிக்கலாம். இது யாரோட சொந்தக் கடலும் இல்ல; எங்களோட சொந்தக் கடலும் இல்ல. இத யாரும் கட்டவும் இல்ல. யாரும் தண்ணி ஊத்தவும் இல்ல. அணு உலையை மூடுறதுதான் எங்க ஒரே கோரிக்கை. அணு உலையை மூடினா போராட்டத்தை உடனே கைவிடத் தயாரா இருக்கோம்...''

– "யு ட்யூப்'பில் காணக்கிடைக்கும் கூடங்குளத்திலுள்ள சிறுமியின் போர்க் குரல் இது!

சாதி, மத, பாலினப் பாகுபாடுகளற்ற மக்கள் திரட்சி எத்தகையதாய் இருக்கும் என்பதற்கும்; அநீதிக்கும் சுரண்டல்களுக்கும் எதிரான மக்கள் போராட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் வரலாற்றுக் கதைகளாய் இல்லாமல் வாழும் உதாரணமாகத் திகழ்கின்றனர் கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்புப் போராட்டக்காரர்கள். மக்களின் வாழ்வுரிமைப் போராட்டங்களை தேச நலனுக்கு எதிரான தீவிரவாதச் செயலாக இட்டுக்கட்ட முயலும் இந்திய அரசின் சூழ்ச்சியையும், தங்களின் பகட்டு வாழ்விற்காக அடித்தட்டு மக்களின் உயிரையும் வாழ்வாதாரங்களையும் காவு வாங்க எந்நேரமும் துணிந்திருக்கும் முதலாளித்துவ சமூகத்தின் கயமையையும் புரிந்து கொள்ள  எண்ணற்ற எடுத்துக்காட்டுகளைப் பட்டியலிட முடியும்.

காஷ்மீர் மக்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டம், ராணுவச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரும் வடகிழக்கு மாநிலங்களின் கிளர்ச்சி, தெலுங்கானா மக்களின் தனி மாநிலப் போராட்டம், நர்மதா அணைக்கெதிரான கிராம மக்களின் திரட்சி, பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து வனத்தைக் காப்பாற்ற ஆயுதமேந்திய தண்டகாரண்ய பழங்குடிகளின் கோபம், டாடா நானோ கார் தயாரிப்பு நிறுவனத்திற்கு விவசாய நிலங்களை தாரை வார்த்த மேற்கு வங்க அரசுக்கு எதிராக நந்திகிராம் மக்கள் நிகழ்த்திய போர், நிலத்தடி நீரை உறிஞ்சியெடுத்த "கோக்' நிறுவனத்தை விரட்டியடித்த கேரள கோச்சிமடா மக்களின் உறுதி, மேற்கு வங்கத்திலும் கேரளாவிலும் அணு மின் நிலையங்களை விரட்டியடித்த அம்மாநில மக்களின் வேகம் என ஆளும் வர்க்கத்திற்குப் பேரடி கொடுத்த அடித்தட்டு மக்களின் எத்தனையோ போராட்டங்கள் சுதந்திர இந்தியாவின் வரலாற்றை நிறைத்திருக்கின்றன; நிரப்பிக் கொண்டிருக்கின்றன.

அரசதிகாரம் மற்றும் ஆதிக்கத்திற்கெதிரான அடித்தட்டு மக்களின் இப்போராட்டங்கள் ஒவ்வொன்றும் குறிப்பிடத்தகுந்தவை, ஒன்றோடொன்று ஒப்பிட முடியாதவை என்றபோதும் இவை அனைத்திலுமிருந்து வேறுபட்டு, சுதந்திர இந்தியாவின் மிக முக்கியமான இயக்கமாக உருவெடுத்திருக்கிறது கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்புப் போராட்டம். பாகுபாடுகளற்று மக்களை ஒன்றிணைத்து அரசதிகாரத்தின் ரகசியங்களை கட்டுடைத்து கேள்வி கேட்கும் துணிவை அவர்களுக்கு வழங்கி, ஜனநாயகத்தை நிலைநாட்டும் ஓர் இயக்கம் இந்நாட்டின் 64 ஆண்டுகாலத் தேவையாக இருந்து வருகிறது. அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் அத்தேவையை மெல்ல மெல்ல ஈடேற்றுகிறது என்று சொல்வதற்கான வலுவான காரணங்களை நாம் பட்டியலிட முடியும். ஒரு சமூக இயக்கம் எப்படி இயங்க வேண்டுமென்பதற்கும், ஒரு குறிப்பிட்ட பிரச்சனையை மய்யப்படுத்தி அவ்வியக்கம் செயல்பட்டாலும் எத்தகையை சமூக மாற்றங்களை அது விதைக்க வேண்டுமென்பதற்கும் கூடங்குளம் போராட்டம் ஓர் எடுத்துக்காட்டு என்றால் அது மிகையல்ல.   

