கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை வந்திருந்த அமித்ஷா தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக பாஜக மிகப் பெரிய செயல்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும், தமிழ் வழிப் படிப்புகளை தமிழ்நாடு அரசு தொடங்க விரும்பினால் ஒன்றிய அரசு உதவி செய்யும் என்று பேசி, மறைமுகமாக திமுக அரசு தமிழுக்காக சிறு துரும்பையும் கிள்ளிப் போடவில்லை என்று பேசி விட்டுச் சென்றிருக்கிறார்.

திமுக தமிழ் மொழி வளர்ச்சிக்காக என்ன செய்தது என்பதை அறிய பழைய காலத்திற்குக் கூட செல்ல வேண்டாம். மிக சமீபத்திய செயல்பாடுகளைக் கொண்டே மதிப்பிடுவோம்.Amit Shah and MK Stalinதிமுக ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி என்றைக்குமே தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும், தமிழர்களின் முன்னேற்றத்திற்காகவும் மட்டுமே செயல்படும் என்பதை கீழ்க்கண்ட நிகழ்வுகளின் வழியே அறியலாம்.

கடந்த 2018 ஆம் ஆண்டு அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க அமெரிக்க வாழ் தமிழர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். தேவையான பணம் கிடைக்காமல் கிட்டத்தட்ட இருக்கை அமைக்கும் முயற்சி தடைபட்டு விடுமோ என்று கவலைபட்டுக் கொண்டிருந்த நிலையில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் அவர்கள் திமுக சார்பாக 1 கோடி ரூபாய் நிதியுதவி அளித்தார்.

அதே போல கிட்டத்தட்ட 5 லட்சம் தமிழர்கள் வாழும் கனடா நாட்டின் புகழ்பெற்ற பல்கலைக் கழகமான டொரண்டோ பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க திமுக சார்பில் 10 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்தார் மு.க.ஸ்டாலின்.

2014 ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டில் செயல்பட்டு வரும் கொலோன் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறை கடுமையான நிதிப் பற்றாக்குறையால் மூடப்படுவதாக அப்பல்கலைக் கழகம் அறிவித்தது. இதனையடுத்து 2019 ஆம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு 1 கோடியே 25 லட்ச ரூபாய் அளிப்பதாக அறிவித்தது. ஆனால் 2020 ஆம் ஆண்டு தமிழ்ப் பிரிவை மூடுவதாக பல்கலைக் கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்த போதும் அச்செய்தி, டிவி பார்க்கும் வழக்கத்தைக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமியின் காதுகளை எட்டவேயில்லை போலும்.

இந்த நிலையில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த இரண்டு மாதங்களில் ஒதுக்கப்பட்ட நிதியை கொலோன் பல்கலைக் கழகத்திற்கு விடுவித்து உத்தரவிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அதே போல முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள 5 பல்கலைக் கழகங்களில் தமிழ் மொழிக்கான இருக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தற்போது தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிட 3 இலட்சம் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய மதிப்புத் தொகையான ரூ. 2.50 கோடிக்கான காசோலையை ஹூஸ்டன் பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை அமைப்பின் தலைவர் திரு. சொக்கலிங்கம் சாம் கண்ணப்பன் மற்றும் செயலாளர் திரு. பெருமாள் அண்ணாமலை ஆகியோரிடம் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கியிருக்கிறார்.

இப்படி உலக நாடுகளில் தமிழை வளர்க்க பல்வேறு முயற்சிகளை திமுக செய்து வரும் நிலையில் இப்பல்கலைக் கழகங்களில் வழியே தமிழைக் கற்க முடியாதவர்களுக்கு என்ன செய்வது என்ற கேள்விக்கும் தனது செயல்பாடுகளால் பதிலளித்து இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

உலகம் முழுவதிலும் கிட்டத்தட்ட 90 நாடுகளில் வாழும் தமிழர்கள் தமிழைக் கற்றுக் கொள்ளும் வகையில் தமிழ்ப் பரப்புரைக் கழகம் என்ற அமைப்பை தோற்றுவித்து இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழை எளிமையாக கற்கும் வகையிலான தமிழ்ப் பாட நூல்கள், வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் தமிழைக் கற்பிக்கும் அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்குதல், தமிழைத் திறம்படக் கற்பிக்க ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தமிழ்ப் பரப்புரை கழகம் மேற்கொள்ளும்.

இப்படி தமிழைக் கற்கவும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும், தமிழ் மொழியின் ஆய்வுக்காகவும் திமுக அரசு இந்தியாவிற்கு வெளியிலும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

ஆனால் இவற்றில் எதையுமே செய்யாமல் குறைந்தபட்ச அறம் கூட இல்லாத பாஜக, மேடைகளில் தமிழ் தமிழ் என முழங்கிவிட்டு திரைமறைவில் செத்த மொழியான சமஸ்கிருத மொழிக்கு கோடிகளில் நிதி ஒதுக்குவதும், இந்தி மொழியின் வளர்ச்சிக்காக கடுமையான குட்டிக் கரணங்கள் அடிப்பதையும் வழக்கமாகவே வைத்திருக்கிறது. இப்படிப்பட்ட வரலாற்றைக் கொண்ட அமித்ஷா கும்பலுக்கு தமிழ் மொழியைப் பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது?

தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக திமுக மேற்கொண்ட இந்த முயற்சிகளில் சிறிய அளவிலாவது பாஜக மேற்கொண்டதா என்பதையும் கூறிவிட்டு அமித்ஷா கும்பல் பேசினால் நன்றாக இருக்கும்.

- இரா.வெங்கட்ராகவன்

Pin It