மக்களின் புழக்கத்தில் 80 சதவீதமாக 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் இருந்தன. இவை செல்லத் தக்கதல்ல என்று பிரதமர்  மோடி ஒரே இரவில் அறிவித்தபோது இப்படி ஒரு அதிர்ச்சி இந்தியாவின் ‘கருப்பு பொருளாதார சந்தைக்கு’ தேவைதான் என்றே நாம் கருதினோம். நாட்டின் பொருளா தாரத்தை சர்வதேச சந்தைக்கு திறந்து விடும் உலக மயமாக்கல் கொள்கைக்குப் பிறகு அந்நிய முதலீட்டுச் சுரண்டல்கள் கருப்புப் பொருளாதார சந்தைகள் பெருகி, அரசியல் கட்சிகள், பெரும் தொழிலதிபர்கள், ‘பகாசுர கம்பெனிகள்’ கொழிக்கத் தொடங்கின. பார்ப்பன பனியா வர்க்கம் மேலும் தனது அதிகாரத்தை வலிமைப்படுத்திக் கொண்டது. இந்த நிலையில் மோடியின் இந்த அதிரடி நடவடிக்கை கருப்புப் பணச் சந்தையை முடக்குமா என்ற சந்தேகத்தை பொருளியல் நிபுணர்கள்  எழுப்பினார்கள். அவர்களின் கேள்விகளை எளிதில் புறந்தள்ளிவிட முடியாது. ஆனாலும்கூட புழக்கத்திலுள்ள போலி ரூபாய் நோட்டுகளை இது கட்டுப்படுத்தும் என்ற அளவில் இந்த முயற்சி வரவேற்கப்பட்டது. இப்போது இந்த அதிரடியால் அவதிக்குள்ளாகி நிற்பவர்கள் அடித்தட்டு மற்றும் மத்திய தரப் பிரிவினர்தான் என்பதை கண்கூடாகவே பார்க்க முடிகிறது.

இந்த அறிவிப்புக்குப் பிறகு தொடர்ந்து பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து எந்த கவனமோ கவலையோ செலுத்தப்பட வில்லை என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. இந்தியாவில் நிதித் துறையை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பார்ப்பன அதிகார வர்க்கம். இதற்கான ‘தகுதி’, ‘திறமை’ தங்களுக்கு உண்டு என்று அவர்கள் கூறிக் கொள்கிறார்கள். இந்தத் ‘தகுதி’யும், ‘திறமை’யும் வெகுமக்களின் முன்னேற்றத்துக்குப் பயன்படுத்தப்பட்டதில்லை. பெரும் தொழிலதிபர்கள் தொழில் நிறுவனங்களை வளர்ப்பதற்காகவே துணை போகின்றன. ‘ஆடிட்டர்’ தொழிலை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள பார்ப்பனர்கள், பெரும் தொழில் நிறுவனங்களின் ‘வரி ஏய்ப்பு’, ‘கள்ளச் சந்தைக்கு’ வழிகாட்டும் ‘திருப் பணி’களையே தங்கள் தொழில் தர்மமாகக் கொண் டிருக்கிறார்கள். இப்போது பண நோட்டுகள் செல்லாத தாக்கப்பட்ட நடவடிக்கைகளில் இந்த ‘தகுதி திறமை’, ‘ஜாம்பவான்களின்’ முகம் அம்பலப்பட்டு நிற்கிறது.

முதலாவதாக 1000 ரூபாய் நோட்டு செல்லா தாக்கப்பட்ட நிலையில் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அடுத்த நாளே 2000 ரூபாய் புதிய நோட்டுகளை அறிமுகப்படுத்தியவர்கள் குறைந்த மதிப்புடைய 1000, 500, 100, 50, 20 ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் புழக்கத்துக்கு கொண்டு வந்திருக்க வேண்டும். வங்கியில் பெற்ற 2000 ரூபாய் நோட்டுகளை அவசியத்  தேவை களுக்காக மக்கள் மாற்றும்போது, அதற்குக் குறைவான மதிப்புள்ள நோட்டுகள் கிடைக்காமல் தவிப்பதைப் பார்க்கிறோம்.

இரண்டாவதாக புதிய 2000 ரூபாய் நோட்டுகளை வெளிக்கொண்டு வரும் தொழில்நுட்பத்தை தானியங்கிகளுக்கு (ஏ.டி.எம்.) பொருத்தி அதை மாற்றி அமைக்காமலே ரூபாய் நோட்டுகளை மட்டும் வெளியிட்டு விட்டார்கள். சாதாரண பொதுப் புத்திக் குள்ளேயே அசை போட வேண்டிய இந்த அறிவு, இந்த ‘அசகாய சூரர்களுக்கு’ தெரியாமல் போனது ஏன்?

பணத்தாளுக்கு பதிலாக மாற்று பரிவர்த்தனைகளை (டிபிட் கார்டு, கிரடிட் கார்டு போன்றவை) வழக்கமாகக் கையாளும் பழக்கத் துக்கோ, கலாச்சாரத்துக்கோ, கிராமத்தில் வாழும் மக்கள் வந்து சேரவில்லை. அவர்களின் சமூகப் பொருளியல் நிலை அப்படித்தான் இந்த சமூக பொருளாதார கட்டமைப்பில்தான் இருத்தப்பட்டுள்ளது. இத்தகைய சமூகம் பற்றிய பார்வை பார்ப்பன அதிகார வர்க்கத்துக்கு இல்லை என்பதால், ‘மாற்றுப் பரிவர்த்தனை’ முறையை கிராம மக்களிடம் ‘திடீர்’ என திணிக்கும் முடிவுக்கு வருகிறார்கள். அதன் விளைவு கிராம மக்களின் வாழ்வாதாரமே முடக்கப்படும் நிலைக்குக் கொண்டு போய்விட்டது.

இந்த நெருக்கடிகளிலிருந்து மீட்பதற்கான வழி தெரியாது குழப்பத்தில் ஒவ்வொரு நாளும் புதிய புதிய அறிவிப்புகளை வெளியிட வேண்டிய நிலை உருவாகிவிட்டது.

இந்திய ஆட்சி அதிகாரத்தில் கட்சிகள் மாறினாலும் அதிகார சக்திகளாக இருப்பவை பார்ப்பன-பனியா பன்னாட்டு சக்திகள்தான். இந்த சக்திகளோடு கொள்கை வழியில் மட்டுமின்றி உணர்வுகளோடும் நெருக்கமாக இருக்கும் ‘இந்துத்துவ’த்தின் அரசியல் அதிகாரமும் இப்போது இணைந்துவிட்ட நிலையில் வெகுமக்கள் பலிகடாவாகி நிற்கிறார்கள். இதுதான் இப்போது நாட்டில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

Pin It