மருத்துவ மாணவர்களின் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான வெறியாட்டங்கள், அன்னா அசாரேவின் ஊழல் எதிர்ப்பு பட்டினிப் போராட்டங்கள் போன்ற ஆதிக்கவாதிகளின் அபத்த நாடகங்களை எல்லாம் இன்னொரு சுதந்திரப் போராக சித்தரிக்கும் பார்ப்பன ஊடகங்கள், அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி, கூடங்குளம் பகுதி மக்கள் கடந்த ஆறு மாத காலமாக நடத்தி வரும் எழுச்சிமிக்கப் போராட்டத்தை அந்நிய சதியென்றும் அறியாமை பிதற்றல் என்றும்  சொல்லி அடக்க முயல்கின்றன. வேற்றுமைகளைக் கடந்த ஒற்றுமையுணர்வாலும், ஈடற்ற மன உறுதியாலும் மிக முக்கியமாக தங்களை சூழ்ந்திருக்கும் பிரச்சனை குறித்த ஆழ்ந்த அறிவாலும் அந்த அவதூறுகளையெல்லாம் புறந்தள்ளி மாறாத தீர்க்கத்தோடும் போராட்டக் களத்தில் நிற்கிறார்கள் கூடங்குளம் மக்கள். இதுவே அவர்களது அடித்தளம்.

இந்திய அரசு, இந்திய அணுசக்தித் துறை மற்றும் பார்ப்பன ஊடகங்கள் என இவை மூன்றும் அணு மின்சாரத்தை தேசியத்தின் குறியீடாகவும், அதை எதிர்ப்பவர்களை பயங்கரவாதிகளாகவும் சித்தரித்து வருகின்றன. நாட்டின் வளர்ச்சியும் பாதுகாப்பும் அணு ஆயுதங்களாலேயே சாத்தியப்படும் என்ற பொய்யை நிலைநாட்டி கோடிகளை அதில் கொட்டிக் கொள்ளையடிக்கின்றன. அமெரிக்காவுடன் ரகசிய ஒப்பந்தம் கையெழுத்தான செய்திகள் வெளியாகும் போது, அது என்னவென்று தெரிந்து கொள்ளவோ, கேள்வி கேட்கவோ எவரும் துணிவதில்லை. எத்தனையோ ரகசிய ஒப்பந்தங்கள் பல கோடி ரூபாயை சுருட்டிய, பல கோடி மக்களின் வாழ்வை பலிகொண்ட ரகசியங்களாக கோப்புகளில் உறங்க, அவை என்னவென்று அறிந்து கொள்ள ஊடகங்கள் கூட முயன்றதில்லை.

Udayakumar_620

2008 ஆம் ஆண்டு இந்திய அரசு கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக ரஷ்யாவுடன் செய்து கொண்ட ரகசிய ஒப்பந்தத்தின் கூறுகளைப் போராட்டக் களத்தில் நின்று முதன் முதலாக உரக்கக் கேட்டது அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம். இது, நாட்டின் பாதுகாப்பு தொடர்பான கேள்வி என இந்திய அரசு மறுத்த நிலையில், அந்த ஒப்பந்தத்தின் 13 ஆவது பிரிவு, "கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஏதேனும் விபத்து நேர்ந்தால் சம்பந்தப்பட்ட ரஷ்ய நிறுவனம் எவ்வகையிலும் பொறுப்பேற்று இழப்பீடு தராது' என்ற உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம். ரஷ்ய நிறுவனத்திற்கு பதிலாக இந்திய அரசு இழப்பீடு கொடுக்கும் என விஞ்ஞானிகள் சப்பைக் கட்டு கட்டிய போது, எங்கள் வரிப்பணத்தில் எங்களுக்கே இழப்பீடா? உயிர்க் கொல்லி அணு உலைகளை கொண்டு வந்து வைக்கும் ரஷ்ய நிறுவனம் அந்த பொறுப்பைக் கூட ஏற்காதா? என கேள்விகளால் உலுக்கினர் கூடங்குளம் மக்கள்.

இதுதான் ஒரு சமூக  இயக்கத்தின் பலமாக இருக்க முடியும். எதற்காகப் போராடுகிறோமோ அது குறித்து முழுமையாக மக்களுக்கு புரிதலை உண்டாக்க வேண்டியதும், பிரச்சனையின் அடி முதல் நுனி வரை கற்பிக்க வேண்டியதும் ஒவ்வொரு சமூக இயக்கத்தின் கடமையாகும். சாதி ஆதிக்கத்தை எதிர்ப்பவர்கள் இந்து மதத்தை எதிர்ப்பதில்லை; மதங்களே பாலினப் பாகுபாட்டின் ஆணிவேர் என்பதை பெண்கள் அமைப்புகள் கற்பிப்பதில்லை;“ சாதியால் பிரிந்து கிடக்கும் மக்களை மொழியால் ஒன்றிணைக்க முடியாது என்பது தமிழ்த் தேசியவாதிகளுக்குப் புரிவதில்லை; சாதியை தகர்த்தப் பின்னர்தான் வர்க்கப் போராட்டங்கள் அர்த்தப்படும் என பொதுவுடைமைவாதிகள் ஏற்பதில்லை. எனவேதான் இங்கே எல்லா வகையான ஒடுக்குமுறைகளும் உயர்ந்து கொண்டே போகின்றன.

