புற்றுநோய் ஒரு மணித்துளி கூட சும்மா இருக்காது. அது தன் கொடுமையான கிருமிகளைப் பெருக்கிக் கொண்டே இருக்கும். நோயின் கொடுமையை வளர்த்துக் கொண்டே இருக்கும்.
பா.ஜ.க&வும் இந்துத்துவவாதிகளும் அப்படித்தான். ஒரு நாள் கூட சும்மா இருக்க மாட்டார்கள். தேவையில்லாமல் பேசி சகிப்புத்தன்மையை பிரச்சனைகளுக்கு உள்ளாக்கிக் கொண்டே இருப்பார்கள்.
முன்னது உடல் பற்றியது. பின்னது சமூகம் பற்றியது.
“வீட்டில் என் மனைவி கிரணிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர், இந்தியாவை விட்டுச் சென்று விடலாமா என்று திடீரெனக் கேட்டார். அதிர்ச்சியாக இருந்தது.
நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கண்டு அவர் அச்சம் அடைந்திருக்கிறார். ஒவ்வொரு நாளும் நாளிதழ்களைப் பிரித்துப் பார்க்கக்கூட அவர் பயப்படுகிறார். அந்த அளவுக்கு நாட்டில் சகிப்பின்மை வளர்ந்து விட்டது” டில்லியில் நாளிதழ் குறித்த விழா ஒன்றில், மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி முன்னிலையில் இப்படிப் பேசினார் இந்தி நடிகர் அமிர்கான்.
இவர் நடிகர் மட்டும் அல்லர், மோடி அறிவித்தத் தூய்மை இந்தியா திட்டத்தின் தூதராக பா.ஜ.க. அரசால் நியமிக்கப்பட்டவர். அதற்காக இவர் கருத்து எதையும் சொல்லக்கூடாதா என்ன?
அப்படித்தான் இன்றைய நாடும் நடப்பும் எப்படி இருக்கிறது என்பதை அவரின் பார்வையில் சொல்லி இருக்கிறார். இது அவரின் கருத்துச் சுதந்திரம், அவ்வளவுதான்.
உடனே கிளம்பி வந்துவிட்டார் ஒரு மனிதர், பெயர் யோகி ஆதித்யநாத், பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் இவர்.
“நாட்டை விட்டு யாரேனும் வெளியேற விரும்பினால், நாங்கள் அவர்களைத் தடுக்கப் போவதில்லை. குறைந்த பட்சம் நம் நாட்டில் மக்கள் தொகை குறையும்” என்கிறார் அவர்.
நாட்டைவிட்டு வெளியேறுகிறேன் என்று அமிர்கான் சொல்லவில்லை. இந்த எம்.பி, நீ வெளியேறு நாட்டின் மக்கள் தொகை குறையும் என்பது போலப் பேசுகிறார். இந்த மனிதரின் சகிப்பற்றப் பேச்சு, அமிர்கானின் கருத்தை உறுதி செய்வதாகத் தானே அமைகிறது.
தூய்மை இந்தியா திட்டத் தூதராக நியமிக்கும் போது அமிர் நல்லவராகத் தெரிந்தார். அவர் ஒரு கருத்தைச் சொன்னால் தேசத்துரோகியா?
பெருமாள் முருகன் போன்ற எழுத்தாளர்களின் கருத்துச் சுதந்திரம் நசுக்கப்படும் போது
கல்புர்க்கி போன்ற பகுத்தறிவு எழுத்தாளர்கள் சுட்டுக் கொலை செய்யப்படும் போது
மாட்டுக்கறி சாப்பிட்டதற்காக உத்திரப் பிரதேசத்தில் கொலை செய்யப்படும் போது
அமைதியாக இருக்க வேண்டிய அயோத்தியில் ராமர்கோயில் கட்டுவோம் என்று பதற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் போது
முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்குப் போகட்டும் என்று அமித்ஷா முதல் அவரின் கட்சியினர் சொல்லும்போது
22&ம் தேதி டில்லியில், சர்வதேச இந்தியவியலாளர் மாநாட்டில், இந்தியாவில் சகிப்புத்தன்மை தேவைப்படுகிறது என்று குடியரசுத்தலைவர் பிரனாப் முகர்ஜி பேசினாரே.
அதே செய்தியைத் தானே அமிர்கான் சொல்லியிருக்கிறார். அதுவும் ரகசியமாகச் சொல்லாமல், அருண்ஜெட்லி முன்னிலையில் தானே சொல்லியிருக்கிறார்.
வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியாவின் வலிமை என்று கோலாலம்பூரில் பேசிய மோடியின் பேச்சு, மோசடிப்பேச்சு என்பதை அப்பட்டமாக்கிக் கொண்டிருக்கிறார்கள் அவரின் கட்சிக்காரார்கள் இன்றும்.
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த கடந்த ஒன்றரை ஆண்டும் நாட்டில் சகிப்புத்தன்மை இல்லை. அமைதியான சூழல் இல்லை.
மதவாதமும், இனவாதமும், சாதிய மேலாண்மையும், சாதிய ஒடுக்குமுறையும், கருத்துரிமைகளும் கழுத்து நெறிபடும் நிலையே இருந்து வருகிறது.
இனிவரும் காலமும் அச்சமாகவே இருக்கிறது, பா.ஜ.க. ஆட்சி முடிவுக்கு வரும் வரையும்.
அமிர்கானின் பேச்சும் அதைத்தான் சொல்கிறது.