சென்ற இதழில் வெளிவந்த அழகிய பெரியவன் அவர்களின்
பேட்டி, இந்த இதழிலும் தொடர்கிறது.

தங்களுடைய முதல் இலக்கிய உருவாக்கம் எது?

Azhakiya periyavan
மிகத் தொடக்கத்தில் நான் எழுதிய கதைகளும், கவிதைகளும் சொல்கிற மாதிரி இல்லை. தொண்ணூறுகளுக்குப் பிறகுதான் நான் சில கவனிக்கப்படுகிற கவிதைகளை எழுதியதாக நினைக்கிறேன். தலித் மக்களின் வாழ்க்கைச் சிக்கல்களைப் பேசும் ‘மழை’', ‘சுமை’, ‘தனம் அறிவது’ போன்ற என் கவிதைகள் பலராலும் சிலாகிக்கப்பட்டன. 1997இல் "கணையாழி' இதழ் நடத்திய குறுநாவல் போட்டியில் பரிசு பெற்ற என்னுடைய ("தீட்டு') குறுநாவலை, எல்லாவகை அம்சங்களுடனும் கூடிய என் முதல் கதையென்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அந்தக் கதை ஒரு பாலியல் தொழிலாளியைப் பற்றியது. அது பரவலான கவனத்துக்கு உள்ளானது. அக்கதையைப் படித்தவர்கள் அதிர்ச்சியையும், அசூயையும், பதைபதைப்பையும் அடைந்தார்கள். பாலியல் தொழிலாளர் உருவாக்கத்தின் சமூகக் காரணிகளை இக்கதை வெளிச்சமிட்டது. அவர்கள் வாழ்க்கையை மிக நெருக்கமாக அறிமுகம் செய்தது.

தங்களுடைய ‘தகப்பன் கொடி' நாவலைப் பற்றி சொல்லுங்கள்...

‘தகப்பன் கொடி', தலித்துகளின் நலம் சார்ந்த வேட்கைகளை முன்வைத்து எழுதப்பட்டது. மிகக் குறுகிய காலத்தில் இந்நாவலை நான் எழுதி முடித்தேன். என் மூதாதையர்களின் கதை, நாவலில் விவக்கப்பட்டுள்ளது. நாவலின் முக்கியப் பாத்திரமாக வரும் அம்மாசி, என் தாத்தா சின்னப்பனின் அடையாளங்களை அய்ம்பது விழுக்காடு கொண்டவர். நாவலில் விவக்கப்படும் பல்வேறு சம்பவங்களும் உண்மையானவையே.

தலித் மக்களுக்கென்று வெள்ளையர்களால் வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்கள், இன்று அம்மக்களிடம் இல்லை. தலித்துகள் இம்மண்ணின் தொல்குடிகள். அவர்கள் இந்நிலத்தின் தொன்ம உரிமையாளர்கள். அவர்களை நலமற்றவர்களாகவும், எப்போதும் கூலிக்காக கையேந்தும் உழைப்பாளிகளாகவும் ஆக்கியவர்கள் சாதி இந்துக்கள். அவர்களால் ஏற்படுத்தப்படும் அரசுகள் இதில் அக்கறை செலுத்துவதில்லை. இத்துரோகத்தின் கதையை என் வட்டார அளவிலான கதைப்பரப்பினைக் கொண்டு பதிவு செய்வதே இந்நாவல்.

கேரளம், மேற்கு வங்கம் போல் (அங்கும் முழுமையான நிலப்பகிர்வு நடந்ததா என தெரியவில்லை) இந்தியாவின் பிற மாநலங்களில் தலித்துகளுக்கு நிலங்கள் பகிர்ந்தளிக்கப்படவில்லை. சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நிலத்துக்கானப் போராட்டத்தையும் தமது விடுதலைக்கானப் போராட்டங்களுடன் இணைத்து, எப்போதும் தலித்துகள் முன்னெடுத்தபடியேதான் இருக்கின்றனர். பஞ்சமி நிலங்களைக் கேட்பது மட்டுமே போதுமானது இல்லை. நிலம் தலித்துக்கு ஒரு வாழ்வாதார உரிமை. ஆனால், ஒரு குறைந்தபட்ச கோரிக்கையாக, தமிழ் நாட்டில் பஞ்சமி நில மீட்புப் போராட்டத்தை தலித் மக்கள் முன்னெடுத்தபோது, ஒடுக்கப்பட்டார்கள். செங்கற்பட்டு அருகில் உள்ள காரணையில் 1994இல் நடந்த நில மீட்புப் போராட்டத்தின் போது ஜான்தாமஸ், ஏழுலை என்ற இரு தலித் போராளிகள் காவல் துறையால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுபோன்றதொரு பஞ்சமி நில மீட்புப் போராட்டத்தினை, என் நாவல் தனது முக்கியப் பகுதியாகக் கொண்டுள்ளது.