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களான சுப. உதயகுமாரும், புஷ்பராயனும் மக்களை தங்களின் பிரதியாகவும் எண்ணற்றோரை தலைமைப் பண்புமிக்கவர்களாகவும் வார்த்தெடுத்திருக்கின்றனர். ஒரு வேளை இவர்கள் கைது செய்யப்பட்டால், இப்போராட்டத்தை வழி நடத்துவதற்கான இரண்டாம் மூன்றாம் கட்டத் தலைவர்கள் தயார் நிலையில் இருக்கின்றனர். இத்தனைத் தீர்க்கமும் தொலைநோக்குப் பார்வையும் கொண்ட சமூக இயக்கத்தை, இயக்க அரசியலின் முன்னோடிகள் கூட சாதிக்கவில்லை. மக்கள் பணியாற்ற களத்திற்கு வரும் இயக்கங்கள் அரசியலையே தங்களின் எதிர்காலமாக வரித்துக் கொள்வதால், சமூக இயக்கங்களால் சமூக மாற்றங்கள் நிகழ வாய்ப்பற்றுப் போய்விட்டது.

"ஒன்றுமறியாத மக்களிடம்  அணுஉலை வெடிக்கும் என்ற அச்சத்தைக் கிளப்பி மக்களைத் தூண்டிவிடுகிறார்' என மத்திய அமைச்சர் நாராயணசாமியும் அணுமின் நிலைய விஞ்ஞானிகளும் வைக்கும் குற்றச்சாட்டை சுப.உதயகுமார் வன்மையாகக் கண்டிருக்கிறார்.  மக்களை  ஒன்றுமறியாதவர்களாக சித்தரிப்பதை அவர் எதிர்க்கிறார். அணு விஞ்ஞானிகளை கேள்வி கேட்கும் அளவிற்கு அறிவோடும் துணிவோடும்  மக்கள் இருக்கிறார்கள் எனில், அதற்குக் காரணம் இவ்வியக்கமும் அதன் தலைமையும்! வெளிப்படைத்தன்மை, கல்வி மற்றும் பங்கேற்பு இவை மூன்றுமே இவ்வியக்கத்தின் முதுகெலும்பு.

இடிந்தகரையில் இருக்கும் பட்டினிப் போராட்டப் பந்தலில் மக்கள் வெறுமனே உறங்கிக் கிடப்பதில்லை. மாறாக, அணு மின் எதிர்ப்பு விஞ்ஞானிகளும், போராளிகளும் அறிவியல் ரீதியான உண்மைகளை மக்களுக்கு நாள்தோறும் விளக்கி வருகின்றனர். எழுச்சிப் பாடல்கள், உரைகள், குழந்தைகளின் மழலைப் பாடல்கள் என களைகட்டி நிற்கிறது பந்தல். கடந்த டிசம்பர் 6 மதநல்லிணக்க நாளாகக் கொண்டாடப்பட்டது. அம்பேத்கர் நினைவு நாள் என்பதால் சாதி எதிர்ப்பு உரைகள் நிகழ்த்தப்பட்டன.  குழந்தைகளை தூளிகளில் தூங்கச் செய்து பீடி சுற்றுகின்றனர் பெண்கள். கைகள் பீடி சுற்ற, செவிகள் உரையாளர்களின் கருத்துகளை உள்வாங்குகின்றன. பேரணி, ஊர்வலம் என்றால் யாரும் அழைக்காமலேயே குறைந்தபட்சம் பத்தாயிரம் பேர் திரள்கின்றனர். இதில் 80 சதவிகிதம் பேர் பெண்கள். பீடி சுற்றி கிடைக்கிற பணத்தில் ஒரு பங்கை போராட்டத்திற்கு கொடுக்கின்றனர். 

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு இயக்கத்திற்கு பெண்கள்தான் ஆணிவேர். குடும்பங்களில் ஆண்களை மீறி கருத்து சொல்லியோ, பொதுப் பிரச்சனைகளில் பங்கேற்றோ பழக்கமற்ற கூடங்குளம் பகுதி பெண்கள் இன்று எத்தனை நாள் பட்டினி கிடக்க வேண்டியிருந்தாலும் தயாராக இருக்கிறார்கள். எவ்வளவு தூரம் நடக்க வேண்டுமென்றாலும் எழுந்து முன் நிற்கிறார்கள். செப்டம்பர் மாதத்தில்  12 நாள் தொடர் பட்டினிப் போராட்டத்தில் அதிகளவில் பந்தலை நிறைத்தவர்கள் பெண்களே! புகுஷிமா விபத்தைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் பரவிய அச்சத்தை சுயநலத்திற்காகவோ அரசியலுக்காகவோ பயன்படுத்திக் கொள்ளாமல், அணுமின் நிலையங்களால் உண்டாகக் கூடிய ஆபத்துகள் குறித்து கற்பிக்கக் கிடைத்த வாய்ப்பை மிக நேர்மையாகப் பயன்படுத்தத் தொடங்கினர் சுப. உதயகுமாரும் புஷ்பராயனும்.

