கோயில் நுழைவு உரிமை சந்தித்த தடைகள்

பிரிட்டிஷ் ஆட்சி காலம் தொடங்கி சுதந்திர இந்தியாவில் சனாதனம் பேசி பார்ப்பனியம் எந்த ஒரு சிறு சமூக மாற்றத்தையும் தடுத்து வந்ததோடு நீதி மன்றங்களிலும் வழக்குத் தொடர்ந்தது. ஆண்டு வாரியாக சனாதனக் கொடுமைகள் அது தொடர்பான வழக்குகள் குறித்து ஒரு சுருக்கமான ஆண்டுகள் வழியான தொகுப்பு. மனோஜ் மிட்டா எழுதி அண்மையில் வெளிவந்த மிகச்சிறந்த நூலான ஜாதியப் பெருமை (Caste Pride) நூலிலிருந்து: (சென்ற இதழ்த் தொடர்ச்சி)

1926 : மராட்டியப் பகுதிகளில் பிராமண அர்ச்சகர்கள் பரம்பரை அடிப்படையில் ஒவ்வொரு கிராமத்துக்கும் தங்களை அதிகாரபூர்வ அர்ச்சகர்களாக நியமித்துக் கொண்டனர். எந்த வைதீக சடங்குகளும் நடத்தும் உரிமை தங்களுக்கு மட்டுமே உண்டு என்று உரிமை கோரினார்கள். வெளியில் இருந்து ஒரு அர்ச்சகர் சடங்கு நடத்தி கட்டணம் வாங்கியதை எதிர்த்து நீதிமன்றம் சென்று வழக்கு தொடர்ந்தனர். பம்பாய் உயர் நீதிமன்றம் புரோகித பார்ப்பனர்கள் பரம்பரை உரிமையை உறுதி செய்து தீர்ப்பளித்து விட்டது. வைதீக சடங்குகள் இல்லாமல் திருமணங்கள் நடத்தப்பட்டால் அதற்கும் உள்ளூர் புரோகிதர்களுக்கு உரிய கட்டணங்களை கட்டாயம் செலுத்தியாக வேண்டும் என்ற நிலை நீடித்தது. 1926 இல் பம்பாய் மாகாண சட்டமன்றம் இதற்காகவே ஒரு தனி சட்டம் இயற்றியது. உள்ளூர் அர்ச்சகர் தங்களுக்கு மட்டுமே ஏகபோக உரிமை உண்டு என்று கோர முடியாது, வைதீக முறை இல்லாமல் நடத்தப்படும் திருமணங்களுக்கும் புரோகித கட்டணம் செலுத்தியாக வேண்டும் என்பதும் தேவையில்லை என்று அந்த சட்டம் கூறியது.manoj mitta and caste pride book1929ஆம் ஆண்டு பிரிவி கவுன்சில் கோயில் சம்பிரதாயங்களை மீறக்கூடாது என்ற அடிப்படையில் தீண்டப்படாத மக்களுக்கு கோயிலில் நுழைய அனுமதி இல்லை என்று தீண்டாமையை நியாயப்படுத்தி தீர்ப்பு வழங்கியது. பம்பாய் மாகாண சட்ட சபைக்கு நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்ட அம்பேத்கர் இந்த தடையை நீக்கி தீண்டப்படாத மக்களை கோவிலுக்குள் அனுமதிக்க கோரும் மசோதாவை பம்பாய் மாகாண சட்டமன்றத்தில் அறிமுகம் செய்தார் .

1930 : சுயமரியாதை இயக்கத்தில் இருந்தவரும், பெரியாரோடு நெருக்கமாக உறவில் இருந்தவருமான பொருளாதார நிபுணர் ஆர்.கே.சண்முகம் செட்டியார் டெல்லி தேசிய சட்டசபையில் உறுப்பினராக இருந்தார். பம்பாய் மாகாண சட்டமன்றத்தில் அம்பேத்கர் அறிமுகம் செய்த மசோதாவை டெல்லி தேசிய சட்டமன்றத்தில் ஆர் .கே. சண்முகம் செட்டியார் அறிமுகம் செய்தார். சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சராக இருந்தவர் ஆர்.கே.சண்முகம் செட்டியார் என்பது குறிப்பிடத்தக்கது.