மூன்று பெரும் அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும் இந்த நாவல் ஒழுங்கமைக்கப்படாத கட்டமைப்புடன், தன் போக்கிலான கதை கூறு முறையில் எழுதப்பட்டது. பின்னோக்கி கதை சொல்லும் உத்தியையும் அதிக அளவில் பயன்படுத்தியிருப்பேன். ஆப்பிரிக்க எழுத்தாளரான கூகி வா தியாங்கோ, காலனியத்தால் அழிக்கப்பட்ட தன் இனத்தின் மொழியான கிகூயுவை மீட்டுருவாக்கம் செய்து, அதன் கதைக் கூறுதன்மையுடனும், நாட்டார் வழக்காறுகளுடனும் "சிலுவையில் தொங்கும் சாத்தான்' என்ற நாவலை எழுதியதாகச் சொல்கிறார். எனக்கும் அவ்விதமான எண்ணமே இருந்தது. கூத்துக் கலையின் கதைக்கூறு முறையையும், நாட்டார் வழக்குகளையும், தொன்மங்களையும் கலந்து என் முதல் நாவலை எழுத எண்ணினேன். அது முடியாமல் போனது. இந்த நாவல் தமிழக அரசின் சிறந்த நாவலுக்கானப் பரிசைப் பெற்றதுடன், ‘தலித் முரசு கலை இலக்கிய விருதை'யும், ‘பொ.மா. சுப்பிரமணியம் அறக்கட்டளை விருதை'யும் எனக்குப் பெற்றுத் தந்தது. சில பல்கலைக்கழகங்களில் இந்த நாவல் குறித்து ஆய்வுக் கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. 2000க்குப் பிறகான முக்கியமான நாவல்களில் ஒன்றாக சில விமர்சகர்கள் இதைக் கருதுகிறார்கள்.

இலக்கியத்தில் திராவிட அரசியல் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது?

திராவிட அரசியலின் கருத்தாக்கம், நவீன தமிழ் இலக்கியத்தில் மிகக் குறைந்த அளவே செல்வாக்கு செலுத்துகிறது; அல்லது இல்லையென்றே சொல்லிவிடலாம். பார்ப்பன எதிர்ப்பு, சுயமரியாதை, வடவர் எதிர்ப்பு, தனித்தமிழ் சார்பு, வைதிகச் சமய மறுப்பு, எதிர்நாயகர்களைப் போற்றுதல் போன்ற கூறுகளில் எவையும் இன்று தீவிர இலக்கியத் தளத்தில் கையாளப்படுவதில்லை.

தமிழின் தொன்ம அடையாளத்துடனும், அதன் வளமான இலக்கியப் பின்புலத்துடனும் உருவான திராவிட அரசியல், இந்த நூற்றாண்டின் தொடக்கக் காலந்தொட்டே ஆரிய ஆதிக்கத்தினை எதிர்த்துப் பல்வேறு நூல்களை உருவாக்கியது. அச்சு ஊடகத்தின் செல்வாக்கு உருவாக்கிய வெகுசன இலக்கியத்திலும், நவீன தமிழ் இலக்கியத்திலும் அதன் செல்வாக்கு படிப்படியாக மறைந்தது. இதன் தன்மையான காரணம் கொள்கைகளை விட்டுக் கொடுத்து, சமரசப் போக்குடன் அரசியலை நடத்திய திராவிட அரசியல் கட்சிகளேதான். தமிழ் - தமிழர் என்ற பொதுமையுணர்வு இன்று இடைச்சாதியாளர்களின் அரசியல் எழுச்சியால் இல்லாமல் போனது. கூடவே பார்ப்பனியம் புத்தாக்கம் பெற்றது. இந்நிலை இன்றளவும் நீடிக்கிறது.

திராவிட அரசியலின் கருத்தாக்கம், உரைநடையை விடவும் கவிதையில் பெரும் செல்வாக்கு செலுத்தியது. பாரதிக்கு இணையான கவிதையாளுமையுடைய பாரதிதாசனை உருவாக்கியது, திராவிடக் கருத்தியலே. வானம்பாடிகளிடம் திராவிடக் கருத்தியல் செல்வாக்குப் பெற்றிருந்தது. திரைப்படத் துறையிலும் இதன் செல்வாக்கை ஓரளவுக்கு இன்றும் பார்க்கலாம். நாற்காலிக் கனவுகளோடு திரையில் தோன்றும் தமிழ்த் திரையின் கதாநாயகர்கள், ‘தமிழன்' என்ற வார்த்தையை தமது எதிர்கால அரசியல் நுழைவைக் கருதியே இன்று பயன்படுத்துகிறார்கள்.

