(உயிரியல் துறை விஞ்ஞானியும், தேசிய அரசு ஆணையத்தின் முன்னாள் தலைவருமான டாக்டர் பார்கவா, ‘இந்து’ நாளேட்டில் எழுதிய கட்டுரையின் சில பகுதிகள்)

நாம் எதனை உண்ண வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும், எதனைப் படிக்க வேண்டும், பார்க்க வேண்டும், யாரை நேசிக்க வேண்டும் என்பது குறித்தெல்லாம் முடிவெடுக்க விரும்புகின்ற தற்போதைய அரசின் செயல்பாட்டில் கலாச்சார சகிப்பின்மை என்பது ஆதிக்கம் செலுத்திடும் அம்சமாக உள்ளது.

இந்துத்துவா கொள்கையின் மூலாதாரமாக ஆர்.எஸ்.எஸ். எனும் ராஷ்டிரியஸ்வயம் சேவக் அமைப்பு இருக்கிறது. பாஜக அரசில் இந்த ஆர்எஸ்எஸ் அமைப்பின் செல்வாக்கு ஓங்கியுள்ள நிலையில், “பகுத்தறிவு கோட்பாடு, காரணத்தைத் தேடி விவாதித்து கேள்விக்குள்ளாக்கும் நெறி ஆகியவற்றிலிருந்து இந்திய தேசத்தை விலகச் செய்து, அதன் வாயிலாக ஜனநாயகத்திலிருந்தும் தேசத்தை விலகச் செய்கின்ற இந்து மதவாத எதேச்சாதிகாரத்தை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோமா?” என்ற கேள்வியை நாம் எழுப்பிடலாம். அவ்வாறு நாம் நகர்ந்து கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது.

வன்முறைத் தாக்குதல்களோடு மட்டுமின்றி, தைரியமாக மாற்றுக் கருத்தை முன்வைத்ததற்காக கிரின்பீஸ் போன்ற பிரபலமான அமைப்புகள் மற்றும் டீஸ்டாசெதல்வாத் போன்ற செயல் பாட்டாளர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 51ஏ (எச்)சின்படி, “அறிவியல் மனநிலை, மனித நேயம், புலனறிவு ஆகிய வற்றின் அடிப்படையில் ஆய்ந்து செய்யப்படும் சீர்திருத்தங்கள் ஆகியவற்றை உருவாக்குவது” என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமையாகும். எனினும், காரண காரியங்களையும், பகுத்தறிவையும் அடிப்படையாகக் கொண்ட அறிவியல் மனநிலைக்கு அரசே தற்போது மிகப் பெரிய தடையாக உள்ளது. அறிவியல் குறித்து இத்தகைய புரிதலின்மை இதற்கு முன்பு வேறெந்த அரசுக்கும் இருந்தது கிடையாது. இதன் காரணமாக, தேசத்தின் வளர்ச்சிக்கான நிகழ்ச்சி நிரலில் எதிர்மறை விளைவுகள் பெருமளவில் ஏற்படக் கூடும்.

“கிரகங்களுக்கிடையே பயணிக்கக் கூடிய மிகப் பெரிய விமானங்கள் நம்மிடம் இருந்தன; மனித உடலின் மீது யானையின் தலையைப் பொருத்தும் (பிளாஸ்டிக் சர்ஜரி) திறனை நாம் கொண்டிருந் தோம்” என்றெல்லாம் கடந்த காலம் குறித்து அபத்தமான கூற்றுக்கள் முன்வைக்கப்படுகின்றன. மத நம்பிக்கைகளுக்கு பொருந்தக் கூடிய வகையில் புராணக் கதைகளில் வரும் பாத்திரங்களையும், கடவுளர்களையும் வரலாற்று நாயகர்களாக சித்தரித்து, அதன் மூலம் வரலாற்றைத் திரிக்கும் வேலையும் நடைபெறுகிறது.

மதச்சார்பின்மையின் மாண்புகளும், பகுத்தறிவும் மதிக்கப்படுவதில்லை என்பதனைக் கூட விட்டு விடுவதாகக் கொள்வோம். ஆனால், இந்த நாட்டின் சட்டத்தையேகூட எள்ளளவும் மதிக்காத அமைப்புகளின் குறிப்பான ஆதரவுடன் இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை நாடு முழுவதிலும் திணித்திடு வதற்கான திட்டமிட்ட முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

சிவசேனா கட்சியானது பாஜக வுடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ள போதும் கூட, பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் குர்ஷித் மஹமூத் கசூரி எழுதிய புத்தகத்தை வெளியிட்டதற்காக அப்சர்வர் ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் சுதீந்திர குல் கர்னியின் முகத்தில் கருப்பு மையை ஊற்றியது, மும்பையில் நடக்கவிருந்த பாகிஸ்தானி பாடகர் குலாம் அலியின் இசை நிகழ்ச்சியைத் தடுத்து நிறுத்தியது, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகளுடனான கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் இந்திய கிரிக் கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அலுவலகங்களை சூறையாடியது என்பன போன்ற அவர்களது சமீபத்திய நடவடிக்கைகள் இதற்கான உதாரணங்கள் ஆகும்.

