தமிழகம், ஒரு சமூகநீதி மண் என நாம் பெருமைப்பட்டுக் கொண்டாலும், இங்குதான் அம்பேத்கர் சிலை சிறைப்பட்டுக் கிடக்கிறது, சிதைக்கப்பட்டு வருகிறது.
அம்பேத்கரின் அடையாளம் கருத்தியல் தானே தவிர, கற்சிலைகள் அல்ல. இந்திய அளவில் போற்றத்தக்கவர்களில் முதன்மையானவராக அம்பேத்கரே இருக்கிறார்.
தாழ்த்தப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும், விகிதாச்சாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென டாக்டர் அம்பேத்கர் லன்டன் வட்டமேசை மாநாட்டில் வலியுறுத்தியதால், அம்பேத்கர் பட்டியலினத் தலைவராக இச்சமுகத்தில் குறுகிய பார்வையோடு கட்டமைக்கப்பட்டுள்ளார்.
1947இல் சுதந்திரம் அடைந்து அரசியல் அமைப்புச் சட்டத்தை, அம்பேத்கர் இயற்றிய (எழுதிய)போது, 290 மற்றும் 292வது சரத்தில் இந்நாட்டில் விகிதாச்சாரத் தேர்தல் முறையை வலியுறுத்தினார், ஆனால் அதற்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. பல நாள் விதண்டாவாத்தால் அந்தச் சரத்துகளை நீக்குவதற்கு அம்பேத்கர் ஒப்புக்கொண்டார்.
பட்டியல் இனத்தவர்க்குத் தனி இடஒதுக்கீடு இருந்த போதும் பிறகேன் விகிதாச்சாரத் தேர்தலை அம்பேத்கர் வலியுறுத்தினார்? 2019இல் நடந்த பாராளுமன்றத் தேர்தல் முடிவைச் சற்று பகுத்தாராய்ந்து பார்ப்போம்.
544 பாராளுமன்றத் தொகுதிகளில் வெறும் 10 விழுக்காட்டிற்குள் உள்ள உயர்சாதியினர் 232 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 55 விழுக்காடு உள்ள இடைநிலைச் சாதியினரில் 120 உறுப்பினர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.விகிதாச்சார முறையில் பார்த்தால் 300 உறுப்பினர்கள் தேர்வாகி இருக்கவேண்டும்.
முதலில் சமூக (சாதி) விடுதலை பிறகுதான் தேச விடுதலை என்பதே அம்பேத்கரின் கொள்கை.
முதலில் எங்களுக்குச் சுயமரியாதை கொடுத்துவிட்டு சுயராஜ்யத்தைப் பற்றிப் பேசுங்கள் என்று அம்பேத்கர் சொன்னார்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பயனை அடைந்தது முதல் இன்று வரை, உயர்சாதிக்காரர்கள் ஆட்சி அதிகாரத்தை அனுபவிக்கிறார்கள்.
ஆனால் ஆங்கிலேய ஏவலர்களிடம் அடி உதை வாங்க இடைநிலை சமூகத்தையும், பட்டியல் இனச் சமூகத்தையும், முன்னிலையில் நிறுத்தினர்.
ஆங்கிலேயர் ஆட்சியில் அகிம்சைப் போராட்டத்தை ஒடுக்க, நாடு முழுக்க வெள்ளைக்காரனே லத்தி(தடி) துப்பாக்கிகளைத் தூக்கிகொண்டு போய்ப் போராட்டத்தை அடக்கவில்லை.
இதில் கொடுமை என்னவென்றால் அடிக்கிறவன் மேல்சாதிகாரனாகவும், அதை அகிம்சையோட முன்னின்று எதிர்கிறவன், கீழ்சாதி, இடைநிலைச் சாதிக்காரனாகவும் ஆக்கப்பட்டதன் மூலம் சுதந்திரப் போராட்டத்தை வளர்த்தார்கள்.
அதேபோல இன்றைய ஆட்சி அதிகாரத்தைத் தற்காத்துக் கொள்ள. மதத்தைத் தேர்தல் வெற்றிக்காகப் பயன்படுத்துகின்றனர். அரசு அதிகாரத்தில் இடைநிலைச் சாதியினர் தமக்குப் போட்டியாக வந்து விடாமல் தடுக்க, இடைநிலைச்சாதிக்குள் வெறுப்பு விதையை விதைக்கின்றனர்.
இடைநிலைச்சாதிகளின், உயர் கல்வி முதல் அரசு வேலை வரை அனைத்தையும் உயர்சாதிக்காரர்கள் ஆக்கிரமித்து இருப்பதைப் புள்ளிவிவரங்கள் தெரிவித்தாலும், அதை ஏற்காமல் பட்டியல் இன மக்களுக்குக் கொடுக்கப்படும் இடஒதுக்கீடே தங்களுக்கான வாய்ப்புகள் நசுக்கப்படுவதற்குக் காரணம் என்று நம்ப வைக்கப்பட்டனர்.
அம்பேத்கர் தன் பதவி விலகல் காரணங்களில் முதன்மையானது, நான் இடைநிலைச் சமூகத்தின் மேம்பாட்டிற்காகப் பலமுறை பல திட்டங்களைப் பாராளுமன்றத்தில் கொண்டு வந்தபோதும், அவற்றைப் புறக்கணித்ததால் நான் பதவி விலகுகிறேன் என்றார். எனினும் அவரை ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராகக் குறுக்கிப் பார்ப்பது எவ்வகையில் அறிவுடமையாகும்?
ஒடுக்கப்பட்ட சமூகத்தை ஒடுக்கும் கருவியாக, இடைநிலைச் சாதியை உயர்சாதிச் சமூகம் கட்டமைத்து விட்டது. ஆண்ட பரம்பரை என அடைமொழியை மட்டும் அவர்களுக்குக் கொடுத்துவிட்டு, உயர்சாதிச் சமூகம் இந்திய ஆட்சி அதிகாரத்தில் மொத்தமும் ஆக்கிரமித்துள்ளது.
இந்திய மொத்த அதிகாரத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும். இந்துத்துவப் பார்ப்பனிய பனியா மார்வாரிக் கூட்டு வைத்திருக்கிறது.
அவர்களை எதிர்க்கக்கூடிய ஒரே ஆயுதம் அம்பேத்கர் கருத்தியல் என்பதை பார்ப்பனியம் புரிந்துவைத்துள்ளது. அதனால் தான் அம்பேத்கரை வெளித்தளத்தில் புகழ்வதும் , மறைமுகமாக இழிவு படுத்துவதுமாகச் செயல்படுகிறது.
இந்தப் புரிதல் இடைநிலைச் சாதியினருக்கு வந்து விடுமானால், அதிகாரமும் கை மாறும். அம்பேத்கர் சிலைகளும் உடைபடாது.