திராவிடக் கருத்தியல் சாதியை எதிர்த்தாலும், தலித்துகளை அது விலக்கியே வைத்திருந்தது. ஆனால், வரலாற்று ரீதியில் பார்த்தால் ‘தமிழ்', ‘திராவிடம்' என்றெல்லாம் முதன் முதலில் பேசியவர்கள் தலித்துகளே. 1907இல் ‘தமிழன்' என்ற இதழினைத் தொடங்கி நடத்தியவரும், திராவிட மரபையும், பவுத்த மரபையும் தொல் தமிழர் மரபாகப் பார்த்தவரான அயோத்திதாசப் பண்டிதர் (1845 1914) ஒரு தலித் அறிஞர்தான்.

தமிழ்ச் சமூகம் மிகையுணர்ச்சிகளால் இயங்குகிறதா?

தமிழ்ச் சமூகம் எப்போதுமே மிகையுணர்வினால் பீடிக்கப்பட்டு செயல்படுவதாகக் கருதுவது, சரியான மதிப்பீடாக இருக்காது. தமிழ் மக்கள் பண்பட்ட அறிவுக்கும் நாகரிகத்துக்கும் உரியவர்கள். அதற்கான நீண்ட, நெடிய மரபும் அவர்களுக்கு இருக்கிறது. பகுத்தறிவு நோக்கிலான அணுகுமுறை, தமிழர் தம் தொல் மரபிலிருந்து வருகின்ற ஒரு கூறு. கணியன் பூங்குன்றன் போன்ற பழந்தமிழ்ப் புலவர்கள் மானுடப் பொதுமையைப் பாடியிருக்கின்றார்கள். வள்ளுவர், ஆராய்ந்து அறிவதையே அறிவு என்கிறார். இந்தப் பகுத்தறிந்து நோக்கும் மரபு சித்தர்கள், அயோத்திதாசர், பெரியார் என்று நீள்கிறது. சமூகத் தளத்தில் எழும் சிக்கல்களையும், கருத்துகளையும் பகுத்தறியும் நோக்கில் அணுகும் பார்வை, மிகையுணர்ச்சியை நீக்கிவிடுகிறது.

இந்த மரபான பார்வையைப் பின்னுக்குத் தள்ளி, உணர்ச்சிப்பூர்வமான ஓர் அணுகுமுறையை திராவிட வெகுசன அரசியல் இயக்கங்கள் கருத்தியல் தளத்தில் கொண்டு வந்தன. வீரம், காதல், கற்புநிலை போன்ற உணர்வு சார்ந்த அடையாளங்கள் உயர்த்திப் பிடிக்கப்பட்டன. வீரம், தனிமனித துதிகளுக்கும், தலைவர் வழிபாட்டுக்கும் இட்டுச் சென்றது. மக்களை எளிதில் உணர்வுவயப்படுத்தி, தம் பக்கம் திருப்பும் ஓர் உபாயமாக இன்றளவும் சிலரால் இவ்வகை அணுகுமுறைகள் கையாளப்பட்டு வருகின்றன. அண்மைக் காலங்களில் இந்திய அளவிலேயே உணர்வு ரீதியாக மக்களை உசுப்பிவிட்டுத் தம் பக்கம் திருப்பி ஆதாயம் தேடும் போக்கு, அரசியலில் பெருகிவிட்டிருக்கிறது. இதற்கு ஊடகங்கள் கொஞ்சம் மனசாட்சி இன்றி துணைபோகின்றன.

இன்றைய தமிழ் தலித் இலக்கியத்தின் போக்கு எப்படி இருக்கிறது?

தற்கால தமிழ் தலித் இலக்கியம், ஒரு வலுவான இலக்கியப் பிரிவாய் உருவாகி இருக்கிறது. சமகால தலித் எழுத்தாளர்கள் பலரும் இன்று மிக முக்கிய தமிழ் எழுத்தாளர்களாய் அடையாளம் காணப்படுகின்றனர். இலக்கியம் மட்டுமின்றி விமர்சனம், வரலாறு என்று பன்முகப்பட்ட துறைகளில், தலித் அறிவுஜீவிகளின் பங்களிப்பு இன்று முக்கியமானதாக இருக்கிறது.

