தமிழ்நாடு ஆர்.எஸ்.எஸ் தலைவர் கே.குமாரசாமி சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அவர் பேசியிருக்கிற கருத்துக்கள் ஆர்.எஸ்.எஸ்-ன் உண்மையான நோக்கத்தை வெளிப்படுத்தி விட்டது. சாதி ஒழிப்பு பற்றி ஆர்.எஸ்.எஸ் நிலை என்ன என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு சாதியை ஒழிக்க வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ்-இன் கொள்கையோ, கோட்பாடோ அல்ல, ஆனால் சாதியின் பெயரால், தீண்டாமையின் பெயரால் பாகுபாடுகள் காட்டுவதைத் தான் ஆர்.எஸ்.எஸ் எதிர்க்கிறது. சாதியை ஒழிக்க வேண்டும் என்று பேசி வந்தவர்கள் தான் காணாமல் போய்விட்டார்கள் என்று பச்சையாக சாதி அமைப்பு தேவை என்பதை வெளிப்படுத்தி இருப்பதோடு, மனிதர்களுக்குள்ளே சாதியின் அடிப்படையில் உள்ள உயர்வு தாழ்வு என்பது இயற்கையானவை, அவை மாற்ற முடியாதது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது. சாதி இல்லாவிட்டால் இந்துமதம் என்பதே இல்லை என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். சாதிகளின் பட்டியலே இந்துமதம் என்று அம்பேத்கர் கூறினார். ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு தத்துவங்களை உருவாக்கிய கோல்வாக்கர் “சமுதாய வளர்ச்சிக்கு ஜாதி ஒரு தடையாக இருந்ததே இல்லை. சாதிக் கட்டமைப்பு உறுதியாக இருந்ததால் தான் இங்கே இஸ்லாம் வேரூன்ற முடியவில்லை’ என்று தனது நூலில் எழுத்துப்பூர்வமாக செய்துவருகிறார் (Bunch Of Thoughts) ஜாதி என்பதே ஏற்றத்தாழ்வு அடித்தளத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஜாதி இருக்கலாம், ஆனால் ஏற்றத்தாழ்வுகள் கூடாது என்பது ‘சூரியன் உதிக்கலாம், ஆனால் வெயில் அடிக்கக் கூடாது’ என்று கூறுவது போல் இருக்கிறது. ஆனால் ஆர்.எஸ்.எஸ் இந்த சுயரூபம் மூடிமறைக்கப்பட்டு அதற்கு தேசபக்தி முலாம் பூசிக் கொண்டிருக்கிறார்கள்.

மற்றொரு கேள்விக்கு சமூகநீதி எனும் இட ஒதுக்கீடு கொள்கையை ஆர்.எஸ்.எஸ் ஆதரிப்பதாக கூறியிருக்கிறார்.

செய்தியாளர்கள் திராவிட இயக்கம் பேசுகிற சமூகநீதிக் கொள்கையை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா என்று கேட்டதற்கு நேரடியாக அவர் பதில் கூறாமல் சமூக நல்லிணக்கத்திற்காக நாங்கள் தனிப் பிரிவையே நீண்ட காலமாக நடத்தி வருகிறோம் என்று மழுப்பலாக ஒரு பதிலை கூறியிருக்கிறார்.

சமூகநீதி என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை; அதற்கும் சமூக நல்லிணக்கத்துக்கும் என்ன தொடர்பு.? ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் பெண்கள் உறுப்பினராக இப்போதும் தடை நீடிக்கிறது. இதுதான் சமூக நீதியா?

அனைத்து ஜாதியினரும் அரச்சகராக வேண்டும் என்ற கோரிக்கை பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்ட போது, அனைத்து ஜாதியினரும் ஆகம கோயில்கள் உள்ளிட்ட அர்ச்சகராவதை ஆர்.எஸ்.எஸ் வரவேற்கிறது. ஆனால் அவர்களுடைய ஆகம வேத அறிவு எப்படி இருக்கிறது என்பதை மதத் தலைவர்கள் அடங்கிய ஒரு குழு தான் பரிசீலிக்க வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார். அரசு தருகிற பயிற்சியை ஏற்க முடியாது. பார்ப்பனர்கள், வேத பண்டிதர்கள் அடங்கிய ஒரு குழு தான் அதை தீர்மானிக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு அனைத்து ஜாதியினரும் அரச்சகராவதை தாம் ஆதரிப்பதாக இரட்டை முகத்தை காட்டியுள்ளனர். வேத பண்டிதர்கள் எப்படி அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையை வழங்குவார்களா? நிச்சயம் இது வழங்கமாட்டார்கள் என்று தெரிந்தே பேசுகிறார் ஆர்.எஸ்.எஸ் தலைவர்.

ஜாதி மறுப்புத் திருமணங்கள் பற்றி உங்கள் கருத்து என்ன என்ற கேள்விக்கு, அதை நாங்கள் ஆதரிக்கிறோம், ஆனால் ஜாதி மறுப்பு இணையர்களுக்கு இடையே இருக்கிற காதல் உண்மையான காதலாக இருக்க வேண்டும். அப்போதுதான் ஜாதி மறுப்புத் திருமணத்தை ஆதரிக்க முடியும். அந்த காதலை சொத்துக்களுக்காகவோ அல்லது மத காரணங்களுக்காகவோ பயன்படுத்துவதாக இருக்கக் கூடாது என்று அதற்கும் ஒரு நிபந்தனையை போட்டு இல்லாத ஊருக்கு போகாத பாதையை காட்டுகிறார்.

வெளிப்படையாக சில கருத்துக்களை தமிழ்நாட்டில் பேசுவதற்கு ஆர்.எஸ்.எஸ் தயங்குகிறது. ஜாதி மறுப்புத் திருமணங்களை, சமூகநீதிக் கொள்கையை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று சொல்வதற்கு அவர்களுக்கு துணிவு இல்லை. ஆனால் அதை ஆதரிப்பதாக கூறிவிட்டு அதை முடக்குவதற்கான நிபந்தனைகளை விதிக்கிறார்கள். மக்களை குழப்பப் பார்க்கிறார்கள். ஆனால் சாதி என்பது நீடிக்க வேண்டும், அது இயற்கையானது என்பதில் மட்டும் உறுதியாக இருக்கிறார் இதுதான் ஆர்.எஸ்.எஸ்-இன் பார்ப்பனியம் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

விடுதலை இராசேந்திரன்

Pin It