மறைமலையடிகள் தமிழ், வடமொழி, ஆங்கிலம் ஆகிய மும்மொழிப் புலமையர்; காளிதாசன் இயற்றிய சாகுந்தலம் நாடகத்தைத் தமிழில் படைத்தளித்தவர்; பட்டினப்பாலை, முல்லைப்பாட்டு முதலிய நூல்களுக்கு உரை எழுதியவர்; வாழ்க்கை வரலாறு, படைப்பிலக்கியம் முதலிய துறைகளிலும் தம் ஆற்றலை வெளிப்படுத்தியவர். இவ்வாறு துறைதோறும் மறைமலையடிகள் தமிழ்த் தொண்டாற்றியிருப்பினும் தனித் தமிழியக்கம் தோற்றிய பணியே அனைவராலும் மிகுதியும் போற்றப்படும் தன்மையதாய் உள்ளது.

தனித்தமிழியக்கத் தோற்ற நிகழ்ச்சி:

தனித்தமிழியக்கத் தோற்ற நிகழ்ச்சி குறித்து மறைமலையடிகள் மகள் நீலாம்பிகை அம்மையாரும், மகன் மறை திருநாவுக்கரசும் தம் நூல்களில் எழுதியுள்ளனர்.

தனித்தமிழியக்கத் தோற்ற நிகழ்ச்சியின்போது உடனிருந்தவரான நீலாம்பிகை அம்மையார் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

வட சொற்கலப்பால் தமிழ் தன் இனிமையும் தூய்மையும் இழத்தலை யான் முதன்முதல் அறிந்தது பின்வருமாறு:

யான் பதின் மூன்றாண்டுடைய சிறுமியாயிருந்தபோது ஒரு நாட் சாயங்காலம் என் தந்தையாரவர்களுடன் மிக மகிழ்வோடு எங்கள் தோட்டத்தில் உலாவிக் கொண்டு வருகையில் தந்தையார் தம்மை மறந்து இராமலிங்க அடிகள் அருளிச் செய்த திருவருட்பாவிலுள்ள “பெற்றதாய்தனை மக மறந்தாலும்” என்னும் பாட்டைப் பாடி வந்தார்கள். அப்பாட்டின் இரண்டாவது அடியாக “உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்” என்பதனைச் சொன்னபோது என் தந்தையாரவர்கள் என்னை நோக்கி “அம்மா இப்போது நான் பாடின பாட்டைத் தூயதமிழில் இராமலிங்க அடிகள் எவ்வளவு அழகாய்ப் பாடியிருக்கிறார்கள்! ஆனால் அப்பாட்டின் இரண்டாம் அடியிலுள்ள ‘தேகம்’ என்ற சமஸ்கிருதச் சொல்லை நீக்கிவிட்டு, உடம்பாகிய யாக்கை என்று அங்கே அமைத்துப் பாடியிருந்தால் இன்னும் எவ்வளவு நன்றாயிருக்கும்! தமிழில் வடசொற்களைச் சேர்ப்பதால் தமிழ் தன் இனிமை இழந்து போவதோடு, பல தமிழ்ச் சொற்களும் வழக்கில் இல்லாமல் இறந்து போகின்றன” என்றார்கள். இது கேட்ட நாள்முதல் என் தந்தையாரும் நானும் தனித்தமிழிலேயே பேசுவதற்கும் எழுதுவதற்கும் உறுதி கொண்டோம்.”

நீலாம்பிகை விவரிக்கும் இந்நிகழ்ச்சியே தனித்தமிழியக்கம் தோன்றுவதற்குத் தோற்றுவாயாக அமைந்தது.

இதை மறை. திருநாவுக்கரசும் குறிப்பிட்டுள்ளார். இந்நிகழ்ச்சி நடந்த ஆண்டு கி.பி.1916.

தனித்தமிழியக்கத்தின் தோற்ற நிகழ்ச்சி, “சுவாரசியமானதாகவும், நாடகபாணி நெறிப்பட்டதாகவும் அமைகின்றது எனக் கருதும் சிவத்தம்பி, மறைமலையடிகள் “இத்தகைய நாடக நிலைப்பட்ட முறையில் தனித் தமிழியக்கத்தைத் தோற்றுவித்தாரென்று கூறுவதிலும் பார்க்க பல காலமாக உள்ளத்துள் அறிவுசெல் நெறியில் கருவிட்டு உருப்பெற்று வளர்ந்து வந்த ஒரு கருத்து மேற்குறிப்பிட்ட சம்பவம் காரணமாக இயக்கப் பரிணாமம் பெற்றது எனக் கூறுவதே பொருத்தமானதாகும்” என்று முடிவு செய்கிறார்.