வாழ்வாதாரத்தையும் உயிரையும் தலைமுறைகளையும் காக்க வேண்டுமென்ற பெண்களின் துடிப்பை கூர்தீட்டியதில் இவர்களின் பங்கு அளப்பரியது. ""முன்பெல்லாம் அணு உலைகளின் ஆபத்து குறித்துப் பேசினால் ஆண்கள் அடிக்க வருவார்கள். பெண்கள் வேடிக்கை பார்ப்பார்கள். இப்போது பெண்கள் மத்தியில் அய்ம்பதிற்கும் மேற்பட்ட சிறந்த பேச்சாளர்கள் உருவாகிவிட்டனர்'' என்கிறார் புஷ்பராயன். உள்ளாட்சி நிர்வாகம் பெண்களுக்கு வசப்பட்டது என்ற உண்மையைப் புரிந்து கொண்டு இப்போராட்டத்தை எடுத்துச் செல்லும் நிர்வாக ஆளுமையை பெண்களிடம் ஒப்படைத்தது இவ்வியக்கத்தின் பெரும் பலமாக அமைந்துவிட்டது.

தமிழக அரசின் தீர்மானத்தை மீறி அணுமின் நிலையத்திற்குள் நுழைய முற்பட்ட தொழிலாளர்களை முற்றுகைப் போராட்டம் நடத்தி தடுத்து நிறுத்தினர் பெண்கள். போராட்டப் பந்தலில் இரவு பொழுதில் காவல் காக்கிறார்கள். பெண்களின் மன உறுதி, உடல் உறுதி மற்றும் அறிவின் வீச்சை ஆண்கள் புரிந்து கொண்டு விட்டனர். காலை 9 மணி தொடங்கி மாலை அய்ந்து மணி வரை போராட்டப் பந்தலில் இருக்கும் பெண்களுக்கு ஆதரவாக வீட்டு வேலைகளில் பங்கேற்கின்றனர் ஆண்கள். குடித் தகராறுகளும் குடும்பச் சண்டைகளும் வெகுவாகக் குறைந்துவிட்டதை உறுதி செய்கிறார், அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் உறுப்பினரான நாகர்கோயிலைச் சேர்ந்த லிட்வின். 

கடந்த நவம்பர் மாதம் பத்திரிகையாளர்களை சந்திப்பதற்காக எட்டு பெண்கள் தனியாக சென்னை வந்தனர். அவர்களை காவல்துறை கைது செய்து சில மணி நேரத்தில் விடுவித்தது. மறுநாள் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இப்பெண்கள் பதிலளித்த விதம் பிரச்சனை குறித்த அவர்களது ஆழ்ந்த புரிதலையும் ஈடுபாட்டையும் வெளிப்படுத்தியது.
""உலகம் முழுக்க 400 அணுமின் நிலையங்கள் இருக்கின்றன. ஆனால், உலகத் தேவையில் வெறும் 7சதவிகித மின் தேவையைத்தான் அவை நிறைவு செய்கின்றன. இந்தியாவில் வெறும் 1.5 சதவிகித மின்சாரத்தைதான் அணு உலைகள் கொடுக்கின்றன. இந்த சொற்ப மின்சாரத்திற்காக மக்கள் உயிரை ஏன் பணயம் வைக்க வேண்டும்? காற்றாலை, சூரிய ஒளி, சமையல் கழிவு போன்ற எத்தனையோ மாற்று வழிகளில் மின்சாரம் தயாரிக்க முடிகிறபோது அணு உலைகள் எதற்கு? அங்கே அணுகுண்டுகள் தயாரிக்கப்படுவதாக நாங்கள் சந்தேகப்படுகிறோம். ஒரு விஷயத்தை நீங்கள் புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள். அணு உலைகள் வெடித்தால் நாங்கள் உடனே சாவோம்; நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக சாவீர்கள். உங்களுக்கும் சேர்த்துதான் நாங்கள் போராடுகிறோம்'' என்றனர்.

விபத்து நடக்குமெனத் தெரிந்தே அணுமின் நிலையத்திற்குள் விஞ்ஞானிகள் எப்படி வேலை செய்வார்கள் என்ற கேள்விக்கு, சற்றும் யோசிக்காமல், ""அய்யா போபாலில் விஷவாயு கசிந்த போது, டவ் கம்பெனி நிர்வாகி ஆண்டர்சன் அங்கிருந்துதான் தப்பித்துச் சென்றார். அவரை இன்று வரையிலும் பிடிக்க முடியவில்லை. நிலம், நீர், காற்று எல்லாம் நஞ்சாகி, உடல் ஊனமுற்று தலைமுறைகள் தாண்டி அவதிப்படுவது மக்கள்தான். கூடங்குளம் அணுமின் நிலையத்திற்குள்ளே ஹெலிபேட் இருக்கிறது. ஒன்றரை கிலோ மீட்டரிலிருந்து 30 கி.மீ வரை குடியிருக்கும் லட்சக்கணக்கான மக்கள் எங்கே போவார்கள்?'' என்று விளக்கமளித்தனர்.  உடலரசியலே சமூக விடுதலையைப் பெற்றுத் தரும் என்ற பெண்ணிய முழக்கத்தை மாற்றி, சமூக விடுதலையே உடல் ரீதியாகவும் பெண்களை விடுவிக்க முடியும் என்பதை கூடங்குளம் போராட்டம் நிரூபித்திருக்கிறது. 

