திருக்குறள் பெருமையைப் பேசுகிறார், தருண் விஜய் என்று தமிழ்நாட்டில் அவருக்கு சிவப்புக் கம்பளம் விரித்து பாராட்டு மழைகளை பொழிந்தவர்கள் உண்டு. பா.ஜ.க.வின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரான அவர், அரித்துவாரில் கங்கைக் கரையில் வள்ளுவர் சிலை வைக்கப் போவதாகக் கூறினார். வைதீகப் பார்ப்பனர்கள், திருவள்ளுவர்  ‘தீண்டத்தகாதவர்’ என்று கூறி, சிலையை ‘புனித நதி’க் கரையில் நிறுவ எதிர்த்தனர். அதற்குப் பிறகு ‘சங்கராச்சாரி சதுக்கம்’ என்ற இடத்தில் சிலையை நிறுவ முடிவு செய்த போது சொரூபானந்த சரசுவதி எனும் பார்ப்பனர் தலைமையில் பார்ப்பனர்கள் எதிர்த்தனர். இது ஆதிசங்கரர் அறக்கட்டளைக் குரிய இடம். ஆதிசங்கரர் சிலை மட்டுமே இருக்க வேண்டும் என்று கூறி விட்டனர். கடைசியில் பொதுப் பணித்துறை விருந்தினர் வளாகத்தில் சிலை திறப்பு நடந்தது. தருண் விஜய் இப்படியெல்லாம் நடத்திய ‘தமிழ்ப் பற்று’ நாடகம், இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது.

புதுடில்லி நொய்டா பகுதியில் ஆப்பிரிக்க நாட்டின் மாணவர் தாக்கப்பட்டது குறித்து சர்வதேச தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த தருண் விஜய், “நாங்கள் இனவாதிகள் அல்ல; அப்படி இருந்திருப்போமானால், நாங்கள் எப்படி தென்னிந்தியர் களுடன் சேர்ந்து வாழ்ந்து கொண்டிருப்போம். அவர்களும் கருப்பர்கள்தானே? (If we are racist how is it that we live with South Indians for they are ‘black’ too) - என்று கூறியிருக்கிறார். “வடநாட் டுக்காரர் களாகிய நாங்கள் ஆரியர்கள். நாங்கள் தென்னாட்டு திராவிடர்களான கருப்பர்களுடன் சேர்ந்து வாழ சம்மதித்திருக் கிறோமே” என்ற கருத்தை வேறு மொழியில் அவர் பேசியிருக்கிறார்.

திராவிடர்கள் கறுப்பர்கள் என்பதை நாம் சிறுமையாகக் கருதவில்லை.  கறுப்பு பெருமைக் குரிய அடையாளம்தான். ஆனால்;, ஆரிய வெள்ளையர்கள் ஏதோ மனமிறங்கி, திராவிட கருப்பர் களோடு சேர்ந்து வாழ முன் வந்திருப்பதுபோல் பேசுவதுதான் பச்சை இனவாதம். இனவாதத்தை மறுப்பதற்கு அவர் எடுத்துக் காட்டிய சான்றே அவரது உள்ளத்தில் ஆழமாகப் புரை யோடியிருக்கும் இனவெறியை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துவிட்டது.   நாடாளுமன்றத் தில் எதிர்க் கட்சித் தலைவரும் காங்கிரஸ் உறுப்பினருமான கருநாடகத்தைச் சார்ந்த மல்லிகார் ஜூனா கார்கே அவையில் தருண் விஜய் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக் கிறார்.

