சமநீதி எழுத்தாளர் ஏபி. வள்ளிநாயகம் அவர்களுக்கு, தமிழகத்தின் பல இடங்களிலும் நினைவேந்தல் கூட்டங்கள் நடைபெற்றன. இந்நிகழ்வு பற்றிய செய்திகள் ‘தலித் முரசி'ல் தொடர்ந்து இடம்பெறும். இந்த இதழில் ‘தலித் முரசு' சார்பில் 16.6.2007 அன்று சென்னையில் நடைபெற்ற வீரவணக்கக் கூட்டத்தில் பங்கேற்றோர் ஆற்றிய உரை இடம் பெறுகிறது.

Subavee
சுப. வீரபாண்டியன் : ‘இந்த நாட்டின் சராசரி மனிதனைவிடப் பலமடங்கு உயர்வாக சிந்தித்து செயல்பட்ட தோழர் வள்ளிநாயகம் அவர்கள், இந்த நாட்டின் சராசரி மனிதனின் ஆயுள்கூட வாழாமல் இறந்திருக்கிறார் என்பது நமக்கு நேர்ந்திருக்கிற பேரிழப்பு. அதற்கு தோழர் பூங்குழலி குறிப்பிட்டதைப் போல கூடுதலான உடல் உழைப்பும், உடல் நலன் பற்றிய குறைவான அக்கறையும்தான் காரணம் என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

நண்பர்கள் குறிப்பிட்டதைப் போல, நானும் வள்ளிநாயகத்தை கடந்த 15 ஆண்டுகளாக அறிவேன் என்றாலும், மிக நெருக்கமான நட்போடு அவரை நான் அறிந்து கொண்டதில்லை. ‘விடுதலைக் குயில்கள்' என்ற இதழ் நடத்துகிறபோதுதான் அவருக்கும் எனக்குமான முதல் அறிமுகம் ஏற்பட்டது. ஆனாலும் நாங்கள் சந்தித்துக் கொண்ட நிகழ்வுகள்கூட மிகக் குறைவு. ஒன்றாக நாங்கள் பேசிய மேடைகள் குறைவுதான் என்று கருதுகிறேன். தோழர் ஓவியா அவர்களோடு எனக்கு இருக்கிற அறிமுக அளவு கூட எனக்கு வள்ளிநாயகத்திடம் அறிமுகம் இல்லை.

வள்ளிநாயகம் அவர்கள், நமக்கு ஓவியாவையும் அவருடைய எழுத்துகளையும் விட்டுவிட்டுப் போய் இருக்கிறார் என்பதுதான் நமக்கு இருக்கிற ஒரே ஆறுதலாக இருக்கிறது. அழகிய பெரியவன் சொன்னதுபோல பலரை குறிப்பாக அய்யன் காளியை எல்லாம் நான் வள்ளிநாயகம் எழுத்திற்குப் பிறகுதான் அறிந்து கொண்டேன். அந்தப் புத்தகம்தான் எனக்கு முதல் செய்தி. பல தலித் போராளிகளை நாம் அறியாமல் இருந்திருக்கிறோம் என்கிற வெட்க உணர்வை எனக்குள் ஏற்படுத்தியவர் வள்ளிநாயகம். அவருடைய புத்தகங்களில் பல தலித் போராளிகளுடைய வாழ்க்கைகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

அவருடைய இறப்புச் செய்திகூட ‘இந்து' போன்ற மற்ற பெருமக்கள் நாளேடுகளில் ஏன் வரவில்லை என்று அழகிய பெரியவன் குறிப்பிட்டார். வராது என்பதுதான் இந்த தேசத்தினுடைய இயற்கையான, எதார்த்தமான ஒரு செய்தி. அதிலே வராது என்பது ஒரு வருத்தம் என்றாலும்கூட, ‘தலித் முரசு' போன்ற இதழ்களிலே வருகிறது என்பதுதான் வள்ளிநாயகம் போன்றவர்கள் ஆற்றிய பணிக்கும்கூட ஒரு பெருமிதமான செய்தி. ‘தலித் முரசில்' எனது எழுத்து வந்தது என்பதையே நான் எப்போதும் மிகப் பெருமையாகக் கருதுகிறவன். எனவே தலித் முரசிலே ஒரு எழுத்து வருகிறது என்பதும், தொடர்ந்து வள்ளிநாயகத்தின் எழுத்து வந்திருக்கிறது என்பதும் அவருக்கான இடம் எது என்பதை நமக்கு நினைவு படுத்துகிறது.

