இந்துத்துவ அரசியல் - ஒரு வரலாற்றுப் பார்வை (2)

முஸ்லிம் அல்லாதவர்களில் மிகப் பெரும்பான்மையினரையும், வருணாசிரம அமைப்புக்கு வெளியில் இருந்த தாழ்த்தப்பட்டவர்களையும், பழங்குடியினரையும் இந்துக்கள் என்ற வரையறைக்குள் கொண்டுவந்து அவர்கள் எல்லாருக்கும் பொதுவான இந்து உரிமை இயல் சட்ட நெறிகளை (மனுஸ்மிருதி) முதலானவற்றின் அடிப்படை யில், ஆங்கிலேயே ஆட்சி 1860இல் உருவாக்கியது. 1860க்கு முன்பு வரை, இந்தியாவில் ஒரே சீராக எல்லா இடங் களுக்கும் எல்லாருக்கும் எல்லா சமயங்களிலும் பொருந்துகிற, பொதுவான சித்தாந்த உள்ளடக்கத்தைக் கொண்ட இந்துச் சட்டம் (Hindu code) என்று ஏதும் இருந்ததில்லை.

ஆனால் சங்பரிவாரங்கள் வேதகாலம் முதல் ஒரே நாடு, ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே மொழி இருந்து வந்தது போலவும், அதை மீண்டும் நிலைநாட்டுவதே இந்தியர் களின் - இந்திய நாட்டின் சுயமரியாதையை மீட்டெடுப்ப தாகும் என்றும் கூச்சலிட்டுக் கொண்டிருக்கின்றன.

ஆங்கிலேயரின் ஆட்சியாலும் கருத்துகளாலும் இந்து மதம் பல அறைகூவல்களை எதிர்கொள்ள வேண்டி யிருந்தது. வேதகாலம் முதல் பார்ப்பனியம் காலத்துக்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக் கொண்டு, தன் ஆதிக்கத்தை நீடிக்கச் செய்யும் சூழ்ச்சித் திறன் மிக்கதாகத் திகழ்ந்து வருகிறது. இவ்வாறு தான் வரலாற்றில் பல நூற்றாண்டுகள் நீடித்த பவுத்த, சமண சமயங்களில் செல்வாக்கையும் எதிர்ப்பையும் இறுதியில் முறியடித்தது. 500 ஆண்டுகளுக்கு மேல் நீடித்த முகம்மதிய ஆட்சியினரும் வருணாசிரம - சாதியமைப்பினைக் கட்டுக் குலையாமல் காத்தனர். மதத்திலும் சமூகத்திலும் பார்ப்பன மேலாதிக்கம் சரியாமல் பார்த்துக் கொண்டனர். எனவே ஆங்கிலேய ஆட்சியால் ஏற்பட்ட புதிய சூழலுக்கு ஏற்பத் தன்னைத் தகவமைக்கும் முயற்சியாக 1828இல் பிரம்ம சமாஜத்தையும், 1875இல் ஆரிய சமாஜத்தையும் பார்ப்பனர்கள் தோற்றுவித்தனர். இந்து மதத்தைச் சீர்திருத்தம் செய்து நவீனப்படுத்தும் முயற்சியில் இவை ஈடுபட்டன.

1858 முதல் பிரித்தானியப் பேரரசின் நேரடி ஆட்சியில் உருவான கல்வி, வேலை வாய்ப்புகளைப் பார்ப்பனர்களே கைப்பற்றிக் கொண்டனர். தங்கள் ஆதிக்கத்தை உரிமை யுடனும், வலிமையாகவும் நிறுவுவதற்கான ஓர் அமைப்பாக 1885இல் ‘இந்தியத் தேசியக் காங்கிரசு’ என்ற அரசியல் கட்சியை நிறுவினர். ‘அரசின் உயர் பதவிகளை இந்தியர் மயமாக்கு’ என்பதே இதன் முதன்மையான முழக்கமாக இருந்தது. காலங்காலமாகக் கல்வியைத் தம் முற்றுரிமை யாக்கிக் கொண்டிருந்த பார்ப்பனர்கள் ஆங்கில ஆட்சியில் ஏற்பட்ட கல்வி வாய்ப்பையும், அரசு வேலைகளையும் முழுவதுமாகக் கைப்பற்றிக் கொண்டனர். இந்திய அளவில் காங்கிரசுக் கட்சியிலும் பார்ப்பனர்களே தலைவர்களாக இருந்தனர். இவர்களின் அரசியல் கோரிக்கைகள் அனைத்தும் ஆட்சியதிகாரத்தில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வதையே குறிக்கோளாகக் கொண் டிருந்தன. இதற்காகவே ‘இந்திய தேசியத்தின்’ பெயரால் இந்தியாவில் உள்ள அனைவரும் ஓரணியில் திரள வேண்டுமென்று முழங்கினர்.

