துல்கரும் லாலேட்டனும்...
கடந்த ஒருமாத காலமாக கேரளாவில் திரையரங்கு உரிமையாளர்களின் போராட்டம் நடைபெற்று வந்தது. அதனால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காலங்கள் உட்பட எந்த திரைப்படமும் வெளியாகவில்லை. தற்பொழுது போராட்டம் முடிவடைந்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் படங்கள் வெளியாகத் தொடங்கியிருக்கின்றன. துல்கர் சல்மானின் "ஜோமன்ட்டே சுவிசேஷங்கள்" மற்றும் மோகன்லாலின் "முந்திரிவல்லிகள் தளிர்க்கும்போல்" ஆகிய படங்கள் வந்திருக்கின்றன.
ஜோமன்டே சுவிசேஷங்கள்...
ஃபேமிலி ஆடியன்சின் இயக்குனர் சத்யன் அந்திக்காட் இயக்கத்தில் துல்கர் சல்மான், முகேஷ் நடித்திருக்கிறார்கள். வேலைவெட்டி இல்லாமல் ஊர்சுற்றும் இளைஞன் துல்கர், மிகப்பெரிய தொழிலதிபர் முகேஷின் மகன். பொருளாதார சிக்கலில் மாட்டிக்கொள்ளும் முகேஷை மற்ற பிள்ளைகள் கைவிட்டுவிட, தந்தைக்காக பொறுப்புடன் செயல்பட ஆரம்பிக்கிறார் துல்கர். கதை இதுவே. இன்னும் ஜேகப்பின்டே ஸ்வர்கராஜ்யம் வெளியாகி ஒரு வருடம் கூட முடியாத நிலையில் கிட்டதட்ட அதே கதைக்கருவுடன் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள்.
படத்தின் முதல்பாதி ஓரளவு காமெடி, காதல் என்று சென்றாலும், இரண்டாம்பாதி திரைக்கதையில் எந்த சுவாரஸ்யமும் இல்லாததால் அரைகுறை படமாக மாறி நிற்கிறது. பல இடங்களில் மிகவும் செயற்கைத்தனமே தெரிந்தது. ஒரு ஃபீல்குட் படமாக எடுக்க நினைத்து தோற்றிருக்கிறார்கள். துல்கரின் சுமாரான நடிப்பில் மிகவும் சுமாரான படமாக வெளிவந்திருக்கிறது இந்த "ஜோமன்ட்டே சுவிசேஷங்கள்".
முந்திரிவல்லிகள் தளிர்க்கும்போல்...
துல்கரின் படம் செய்யாமுடியாத ஃபீல்குட் மேஜிக்கை மோகன்லாலின் படம் செய்துவிட்டது என்றே சொல்லலாம். மனைவி, வயதுவந்த பெண் மற்றும் பத்து வயது மகனுடன் வாழ்ந்துவரும் நடுத்தர வயது குடும்பத்தலைவர் உலகானன் (மோகன்லால்). பஞ்சாயத்து அலுவலகத்தில் செக்ரட்ரியாக இருக்கிறார். சலிப்பூட்டும் விதமாக சென்று கொண்டிருக்கும் தன் வாழ்வை புத்துணர்ச்சி அடையச் செய்வதற்காக ஒரு பெண்ணைக் காதலிக்க முடிவு செய்கிறார். அந்தப் பெண் அவருடைய மனைவிதான்(மீனா).
எந்தவித திருப்பமோ, பரபர காட்சியமைப்புகளோ இல்லாத அதேசமயம் சுவாரஸ்யமும் குறையாத இதமான ஒரு படம். ஆங்காங்கே சில தொய்வுகள் தெரிந்தாலும் படம் முடியும் பொழுது ஒரு முழுமையைக் கொடுத்து விடுகிறது. "வெள்ளிமூங்கா" படத்தை எடுத்த ஜிஜூ ஜேக்கபின் படம். அதில் வருவது போன்ற பஞ்சாயத்து அரசியலை இதிலும் சேர்த்திருக்கிறார். மலையாள சினிமா ரசிகர்கள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம். மோகன்லாலிடமிருந்து வந்திருக்கும் மற்றுமொரு நீட் என்ட்டடெய்னர் இந்த "முந்திரிவல்லிகள் தளிர்க்கும்போல்".
- சாண்டில்யன் ராஜூ