இம்முடிவு பொருத்தமானதே. தனித்தமிழ்க் கருத்து பல காலமாக மறைமலையடிகள் உள்ளத்துள் எவ்வாறு வளர்ந்து வந்தது எனக் காண்பது தனித்தமிழியக்கம் தோன்றுதற்குரிய அகத்தூண்டல்களை அறியத் துணை செய்யும்.

மறைமலையடிகள் அவரது பதினைந்தாம் வயதில் தொடங்கிய முறையான தமிழ்க்கல்வி இருபத்தோராம் வயதில் பெரும்பாலும் நிறைவெய்தியது. கி.பி.1897 இல் அவர் இருபத்தோராம் அகவை எய்தினார். அவ்விளமைக் காலத்திலேயே தொல்காப்பியம், திருக்குறள், சிற்றம்பலக்கோவையார், கலித்தொகை, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், நாலடியார், நன்னூல் விருத்தி, இறையனார் அகப்பொருள் உரை, தண்டியலங்காரம், சிவஞானபோதம், சிவஞானசித்தியார் முதலிய தமிழ் இலக்கிய இலக்கண மெய்யியல் நூல்களைக் கற்றிருந்தார்.

தூண்டல்கள்:

அவரது ஆசிரியர் வெ. நாராயணசாமியிடம் கற்ற ஆழமான தமிழ்க்கல்வி மறைமலையடிகளுக்கு இயல்பாகத் தூய தமிழை எழுதவும் பேசவும் வாய்ப்பாக அமைந்தது.

இதனால்தான் “அடிகளுக்கு அரிய தூண்டலாக அமைந்தது இளந்தைப் பருவத்திலேயே அவர் ஆழ்ந்து கற்ற தமிழ் வளமேயாம்” என இரா.இளங்குமரன் குறிப்பிடுகிறார்.

“நாகப்பட்டினம் சொக்கநாதப்பிள்ளை மகன் வேதாசலம் பிள்ளையின் தமிழாசிரியரான வெ. நாராயணசாமிப் பிள்ளையே அவரது தனித்தமிழ் இயக்கத்தின் ஆரம்பத்திற்குக் காலாக விருந்தாரெனலாம்” என சிவத்தம்பி சுட்டுகிறார். பேராசிரியர் சுந்தரனாரோடு மறைமலையடிகளைத் தொடர்பு படுத்திய நிகழ்ச்சியால்தான் தமிழ்; தமிழின மேன்மைக் கோட்பாடு மறைமலையடிகளுக்கு ஏற்பட்டது என்ற கருத்தில் சிவத்தம்பி மேற்சுட்டியவாறு குறித்துள்ளார். அவர் எக்கருத்தில் இதைக் குறித்திருப்பினும் மறைமலையடிகட்கு இளமையில் தமிழ்க்கல்வி புகட்டிய அவரது ஆசிரியர், அடிகளின் தனித் தமிழ்க் கோட்பாட்டிற்கு ஒரு தூண்டுகோலாக இருந்தார் என்பது ஏற்கக் கூடியதே.

கி.பி.1897 ஆம் ஆண்டிற்குள்ளே கட்டுரை எழுதும் ஆற்றலும் பெற்றுவிட்டார் மறைமலையடிகள். அவ்வாண்டில் ‘முருகவேள்’ என்ற தனித்தமிழ்ப் புனைபெயரில் நீலலோசனி என்னும் இதழில் கட்டுரைகள் எழுதினார். தனித்தமிழியக்கம் தோன்றுவதற்குப் பத்தொன்பது ஆண்டுகட்கு முன்னரே ‘முருகவேள்’ எனும் தனித் தமிழ்ப் புனைபெயர் ஏற்றமை மறைமலையடிகட்கு அவ்விளமைக் காலத்திலேயே தனித்தமிழ் உணர்வு அரும்பியிருந்ததைக் காட்டுகிறது.

