பிரிட்டனின் புதிய பிரதமராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இதற்காக பிரிட்டன் மக்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றார்களோ இல்லையோ ,இந்தியாவில் சங்கிக் கும்பல் லங்கோடு அவிழ்ந்தது கூட தெரியாமல் ஆனந்தப் பரவசத்தில் ஆடிக் கொண்டு இருக்கின்றது.

ரிஷி சுனக் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றும், இந்தியாவை பிரிட்டன் ஆண்டது போய் பிரிட்டனை ஓர் இந்தியன் ஆளும் நிலை வந்துவிட்டது எனவும் பூரிப்படைகின்றார்கள். ஆனால் உண்மை என்னவோ சம்மந்தப்பட்ட ரிஷி சுனக் அப்படி எங்கேயும் தன்னை சொல்லிக் கொள்ளவில்லை என்பதுதான்.

rishi sunak and akshata murtyஒரு வேளை ரிஷி சுனக்கிற்கு அப்படியான எண்ணங்கள் இருப்பதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் இருந்தாலும், அதைத் தன் வாழ்நாளில் ஒருமுறை கூட சொல்லும் தைரியமோ, திராணியோ ஒரு போதும் அவருக்கு வராது. காரணம் ஒன்றும் பெரிதல்ல. பிரதமர் பதவியைவிட பத்து பைசா பெருமானமற்ற இந்திய வம்சாவழி என்ற பட்டம் தேவையில்லை என்பதுதான்.

மேலும் ரிஷி சுனக்கிற்கும் இந்தியாவிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அவரது தாத்தா ராம்தாஸ் சுனக் ஒன்றுபட்ட இந்தியாவில் இருந்த பஞ்சாப் மாநிலத்தின் குஜ்ரன்வாலா பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். நாடுகள் பிரிக்கப்பட்டபோது அந்தப் பகுதி பாகிஸ்தானுக்கு சென்றுவிட்டது.

ரிஷி சுனக்கின் தந்தை யஷ்வீர் சுனக் கென்யாவைச் சேர்ந்தவராவர். அவரது தாய் உஷா, டான்சானியாவில் பிறந்தவர். இவர்கள் அனைவரும் 1960ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவில் இருந்து இங்கிலாந்துக்குப் புலம்பெயர்ந்து விட்டனர்.

இவரது மாமனார் இன்போசிஸ் நாராயணமூர்த்தி ஆவார். நாராயணமூர்த்தியின் மகள் அக்‌ஷதாவைதான் கடந்த 2009ஆம் ஆண்டு ரிஷி சுனக் திருமணம் செய்து கொண்டார். இன்று ரிஷி சுனக்கின் சொத்து மதிப்பு மட்டும் கிட்டத்தட்ட 700 மில்லியன் பவுண்டிற்கு மேல் ஆகும்.

ரிஷி சுனக்கை சங்கிகள் கொண்டாடுவதற்கு மற்றொரு காரணம், ரிஷி சுனக் பிரிட்டனில் இருந்தாலும் சனாதனத்தைக் கடைபிடிக்கும் சங்கி என்பதால்தான்.

கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்ட ரிஷி சுனக், பகவத் கீதை மீது சத்தியப் பிரமாணம் செய்து பதவி ஏற்றவர்.

அடிப்படையில் இன்று அவர் பிரதமராகத் தேர்தெடுக்கப்படுவதற்குக் காரணமான கன்சர்வெடிவ் கட்சிதான் நிறவெறியை உலகிற்கு அறிமுகப்படுத்திய கட்சி ஆகும். நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன் என்று கடவுளின் பெயரால் சாதிய வர்ணாசரமத்தை ஆதரிக்கும் பகவத் கீதையை ஆதரிக்கும் ரிஷி சுனக்கை நிறவெறியைப் பரப்பும் கன்சர்வெடிவ் கட்சி தன் பிரதம வேட்பாளராக தேர்ந்தெடுத்ததற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.

ஒரு சனாதன பாசிஸ்ட்டால் மட்டுமே கடுமையான முதலாளித்துவ ஆதரவு நிலைப்பட்டை எடுத்து சமானிய மக்களை ஒடுக்கவும் முதலாளிகளுக்கு எதிரான தொழிலாளி வர்க்கத்தின் போராட்டத்தை ஒடுக்கவும் முடியும்.

கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்ட பிரிட்டன் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியில் தற்போது சிக்கி உள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதோடு, மக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றார்கள். இதனால்தான் போரிஸ் ஜான்சன் தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

அவருக்கு அடுத்து புதிய பிரதமராகப் பொறுப்பேற்ற லிஸ் ட்ரஸ், சில பொருளாதார மாற்றங்களை அறிமுகம் செய்தார். ஆண்டுதோறும் 2.5% பொருளாதார வளர்ச்சியை உயர்த்தும் என்று கூறி தாக்கல் செய்யப்பட்ட புதிய பட்ஜெட்டில் 45 பில்லியன் வரி குறைக்கப்பட்டிருந்தது. மேலும், வீடுகள் மற்றும் தொழில் ரீதியாகப் பயன்படுத்தப்படும் பொருட்களின் மீது விலையைக் குறைக்க 60 பில்லியன் பவுண்டு கடன் வாங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பார்த்தற்கு மாறாக வருவாய் குறைந்து மீண்டும் நெருக்கடி நிலையே உருவானது. இதனால்தான் லிஸ் ட்ரஸ் பதவி விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் பிரிட்டன் ஐந்து பிரதமர்களைக் கண்டிருக்கிறது என்பதே அது எவ்வளவு மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளது என்பதை விளக்கும். தற்போது ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பது, இவர் முந்தையவர்களைக் காட்டிலும் முதலாளித்துவ நெருக்கடியை சமாளிக்க சிறந்த பாசிஸ்ட்டாக செயல்படுவார் என்பதுதான் காரணம்.

ஏற்கெனவே சுனக் முன்னாள் சான்சிலராக இருந்தபோது பெருந்தொற்று காலத்தில் பெருநிறுவனங்களுக்கு பல நூறு பில்லியன் பிணை வழங்கி இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுபோன்றதொரு தாக்குதலை மீண்டும் ரிஷி சுனக் செய்யத்தான் போகின்றார். 'கடினமான முடிவுகள்’ பிரிட்டன் தொழிலாளர் வர்க்கத்தின் மீது ஏவுவதற்கு தயார்நிலையில் உள்ளது. சிக்கன நடவடிக்கைகள் என்ற பெயரில் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் பணியைவிட்டு துரத்தி அடிக்கப்படவும், சமூக நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு வெட்டப்படவும், பெருவணிக நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள் வழங்கப்படவுமான நிகழ்வுகள் அரங்கேறப் போகின்றது.

ஏற்கெனவே “உக்ரேனில் புட்டினின் போர், உலகம் எங்கிலும் எரிபொருள் சந்தைகள் மற்றும் விநியோகச் சங்கிலிகளை சீர்குலைத்துள்ளது” என்றும், "முடிவில் வெற்றியாகக் காண வேண்டிய ஒரு பயங்கர போருக்கு 'உதவியாக' நம் ஆயுதப் படைகளை ஆதரிப்பதை முன்னுரிமையாகக் கொள்ள வேண்டும்" எனவும் அறிவித்திருக்கின்றார் ரிஷி சுனக்.

இதன் மூலம் உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்கத் தலைமையிலான நேட்டோ போருக்கு பிரிட்டனின் முழு ஆதரவை அவர் பைடென் நிர்வாகத்திற்குத் தெரிவித்திருக்கின்றார். சுனக் வாஷிங்டனுக்குச் சென்றதையும், பைடென் ட்வீட் செய்து சுனக்கிற்கு வாழ்த்து தெரிவித்ததையும் நாம் மறந்து விடக்கூடாது.

இவ்வளவு கடுமையான பொருளாதார நெருக்கடியிலும் கூட ஏகாதிபத்திய நாடுகளின் போர்வெறி அடங்கவில்லை என்பதைத்தான் சுனக்கின் செயல்பாடுகள் காட்டுகின்றது. ஆனால் ரிஷி சுனக்கிற்கு பல சவால்கள் இருக்கின்றன.