பார்ப்பனர்களே சுயராச்சியம் என்ற பெயரால் எல்லா வாய்ப்புகளையும் அதிகாரங்களையும் பெற்று வருவதைக் கண்ட - அப்போது இந்தியாவின் மக்கள் தொகையில் 25 விழுக்காட்டினராக இருந்த இசுலாமியர்கள் தங்கள் நலன்களைக் காப்பதற்கென 1906இல் ‘முசுலீம் லீக்’ என்ற அமைப்பை உருவாக்கினர். தங்களுக்குத் தனியாக, சட்ட அவைகளிலும், அரசு வேலைகளிலும் விகிதாசாரப் பங்கீடு கோரினர். 1909இல் மிண்டோ-மார்லி திட்டத்தின் கீழ், சட்ட அவைகளில், முகமதியர் தனி இடஒதுக்கீடு பெற்றனர். 1919இல் மாண்டேகு-செம்ஸ்போர்டு திட்ட அறிக்கையின் படி சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்தில் தனி வாக்காளர் தொகுதியைப் பெற்றனர். 1934இல் வேலைகளில் தனியாக விகிதாசார இடஒதுக்கீடு பெற்றனர்.

வெள்ளையர் வெளியேறியவுடன் இவை இரண்டும் நீக்கப்பட்டன.

இதே சமகாலத்தில் சென்னை மாகாணத்தில் பார்ப்பனர் ஆதிக்கத்தை எதிர்த்து 1916இல் உருவாக்கப்பட்ட தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம் எனும் நீதிக்கட்சி, பிரித்தானிய அரசிடம் டாக்டர் டி.எம்.நாயரின் தலைமையில் வாதாடி, சென்னை மாகாணத்தில் மட்டும் பார்ப்பனர் அல்லாதார்க்கென சட்டமன்றத் தொகுதிகளைப் பெற்றது. 1920இல் நடந்த தேர்தலில் நீதிக் கட்சி வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது. 1921இல் இயற்றிய சட்டப்படி, சென்னை மாகாணத்தில் மட்டும் அரசு வேலைகளில் 100 விழுக்காடு இடங்களும் 5 வகுப்புகளுக்குப் பிரித்து அளிக்கப்பட்டன. 1937 வரை நீதிக்கட்சி ஆட்சியில் இருந்தது. பார்ப்பன ஆதிக்கத்திற்கு இது பேரிடியாய் அமைந்தது என்பது வரலாறு.

சமூக சீர்திருத்தத்துக்கு எதிர்ப்பு

காங்கிரசுக் கட்சியில் கோபால கிருட்டிண கோகலே போன்றவர்கள் அரசியல் சீர்திருத்தத்துடன், சமூக சீர்திருத்தத்தையும் மேற்கொள்ள வேண்டும் என்றனர். தீவிர இந்துமதப் பிற்போக்காளர்களாக விளங்கிய திலகர் போன்றவர்கள் சமூக சீர்திருத்தக் கோரிக்கை மேலெழாதவாறு செய்துவிட்டனர். அதனால் காங்கிரசு மாநாடுகளில் நடைபெற்று வந்த சமூக சீர்திருத்த மாநாட்டுக்கு அனுமதி தரவும் மறுத்துவிட்டனர்.

1915இல் காந்தியார் தென்னாப்பிரிக்காவிலிருந்து நிலையாக இந்தியாவுக்குத் திரும்பினார். 1920க்குள் காங்கிரசுக் கட்சியின் தலைமை அவரிடம் சென்றது. 25 விழுக் காட்டினராக உள்ள முசுலீம்களையும் தேசிய இயக்கத்தில் இணைக்கும் நோக்கத்துடன், கிலாபத் இயக்கத்தையும் ஒத்துழையாமை இயக்கத்தையும் ஒரே சமயத்தில் தொடங்கினார். அலி சகோதரர்கள் காந்தியுடன் இந்தியா முழுவதும் சென்று பரப்புரை செய்தனர். ஆனால் காந்தி எதிர்பார்த்த அளவுக்குப் பயன் கிடைக்கவில்லை.

1909இல் பிரித்தானிய அரசு சட்ட அவைகளில் இசுலாமியருக்குத் தனிப் பிரதிநிதித்துவம் அளித்ததைக் காங்கிரசில் இருந்த எல்லாப் பார்ப்பனர்களும் எதிர்த்தனர். இந்துக்களைக் கலாச்சார முறையிலும் அரசியல் வழியிலும் அணி திரட்டுவதற்காக 1910இல் கான்பூரில் பார்ப்பனர்கள் ஒரு மாநாடு கூட்டினர். இதன் தொடர்ச்சியாகக் காங்கிரசில் தலைவர்களாக இருந்த மதன்மோகன் மாளவியாவும், லாலா லஜபதிராயும் 1914இல் ‘இந்து மகா சபை’ என்ற அமைப்பை ஏற்படுத்தினர். காங்கிரசின் பல தலைவர்களும், மற்ற படித்த இந்துக்களும் இந்து மகாசபையில் சேர்ந்து செயல்பட்டனர். இந்து மகாசபை முசுலீம்களுக்கு எதிரான அரசியல் நிலைபாட்டைக் கொள்கையாகக் கொண்டிருந்தது.

