உங்களை நீண்டநேரம் காக்கச் செய்துவிட்டேன். இந்த உரையை ஒரு முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நேரம் நெருங்கிவிட்டது. இத்துடன் இந்த உரையை முடிப்பது எனக்கு வசதிதான். ஆனாலும், இந்துக்கள் அக்கறை கொண்ட ஒரு தலைப்பு குறித்து இந்துக்கள் நிறைந்த அவையில் நான் உரையாற்றுவது இதுவே இறுதி முறையாக இருக்கக் கூடும். எனவே, என்னுடைய உரையை முடிப்பதற்கு முன்னால் - இந்துக்கள் அனுமதித்தால் - நான் முக்கியமானது என்று கருதுகிற சில கேள்விகளை எழுப்பவும், அவர்கள் அதைத் தீவிரமாக சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளவும் விரும்புகிறேன்.

1. உலகம் எங்குமுள்ள பல்வேறு மக்களிடையே காணப்படுகிற நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், நீதிநெறிகள், வாழ்க்கை பற்றிய மனநிலைகள் ஆகியவை வேறுபட்டே காணப்படுகின்றன என்ற மானுடவியல் அறிஞர்களின் கூற்றை, ஒரு கருத்து என்கிற அளவில் மட்டும் ஏற்றுக் கொள்வது போதுமானதாகுமா? எந்த விதமான நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், நீதிநெறிகள் மற்றும் மனநிலைகள் சமூகத்தில் மேலோங்கி உள்ளன? எந்த விதமான கருத்துகள் அந்தக் கருத்துகளுக்கு சொந்தக்காரர்களான மனிதர்களை மோபடுத்தி வலுப்படுத்தி, அவர்களின் ஆதிக்கத்தை ஏற்படுத்த மிகவும் உதவின? இதை அறிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டாமா?

பேராசிரியர் கார்வர் கூறுகிறார் :

"எதைச் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது என்று முறைப்படுத்தப்பட்ட கூற்றுகளே மதமும் நீதிநெறியுமாகும். வாழ்க்கைப் போராட்டத்தில் தாக்குதலுக்கும் தற்காப்புக்கும் ஆன பற்கள், நகங்கள், கொம்புகள், கூச்சல்கள், ரோமங்கள், இறகுகள் போன்ற கருவிகளைப் போலவே மதம், நீதிநெறி ஆகியவற்றையும் கருத வேண்டும்.

நடைமுறைப்படுத்த முடியாத நீதிநெறிகளையும், சமூகத்தைப் பலவீனப்படுத்தி, அதை வாழத் தகுதியற்றதாக்கி விடும் சமூக நடவடிக்கைகளையும் - பழக்கத்தால் ஏற்கச் செய்துவிடுகிற எந்த ஒரு குழு/சமூகம்/ இனம்/தேசம் நாளடைவில் அழிந்துவிடும். அவ்வாறே, நடைமுறைப்படுத்தக் கூடிய நீதிநெறிகளையும், சமூகத்தைப் பலப்படுத்தி வளர்த்தெடுக்கிற சமூக நடவடிக்கையையும் பழக்கத்தால் ஏற்காமல் செய்து விடுகிற எந்த ஒரு குழு/சமூகம்/இனம்/தேசம் நாளடைவில் அழிந்து போகும்.

இந்த ஏற்பும் மறுப்பும் மதம், நீதிநெறி ஆகியவற்றின் விளைவாகும். இவையே ச மூகத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றன. பறவையின் இரு இறக்கைகளுமே ஒரே பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்தில் இறக்கையே இல்லாமலிருந்தால், அந்தப் பறவை பறக்க முடியாது அல்லவா? அதைப்போலவே ‘எல்லா தரப்புமே நல்லதுதான்' என்று கூறுவது முற்றிலும் பயனற்றதே ஆகும்.''

எனவே, நீதிநெறிகளும் மதமும் வெறும் விருப்பு வெறுப்புகளைப் பொறுத்த விஷயம் மட்டும் அல்ல.