“தென்னாட்டு மக்களான நாங்கள் இந்த நாட்டின் குடி மக்கள் இல்லை என்கிறீர்களா? ஹிட்லர் பேசிய இனவாதத்தை இங்கே இறக்குமதி செய்கிறார் களா? சங்பரிவார்களின் தத்துவத்தை இந்த ஆட்சி செயல் படுத்துகிறதா?” இத்தகைய இனவாதம் தொடருமேயானால் எதிர்காலத்தில் நாம் சுதந்தி ரத்தையே இழந்து விடுவோம் என்று அம்பேத்கர் எச்சரித்தார். தருண் விஜய் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உணர்ச்சியோடு பேசி யிருக்கிறார் கார்கே. பாராட்ட வேண்டும். ஆனால் தமிழ்நாட்டி லிருந்து சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாய் திறக்காமல் மவுனம் காத்திருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியது. கார்கேவுக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்துள்ள அ.இ.அ.தி.மு.க சசிகலா அணியைச் சார்ந்த தம்பிதுரை - ஏதோ தமக்கு தொடர் பில்லாத பிரச்சினை போல் அமர்ந்திருப்பதை நாடாளுமன்ற காணொளி மூலம் பார்க்க முடிந்தது. கர்நாடக காங்கிரஸ் தலைவருக்கு ஏற்பட்ட உணர்ச்சி, தமிழ்நாட்டு ‘திராவிட’ கட்சி உறுப்பினர்களுக்கு இல்லாமல் போய்விட்டது.

தருண் விஜய் ஆர்.எஸ்.எஸ். ஏடான ‘பஞ்ச ஜம்யா’ ஏட்டில் ஆசிரியராக 22 ஆண்டுகள் பணியாற்றியவர். ஆர்.எஸ்.எஸ். இனவாதத்தில் ஊறிப் போனவர்.  மதவாதம் பேசும் ‘சங்பரிவார்’ தொடக்கத்தில் முன் வைத்தது ஆரிய இனவாதம் தான். அந்தக் கண்ணோட்டத்தில் இட்லரையும் முசோலினியையும் ஆதரித்த அமைப்பு ஆர்.எஸ்.எஸ். ஆர்.எஸ்.எஸ்.ஸை தோற்று வித்தவர்களில் ஒருவரான பி.எஸ். மூஞ்சே, 1931இல் இத்தாலியில் பாசிஸ்ட் இனவெறி இயக்கம் நடத்திய முசோலினியை சந்தித் தவர். இந்தியா திரும்பியவுடன் அவரும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஹெட்கேவரும் இணைந்து, ‘பாசிசமும் முசோலினியும்’ என்ற தலைப்பில் மாநாடு நடத் தினார்கள். ஹிட்லர் - யூதர்களை அழிக்கும் இனவெறி நட வடிக்கையை வெளிப்படையாக ஆதரித்து 1939இல் எழுதியவர் மற்றொரு ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வாக்கர்.

ஆரிய இனவாதம் பேசி யவர்கள் அகண்ட இந்து இராஜ்யத்தை முன் வைத்தவர்கள். பிறகு தங்கள் உருவத்தை மறைத்து மதவாதத்துக்குள் பதுங்கினர். இந்தியா இந்துக் களின் தேசம் என்று கூறியதோடு, இந்தியா என்பதே தவறு. ‘பாரதம்’, ‘பாரதியம்’ என்பதே - இந்துக் களுக்கான அடையாளம் என்கின்றார்கள். தருண் விஜய் மதவாதத்துக்குள் பதுங்கி நிற்கும் ஆரிய இனவாத்தைத்தான் இப்போது பேசியிருக்கிறார்.

‘இந்து - இந்துத்துவா’ என்ற ஒற்றை அடையாளத்தை ‘இந்தியா’ முழுதும் திணிக்க முயலும் இவர்கள் வடநாட்டு ‘இந்து’க்களுக்கு தென்னாட்டு ‘இந்துக்கள்’ அடங்கிப் போக வேண்டும் என்று கூற வரு கிறார்களா?

‘இந்தியா’ என்பது ஒரே நாடு அல்ல என்ற வரலாற்று உண்மையைக் கூறினால், ‘பிரிவினைவாதி’, ‘தேசத் துரோகி’ என்று கூக்குரலிடும் சங்பரிவார், பா.ஜ.க., பார்ப்பனியம், தருண் விஜய் கூறும்போது அதை ‘தேச பக்தி’ என்று பாராட்டுகிறதா? என்று கேட்க விரும்புகிறோம்.

‘பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும்’ என்ற வள்ளுவத்தை உயர்த்திப் பிடிப்பதாக தருண் விஜய் ஆடிய நாடகம், தமிழர் களை ஏமாற்றுவதற்குத்தான் என்ற உண்மையை இப்போதா வது தமிழர்கள் புரிந்து கொள்வது நல்லது.

Pin It