பெண்கள் மட்டுமல்லர், குழந்தைகளும் வியப்புறும் அளவிற்கான விழிப்புணர்வை அடைந்துள்ளனர். ஜனநாயக முறையிலான மென்முறைப் போராட்டங்கள் என்பதால் குழந்தைகள் மிக வசதியாக தங்களின் தார்மீக பங்களிப்பை இங்கே செலுத்துகின்றனர். இக்கட்டுரையின் தொடக்கத்தில் உள்ள சிறுமியின் அறிவையும் பொறுப்புணர்வையும் கூடங்குளம் பகுதியை எல்லா சிறுவர் சிறுமியிடமும் பார்க்க முடிகிறது. "யு ட்யூப்' காட்சியில், அந்த சிறுமி மேலும், ""அணு உலை வேணும்னு சொல்ற எல்லோரும் இங்க வந்து இருங்க. அப்துல் கலாமுக்கு நாங்க வீடு எடுத்து தர்றோம். மாணவர்கள் பாதுகாப்பு கொடுக்குறோம். மன்மோகன் சிங், அவரோட குடும்பம், நாராயணசாமி எல்லோரையும் இங்க வந்து இருக்கச் சொல்லுங்க. அணு உலைல தான் கரெண்ட் எடுக்கணும்னு இல்ல. காற்றாலைல இருந்து எடுக்கலாம். முன்னெல்லாம் நாங்க கரெண்ட்லயா இருந்தோம். லாம்ப் வச்சுதான் இருந்தோம். அணு உலை எங்களுக்கு வேணாம். அதை மூடும் மட்டும் நாங்கள் போராடுவோம்'' என்கிறார்.

கூடங்குளம் அணுமின் நிலைய போராட்டம் தீவிரமடைந்த இந்த ஆறு மாதங்களில் அப்பகுதியில் நிகழ்ந்திருக்கும் சமூக மாற்றங்கள், வெறும் உணர்ச்சிப் பீறிடல் அல்ல என்பதை உணர்த்துகின்றன. கூடங்குளமும் இடிந்தகரையும் சாதி ரீதியாக பிளவுபட்டுக் கிடந்த கிராமங்கள். கூடங்குளத்தின் நாடார்கள் இடிந்தகரையின் மீனவ மக்களான பறவர்களோடு கொண்டிருந்த பகையில் கொலைகள் கூட நடந்திருக்கின்றன. இழிவாகப் பேசுவதும் சண்டைக்கு நிற்பதும் அன்றாட நிகழ்வுகளாக இருந்தன. கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்புப் போராட்டங்கள் 1988 ஆம் ஆண்டே தொடங்கிவிட்டன என்றாலும் மக்கள் மனதில் வேரூன்றியிருந்த சாதிய வெறுப்புணர்வு அவர்களை ஒன்றிணைய விடாமல் தடுத்தது.

kudanku_620

கடலில் கலக்கப்படும் அணுக் கழிவுகளால் மீன்கள் விஷமாகி செத்தால் மீனவர்கள்தானே பாதிக்கப்படுவார்கள் என கூடங்குளம் நாடார்கள் அதை ஒரு பொருட்டாகவே மதியாமல் இருந்தனர். வேற்று சாதியைச் சேர்ந்தவர்கள் கொத்துக் கொத்தாக செத்து விழுந்தாலும் சாதி வீரியத்திற்கு அது தீனிதானேயொழிய துயரமல்ல. வேலைவாய்ப்புத் தொழில் வளம், கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடாக பெருந்தொகை போன்ற மயக்கும் வாக்குறுதிகளை நம்பி கூடங்குளம் மக்கள் ஆபத்தை புறந்தள்ளினார்கள். இடிந்தகரை மீனவர்கள் எதிர்க்கிறார்கள் என்பதாலேயே கூடங்குளம் நாடார்கள் தங்களின் ஆதரவை இருமடங்காக்கினர். அணுமின் எதிர்ப்பாளர்கள் ஊருக்குள் நுழைந்தால் விரட்டியடிக்கப்பட்டனர்.

1997 ஆம் ஆண்டு அணுமின் நிலைய கட்டுமானப் பணிகள் தொடங்கிய போது, கூடங்குளம் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. கட்டுமானத்திற்கு கடல்மணலும் தரமற்ற பொருட்களும் பயன்படுத்தப்பட்டதை கண்கூடாகப் பார்த்தனர். 2005 ஆம் ஆண்டு மின் தயாரிப்பைத் தொடங்கும் திட்டத்தோடு முழு வீச்சோடு இயங்கி 75 சதவிகித பணிகள் நிறைவடைந்த நிலையில்தான் 2004 இல் சுனாமி தாக்கியது. அதன் பின்னர் கட்டுமானப் பணிகளின் வேகம் குறைந்துவிட்டது. 2007 வரையிலும் கூட அணுமின் நிலையம் மீனவர்களின் பிரச்சனை மட்டுமே; அதனால் தங்களுக்கு எந்த பாதிப்புமில்லை என்றுதான் 80 சதவிகித மக்கள் நம்பிக் கொண்டிருந்தனர். ஏக்கருக்கு ரூ. 300 முதல்  600 வரை கொடுத்துவிட்டு அமைதியானது நிர்வாகம். 4000 ஏக்கர் நிலங்களை அற்பக் காசுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு மாய நல்வாழ்வுக்கு காத்திருந்தனர்.