கி.பி.1898 இல் சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றத் தொடங்கியபின் பரிதிமாற் கலைஞரின் தொடர்பு கிடைத்தது.

சூளை, சோமசுந்தர நாயகரோடு (1846-1906) இருந்த நெருக்கத்தாலும் அன்றாடத் தொடர்பாலும், அவரை ஆசிரியராகக் கொண்டு சிவனியக் கொண்முடிபையும், மெய்யியலையும் கற்கும் வாய்ப்பை மறைமலையடிகள் அப்போது பெற்றார்.

வடமொழிச் சொற்களை மிகக் கலந்து எழுதும் சோமசுந்தர நாயகர் மறைமலையடிகளின் தனித்தமிழ் ஆற்றலையறிந்து தனித் தமிழிலேயே எழுதுமாறு தூண்டினார்.

மறைமலையடிகளின் தனித்தமிழ் நடை தடைப்படும் வகையில் வடமொழி கலந்த தன் ஆசிரியர் நடையை அவர் பின்பற்ற விழைந்ததையும் அதனைச் சோமசுந்தரர் தடுத்தாட்கொண்டதையும் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

“யாம் நாயகரவர்களின் நூல்களைப் பயின்று அவர்களையடுத்த இளமைக்காலத்தில் நாயகரவர்களின் உரைநடையைப்போல் வட சொற்கலப்பு மிகுதியும் உடைய ஓர் உரைநடை எழுத எமக்கும் ஒரு வ¤ருப்பம் உண்டாயிற்று. என்றாலும் நக்கீரர், சேனாவரையார், சிவஞான முனிவர் முதலான உரையாசிரியன்மார் வரைந்த தனித் தமிழ்த் தீஞ்சுவையுரை நடையிற் பெரிதும் பழகிய எமதுள்ளத்தை வடசொற் கலந்த நடைக்குத் திருப்புவது எளிதில் இயலவில்லை.”

1898 ஆம் ஆண்டு மூன்றாந்திங்கள் ஒன்பதாம் நாளிற் சென்னைக் கிற¤த்துவக் கல்லூரியில் தமிழாசிரியராய் அமர்ந்த காலந்தொட்டு, நாயகரவர்கட்கு அணுக்கராய் ஒழுகி வருகையில், வடசொல் மிகக் கலந்து அவர்களது உரைநடையைப் போல் யாமும் எழுதுவது நல்லதாமோ? என்பதை அவர்கள்பால் வினவ, அவர்கள், “வடசொற்கலவா உரைநடையே இனிதாயும் எவர்க்கும் எளிதிற் பொருள் விளங்கத் தக்கதாயும் இருத்தலால் உனது நடைப்படியே எழுது; எனது உரைநடையை பின்பற்றாதே என்று ஆணை தந்தார்கள். அவர்களின் அக்கருத்தை அறிந்த பின், முன்னமே தொல்லாசிரியர்தம் தீந்தமிழ் உரைநடை­யிற் பழகி அதன் சுவை கண்ட எமதுளத்திற்கு அவர்கள் இட்ட கட்டளை மிகவும் பொருத்தமுடையதாகவே காணப்பட்டது. அது முதல் தீந்தமிழ் உரைநடை எழுதுவதில் எமதுள்ளம் உறைந்து நிற்கலாயிற்று.”

மறைமலையடிகள் இளமையில் பெற்ற தமிழறிவால் தோன்றிய தனித்தமிழ் உணர்வு அவரது ஆசிரியர் தூண்டலால் உரம் பெற்றதை மேற்குறித்த பகுதி தெளிவாக்குகிறது.

இங்ஙனம் உரம்பெற்ற தனித்தமிழ் உணர்வால் தமிழ்ச்சொல் இது, வடசொல் இது எனப் பகுத்தாயும் பணியிலும், தமிழின் பிணைப்பு பற்றிய ஆய்விலும் அவர் ஈடுபட்டார்.

மறைமலையடிகளின் தனித்தமிழியக்கம் திடுமெனத் தோன்றவில்லை. மாறாக உரிய காலச் சூழலில் பரிதிமாற் கலைஞர், பாம்பன் சுவாமிகள், சுப்பிரமணிய சிவா ஆகியோர் அமைத்துத் தந்த களத்தில் மறைமலையடிகட்கு ஏற்பட்ட அக, புறத் தூண்டல்களின் விளைவால் 1916 இல் இயக்கமாக மலர்ச்சியுற்றது எனலாம்.