2020 இல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறியது முதலே அதாவது பிரெக்ஸிட்டிற்கு பின்பு கடுமையான பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருகின்றது. பிரிட்டனின் நாணயத்தின் மதிப்பு சரிந்தது. பிரிட்டனின் வணிகங்களும் வர்த்தகமும் புதிய ஒழுங்குமுறைக்கு ஏற்பப் போராடுவதால் பொருளாதாரம் சீர்குலைந்தது. பிரிட்டன் இன்றுவரை கூட ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பிறகான சீர்குலைவுகளை சரிசெய்ய முடியாமல், மற்ற ஐரோப்பிய நாடுகளுடனான உறவை மீட்டெடுக்கவும் போராடி வருகிறது.

மேலும் அதிக பணவீக்கம், அதிக கடன் சுமை, ஓய்வூதியம் மற்றும் மருத்துவமனை கட்டணங்களைக் கூட செலுத்த வக்கற்ற நிலையில் அரசாங்கம் இருப்பது, வேலையில்லாத் திண்டாட்டம் போன்றவை நெருங்கிக் கொண்டிருக்கும் ஒரு பொருளாதார நெருக்கடிக்கு கட்டியம் கூறுபவை.

ஆனால் பிரிட்டனின் நிலை இவ்வளவு மோசமாக இருக்கின்றதே, இதை எப்படி சுனக் சமாளிப்பார் என்பதைப் பற்றி கவலைப்படாத இந்திய சங்கிக் கும்பல் பிரிட்டனின் பொருளாதாரத்தை இந்தியா முந்தி விட்டதாக ஆடிக்கொண்டு இருக்கின்றது.

7.5 கோடி மக்கள் தொகை உள்ள பிரிட்டனை 138 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா முந்துவதற்கே இத்தனை ஆண்டுகள் ஆகி இருக்கின்றது என்பதற்காக உண்மையில் சங்கிகள் வெட்கப்படத்தான் வேண்டும்.

ஆனால் பிரச்சினை என்னவென்றால், இந்தியா இன்னும் வளமையின் அடிப்படையில் பிரிட்டனை விட இருபது மடங்கு பின்தங்கியிருக்கிறது என்பதுதான் இதன் பொருள். பொருளாதாரத்தின் மொத்த அளவில் இந்தியா பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி இருக்கின்றது. ஆனால் தனிநபர் வருமானத்தைப் பொருத்தவரையில் பிரிட்டனில் ஓர் ஆண்டுக்கு 45 ஆயிரம் டாலராக இருப்பது இந்தியாவைப் பொருத்தவரை ஓர் ஆண்டுக்கு சுமார் 2 ஆயிரம் டாலராக மட்டுமே உள்ளது.

எனவே சங்கிக் கும்பல் பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவும் வேண்டாம், அதன் குடியுரிமையும் வேண்டாம் என ஓடிப்போனவர்களை எல்லாம் குறிப்பாக அவர்களது மரபணுவே மாறிப்போன காலத்தில் அவர்களை இந்தியர்கள் என்பதும், இந்திய வம்சாவழி என்பதும் வெட்கக்கேடான சுய தம்பட்டம் ஆகும்.

இப்படித்தான் அமெரிக்கத் துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட போதும் சங்கிக் கும்பல் கண்ணீர் மல்க பட்டாசு வெடித்துக் கொண்டாடியது.

கமலா ஹாரிஸோ அல்லது ரிஷி சுனக்கோ அவர்கள் எந்த நாட்டில் வாழ்கின்றார்களோ அந்த நாட்டின் ஆளும் வர்க்கத்தின் அடியாள் படையாக மட்டுமே செயல்பட முடியும் என்பதும், அந்த நட்டின் பெருமுதலாளிகளின் நலன்களை மட்டுமே அவர்கள் பிரதிநிதித்துவப் படுத்துவார்கள் என்பதும்தான் உண்மை.

சங்கிகள் என்னதான் தேசபக்தி பேசினாலும் அவர்களின் ஜீனிலேயே ஏகாதிபத்திய அடிமைத்தனமும் புல்லுருவித்தனமும் இயல்பாகவே இருக்கின்றது என்பதைத்தான் அவர்களின் செயல்பாடுகள் காட்டுகின்றன.

- செ.கார்கி

Pin It