அடுத்தடுத்த ஆண்டுகளில் அவர்களின் எண்ணமும் நம்பிக்கையும் சிதைந்தது. அணுமின் நிலையத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் பறந்தன.
புகுஷிமா விபத்தைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்தில் அணுமின் நிலையம் சார்பில் "தினகரன்' நாளிதழின் கன்னியாகுமரி பதிப்பில் ஒரு விளம்பரம் வெளியானது. அணு உலையில் விபத்து உண்டானால் என்ன செய்ய வேண்டுமென விளக்கிய அந்த விளம்பரம் – திருநெல்வேலி பதிப்பில் வெளியாகாமல் கன்னியாகுமரி பதிப்பில் வெளியிடப்பட்டது – மக்களுக்கு பெருத்த சந்தேகத்தை உண்டாக்கியது. இந்த விளம்பரம் கூடங்குளம் மக்கள் மத்தியில் அச்சத்தைப் பரவச் செய்ய, ஆகஸ்ட் 11 ஆம் தேதி மக்கள் ஒன்று கூடத் தொடங்கினர். அதே நேரத்தில் இடிந்தகரையிலும் மக்கள் திரளத் தொடங்கினர். ஏற்கனவே களப்பணியாற்றிக் கொண்டிருந்த உதயகுமாருக்கு மக்களின் இந்த தன்னெழுச்சி புதிய வேகத்தை கொடுக்க, ஆகஸ்ட் 16 ஆம் தேதி எட்டு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வர பட்டினிப் போராட்டத்தை இடிந்தகரையில் நடத்தினர்.

கதிர்வீச்சுக்கும் இயற்கைச் சீற்றங்களுக்கும் மனிதர்களில் வேறுபாடில்லை. உடல் உருக்குலைந்து தலைமுறைகள் சிதைவதையும் வாழும் இடத்தையும் வாழ்வாதாரங்களையும் விட்டு எங்கோ அகதிகளாகத் திரிய நேரும் துயரையும் உணர்ந்த வேளை அங்கே பாகுபாடுகள் ஆட்டங்கண்டுவிட்டன. பெரும்பான்மை நாடார் மற்றும் பறவர்களும் சிறுபான்மை தலித்களும் முஸ்லிம்களும் ஒரே வீரியத்தோடு களத்தில் நிற்பதால் கூடங்குளம் போராட்டம் உலகளவிலான கவனத்தைப் பெற்றிருக்கிறது.

ஈழத் தமிழர் படுகொலை, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல், முல்லைப் பெரியாறு போராட்டம், மூவர் மரண தண்டனை, "தானே' புயல் தாக்குதல் என எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே காங்கிரஸ் எடுத்து வருகிறது. மேற்குறிப்பிட்ட எந்தப் பிரச்சனைக்கும் சாதி, மத, பாலினப் பாகுபாடுகளைக் கடந்து மக்கள் ஒன்றிணைந்து நிற்கவில்லை. "அந்தப் பிளவைத் தான் கூடங்குளத்திலும் மத்திய அரசு எதிர்பார்த்தது. பட்டினிப் போராட்டமாகட்டும் பேரணியாகட்டும் அறத்தோடும் நெறியோடும் திரண்டு நிற்கும் மக்களாலும் அறிவாற்றலும் துணிவும் கொண்ட தலைமையாலும் அணுசக்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு பின்னடைவை உண்டாக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியடைகின்றன.

"தினமலர்' போன்ற கைக்கூலிகளை வைத்து மத்திய அரசும், அணுசக்தித் துறையும் அவதூறுகளை கட்டவிழ்த்தாலும் கூடங்குளம் மக்கள் அவற்றை இடக்கையால் புறந்தள்ளி தங்களின் போராட்டப் பாதையில் முன் நடக்கின்றனர். ஆறு மாதங்களுக்கு முன்பு வரையிலும் அணுக் கொள்கை குறித்தும் அணுமின் நிலையங்களின் செயல்பாடுகள் குறித்தும் கேள்வி எழுப்புவது பெருங்குற்றமாகவே இருந்து வந்தது. கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்கு அருகே வசிக்கும் மக்கள் உடல் மற்றும் மன ஊனங்களோடு பிறப்பதாக பல ஆண்டுகளாக மருத்துவர் புகழேந்தி ஆதாரங்களோடு கூறி வந்தார் என்ற போதும் தார்மீக அடிப்படையில் கூட எந்த பதிலையும் அளித்ததில்லை கல்பாக்கம் அணுமின் நிலையம்.

அக்குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கருத்துக் கேட்கவோ பேட்டி காணவோ முற்பட்டாலும் நிர்வாகத்தை தொடர்பு கொள்ள முடியாது. அணுமின் நிலைய அதிகாரிகள் பொது மக்களின் அய்யங்களுக்கோ ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கோ பதில் அளிக்க வேண்டிய அவசியமற்ற, இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் இந்திய ராணுவத்திற்கு இணையான அதிகாரங்களைக் கொண்டவர்களாகவே நடந்து கொண்டனர். அந்த சர்வாதிகாரத்தைத் தகர்த்து அணுசக்தித் துறையின் குடுமியைப் பிடித்து வீதிக்கு இழுத்து வந்திருக்கிறது கூடங்குளம் போராட்டம்.

