மாணவர்களின் கற்றல் திறன் படைப்பாற்றலை வளர்த்து எடுக்கும் நோக்கத்தோடு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை ஒவ்வொரு மாதமும் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு குழந்தைகள் திரைப்படங்களை திரையிடும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினர் ஒருவரும் அழைக்கப்பட வேண்டும். கடந்த அக்டோபர் 13ஆம் தேதி “தி ரெட் பலூன்” என்ற பிரெஞ்சு திரைப்படம் அனைத்து பள்ளிகளிலும் திரையிடப்பட்டது. 34 நிமிடம் ஓடக்கூடிய இந்த மௌனப் படம் ஆஸ்கார் விருது பெற்ற ஒன்று. 1956ஆம் ஆண்டு வெளியானது.

the red baloonசென்னை பெசன்ட்நகர் அண்ணா மேல்நிலைப் பள்ளியில் கல்வித்துறை அழைப்பை ஏற்று நான் (விடுதலை இராசேந்திரன்) சிறப்பு விருந்தினராக பங்கேற்றேன்.

“பள்ளி மாணவன் ஒருவனிடம் பலூன் ஒன்று கிடைக்கிறது. நூல் கயிற்றுடன் கிடைக்கும் அந்த பலூன் மீது அவனுக்கு உணர்வு பூர்வமான ஒரு ஈர்ப்பு உருவாகிறது. எங்குச் சென்றாலும் பலூனின் நூலை உயர்த்திப் பிடித்தவாறே செல்கிறான். பல்வேறு தடைகளை எதிர்ப்புகளை எதிர்கொள்கிறான். பள்ளிப் பேருந்தில் ஏற முடியாமல் நடந்தே பள்ளிக்கு செல்கிறான், வகுப்பறைக்கு செல்லும் போது பலூனை வெளியே விட்டு செல்கிறான். அவன் பள்ளியை விட்டு வரும் வரை பலூனும் காத்திருக்கிறது. பள்ளியில் பலூன் மூடுப்பனியில் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்று நடைப்பாதையில் நடந்துப் போவோரின் குடைக்குள் பலூனை பாதுகாப்பாக பிடித்துக் கொண்டு தான் மட்டும் அந்த கடும் பனியில் நனைந்து கொண்டே நடக்கிறான். ஒரு கட்டத்தில் நான் சொல்வதை நீ கேட்டே ஆக வேண்டும் என்று பலூனுக்கு அன்பான வேண்டுகோளை வைக்கிறான். பலூனும் முழுமையாக ஒத்துழைக்கிறது. வீட்டிலே அம்மா எதிர்ப்பு ; வீட்டுக்கு வெளியே பலூன் துரத்தப்படுகிறது.

துரத்தப்பட்ட பலூன் வீட்டைச் சுற்றி சுற்றி வருகிறது. ஒருகட்டத்தில் சகமாணவர் களிடம் பலூன் சிக்கிக் கொண்டு விடுகிறது. அவர்கள் அந்த பலூனை பறக்க விட்டு கல்லால் அடிக்கிறார்கள், அதில் ஓட்டை போட முயலுகிறார்கள். சிறுவன் பலூனை காப்பாற்ற ஓடிக்கொண்டே இருக்கிறான். ஒருகட்டத்தில் பலூன் சிறுவர்களால் உடைக்கப்படும் போது அது கீழே விழுகிறது. மெதுவாக அதன் உயிர்மூச்சுக்கான காற்று வெளியேறுகிறது. கடைசியில் ஒரு சிவப்பு பலூனுக்கு பதிலாக பல வண்ணங்களில் பலூன்கள் சிறுவனிடம் குவிக்கின்றன. அந்த பலூன்களுக்கிடையே குதூகலாமாக சிறுவன் பயணிக்கிறான்.” இது தான் கதை .

உண்மையான அன்பு, மற்றவர்களுக்கு உதவுதல், பாசத்தை பகிர்ந்து கொள்ளுதல் என்ற உணர்வை அற்புதமாக இணைத்து உணர்வுகளை நெகிழச் செய்கிறது. படம் முடிந்தவுடன் பார்த்த சிறார்களிடம் இருந்து பலத்த கையொலி எழுந்தது. மாணவ, மாணவிகள் தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டார்கள்? “பலூனை, அவன் நண்பனாகப் பார்த்தான்” என்று ஒற்றை வரியில் ஒரு சிறுவன் நறுக்குன்னு ஒரு கருத்தை தெரிவித்தான்.

இதே போல பலூனுக்கு பதிலாக வேறு ஒரு பொருளைக் கொண்டு கற்பனையாக ஒரு கதை உங்களில் யாராவது ஒருவரால் உருவாக்க முடியுமா என்று கேட்டேன். முடியும் என்று கையை உயர்த்தினான் ஒரு மாணவன். 'ஒரு பேனவை வைத்து கதை கூறாலாம் சார்' என்றான். கல்விக்கான கருவியான பேனாவை வைத்து அதை மனிதத்துடன் இணைத்து மிக அழகான ஒரு கதையை அவன் தன்னுடைய கற்பனைத்திறனால் கட்டமைத்து கூறியபோது அனைவரும் பலத்த கரவொலி எழுப்பினர்.

நான் தொடர்ந்து பேசினேன், “சக மனிதர் மீது ஆண், பெண், ஜாதிப் பாகுபாடு இன்றி அன்பு செலுத்துங்கள். அந்த அன்பில் சமத்துவமும், சம உரிமையையும், சமத்துவப் பண்பாடும் இழையோடவேண்டும். மானுடத்திற்கு அப்பாற்பட்ட சக்திகளிடம் பக்தி காட்டுவதற்கும், அவர்களுக்கு காணிக்கை செலுத்துவதற்குமே சமூகம் நமக்கு கற்றுத் தந்திருக்கிறது. எந்தக் கடவுளும் தனக்கு காணிக்கையோ, தானமோ வேண்டும் என்று கேட்பதில்லை, மனிதருக்கு அந்த உதவிகள் போய் சேருவதே அந்த வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும். நீங்கள் நம்புகிற கடவுள் கூட அதைத்தான் விரும்புவார்” என்று விளக்கி ஒரு கதையையும் கூறி நிறைவு செய்தேன்.

ஒரு படைப்பாற்றல் மிக்கத் திரைப்படம் எத்தகைய தாக்கத்தை சிறார்களிடம் உருவாக்குகிறது என்பதை நேரில் காணும் வாய்ப்பை பெற்றேன். தமிழ்நாடு அரசின் இந்த சீரிய முயற்சிகள் தொடர வேண்டும்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It