செம்மொழிச் சிதறல்கள்...

குறிப்பு:    ‘ஐ, ஒள’ தமிழொடு ஒவ்வா எழுத்துக்களாதலால் ஒலியன்களாக இடம்பெற வில்லய். அறிமுகம் என்ற அளவிலேயே இடம்பெறுகின்றன.

தமிழ் ஓர் உயர்தனிச் செம்மொழி எனக் குரல்கொடுத்த முதல்தமிழர் பேரய்யர் பரிதிமாற் கலய்ஞர். முதல் வெளி நாட்டறிஞர் பேராயர் இராபர்ட்டு கால்டுவெல். ஆம், ஒருவர் ‘அய்யர்’! ஒருவர் ‘ஆயர்’!! இவர்களய் நினய்க்கும் போதெல்லாம் செந்தமிழ்ச் செம்மொழியால், சிறப்பிடம் பெற்றுத் திகழும் ‘அய் - ஆய்’ உறவு காண, நாமும் ‘அ - ஆ’ என வியந்து மகிழ்கிறோம்! ஆனாலும், ஏனோ நம்புலவர் குழாம் ‘எய்’ (எய்ப்பு) - ‘ஏய்’ (ஏய்ப்பு) உறவுகாணும் நிலையிலும், ‘அய் - ஆய்’ (கய்ப்பு - காய்ப்பு) உறவு காணத் தயங்குகிறது? ‘அய்’ இடத்து ‘ஐ’ நுழய்த்துக் குறுக்க இலக்கணம் பேசிக் குழம்புகிறது - குழப்புகிறது! ஆம், முன்செய்த தீவினய்! இங்ஙனே வந்து மூண்டதுவே!

‘ஐ’ ஒருவச் சிலம்பு நலம் செழிக்கும்!

இளங்கோஅடிகளார் (சிலம்பு - 4) ‘அய்’, ‘எய்’ ஈற்று ‘ய’கரம் இனிது இரட்டும் வகையில்,

“மய்யிருங் கூந்தல் நெய்யணி மளப்பக்

கய்யறு நெஞ்சத்துக் கண்ணகி”

பற்றிப் பேசும் போது, ‘நெய்யோடு (எய்), ‘கய்’ (அய்) கண்டு சுவய்த்து மகிழ்கிறோம்!

‘அய்’ என்றாள் ஆயர் மகள்!

‘வருவது ஒன்று உண்டு’ என அஞ்சிக்

கறவயொடு, கன்று துயர் நீங்க, ‘மாயவன்’ மகிழக்

குரவய் ஆடமுன் வந்து, அவரவர்க்கு

உரிய இடத்தய் முறயாகத் தேர்ந்து

அணிவகுத்து அழகாக நின்றஆய்ச்

சியர் இளங்கோதயதயர் கண்டு

வியந்த மாதரி நல்லாள் பற்றிப்

பேசும் அடிகளாரும், (சிலம்பு - 17)

“‘அய்’ என்றாள் ஆயர் மகள்”

எனச் செம்மொழிச் சிறுதொடர் கையாண்டு செப்புகிறார்! இங்கும் ஏனோ, ‘அய் - ஆய்’ உணர்வு அறவே அற்ற நிலயில், மொழியியலுடன் - தமிழியலுடன் - ஒவ்வா வகயில் நம் புலவர் குழாம், ‘ஐ’ என்றாள் ஆயர் மகள் என எழுதித் தமிழ் ‘வளர்த்துக்’ கொண்டுள்ளது! “‘ஆய்’ என்றால் ஆயர் மகள்” என்றாலும் தமிழ் சிறக்குமே!

அர்- ஆர்; அய் - ஆய்!

‘ஆர்’ குறுக ‘அர்’ ஆகும் என்பது நம் புலவர் குழாத் துக்குப் புரிகிறது! ‘ஆய்’ குறுக ‘அய்’ ஆகும் என்னும் எளிய உண்மய்தான் புரிந்து கொள்ளக் கடினமாக உள்ளது! சிலம்புக் காப்பியத்தில், செந்தமிழ்த் தென்றலாக இழயும் கானல்லவரி (சிலம்பு - 7)

“கடல்புக்கு உயிர் கொன்று

       வாழ்வர் (வார்வார்) நின்அய்யர்

உடல்புக்கு உயிர் கொன்று

       வாழ்வய் (வாழ்வாய்) மன் நீயும்”

“ஓடும் திமில் கொண்டு உயிர் கொல்வர்

       (கொல்வார்) நின் அய்யர்

கோடும் புருவத்து உயிர் கொல்வய்

       (கொல்வாய்) மன் நீயும்”

என இசய்த்து, ‘அர் - ஆர்’ உணர்வோடு நின்றுவிடும் நம் புலவர் பெருமக்களய், ‘அய் - ஆய்’ உணர்வும் கொள்ளக் கய் காட்டி அழய்கின்றது! ஆனாலும், “வாழ்வை - கொல்வை’ என எழுதும் திருந்தா எழுத்தர்களாகவே இருப்போம் என்று பேசுவதில், அவர்கள் பெருமய் கொள்கின்றனர்! நெடுங் கணக்கில் நுழய்ந்துவிட்ட ‘ஐ’க்குப் போக்கிடம்?

‘அய்’ நீள ‘ஆய்’! ‘ஐ’ நீள.....

‘அய்’ இது பொதுப் பெயர்கள் விளி ஏற்கும் இடத்து ‘ஆய்’ என ஈற்றயல் நீளப்பெறும். ‘அன்னய் - அன்னாய்’, ‘விடலய் - விடலாய்’, ‘மடந்தய் - மடந்தாய்’ எனவும், ‘நாரய் - நாராய்’, ‘முல்லய் - முல்லாய்’ என வருவதும் காணலாம். ஆனாலும், குறில் காணா நெடிலாகத் தமிழ் நெடுங்கணத்தில் இருமாத் திரை நெட்டுயிராகக் குதித்துவிட்ட அயல்மொழி - ‘ஐ’ எழுத்தய் ஒன்ற ரய் மாத்திரய் அளவில் குறுக்கித் தமிழ் ‘அய்’ இடத்தில் நுழய்த்து, அன்னை - அன்னாய்; விடலை - விடலாய்; மடந்தை - மடந்தாய் எனவும், நாரை - நாராய்; முல்லை - முல்லாய் என எழுதிப் பாடம் நடத்துவது புலமய்க்கு அறமா காதே? ‘பாவய் - பாவாய்’ என்பதே தமிழ்!

அலய் கடல் அய்யன் புகட்டும் அருந்தமிழ்ப் பாடம்!

தென் குமரிக்கடல் நடுவே, ஆழிப்பேரலயொடு, ஊழிப் பேரலய்க்கும் ஈடுகொடுத்து, ‘ஐ’யின் நிழலும் படியாது நிமிர்ந்து நிற்கும் அய்யன் - ஆயன் திருவள்ளுவர் வழி நிற்கும் எம் போன்றோர்க்குச் செந்தமிழ்க் குறில் அய்ந்து! சீர்மிகு நெடிலும் அய்ந்தே!!

- பேராசிரியர் கொண்டல் சு.மகாதேவன், முன்னாள் இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை

Pin It