அறிவியல் தொழில்நுட்ப விஷயங்கள் மக்களின் அறிவுக்கு எட்டாதவை என அணு விஞ்ஞானிகள் ஆடி வந்த நாடகத்தை சுப.உதயகுமார் முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறார். விஞ்ஞானிகளுக்கு இணையான அல்லது அதற்கும் மேலான அறிவோடும் தரவுகளோடும் அவர் விஞ்ஞானிகளோடு நேரடி விவாதங்களில் அணு எதிர்ப்பு வாதங்களை முன் வைக்கிறார். அணுமின் நிலையங்கள் விஷயத்தில் இந்திய அணு விஞ்ஞானிகளை அணுசக்தி குறித்த உண்மைகளால் துளைத்தெடுக்கும் உதயகுமார், கல்வி ரீதியாக மட்டுமின்றி இயக்க ரீதியாகவும் தன் அறிவை வளர்த்துக் கொண்டவர். அதனாலேயே படித்தவர்கள் கூட புரிந்து கொள்ளத் திணறும் அணுமின்சாரம் பற்றி பாமர மக்களுக்கு எளிமையாகப் புரிய வைக்க அவரால் முடிந்திருக்கிறது.

கூடங்குளம் மக்கள் உறுதி குலையாமல் களத்தில் நின்றதால் அணுமின் நிலைய தரப்பிலிருந்து பல உண்மைகள் அவர்களது வாயாலே வெளிவரத் தொடங்கின. கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருப்பதாகவும் பராமரிப்பிற்காக மட்டும் மாதம் எட்டு கோடி ரூபாய் செலவு செய்யப்படுவதாகவும் சொன்னார்கள்.

அணுமின் நிலைய நிர்வாகம் 14 ஆயிரம் கோடி கூடங்குளத்தில் முதலீடு செய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டதும், தமிழக பத்திரிகையாளர்களின் மிக முக்கியமான அக்கறையாக அது மாறியது. இந்த அறிவிப்பு வந்த பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்புகளில், 14 ஆயிரம் கோடி வீணாகிறதே என்ற கேள்வி முக்கியமானதாக மாறியது. பொது மக்களுக்கும் இதே கேள்வி இருக்கக் கூடும். ""2ஜி அலைக்கற்றை ஊழல், காமன்வெல்த் ஊழல், ஆதர்ஷ் அடுக்குமாடி ஊழல், சுரங்க ஊழல்... என அரசியல்வாதிகள் கொள்ளையடித்திருக்கும் லட்சக்கணக்கான கோடிகளை ஒப்பிடும் போது, இந்த 14 ஆயிரம் கோடி ஒன்றுமே இல்லையே?'' என்கிறார் சுப. உதயகுமார்.

தனிப்பட்ட முறையில், பத்திரிகையாளர் ஒருவர், "பெரிய வளர்ச்சித் திட்டங்கள் வரும்போது உண்டாகும் பாதிப்புகளை மக்கள் தாங்கித்தான் ஆக வேண்டும். தமிழக மின் தட்டுப்பாட்டை அணுமின்சாரம்தான் போக்க முடியும் என்ற நிலையில், கூடங்குளம் மக்கள் இழப்புகளை ஏற்கத்தான் வேண்டும்'' எனக் குறிப்பிட்டார். பொதுப் புத்தி எத்தனை சுயநலமிக்கதாகவும் சுரணையற்றதாகவும் இருக்கிறது பாருங்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமைகளோடு வாழ்வதற்கான உரிமையை உறுதி செய்திருக்கும் ஒரு ஜனநாயக நாட்டில், யாருக்கோ பலனளிக்கப் போகும் வளர்ச்சித் திட்டங்களுக்காக ஒடுக்கப்பட்ட, அடித்தட்டு மக்கள் செத்து மடியலாம் என்ற மனப்போக்கு ஒவ்வொருவரையும் ஆட்டுவிக்கிறது.

உண்மையில், அந்நியர்களின் தொழில்நுட்பத்தை விலைக்கு வாங்கி அணுமின் நிலையங்களை இந்தியாவில் அமைக்கும் அரசும் அரசியல்வாதிகளும் ஆதிக்க வர்க்கத்தினருமே பயங்கரவாதிகள். அணுக்கொள்கை என்ற பெயரில் பல நாடுகளோடு இந்தியா ஒப்பந்தம் போடுகையில், அணுவிற்கு எதிரான முழக்கங்களும் இயக்கங்களும் உலகளாவியதாக இருப்பதே இயல்பு. கூடங்குளம் அணு உலைகள் பாதுகாப்பானது என ரஷ்ய நிறுவனம் இங்கு வந்து உத்திரவாதம் அளிக்கும்போது, அது பாதுகாப்பற்றது என அணு எதிர்ப்பாளர்கள் அதே நாட்டிலிருந்து வந்து கூடங்குளம் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதோ, அதற்கு நிதியளிப்பதோ எப்படி குற்றமாகும்?

