அணு உலைகள் எந்த விபத்துகளுமின்றி இயங்கினால்கூட, கடும் சூழல் பிரச்சினைகளை நாம் சந்திக்க நேரிடும். அணு உற்பத்தி மூலம் 1000 ஆண்டுகளுக்கு கதிர்வீச்சு வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும். ஆயிரம் மெகாவாட் கொண்ட அணு உலை, 1000 இரோஷிமா குண்டுகளுக்கு இணையான கதிர்வீச்சை தன்னளவில் கொண்டிருக்கிறது. 

பல லட்சம் மக்களின் உயிரைப் பணயம் வைத்து உருவாக்கப்படும் அணுஉலைகள், மிகக் குறைந்தளவு மின்சாரத்தையே உற்பத்தி செய்கின்றன.

கதிரியக்கக் கழிவுகளை வெளியேற்றுவது, எல்லாவற்றையும் விட சிக்கலானது. இரு கூடங்குள அணு உலைகள் 60 ஆண்டுகளில் 3,600 டன் கழிவுகளை வெளிப்படுத்தும். இதனால் ஏற்படும் கதிரியக்கம், 2 லட்சம் ஆண்டுகளுக்கும் மேல் நீடிக்கும். இவ்வளவு காலத்திற்கு இக்கொடூர ஆபத்து விளைவிக்கும் கழிவுகளைப் பாதுகாக்கும் வசதியில்லை. 

இக்கழிவுகள் நம் மண்ணிலும், நிலத்தடி நீரிலும், ஆறுகளிலும், குளங்களிலும் கலந்து – செடிகள், மீன், விலங்குகள் என இறுதியாக மனிதனின் உடலிலும் கலக்கின்றன.

இத்தகு கதிர்வீச்சுதான் புற்றுநோய், சிறுநீரகக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கின்றன. அதுமட்டுமல்ல, இனிவரும் தலைமுறைகளுக்கு அதிகளவிலான பிறவி உடல் குறைபாடுகளையும் குறிப்பாக, அணு உலைகளுக்கு அருகில் வசிக்கும் மக்களிடையே ஆயிரம் ஆண்டுகளுக்கு கடும் பாதிப்புகளையும் ஏற்படுத்தும்.

அணு உலைகளை குளிர்விக்கப் பயன்படுத்தும் நீர் கடும் வெப்பத்தை ஏற்படுத்துகிறது. இதனால் கடலோரப் பகுதிகளில் காணப்படும் மீன்கள் அழிந்து, மீனவர்களின் வாழ்க்கையையே சிதைத்துவிடும்.

ரஷ்யாவில் உள்ள செர்னோபில் அணு உலையில் 1986 ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் அப்பகுதிகளைச் சுற்றி ஒரு லட்சம் சதுர மைல் பரப்பளவு (தமிழகத்தைவிட இரு மடங்கு அதிகம்) கடுமையாக மாசடைந்தது; இவ்விபத்தால், 2004 வரை ஏறக்குறைய 10 லட்சம் மக்கள் இறந்துள்ளனர். இப்பகுதியில் வாழும் 50 லட்சம் மக்கள் தொடர்ந்து பெருமளவிலான பாதிப்புகளை சந்திக்கின்றனர்.

அண்மையில் நடைபெற்ற புகுஷிமா அணு உலை விபத்து, செர்னோபிலைவிட ஆபத்தானது. இப்பகுதியிலிருந்து ஒரு லட்சம் மக்கள் வெறியேற்றப்பட்டுள்ளனர்.