பாமா, சிவகாமி, ராஜ்கவுதமன், ரவிக்குமார், இமையம், விழி. பா. இதயவேந்தன், என்.டி. ராஜ்குமார் போன்றவர்களின் படைப்புகள், தமிழ் இலக்கியத்தைச் செழுமைப்படுத்தியுள்ளன. இப்பட்டியலில் சுதாகர் கத்தக், ஜே.பி. சாணக்யா போன்றோர் இன்று சேர்ந்துள்ளனர். இவர்கள் இருவருமே தமது சிறுகதைகளுக்காக ‘கதா' விருது பெற்றவர்கள். தலித் சுயசரிதையே இல்லாதிருந்த நிலையில், கே.ஏ. குணசேகரனின் ‘வடு' சுயசரிதை வெளியாகி கவனிப்பைப் பெற்றுள்ளது. ‘வடு' தமிழில் வெகு சமீபத்தில் வெளிவந்த ஒரு முக்கியமான தலித் பிரதியாகும். 1990க்குப் பிறகே தீவிரம் கொள்ளத் தொடங்கிய தமிழ் தலித் இலக்கியம், இந்தப் பதினைந்து ஆண்டுகளில் உண்டாக்கிய அதிர்வலைகள் அதிகம். சமீப ஆண்டுகளில், நாவலிலும், கவிதையிலும் அது தேக்கம் கண்டுள்ளது. வரலாற்றுப் பின்புலத்துடன், அரசியல் மற்றும் மத கட்டமைப்புகளைத் தோலுரிப்பது போல், தெளிவான போராட்டக் குணத்துடன் படைப்புகள் எதுவும் புதிதாக வரவில்லை.

மொழியைக் கட்டுடைக்கும் தலித் எழுத்தாளர்களைப் பற்றி உங்கள் கருத்தென்ன?

சாதியத் தன்மையுடனும், ஆண் ஆதிக்கத் தன்மையுடனும் இருந்த மொழியை, தலித் எழுத்தாளர்களே உடைக்கத் துணிந்தார்கள். மொழி இலக்கணம் ‘நீச பாஷை', ‘இழிசனர் வழக்கு' என்று தலித் மக்கள் பேசும் மொழியை தீண்டத்தகாததாக்கியிருந்தது. இந்த மொழித் தீண்டாமையைத் தகர்த்தது தலித்துகளே. அவர்களே ‘இழிசனர் வழக்கை' இயல்பாய் தம் பிரதிகளில் பயன்படுத்தத் தொடங்கினர். பாமா, பேச்சு வழக்கையே தனது கதைக் கூறு மொழியாக்கிக் கொண்டார். ராஜ்கவுதமனின் நாவல்களும் அப்படியே. அண்மையில் வெளியான ‘வடு'வும் அதே மொழி நடையிலேயேதான் வெளிவந்துள்ளது.

மக்களிடம் புழக்கத்திலிருக்கும் இயல்பான அல்லது அப்பட்டமான மொழி, இலக்கியத்தில் கையாளப்படுகிறபோது, மொழியின் மீது பூசப்பட்டிருக்கும் கட்டுப்பாட்டுத் தளைகள் உடைபடுகின்றன. கழிவுகளை அள்ளுவோர் என்பதைவிடவும், மலம் அள்ளுவோர் என்ற வார்த்தைப் பிரயோகம், சிந்தனையின் அடுக்குகளில் அதிர்வுகளை உருவாக்குகிறது. மலிவான கவன ஈர்ப்புக்கும், அதிர்ச்சி மதிப்பீட்டுக்கும்தான் தலித் எழுத்தாளர்கள் வெளிப்படையான சொற்களைப் பயன்படுத்துகிறார்கள் என்றொரு குற்றச்சாட்டு, தொடர்ச்சியாக இந்த மொழி உடைப்புச் செயல்பாட்டின் மீது வைக்கப்பட்டு வருகிறது. வெறும் அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக மட்டும் ஒரு தலித் தன் மொழியைப் பயன்படுத்துவதில்லை. அவர் தனது கோபத்தை இடம் மாற்றும் ஊடகமாக, ஆயுதமாக மொழியைக் கையாள்கிறார். சில இடங்களில் அவர் பயன்படுத்தும் சொற்களுக்கு மாற்றாக, வேறொரு சிறந்த சொல் இருக்கவே டியாது.
தலித் மொழி குறித்த மற்றொரு கருத்தும் இங்கே உண்டு. எந்த மொழியும் அதன் பூர்வகுடி மக்களாலேயே பாதுகாக்கப்படுகிறது. அவர்களே அதை அம்மொழியின் அழகோடு பயன்படுத்துகிறார்கள். எனவே, தலித்துகளின் மொழியே அசலானதும், அழகானதும் ஆகும். அழகான மொழிப் பிரயோகத்தை அவர்கள் இயல்பாய் கையாளலாம்.