எந்தவொரு நல்ல ஜனநாயக அமைப்பின் கீழும், பன்னிரண்டாம் வகுப்பு வரை யிலான (18 வயது வரையிலான) கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய சேவைகள் அரசாலேயே அளிக்கப்படுகின்றன. ஆனால் இந்தியாவில், பண வசதி உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கக் கூடிய ஒன்றாககல்வியும், சுகாதாரமும் பெருமளவில் தனியார் மயம் ஆக்கப்படுவதோடு, வர்த்தகமயம் ஆக்கப்பட்டும் வருகிறது. இத்தகைய நடவடிக்கை எதேச்சாதி காரத்தை உருவகப்படுத்துகிற அம்சமேயாகும்.

நாட்டின் உயர்பதவிகளை நிரப்புவதிலும் கூட, தகுதியை விட அரசியல் ஆதாயத்திற்கும், ஆர்எஸ்எஸ் அமைப்புடனான தொடர்புக்குமே கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்வி நிறுவனத்தின் இயக்குநராக கஜேந்திர சௌகான் நியமிக்கப்பட்டதும், அதற்கு மாணவர்கள் மற்றும் திரைப்பட இயக்குநர்களிடமிருந்து கிளம்பிய எதிர்ப்பும் இதற்கு ஓர் உதாரணமாகும்.

இதற்கு முன்னர் வேறு எந்த அரசும் செய்திடாத வகையில், நாம் எதனை உண்ணுவது, என்ன உடை உடுத்துவது, யாரை நேசிப்பது, எத்தகைய புத்தகங்களைப் படிப்பது, எந்த திரைப்படங்களைப் பார்ப்பது என்பவை குறித்தெல்லாம் அரசு தான் முடிவெடுக்குமாம். தற்போதைய அரசின் செயல்பாட்டில் இத்தகைய கலாச்சார சகிப்பின்மை ஆதிக்கம் செலுத்தும் அம்சமாக உள்ளது. மாட்டிறைச்சியை சாப்பிடுவது என்பது பண்டைய இந்தியாவில் அனுமதிக்கப்பட்டு இருந்தது என்பது இந்த அரசுக்குத் தெரியவில்லை போலிருக்கிறது. ஆயுர்வேத நூலான சரகசம்ஹிதாவில், மாட்டிறைச்சியின் தரம் குறித்து கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

“வாயுத் தொல்லை, விட்டு விட்டு வருகின்ற காய்ச்சல், வறட்டு இருமல், சோர்வு ஆகியவற்றின் காரணமாக உடல் இளைத்திடு பவர்களுக்கும், கடுமையான உடல் உழைப்பின் காரணமாக அதிக அளவில் பசி எடுப்பவர் களுக்கும் மாட்டிறைச்சி மிகவும் பயனுள்ளது.”

பகுத்தறிவிற்கு எதிரான மதவெறி

எந்த மதமும் மற்ற மதத்தை விட மேலானதல்ல என்பதனை இந்துத்துவாவிற்கு வக்காலத்து வாங்குபவர்கள் உணராது உள்ளனர். மேலும், அறிவியல் பூர்வமான, பகுத்தறிவுடனான, விவேகமான சிந்தனைக்கு எதிரான கருத்துக்கள் எல்லா மதங்களிலும் உள்ளன என்பதனையும் உணராது இருக்கின்றனர்.

அனைத்து எதேச்சதிகாரங்களும் அறிவாற்ற லுக்கு எதிரானவையே என்பதனை வரலாறு கூறுகிறது. எனவே, 300க்கும் அதிகமான ஆளுமைகள் ஏன் தேசிய விருதுகளை திருப்பி அளித்தார்கள் என்பதற்கான காரணத்தை உள்ளார்ந்து ஆய்வு செய்வதற்கு பதிலாக, இத்தகைய ஆளுமைகளை தேச நலனுக்கு எதிரானவர்களாகவும், மாற்றுக் கருத்தை உற்பத்தி செய்பவர்களாகவும் தற்போதைய அரசு சித்தரிப்பதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. மேலே பட்டியலிடப்பட்டவை எல்லாம் நடந்த ஒட்டுமொத்த நிகழ்வுகளில் அங்கொன்றும், இங்கொன்றும் ஆனவையே. மொத்த நிகழ்வுகளின் ஒரு சிறு பகுதியே இவை. இந்தியாவின் ஜனநாயகத் தன்மையை சீரழித்து, அதனை இந்து மதவாத எதேச்சதிகார அமைப்பாக மாற்றுவதே பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியனவற்றின் முக்கியமான நோக்கமாகும் என்பதற்கு பரவலான சான்றுகள் உள்ளன.

உயிரியல் துறையுடன் தொடர்புள்ளவன் என்ற அடிப்படையில், மிக முக்கியமான உயிரியல் கோட்பாடு ஒன்றை மேற்கோள் காட்டி எனது கட்டுரையை நிறைவு செய்திட விரும்புகிறேன். “பன்முகத்தன்மை தான், பரிணாம வளர்ச்சிக்கு வழிகோலும். ஒற்றைத்தன்மை அழிவுக்கே இட்டுச் செல்லும்.

(தனது பத்மபூஷன் விருதை சமீபத்தில் திருப்பி அளித்தவர் இவர்.)

Pin It