இந்துக்கள் தங்களுடைய மதத்தை மறுபரிசீலிக்கட்டும்

ஒரு குறிப்பிட்ட நீதிமுறையை ஒரு தேசத்தில் உள்ள மக்கள் அனைவருமே பின்பற்றினால், அத்தேசம் உலகிலேயே வலிமை பெற்ற தேசமாக ஆகக்கூடும் என்போம். அந்த நீதிமுறை உங்களுக்கு சற்றும் பிடிக்காமல் இருக்கலாம். ஆனாலும், அந்த நீதிமுறையைப் பின்பற்றுகிற ஒரு தேசம் வலிமை பெறத்தான் செய்யும். இன்னொரு நீதிமுறையை ஒரு தேசத்தில் உள்ள மக்கள் அனைவருமே பின்பற்றினால், மற்ற தேசங்களுடன் போரிடும்போது அந்த தேசம் தன்னைத்தானே காத்துக் கொள்ள முடியாது ஆகிவிடும் என்போம். அந்த நீதிமுறை உங்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கலாம். ஆனாலும், உங்கள் விருப்பத்துக்குரியதாக இருந்தபோதும் கூட, அந்த நீதிமுறையைப் பின்பற்றுகிற தேசம் இறுதியில் அழிந்தே போகும்.

இந்த ச மூகம் இனி அழிந்து போகாமல் பிழைத்திருக்க வேண்டும் என்றால், இந்துக்கள் தங்கள் மதத்தையும் நீதி முறையையும் மறுபரிசீலனை செய்தாக வேண்டும்.

2. தங்கள் சமூக மரபுகளை ஒரு சிறிதும் மாற்றாமல் அப்படியே பாதுகாக்க வேண்டுமா? அல்லது எதிர்காலத் தலைமுறை சந்ததிகளுக்குப் பயனுள்ளதை மட்டுமே தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டுமா என்பதைப்பற்றி இந்துக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

எனது மதிப்புக்குரிய ஆசிரியரும் நான் பெரிதும் கடமைப்பட்டவருமான பேராசிரியர் ஜான்டேவி கூறுகிறார்: "ஒவ்வொரு சமூகமும் அற்பமான, வக்கிரமான பயனற்ற பெரும் சுமைகளால் நிரம்பி உள்ளது. ஆனால், ஒரு சமூகம் விழிப்புணர்வு பெறுகிறபோது, இப்போது சாதனைகளாக இருப்பவை அனைத்தையும் - எதிர்காலத் தலைமுறைக்கு அப்படியே கொண்டு செல்லாமல், மோபட்ட எதிர்கால சமூகத்தை உருவாக்குபவைகளை மட்டும் கை மாற்றித் தருவதே பொறுப்பான செயல் என்று உணர்கிறது.''

பிரெஞ்சுப் புரட்சியில் அடங்கியிருந்த ‘அனைத்தும் மாறுதலுக்கு உட்பட்டவை' என்ற கொள்கையை மிக ஆவேசமாகத் தாக்கிய திரு. பர்க்கும் கூட, "மாற்றத்துக்குக் கொஞ்சமும் வழிவøக இல்லாத ஓர் அரசு, தன்øனத்தானே காத்துக் கொள்ள வழி வகையில்லாத அரசாக இருக்கிறது. இந்த வழிவகைகள் இல்லாமல் போனால், தன் அமைப்பின் எந்த பாகத்தை மிகவும் புனிதமானதாகப் போற்றிப் பாதுகாக்க விரும்பு கிறதோ, அந்த பாகத்தையே இழந்து விடுகிற ஆபத்துக்கு அது ஆளாகலாம்'' என்று ஒப்புக் கொள்ள வேண்டியிருந்தது. பர்க் கூறியது அரசுக்கு மட்டுமல்ல, சமூகத்துக்கும் பொருந்தும்.

3. தம் லட்சியங்களை எல்லாம் பழமையிலிருந்தே பெற்றுக் கொள்கிறோம் என்றெண்ணி, பழமையை வழிபட்டு வருவதை இந்துக்கள் விட்டொழிக்க வேண்டாமா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். பழமையை வழிபடுவது பேரழிவுக்கே காரணம் ஆகிவிடும் என்ற கருத்தை திரு. டேவி பின்வருமாறு தொகுத்தளிக்கிறார்:

"தனி மனிதன் நிகழ்காலத்தில் மட்டுமே வாழ முடியும். நிகழ்காலம் என்பது இறந்த காலத்தை அடுத்து வருவது மட்டுமல்ல. அதனால் மட்டுமே உருவாக்கப்படுவதும் அல்ல. இறந்த காலத்தை உதிர்த்துவிட்ட வாழ்க்கையே நிகழ்காலம். கடந்த காலத்தில் உற்பத்தியாக்கப்பட்ட கருத்துகள், நிகழ்காலத்தைப் புரிந்து கொள்ள நமக்கு உதவாது. கடந்த காலத்தையும் அதன் மரபுகளையும் பற்றிய அறிவானது நிகழ்காலத்துடன் தொடர்புடையதாகிறபோது மட்டுமே - அந்த அறிவு முக்கியத்துவம் பெறுகிறது. மற்றபடி அல்ல. கடந்த காலத்துப் பதிவுகளையும் எச்சங்களையும் கற்பிப்பதே கல்வியில் முக்கியமானது என்ற கருத்து பெரும் தவறாகும்.

இது, கடந்த காலத்தை நிகழ்காலத்துக்கு எதிராக நிறுத்துகிறது. நிகழ்காலத்தை கடந்த காலத்தின் வெறும் நகலாகவே பார்க்கிறது. நிகழ்கால வாழ்க்கையைக் குறைத்து மதிப்பிடுகிற ஒரு கொள்கையானது, இயல்பாகவே நிகழ்காலத்தை அர்த்தமற்றதாகவும், எதிர்காலத்தை எட்டாக்கனியாகவும் பார்க்கிறது. இப்படிப்பட்ட தொரு கொள்கை, வளர்ச்சிக்குத் தடையானது. வலிமையானதும் நிலையானதுமான ஒரு வாழ்க்கை முறைக்குத் தடையானது.''

4. "நிலையானது, நிரந்தரமானது, சனாதனமானது என்று எதுவும் இல்லை. எல்லாமே மாறிக் கொண்டு இருக்கின்றன. சமூகமானாலும் சரி, தனிமனிதர்கள் ஆனாலும் சரி, மாற்றம் என்பதே வாழ்க்கையின் நியதி'' என்பதை இந்துக்கள் உணர வேண்டிய காலம் வந்துவிட்டதா, இல்லையா என்பதை இந்துக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். மாறிவருகிற ஒரு சமூகத்தில் பழைய மதிப்பீடுகள் இடைவிடாது மாறுதலுக்கு உட்படுத்தப்பட்டாக வேண்டும். மனிதர்களை எடைபோடுவதற்கான ஓர் அளவுகோல் இருந்தாக வேண்டும்.

26

ஓயாது போராடும் ஓர் எளியவனின் கருத்தே இவ்வுரை

இந்த உரை மிகவும் நீண்டுவிட்டது என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால், இந்த நீண்ட உரையால் எந்தப் பயனுமே இல்லையா என்பதை நீங்கள்தான் கூற வேண்டும். என் நிலைப்பாட்டை ஒளிவுமறைவின்றி தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்து விட்டேன். இதை ஏற்றுக் கொள்வதோ, விட்டு விடுவதோ உங்களைப் பொறுத்தது. இந்தக் கருத்துகள் அதிகாரம் படைத்த - புகழ் படைத்த ஒருவனின் கருத்துகள் அல்ல. இந்த நாட்டில் உள்ள ஏழை எளியவர்களின் - அடக்கி ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்காக - தன் வாழ்க்கையை ஓயாத போராட்டத்தில் ஈடுபடுத்திக் கொண்டுள்ள ஒரு சாமானியனின் கருத்துகளாக இதை எடுத்துக் கொள்ளுங்கள். இந்தப் போராட்ட வாழ்க்கையில் அவன் சந்தித்ததெல்லாம் தேசியத் தலைவர்களாலும், தேசிய நாளேடுகளாலும் ஓயாமல் பொழியப்பட்ட வசைமாரிகளையும் அவதூறுகளையும்தான். காரணம், ஒடுக்கப்படும் மக்களை கொடுங்கோலர்களின் பொற்காசுகளாலும், ஏழைகளை செல்வந்தர்களின் பணத்தாலும் ஏற்றம் பெறச் செய்துவிட முடியும் என்று அவர்கள் ஆடுகின்ற கபட நாடகத்தில் (ஒடுக்கப்பட்டவர்களை விடுவிக்க அவர்கள் காட்டும் அற்புத வழி இதுதான்) அவன் கலந்து கொள்ளாததுதான்.