1932 : தீண்டப்படாத மக்களுக்கு தனித் தொகுதி முறையை காந்தியும் ஜாதிய இந்துக்களும் உண்ணாவிரதம் இருந்து மிரட்டல் நாடகம் நடத்தி அதை தோற்கடித்தார்கள். அதற்கு மாற்றாக பூனா ஒப்பந்தம் ஒன்று உருவானது. அம்பேத்கர் பெற்றுதந்த தனித் தொகுதி உரிமை இதன் மூலம் முறியடிக்கப்பட்டது. இதற்காக தீண்டபடாத மக்களை சமாதானப்படுத்தும் நோக்கத்தோடு பூனா ஒப்பந்தம் உருவான அடுத்த நாளே தீண்டப்படாத மக்கள் பொது இடங்களை பயன்படுத்தும் உரிமையை ஆதரித்து அதற்கான மசோதா ஒன்றை காந்தியே கைப்பட தயாரித்தார். கோயில் நுழைவு உரிமை மக்களுக்கான அடிப்படை உரிமை என்ற வாசகத்தை மட்டும் காந்தி தவிர்த்து விட்டார் .

1933 : இந்தியாவில் உருவாக்கப்பட்ட மத்திய மாகாண சபை என்பது இன்றைய மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், மகாராஷ்டிரா மாநிலங்களை உள்ளடக்கியதாகும். இதன் தலைநகரமாக நாக்பூர் இருந்தது. இந்த மத்திய மாகாண சபையில் தீண்டப்படாத வகுப்பைச் சேர்ந்த ஜி.ஆர். கவாய் தனிநபர் மசோதா ஒன்றை கொண்டுவந்தார். மக்கள் வீதி, குளம்,கோயில் உள்ளிட்ட அனைத்து பொது இடங்களையும் பயன்படுத்தும் உரிமையை அது வலியுறுத்தியது. இந்த மசோதாவை மத்திய மாகாண சபை ஏற்றுக் கொண்டது. பிரிட்டிஷ் இந்தியாவில் இந்த உரிமைகளை முதலில் வழங்கியது மத்திய மாகாணம் தான்.

 1933 : டெல்லி தேசிய சட்டசபையில் சி.எஸ்.ரங்கா ஐயர் என்ற உறுப்பினர் காந்தி தயாரித்த கோயில் நுழைவு மசோதாவை அறிமுகப்படுத்தினார். ஒவ்வொரு கோயிலையும் தனித்தனியாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அந்தந்த உள்ளூர் பகுதியில் வாழும் பெரும்பான்மை மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி தீண்டப்படாதார் கோயில் நுழைவுக்கான அனுமதி கேட்ட பிறகுதான் கோயிலுக்குள் அவர்களை அனுமதிக்க வேண்டும் என்றும் காந்தியின் மசோதா கூறியது

1936 : திருவாங்கூர் சமஸ்தான அரசர் சித்திரை திருநாள் புரட்சிகரமான பிரகடனம் ஒன்றை வெளியிட்டார் . தனது சமஸ்தானத்திற்குள் எந்த ஒரு இந்துவின் மீதும் பிறப்பு மதம் அடிப்படையில் கட்டுப்பாடுகளை விதிக்கும் உரிமை எவருக்கும் இல்லை என்று இந்த பிரகடனம் அறிவித்தது. பிரிட்டிஷ் இந்தியாவில் இப்படி ஒரு பிரகடனத்தை முதலில் அறிவித்தது திருவாங்கூர் சமஸ்தானம் தான்

1937 : இந்து மதத்திற்குள்ளேயே வெவ்வேறு ஜாதியினர் திருமணம் செய்து கொள்ளும் உரிமை கிடைத்தது 1937 ஆம் ஆண்டு தான். என்.பி. காரே என்ற உறுப்பினர் தாக்கல் செய்த மசோதா இந்தியா முழுமைக்கும் சட்டமாக்கப்பட்டது, அதற்கு முன்பு ஆரிய சமாஜ் அமைப்பில் இருந்தவர்களுக்கு மட்டுமே இந்த உரிமை இருந்தது.