ஆனால் இதையும் தாண்டி மற்றொருவரும் உண்டு. இவரும் மறைமலையடிகளார் போல தனித்தமிழ் மீது பற்றுக் கொண்டவர். சைவ நெறியைப் பின்பற்றியவர். அவர்தான் சுவாமி விருதை சிவஞான யோகியார் (1840-1924). இவர் அமைத்த திருவிடக் கழகத்தில்தான் மறைமலை அடிகளார் உறுப்பினராக பணியாற்றி உள்ளார். இக்கழக உறுப்பினர்களாக 59 பேர் கொண்ட பட்டியல் உள்ளது. இதில் மறைமலை அடிகளாருடன் சேர்த்து குறிப்பிடத்தக்கவர்கள் தியாகராச செட்டியார், வெ.ப.பாலசுப்பிரமணிய முதலியார், அரசஞ் சண்முகனார், மு.சி.பூர்ணலிங்கம் பிள்ளை, மு.கதிரேசன் செட்டியார், நாவலர் சோமசுந்தர பாரதியார் ஆகியோர்.

சுவாமி விருதை சிவஞான யோகிகள்

பழைமையோடு புதுமை பொலியும் “தமிழக ஒழுகு என்ற மக்கட்சட்டம்" எனும் நூல் தமிழ்க்கடல் இரா.இளங்குமரனுக்கு எங்கோ ஒருவர் பரணையில் வைத்திருந்தது கிடைத்தது. அதில் நூலாசிரியர் பெயர் இல்லை ஆனால் இளங்குமரனார் மற்ற பல நூல்களின் துணை கொண்டு இதனை இயற்றியவர் சுவாமி விருதை சிவஞான யோகிகள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இந்நூல் அகவற்பாவால் அமைந்த பெருநூல். இதில் மூவாயிரத்து எண்ணூறு அடிகள் உள்ளன. தமிழ் நாட்டு அரசு முறை, திருமணமுறை, குடிகள் ஒழுகலாறு, இல்லறநிலை, தமிழ் நாட்டுக் கல்வி நிலை, மறுமண முறை முதலியனவெல்லாம் தெளிவான நடையில் இதில் விளக்கம் பெற்றுள்ளன. இதனை “அருட்சுனைவர்” பட்டப் படிப்புக்கு பயன்படும் வகையில் திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகம் முன்வந்து வெளியிட்டது.

திருவிடர் கழகம்

இந்நூலோடு கிடைத்ததோர் அரிய அறிக்கைகள் அடங்கிய நூல் “திருவிடர் கழகம்” என்னும் பெயரிடப்பட்டது.

இந்நூல் மதுரைத் தமிழ் சங்கத்தினரால் 1913 இல் அச்சிடப்பட்டுள்ளது. இக்கழகத்தின் தலைவர் சீர்காழி கே.சிதம்பர முதலியார், துணையமைச்சர்கள் மூவர், கழக உறுப்பினர்கள் ஐம்பத்து ஒன்பது. அவருள் ஒருவர் தனித்தமிழ் இயக்கத் தந்தை என போற்றப்படும் மறைமலையடிகள்.

இக்கழகம் தனித்தமிழ் இயக்கம் உருவாவதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முந்தியது (19.11.1908). இக்கழக நோக்கம், கட்டளைகள் அனைத்தும் தூய தமிழில், இச்சிறு நூலில் அச்சிடப்பட்டுள்ளது.

நோக்கங்கள் ஆறு, கட்டளைகள் பதினைந்து அச்சிடப்பட்டுள்ளன. இயக்கத்திற்கு சுவாமி விருதை சிவஞான யோகிகள் நிலையான அமைச்சர். இவர் ஒரு பன்மொழிப் புலவர்.

அச்சுவடியில் உள்ள குறிப்புகள்

1. திருவிடரின் பழைய வரலாறுகளை ஆராய்தல் என்பது திருவிட நாட்டின் முற்கால பிற்கால நிலைமைகள் யாவை? திருவிடர் என்பவர் யாவர்? திருவிடர் தோற்றம் யாது? அன்னவர் அறிவு, கைத்தொழில், செட்டு, கடற் செலவு, உரிமை, மொழி, நூல், தெய்வக கோள், மணம், தூய்மை, உணவு, ஒழுக்கம், வழக்கம், அரசியல், அவைக்களம், சீர்த்தேற்றம் முதலியன எத்தகையன என ஆய்தல்.