ஜாதியை வேரோடு பிடுங்க, என் வழியில் முயலுங்கள்

என் கருத்துகளை நீங்கள் ஏற்றுக் கொள்ள இதுவரை கூறியவை போதுமானவையாக இல்லாமல் போகலாம். என் கருத்துகள், உங்கள் கருத்துகளை மாற்றியமைக்கப் போவதில்லை என்றே நான் எண்ணுகிறேன். ஆனால், உங்கள் கருத்துகளை நீங்கள் மாற்றிக் கொண்டாலும் சரி, மாற்றிக் கொள்ளாவிட்டாலும் சரி - சாதியை நீங்கள்தான் ஒழித்தாக வேண்டும். சாதியை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிய, நான் காட்டிய வழியில் பெரும் முயற்சி செய்யுங்கள். இல்லையேல், உங்கள் சொந்த வழியிலாவது பெரு முயற்சி செய்யுங்கள். நான் உங்களோடு இருக்கப் போவதில்லை என்பதற்காக வருந்துகிறேன். நான் மாறுவதென்று தீர்மானித்து விட்டேன். ஏன் என்பதற்கான காரணங்களை விளக்கிக் கொண்டு போவதற்கு ஏற்ற இடம் இதுவல்ல. ஆனால், நான் உங்களுடன் இல்லாவிட்டாலும் கூட, உங்கள் இயக்கத்தை அக்கறையோடு கவனித்துக் கொண்டுதான் இருப்பேன். தேவையான அளவுக்கு உங்களுக்கு நான் உதவுவேன். உங்கள் நோக்கம் தேசம் முழுமைக்கும் உரிய ஒரு நோக்கம்.

சாதிதான் இந்துக்களின் உயிர் மூச்சாக இருக்கிறது என்பதில் எள்ளளவும் அய்யமில்லை. இந்துக்கள் இந்த தேசம் முழுவதையும் சாதி அமைப்பால் மாசு படுத்திவிட்டார்கள். சீக்கியர்கள், முகமதியர்கள், கிறித்துவர்கள் ஆகிய எல்லா மதத்தினரிடமும் - இந்த சாதி நோய் தொற்றிக் கொண்டு விட்டது. எனவே, சீக்கியர்கள், முகமதியர்கள், கிறித்துவர்கள் உட்பட இந்தத் தொற்று நோயால் பீடிக்கப்பட்டுள்ள எல்லாத் தரப்பினரிடமிருந்தும் நீங்கள் ஆதரவுபெற முடியும். சுயராஜ்யத்தை அடைவதற்கான போராட்டத்தைவிட, உங்கள் போராட்டம் கடுமையானது. சுயராஜ்யத்துக்கான போராட்டத்தில் தேசம் முழுவதும் உங்கள் அணியில் திரண்டு நிற்கிறது. சாதி ஒழிப்புப் பிரச்சனையிலோ, நீங்கள் தேசம் முழுவதையும் எதிர்த்து நின்று அதுவும் உங்கள் சொந்த இந்திய தேசத்தையே எதிர்த்து நின்று போராட வேண்டி இருக்கிறது. ஆனாலும் கூட, சாதி ஒழிப்பே சுயராஜ்யத்தை விட முக்கியமானது.

பெறவிருக்கும் சுயராஜ்யத்தைக் கட்டிக்காக்க உங்களால் முடியாது என்றால், சுயராஜ்யம் பெற்றுப் பயனில்லை. சுயராஜ்யத்தைக் காப்பாற்றுவதை விட, சுயராஜ்யத்தின் கீழ் இந்துக்களைக் காப்பாற்றுவதே மிக முக்கியமான பிரச்சனையாக இருக்கும். இந்து சமூகம் சாதிகள் இல்லாத ஒரு சமூகமாக மாறினால்தான் தன்னைத்தானே காத்துக்கொள்வதற்கான ஆற்றல் அதற்கு இருப்பதாக நம்ப முடியும். இந்த சுய ஆற்றல் இல்லாவிடில் ‘இந்துக்களுக்கு சுயராஜ்யம்' என்பது, அடிமைத்தனத்துக்கு இட்டுச் செல்வதாகவே முடியும். நீங்கள் வெற்றிபெற என் உளமார்ந்த வாழ்த்துகள்.
Pin It