1938 : பம்பாய் மாகாண சட்டசபை காந்தியார் மசோதாவை நிராகரித்தது. கோயில் அறங்காவலர்கள் ஒப்புதல் தந்தால் தீண்டப்படாதவருக்கு கோயில் நுழைவு உரிமை வழங்கலாம் என்ற சட்டத்தை நிறைவேற்றியது.

1939 : பம்பாய் மாகாணத்தில் நடந்த காங்கிரஸ் கட்சி ஆட்சி மதத்தொடர்பு இல்லாத இடங்களை தீண்டப்படாத மக்கள் பயன்படுத்தலாம் என்று ஒரு சட்டம் கொண்டு வர முயன்ற போது அம்பேத்கரின் அரசியல் கட்சி அந்த சட்டத்தை நிறைவேற்ற விடாமல் தடுத்தது. தீண்டாமையை காவல்துறை தண்டனைக்குரிய குற்றமாக கருதி தண்டிக்க வேண்டும் என்ற சட்டத்தை கொண்டு வராமல் இப்படி ஒரு சட்டம் கொண்டு வருவது எந்தப் பயனையும் தராது என்பது அம்பேத்கரின் கருத்து.

1946 : ஒரே கோத்திரத்துக்குள் நடக்கும் திருமணங்கள் செல்லாது என்ற இந்து சட்டப் பிரிவை ஒழித்து அவை செல்லும் என்ற சட்டம் இந்த ஆண்டில் தான் கொண்டுவரப்பட்டது. இந்த மசோதாவை டெல்லி மத்திய சட்ட சபையில் கொண்டு வந்தவர் கோபால் ராவ் தேஷ்முக்.

1947 : தீண்டபடாதார் கோயில் நுழைவுக்கு உள்ளூர் மக்கள் ஆதரவு வேண்டும் என்று அமலில் இருந்த சட்டத்தை நீக்கியது சென்னை மாகாண சட்டசபை. தீண்டப்படாதவர்களை தடுப்பவர்கள் மீது அபராதம் விதிக்கும் சட்டத்தை கொண்டு வந்தது .

1948 : அரசியல் நிர்ணய சபை தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்ற சட்டப்பிரிவை மகாத்மா காந்திக்கு ஜே என்ற முழக்கத்துடன் சட்டப் புத்தகத்தில் சேர்த்தது. அரசியல் நிர்ணயசபையில் இடம் பெற்றிருந்த தீண்டப்படாத வகுப்பைச் சேர்ந்த பெண் உறுப்பினர் தட்சாயினி வேலாயுதம் என்ற ஒருவர் மட்டுமே இந்த சட்டத்தை எதிர்த்து தீண்டாமையை ஆதரித்தார்.

1948 : பூரி ஜெகநாதன் கோயில் அறங்காவலர்கள் அனைத்து இந்துக்களையும் கோவிலுக்குள் அனுமதிக்க விரும்பாத நிலையில் ஒரிசா அரசை கட்டாயப்படுத்தி இந்துக்களில் சில பிரிவினருக்கு மட்டுமே கோயில் நுழைவு உரிமை உண்டு என்று சட்டம் இயற்றச் செய்தனர் .

1949 : நாடாளுமன்றத்தில் தாக்கூர் தாஸ் பார்கவா கொண்டுவந்த மசோதா ஜாதி மறுப்பு திருமணங்கள் செல்லும் என்பதை உறுதிப்படுத்தியது.

1950 : தீண்டாமை குற்றத்தை செய்தவர்கள் தண்டிக்கப்படுவர் என்ற சட்டம் இந்தியா முழுவதும் அமுலுக்கு வந்தது .

1953 : சுயமரியாதை திருமணம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் சத்ய நாராயணராவ் மற்றும் பூண்டி ராஜகோபாலன் இரண்டு கருத்துக்களை முன் வைத்தனர், பெண்களை தானமாக வழங்குவது தான் இந்து திருமணத்தின் அடிப்படை, அதேபோல் தாலி கட்டும்போது வேதம் ஓதி அக்னி வளர்க்க வேண்டும் என்பதும் கட்டாயம், இவை இரண்டும் சுயமரியாதை திருமணத்தில் இடம் பெறாததால் திருமணம் செல்லாது என்று தீர்ப்பு அளித்தனர்.

 தமிழில் : இராசேந்திரன்

(நிறைவு)

Pin It