2. திருவிட மொழியின் உண்மை வரலாறுகளை ஆராய்தல் என்பது, திருவிட மொழியாகிய தமிழன் தோற்றம் யாது? அதன் இயல்பு யாது? அது இயல் மொழியா? செயல் மொழியா? அதன் வளர்ச்சி எவ்வாறு?

அதனின்று தோன்றிய மொழிகள் எவை? அதிற் பிற மொழிகளின் கலப்புளதா? அவை யாவை? அதன் எழுத்தின் (இலக்கண) அமைப்பு எத்தகையது? தமிழ் தொன்மை நூல்கள் யாவை? தமிழ்மொழியின் முதனிலைகள் (பகுதிகள்) எத்தகையன- உலகிலுள்ள மொழிகள் அனைத்துக்கும் அல்லது வேற்றுமைகள் உள்ளன? என்பது முதலியவற்றைப் பற்றி ஆய்தல் என்பவை.

இக் குறிப்புகளைத் தாமே தலைக் கொண்டு கடமை செய்தார் யோகிகள். அவர் இயற்றிய 15 நூல்களாலும், அவர் ஆப்ரஹாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரத்திற்கு வழங்கிய சிறப்புப்பாயிர 250 அடியளவு அகவலாலும் விளங்கும்.

தூய தமிழ்க் கலைச் சொற்கள்

“மெம்பர் என்னும் சொல்லைத் தமிழாக்கம் செய்ய முயன்று நிறைவு பெறாது இப்பொழுது மெம்பர் என்றே எழுதுகிறேன். இன்னும் ஆற அமர யோசித்துப் பார்த்துச் சரியான பதங்கள் கண்டுபிடித்து மற்றொரு மறை சொல்கிறேன் “ என்கிறார் பாரதியார். ஆனால் திருவிடர் கழகத்தின் குறிக்கோள்கள், கட்டளைகள், செயல்பாடுகள் குறித்து காணப்படும் தமிழ்ச் சொற்கள் அருஞ்சிறப்பு வாய்ந்தவை. தலைவர், துணைத்தலைவர், அமைச்சர், இணை அமைச்சர், உறுப்பினர், பேரவை, பொருளாளர், ஆண்டறிக்கை, தீர்மானம், திருவன், மறைந்திருவன் முதலிய அரிய தமிழாட்சி கோலோச்சுகிறது.

யோகியாரால் திருக்குற்றாலத்தில் உண்டான இந்த அமைப்பின் நோக்கம், குறிப்பு, கட்டளைகள் என்பனவெல்லாம் தனித்தமிழாகவே உள்ளன. தனித்தமிழ் என்றும் தொடர் இல்லையேயன்றி அதனை முழுமையாகக் கடைப்பிடித்து எழுதப்பட்டுள்ளது

கண் கூடு.

சான்றாக பிரசங்கம், பெருஞ்சொல் எனவும், பகுதி, முன்னிலை எனவும் குறிக்கப்பட்டுள்ளன. Objects நோக்கங்களாக பெயர்க்கப்பட்டள்ளது. Treasurer பொருளாளர் என்றும், Majority பேரெண் கருத்து என்றும், Casting vote கிழமைக் குடவோலை என்றும், General body பொதுக்கூட்டம் என்றும், Annual Report ஆண்டறிக்கைத்தாள் என்றும், Subscription கட்டணம் என்றும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. இச்செய்திகளால் பாம்பன் சுவாமிகள் தனித்தமிழில் நூல் எழுதும் முயற்சியினை மேற்கொண்டது போலவே திருவிடர் கழக அமைப்பாளர்களும் அமைப்பு நிலையில் தனித் தமிழைப் பயன் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர் என அறிகிறோம். இளங்குமரனார், குறிப்பிடும் இச்செய்தி தனித் தமிழியக்க வரலாற்றில் புதியதொரு செய்தியாகும்.