அதே வேளையில் மக்களுக்காகப் போராடியவர்களை, மக்கள் அறியாமல் இருக்கிறார்கள் என்கிற சோகத்தை என்னவென்று சொல்வது? வள்ளிநாயகம் என்று ஒரு மனிதர் வாழ்ந்தார்; இந்த சமூகத்திற்காக உழைத்தார்; கடைசி வரையில் தனது உடல்நிலை பற்றிகூட கவலைப்படாமல் ஏறத்தாழ 54 ஆண்டுகளில் இறந்து போனார் என்கிற செய்தி, இந்த தமிழ் மக்களில் எத்தனை பேருக்குத் தெரியும் என்று கேள்வி கேட்டால், அதற்கான விடை நமக்கு வேதனையாகத்தான் இருக்கிறது. இயல்பாக நம்முடைய உறவினர்களில், நம்முடைய நண்பர்களில்கூட வள்ளிநாயகத்தை எத்தனை பேர் அறிந்திருப்பார்கள் என்று நாம் கேட்டால், படிக்கிற பழக்கமுடைய சமூக அக்கறையுடைய அறிவாளிகளாக இருக்கிற மிகச் சிலரைத் தவிர, வள்ளிநாயகத்தை இந்த பெருமக்கள் அறிந்திருக்கவில்லை.

அறிவாளிகளை இந்த மண்ணில் வெகு சிலர்தான் அறிந்து கொள்வார்கள் என்பது இயற்கை. ரொம்பவும் வித்தியாசமாக தந்தை பெரியார் போன்றவர்கள் தமிழ் நாடு முழுவதும் அறியப்பட்டார். நான் பெரியாரைப் பற்றிச் சொல்லுகிறபோது சொல்லுவேன், பெரியாருக்கு முன் உலகத்திலே கடவுள் மறுப்பாளர்கள் எல்லாம் ஏராளமாக இருந்திருக்கிறார்கள். ஆனால், கடவுள் மறுப்பு என்பது 100க்கு 99 பேருக்கு எதிரான கருத்து. மக்களுக்கு எதிரான, மக்கள் நம்பாத கருத்தைச் சொல்லி மக்களுக்கு தலைவனாக ஆவது என்பது வரலாற்றில் மிகச் சில நேரங்களில் மட்டும்தான் நேர்ந்திருக்கிறது.

எனவே, அப்படி தேடித் தேடி தலித் போராளிகளுடைய வரலாற்றைத் தொகுத்துத் தந்தவராக வள்ளிநாயகம் இருந்திருக்கிறார். வள்ளிநாயகத்தினிடத்திலே நான் படித்து அறிந்து கொண்டதன் மூலம் நான் உணர்ந்து கொள்ளுகிற ஒரு செய்தி, ஒடுக்கப்பட்ட மக்களிடத்திலே ஒற்றுமை வேண்டும் என்பதிலே வள்ளிநாயகம் உறுதியாக இருந்திருக்கிறார் என்பதுதான். அதுதான் வள்ளிநாயகத்திற்கு நாம் ஆற்றுகின்ற இரங்கலாகக்கூட இருக்கும்.