தமிழ் நாட்டில் உள்ள தலித் இயக்கங்கள், தலித் மக்களின் சமூக மேம்பாட்டுக்காக ஆற்றலுடன் செயல்படுகின்றார்களா?

தமிழகத்தில் இன்று விடுதலைச் சிறுத்தைகளும், புதிய தமிழகம் பலம் பொருந்திய இயக்கங்களாக உருவெடுத்திருக்கின்றன. இவைகளோடு தியாகி இம்மானுவேல் சேகரன் பேரவை, ஆதித் தமிழர் பேரவை, புரட்சி பாரதம் போன்ற அமைப்புகளும், குடியரசுக் கட்சியின் சில பிவுகளும் சமூகத் தளத்தில் தலித்துகளின் பிரதிநதிகளாக இயங்கி வருகின்றன.

வெள்ளையர் அரசு இருந்த போதிலிருந்தே தாத்தா ரெட்டமலை சீனிவாசன், அயோத்திதாசப் பண்டிதர், எம்.சி. ராஜõ போன்÷றாரால் உருவாக்கப்பட்ட அமைப்புகள், தலித்துகளுடைய பிரச்சினைகளை அரசிடம் கொண்டு சென்று காரியம் சாதித்திருக்கின்றன. இன்று தலித்துகளுக்கென்று செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்களின் மூல வடிவங்கள், அவர்களின் கோக்கையினால் உருவாக்கப்பட்டவையே. பஞ்சமி நிலங்கள், இலவச வீட்டு மனைகள், தனிப்பள்ளிகள் போன்றவைகளும், அரசுப் பணிகளில் விகிதாச்சார பிரதிநதித்துவம் அந்தத் தலைவர்களின் யற்சியால் உருவானதே. இதன் தொடர்ச்சியை ஏதேனும் ஒரு வகையில் பேணுவதன் மூலம் தலித்துகளுக்கு தம்மால் இயன்ற அளவுக்கான உரிமைகளைப் பெற்றுத்தர, இன்றளவும் இந்த இயக்கங்கள் முயன்று வருகின்றன. ஆனால், ஒட்டுமொத்த தலித் சமூகத்தின் தலைகீழ் மாற்றத்துக்கானதிட்டங்கள் எதுவும் முன்மொழியப்படவில்லை. நலச் சீர்திருத்தம், பொருளாதார மேம்பாடு மற்றும் பண்பாட்டுத் தளங்களில் போராட்டங்களை முன்னெடுப்பதிலும், மக்களைத் திரட்டுவதிலும் இவ்வியக்கங்கள் பின்னடைவையே எய்தியிருக்கின்றன.

வேறொரு விரிந்த சமூகத் தளத்தில் வைத்துப் பார்த்தால், இந்த இயக்கங்களின் செயல்பாடுகள், பெருமளவு மாற்றங்களை உருவாக்கியிருப்பதாகவே கருத வேண்டியுள்ளது. அரசியல் தளத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக தலித் இயக்கங்கள் உருவெடுத்திருக்கின்றன. வன்கொடுமைகளுக்கு எதிராக பொது கவனத்தையும், அரசின் கவனத்தையும் ஈர்ப்பதில் அவை பெரும் பங்காற்றுகின்றன. தமிழகமெங்கிலும், குறிப்பாக உணர்வுவயப்பட்ட பகுதிகளில் (sensitive areas) தமது இயக்கக் கிளைகளைக் கட்டுவதன் மூலம் தலித்துகளின் எதிர்ப்புணர்வையும், ஒற்றுமையையும் வளர்த்தெடுப்பதில் தலித் இயக்கங்கள் சிறப்பானப் பங்காற்றுகின்றன. எல்லா அரசியல் இயக்கங்களுக்கும் உள்ள பலவீனங்களும், பலங்களும் தலித் இயக்கங்களுக்கும் உண்டு.

நேர்காணல் : டி.டி. ராமகிருஷ்ணன்
புகைப்படங்கள் : புதுவை இளவேனில் நன்றி : ‘மாத்தியமம்'

- பேட்டி தொடரும்
Pin It