விருதை சிவஞான யோகிகள் வரலாறு

கொங்கு நாட்டு அவிநாசியில் இராம சாமிப்பிள்ளை, கிருட்டிணம்மாள் என்னும் இணையர்க்கு 1840 ஆம் ஆண்டு இவர் பிறந்தார். சிவஞானம் பெயரோடு விளங்கிய இவர் தம் தந்தையாரை மூன்று வயதிலும், தாயாரை ஐந்து வயதிலும் இழந்தார். இவர்க்கு வாய்த்த மாமன்மார்கள் இவரை வளர்த்தனர். தமிழ்க் கல்வி, ஆங்கிலக் கல்வி இரண்டும் கற்றார்.

பெயர் விளக்கம்

பிறகு ஊட்டி வெல்லிங்டன் நகரில் வணிக நிறுவனப் பணியில் உள்ளபோது சச்சிதானந்த அடிகள் தொடர்பு ஏற்பட்டது. அவ்வடிகள் சித்த மருத்துவம், ஓகப் பயிற்சி மிக்கர், அவர் தொடர்பு சிவஞானத்திற்கு அக்கலைகள் இரண்டையும் வழங்கியதுடன் சிவஞான யோகிகள் என்பதற்கு அடித்தளம் ஆக்கியது. பிறகு வேலையை விட்டு அவ்வூரிலிருந்து புறப்பட்டு பலப்பல கோயில்களை வழிபடும் ஆவலில் புறப்பட்ட யோகிகள் விருதுப்பட்டிக்கு வந்து சேர்ந்தார், மிகச் சிறிய பட்டியாக இருந்த அச்சிற்றூரே இப்போது விருதுநகர் என்ற பெயரோடு பெரு நகராட்சியாய் விளங்குகிறது. இவர் அந்நகரில் பல காலம் அங்கு தங்கியிருந்த படியால் ஆரம்பத்தில் விருதுப்பட்டி சுவாமிகள் என்ற சிறப்புப் பெயரை அடைந்தார். அங்கே இவர் செய்த தொண்டினால் பிறகு விருதை சிவஞான யோகிகள் என அழைக்கப்பட்டார், பிறகு செட்டி நாடு சென்றார். அங்கே குருநாத சாஸ்திரி­யிடம் வடமொழி கற்றபின் பிரமசூத்திரத்தைத் தமிழாக்கம் செய்து வேத நெறியோடு சைவநெறியும் விளங்க உரைவிளக்கம் இயற்றினார்.

ஆகவே, இவர் “தமிழ்ப் பிரமசூத்திர ஆசிரியர்” என்று புகழ் பெற்றார். அவ்வூர் இளம் பெருங்கவிஞர் சுப்பிரமணியத்திற்கு பாரதி என்ற பட்டத்தை வழங்கியும் போற்றினார். அங்கிருந்து கோயில்பட்டிக்குச் சென்றார். அங்கே பத்தி விளைக்கழகம் என ஒரு கழகத்தைத் தோற்றுவித்துத் தம் காலமெல்லாம் திருவிடர் கழகத்தையும் அமைத்துப் பல ஆண்டு விழாக்களைத் தக்க பெரியார் தலைமையில் சிறப்பாக நடத்தி வந்தார்.

மேலும் பத்தி விளைக் கழகத்தின் ஒரு பகுதியாகச் சித்த மருத்துவச் சாலை ஒன்றை நிறுவினார். இவர் சமகாலத்தில் வாழ்ந்த மருத்துவர்கள், ஒரு பைசா தமிழன் இதழ் நடத்திய அயோத்தி தாச பண்டிதர், ஆபிரகாம் பண்டிதர், பண்டிதர் எஸ்.எஸ் ஆனந்தம், மறைமலை அடிகளார்க்குத் தமிழ் மருத்துவம் பார்த்தவர். யோகியாரிடம் ஏழு ஆண்டுகள் சித்த மருத்துவம் கற்றவர், சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் அமைத்த இ.மு. சுப்பிரமணியபிள்ளை; இவரே வ.உ.சிக்கு கால் முட்டி வலிக்கு தமிழ் மருத்துவம் அளித்து நலம் பெறச் செய்தவர். யோகியார் "தமிழும் தமிழ் மருத்துவமும்" என்ற நூலைப் படைத்து தமிழ் மருத்துவச் சிறப்பை நிலை நாட்டி பெருமை சேர்த்தார். இவர் கோயில்பட்டியில் சித்த மருத்துவமனையைத் தொடங்கி தீர்க்க முடியாத பெரு நோய்களைத் தீர்த்தார். அக்கால கட்டத்தில் அரசு இந்திய மருத்துவப் பள்ளியை தொடங்க அரசுக் குழுவிற்கு தக்க ஆலோசனை வழங்கினார்.