மராட்டியத்தின் சித்பவன் பார்ப்பனப் பிரிவைச் சேர்ந்த விநாயக் தாமோதர் சாவர்க்கர் 1906-1910 வரை இலண்டனில் இருந்தார். அவர், பிரித்தானிய அரசுக்கு எதிராகப் புரட்சி செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அந்தமான் தீவில் 1917இல் சிறை வைக்கப்பட்டார். இந்துத்துவம் குறித்து சாவர்க்கர் உருவாக்கிய கருத்துகளை 1917-1919 காலக் கட்டத்தில் அந்தமான் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டவர்கள் மூலமாக இந்தியாவுக்கு அனுப்பினார். அவை தொகுக்கப்பட்டு ‘இந்துத்துவா’ என்ற தலைப்பில் 1923ஆம் ஆண்டு நூலாக வெளியிடப்பட்டது. அந்நூலின் ஆசிரியர் ‘மராத்தியன்’ என்று குறிக்கப்பட்டிருந்தது.

‘இந்து’ என்ற சொல்லுக்கு 50 வகையான விளக்கங்கள் இருந்தன. சாவர்க்கர் இந்தக் குழப்பத்துக்கு ஒரு முடிவுக் கட்டி, திட்டவட்டமான இறுதியானதோர் வரையறையை ‘இந்துத்துவா’ நூலில் வழங்கியிருக்கிறார் என்று, இந்நூலின் இரண்டாம் பதிப்பின் முன்னுரையில் கூறப்பட்டுள்ளது. ‘இந்துத்துவா’ என்ற சொல்லை, ‘சாவர்க்கர்’தான் உருவாக்கினார். இந்துத்துவா என்பது இந்து சாத்திரங்களையோ, இந்து மதத்தையோ குறிப்பதன்று. இந்து இராஷ்டிரம் எனும் நிலப்பரப்பை - அதில் வாழும் இந்து மக்களைக் குறிப் பாகும் என்று விளக்கமளித்துள்ளார் சாவர்க்கர்.

இந்து என்பவன் யார்? என்ற வினாவுக்கு, “சிந்து நதியிலிருந்து தெற்கே கடல் வரை நீண் டிருக்கும் பிரதேசமாகிய பாரத வர்ஷத்தைத் தன் தந்தையர் நாடாகவும் (பித்ரு பூமி) புண்ணிய பூமியாகவும் அதாவது தன் மதத்தின் தொட்டி லாகவும் கருதும் ஒருவன்தான் இந்து” என்று இந்துத்துவா நூலில் சாவர்க்கர் வரை யறை செய்துள்ளார். இந்துத்துவத்தின் கருப் பொருளாக இன்றளவும் இதுவே விளங்குகிறது.

இந்தியாவில் வாழும் இசுலாமியர்களுக்கு மெக்காவும், கிறித்துவர்களுக்கு ஜெருசலேமும் புண்ணிய பூமியாக இருப்பதாலும் அவர்களுடைய மதங்கள் அயல்நாட்டில் தோன்றியதாலும் அவர்கள் இந்த நாட்டுக்கு உரிமை உடையவர்கள் அல்லர் என்பதே இதன் விளக்கமாகும். சாவர்க்கரின் இந்துத்துவ நூலை லஜபதிராயும், மாளவியாவும் போற்றிப் புகழ்ந்தனர். இந்துமகா சபையின் கொள்கை நூலாக இது ஏற்கப்பட்டது.

இந்தப் பின்னணியில்தான் 1925 விஜயதசமி நாளில் நாகபுரியில் இராஷ்டிரிய சுயம்சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்.) என்ற அமைப்பை டாக்டர் கே.பி. ஹெட்கேவர், டாக்டர் பி.எஸ். மூஞ்சே (இவர் திலகரின் நண்பர்), டாக்டர் எல்.வி. பராஞ்சிபாய், டாக்டர் பி.பி.தால்கர், பாபுராவ் சாவர்க்கர் (வி.தா. சாவர்க்கரின் தம்பி) ஆகிய அய்வர் அமைத்தனர். இவர்கள் அய்வரும் மராட்டிய சித் பவன் பார்ப்பனர்கள். ஹெட்கேவர் தவிர மற்ற நால்வரும் இந்து மகாசபையைச் சேர்ந்தவர்கள். அதனால்தான் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ஹெட்கேவர் பெயரை மட்டுமே ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் பெயரில் குறிப்பிடுகின்றனர். 1929இல் ஹெட்கேவர் வாழ்நாள் தலைவராகத் (சர்சங்சாலக்) தேர்ந்தெடுக்கப்பட்டார்.

(தொடரும்)

Pin It