கூடங்குளத்திற்கான அணு உலை ஒப்பந்தம் ஏற்பட்டபோதிலிருந்தே 20 ஆண்டுகளாக எதிர்த்தும், கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக உக்கிரமாகப் போராடியும் வரும் மக்களின் உணர்வுகளை சற்றும் மதிக்க, மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு முன்வரவில்லை. ஒப்புக்கு ஒரு தீர்மானத்தை முன்மொழிந்த அ.தி.மு.க. அரசு, இம்மக்கள் மீது வழக்குகளைப் பதிவு செய்கிறது. எதிர்க்கட்சியான தி.மு.க. 'நடுநிலை'யுடன் வேடிக்கை பார்க்கிறது. பல கோடி ரூபாய் முதலீட்டில் காந்திய வழியில் பட்டினி கிடந்து மிரட்டும் அன்னா அசாரேக்களுக்காக சட்டங்களை உருவாக்கும் அரசு, கூடங்குளத்தில் அறவழியில் போராடும் தலித் – பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மக்களை, "வெளிநாட்டு கூலிப் பணத்திற்காக மாரடிப்பவர்கள்' என கொச்சைப்படுத்துகிறது. வெட்கங்கெட்ட ஊடகங்களும் அந்த அவதூறுகளை வாந்தி எடுக்கின்றன.

காங்கிரஸ் கட்சியின் தலைமையே ஓர் அந்நியசக்தி (நாம் அதை ஏற்கவில்லை) என்று ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. விமர்சிப்பதை மறந்துவிட்டு; அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் அணு ஒப்பந்தம் செய்து கொண்டு; அந்நியப் பன்னாட்டு நிறுவனங்களை இந்தியாவில் நுழையவிட்டு – சிறப்பு பொருளாதார மண்டலங்களையும், தனியார்மயமாக்கலையும் வலிந்து ஆதரித்து, விலைவாசியை ஏற்றி, மலைகள், ஆறுகள், சுரங்கங்கள் என இந்நாட்டு வளங்களை எல்லாம் – மக்களின் சேமிப்பு முதல் ஓய்வூதியம் வரை – கொள்ளை அடித்துக் கொள்ள அனுமதி வழங்கிவிட்டு, தங்களின் அன்றாட உழைப்பால் ஈட்டிய வருவாயில் மக்களின் உயிரைக் காப்பாற்றத் துடிக்கின்றவர்களை கொச்சைப்படுத்துகிறது பார்ப்பன ஆளும் வர்க்கம்.

தமிழ் மக்களின் நெடுநாள் கனவான சேது சமுத்திரத் திட்டத்தை ராமனின் பெயரால் தடுத்து நிறுத்தி, ஈழத்தில் ஒரு லட்சம் மக்கள் கொல்லப்பட்ட போதும் பதற்றமடையாமல் போர் நிறுத்தத்திற்கென ஒரு துரும்பைக்கூட அசைக்காமல், ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதித்துவத்தை அரை நூற்றாண்டாக அலட்சியப்படுத்தி வரும் பார்ப்பன அதிகார வர்க்கம் அந்நியர்கள் இல்லையா? மக்களுக்கான வாழ்வியல் திட்டங்களை எல்லாம் புறக்கணித்துவிட்டு, இந்து – இந்தியா – தேசப்பற்று – ஒருமைப்பாடு என ஊளையிட்டு, அரசாங்கம் / அதிகாரம் / ஊடகம் / நீதிமன்றம் என்ற போர்வையில் ஒளிந்திருக்கும் அந்நிய சக்தி எது? இடிந்தகரை மக்களின் போராட்டத்தை நாள்தோறும் தலைப்புச் செய்திகளிலேயே கொச்சைப்படுத்த அந்நியர்களான பார்ப்பன "தினமலர்' மற்றும் "இந்து'க்களால்தான் முடியும். இந்த அந்நியர்களை அடையாளம் கண்டுகொள்ள நாம் தயாரில்லாதவரை, நம்மை அந்நிய சக்திகளாகவும், அவர்களை தேசியவாதிகளாகவுமே சித்தரிப்பார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக, அணு குண்டுகளை தயாரிப்பதற்காகவே அணு உலைகள் உருவாக்கப்படுகின்றன. இந்நாட்டின் அடிப்படைச் சிக்கல்களான ஜாதி, வறுமை, கல்வியின்மை, சுகாதாரமின்மை, வேலைவாய்ப்பின்மை, ஊழல் என எதைப்பற்றியும் கவலைப்படாமல், அணுகுண்டுகளைத் தயாரிக்க அடம்பிடிப்பவர்கள்தான் உண்மையான பயங்கரவாதிகள்!

Pin It