சாதியோ மதமோ அரசியலோ தமிழக மக்களை பிளவுபடுத்தி நிற்கும் எதுவுமே கூடங்குளத்தின் ஒற்றுமையையும் ஓர்மையையும் அசைத்துப் பார்க்க முடியவில்லை என்பது பெருமிதம் கொள்ள வேண்டிய விஷயம். எவ்விதத் திட்டமிடல்களுமின்றி தன்னெழுச்சியாகவே கூடங்குளம் போராட்டம் தொடங்கியது என்ற போதும் ஆகச் சிறந்த பக்குவத்தோடும்  திட்டமிடல்களோடும் அப்போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது என்பதே உண்மை. எவ்வித தன்னலங்களுக்காகவுமின்றி தங்களின் தலைமுறைகளுக்காக வாழ்வாதாரங்களைப் பாழ்படாமல் விட்டுச் செல்ல நினைக்கும் எளிய விருப்பமே கூடங்குளம் போராட்டத்தின் ஆணிவேர். தன்னலமற்ற அந்த எளிய விருப்பமே அம்மக்களை ஓரணியில் நிறுத்தியிருக்கிறது.

அணு எதிர்ப்பு என்ற ஒரு குறிப்பிட்ட பிரச்சனைக்காகவே  அம்மக்கள் போராடுகின்றனர். அணுமின் நிலையத்தை மூடிவிட்டால் தங்களது பழைய வாழ்விற்கு மிக மகிழ்ச்சியோடு அவர்கள் திரும்பிவிடுவார்கள். ஆனால் போராட்ட காலத்தில் அவர்கள் கடைப்பிடித்த நெறிகளை முன் வைத்து,  நம்மிடையே இயங்கும் சமூக இயக்கங்களை மீளாய்வு செய்ய வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். இங்கே அறுத்தெறிய முடியாத ஆணிவேராக கெட்டிபட்டு நிற்கும் சாதி மத பாலினப் பாகுபாடுகளை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் இயக்கங்கள் மக்களை ஒன்றிணைக்கும், கற்பிக்கும், களத்தில் உறுதிபட நிறுத்தி வைக்கும் சூத்திரத்தையும் தன்னலத்திற்கோ நெகிழ்வுகளுக்கோ இடமளிக்காத தலைமைப் பண்பின் அவசியத்தையும் கூடங்குளத்திலிருந்து கற்க வேண்டும். 

குறிப்பாக, தீண்டத்தகாத மக்களின் அணையா வேட்கையான சமூக விடுதலையை இலக்காகக் கொண்டு களத்திற்கு வரும் தலித் இயக்கங்கள் பின்னாளில் சமரசங்களையே கொள்கையாக்கி அரசியலில் சுயநலமிக்க மற்றுமொரு கட்சியாக மாறிவிடுகின்றன. குறைந்தபட்சம் இவை உட்சாதி மக்களைக் கூட ஒன்றிணைக்க முயல்வதில்லை. பட்டியல் சாதியினரும் தனித் தனி அடையாளங்களைத் தேடி வேறுபட்டு நிற்பது மட்டுமல்லாமல், டாக்டர் அம்பேத்கர் தனியொருவராக இழுத்து வந்த சாதியொழிப்பு இயக்கத்தைப் பின்னகர்த்தும் பெருங்குற்றத்தையும் இழைக்கிறார்கள்.

ஒரு பத்தாண்டுக்கு முன்னர் களத்தில் எழுச்சியோடு நின்ற தலித் இயக்கங்களை நம்பி அணி திரண்ட மக்களுக்கு சாதியொழிப்பு பாடத்தைக் கற்பிக்காமல் தங்கள் அரசியல் வாழ்வுக்கு வெறும் தொண்டர்களாக்கி கைவிட்டுவிட்டன. அடிமைச் சிறையிலிருந்து தம்மை மீட்டெடுக்கும் இயக்கமொன்று இனி தோன்றுமென்ற நம்பிக்கையை ஒடுக்கப்பட்ட மக்கள் தொலைத்து வெகுகாலமாகிவிட்டது. டாக்டர் அம்பேத்கர் வழியிலான சமூக இயக்கங்களை உருவாக்க உழைக்கும் பெருங்கடமையை புரிந்து கொள்ளாமல் அறியாமையில் திளைத்திருப்பதும் அநீதியே! சாதியை ஒழிக்கும் சமூகக் கடமையைப் புறந்தள்ளும் ஒவ்வொருவரும் அந்த அநீதியை தங்களின் சுரணையின்மையால் நிகழ்த்துகின்றனர்.

யாருக்கு எது வந்தால் எனக்கென்ன என்ற சமூகச் சூழல் வேரூன்றியிருந்த நிலையில்தான் கூடங்குளம் போராட்டம் புதிய நம்பிக்கையை விதைத்திருக்கிறது. கூடங்குளம் மக்கள் சாதியையும் மதத்தையும் துறந்துவிடவில்லை. அவர்களுக்குள் உண்டாகியிருப்பது நல்லிணக்கம் மட்டுமே. அணு எதிர்ப்பு எனும் பொது பிரச்சனையை முன்னிட்டு உருவான இந்த
நல்லிணக்கத்தையே மூலதனமாக வைத்து சாதியையும் மதத்தையும் நிர்முலமாக்க வேண்டும். ஒவ்வொரு மனிதரும் தம்மை மனிதர்களாக மட்டுமே அடையாளப்படுத்திக் கொள்ளும் பகுத்தறிவை எட்ட வைப்பதும், இந்த மக்கள் திரட்சியை வீணடித்துவிடாமல் அநீதிகளுக்கு எதிரான நிரந்தரப் போராளிகளாக ஆக்க வேண்டியதும் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் எதிர்காலக் கடமையாகும்.

Pin It