இங்கே ஒரு வேலை தொடர்ந்து இம்மண்ணிலே நடந்து கொண்டிருக்கிறது. பெரியாரிய கருத்துடைய தோழர்களுக்கும், அம்பேத்கரிய கருத்துடைய தோழர்களுக்கும் இடையிலே எப்படியாவது பிளவுகளை ஏற்படுத்திவிட வேண்டும் என்று முயன்று கொண்டிருக்கின்ற பலர் இருக்கின்ற மண்ணில், இரண்டு பேரும் ஒருங்கிணைந்து தான் சமூகப் போராட்டத்தை நடத்த வேண்டும் என்பதுதான் வள்ளிநாயகம் விட்டுச் சென்ற அழுத்தமான செய்தி என்று நான் கருதுகிறேன். எனவே, வள்ளிநாயகத்திற்கான வீரவணக்கம் என்பதுகூட, எங்கள் கைகள் எப்போதும் இணைந்தே வீரவணக்கத்தைத் தெரிவிக்கும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடையில் எந்தவிதமான பிரிவும் பிளவும் வராது, இனி வரக் கூடாது என்கிற உறுதியை எடுத்துக் கொள்வதுதான் இந்த வீரவணக்கத்துடைய அடிப்படையான செய்தி என்று கருதுகிறேன். உங்கள் அனைவரோடும் சேர்ந்து உங்களுடைய உணர்வுகளை நானும் பகிர்ந்து கொள்கிறேன்.’ 

மும்பையில் வீரவணக்கம்!

Mumbai
மறைந்த தோழர் ஏ.பி. வள்ளிநாயகத்திற்கு 18.8.07 அன்று மும்பையில் தொல்குடி உறவுகள் ஒன்றுகூடி வீரவணக்கம் செலுத்தினர். ‘ஆதிதிராவிடர் சிந்தனையாளர் சபை'யும் ‘தமிழர் முழக்க'மும் இணைந்து நடத்திய நிகழ்வில் தலித் அமைப்புகளைச் சார்ந்த பலர் கலந்து கொண்டனர். புலவர் ரா. பெருமாள், தோழர் வள்ளிநாயகத்தின் திருவுருவப்படத்தைத் திறந்து வைத்து நினைவு இரங்கல் கவிதை வாசித்தார்.

தோழர் வள்ளிநாயகத்தின் களப்பணி, எழுத்துப்பணி, இயக்கப்பணி குறித்து அறிமுகவுரை ஆற்றினார் ராசேந்திரன். தோழர் வள்ளிநாயகம் மும்பைக்கு வர இருந்த இரண்டு நிகழ்வுகளும், மும்பையில் நடந்த சில கலவரங்கள் காரணமாக தடைபட்டதை அவர் நினைவு கூர்ந்தார். இந்த ஆகஸ்டு மாதம்தான் அவரை மும்பைக்கு அழைக்கும் திட்டம் இருந்தது. இப்போது அவருக்கு நாம் நினைவஞ்சலி செலுத்த கூடி இருக்கிறோம் என்று உணர்ச்சி தழும்ப அவர் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

தோழர் வள்ளிநாயகத்தின் எழுத்துப் பணியைப் பற்றி சிறப்புரை ஆற்றினார் எழுத்தாளர் புதிய மாதவி. ‘விடுதலை இயக்க வேர்களும் விழுதுகளும்' என்று தோழர் வள்ளிநாயகம் தலித் முரசில் தொடர்ந்து எழுதிய கட்டுரைகளையும், அதில் அவர் அறிமுகப்படுத்தி இருக்கும் தலித் இயக்க முன்னோடிகளையும் குறிப்பிட்டு, தலித் இயக்க வரலாற்றில் தோழர் வள்ளிநாயகத்தின் எழுத்துப்பணி படைத்திருக்கும் சாதனைகளைப் பட்டியலிட்டார்.

மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்ற ஆட்சிக்குழு செயலாளர் சு. குமணராசன், நம்மை நம் வரலாற்றை எழுதியிருக்கும் தோழர் வள்ளிநாயகம் அவர்களின் நூல்களைப் படிக்க வேண்டும். அதுவும் மும்பையில் அவருடைய 25 நூல்களையும் நாமும் நம் இளைஞர்களும் வாசித்துப் பயன்பெற வேண்டும். அதற்கான அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் உறுதியளித்தார். நடந்து முடிந்த கல்வியாண்டில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று, தேர்வில் வெள்ளி பெற்ற தலித் மாணவ, மாணவியருக்கு ஊக்கத் தொகை அறிவித்து, தோழர் வள்ளிநாயகத்தின் வாழ்க்கைக் குறிப்பு வாசிக்கப்பட்டு நிகழ்ச்சி பயனுற நிறைவடைந்தது.
Pin It