பல்கலை யோகி தமிழ்ச் சித்த மருத்துவத்தை பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுவதற்கு 1920 இல் தமிழ் வைத்திய சங்கம் ஒன்றை கோவில் பட்டியில் தொடங்கினார். தமிழ் மொழியைப் பாதுகாப்பது போல் தமிழ் மருத்துவத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற தமிழக அரசின் சித்தாந்தங்கள், யோகியார் படைத்த தமிழக ஒழுகு என்ற மக்கட் சட்டம் என்ற நூலின் வெளிப்பாடு என்பது பலரும் அறியாத ஒன்றாகும். அரசின் துணையோடு பல்வேறு நகர்களில் சித்த வைத்திய மாநாடு நடத்தினார்.

மேலும் இச்சங்கம் மூலமாகத் தமிழ் மருத்துவ நூல்கள் சீர்படுத்தி அச்சிடுதல், மருத்துவத்தை கற்பிக்கும் பள்ளிகளை அமைத்தல், தமிழ் மருத்துவப் பெருமைகளை பற்றி உரை நிகழ்த்துதல், தமிழ் மருந்துகளைக் கண்காட்சி வைத்தல், மருத்துவப் பயிற்சி அளித்துச் சான்றிதழ் வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொண்டார்.

இவர் தொண்ணூற்றொன்பது ஆண்டுகள் வாழ்ந்ததாக இ.மு சுப்பிரமணியபிள்ளை குறிப்பிடுகிறார். இவர் எழுதிய நூல்கள் 1. செப்பறை வெண்பா 2. நெல்லை அந்தாதி மாலை 3. திகுச் செந்தில் சிலேடை வெண்பா 4. பதஞ்சனயோக சூத்திர மொழிபெயர்ப்பு 5. தமிழ் மொழியும் சிவநெறியும் 7. தமிழர் தொன்மை வேதாகம உண்மை 9. கீதாமிர்த மஞ்சரி 10. சிவஞான விளக்கம் 11. சுவேதாசுவதா உபநிடத மொழி பெயர்ப்பு. 12. தமிழும் மருத்துவமும் 13. தமிழக ஒழுகு என்னும் மக்கட் சட்டம் 14. கோயில்பட்டிப் புராணம் 15. தேவேபாசனாதீபம் முதலியன என்கிறார் கருப்பக்கிளர் இராமசாமிப் புலவர்.

முடிவுரை:

இச் செய்திகளால் பாம்பன் சுவாமிகள் தனித்தமிழில் நூல் எழுதும் முயற்சிகளை மேற்கொண்டது போலவே திருவிடர் கழக அமைப்பாளர்களும் அமைப்பு நிலையில் தனித் தமிழைப் பயன்படுத்தும் முயற்சியால் ஈடுபட்டனர் என அறிகிறோம்.

9-11-1908 இல் தொடங்கிய திருவிடர் கழகமே முதல் தனித்தமிழ் அமைப்பு என இளங்குமரனார் சுட்டும் இச்செய்தி தனித்தமிழியக்க வரலாற்றில் புதியதொரு செய்தியாகும். இரா.நெடுஞ்செழியன் எழுதிய தி.மு.க வரலாறு நூலில் சிவஞான யோகியாருடைய திருவிடர் கழகம் குறித்து பதிவு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

துணை நூற்கள்:

- இளங்குமரன் இரா.மறைமலையடிகளார் தனித்தமிழ்க் கொள்கை. 1986.

- நீலாம்பிகை அம்மையார் தனித்தமிழ்க் கட்டுரைகள் முகவுரை.1960.

- சிவத்தம்பி கா. தனித்தமிழ் இயக்கத்தின் அரசியல் பின்னணி.1979.

- திருமாறன்.கு, தனித்தமிழியக்கம் 2021.

- முருகவேள் த.ரா.ஆய்வுலகம் போற்றும் ஆசிரிய மணிகள்.

- டாக்டர் சு.நரேந்திரன், எழுத்தாளர், சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக சிறப்புநிலைப் பேராசிரியர்.