தமிழக வரலாற்றில் இரத்தக் கறைப் படிந்த நாள் மே 22. அன்னிய இராணுவம் ஒரு நாட்டில் படையெடுத்து - அந்த நாட்டு மக்களை ஈவிரக்கமின்றி கொன்றுக் குவிப்பதைப் போன்ற நிகழ்வு, தூத்துக்குடியில் நடந்து முடிந்திருக்கிறது.

இதுவரை நடந்த துப்பாக்கிச் சூடுகள் காவல்துறை வன்முறைகளிலிருந்து மிகவும் வேறுபட்டது தூத்துக்குடி காலித்தனம். ‘ஸ்டெர்லைட்’ ஆலையை மூட வேண்டும் என்ற ஒரே குரல் தான் அங்கே அழுத்தமாக ஒலித்தது. “இந்த ஆலை இருக்கட்டும்” என்று அப்பகுதி யிலிருந்து ஒற்றைக்குரல்கூட கேட்கவில்லை. 1992ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நச்சு ஆலையையே மூடாமல், அதன் இரண்டாவது பிரிவு தொடங்கவும் அனுமதித்த நிலையில் தான் மக்கள் போராட்டத்தைத் தீவிரமாக்கினார்கள்.

99 நாட்கள் அமைதியான போராட்டம் நடந்தது.

எந்த அரசியல் கட்சிகளின் தலையீட்டையும் மக்கள் அனுமதிக்கவில்லை.

மக்களின் 99 நாள் போராட்டத்தை மத்திய மாநில அரசுகள் அலட்சியப்படுத்தின. நூறாவது நாள் மாவட்ட ஆட்சி அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்தவுடன் காவல்துறை தலையிட்டு பிளவை உண்டாக்கிப் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்த முயற்சி தோல்வி அடைந்தது.

வலிமையான மக்கள் போராட்டத்தைக் கடுமையாக ஒடுக்கி, முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்ற உறுதியான முடிவுக்கு அரசுகள் வந்தன. செயலற்றுக் கிடக்கும் தமிழக அரசை மத்திய அரசின் தூதுவராக இருந்து ஆட்டிப் படைத்து வரும் பார்ப்பன தலைமைச் செயலாளர் வழியாக தமிழ்நாட்டில் போராடும் தூத்துக்குடி மக்களையும் ‘இந்துத்துவா’ எதிர்ப்பில் சமரசமின்றி மக்களை அணி திரட்டும் தேர்தலில் பங்கேற்காத இயக்கங்களையும் முழுமையாக ஒழிப்பதற்கான வாய்ப்பாக இதைப் பயன்படுத்திக் கொள்ள நடுவண் பார்ப்பனிய ஆட்சி தயாரானது. துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்த வேண்டிய நெறிமுறைகளை எல்லாம் புறந்தள்ளி, மார்பிலும், நெற்றியிலும் வாயிலும் குறி பார்த்து சுடுவதில் பயிற்றுவிக்கப்பட்டவர்களைக் களத்தில் இறக்கிச் சுட்டார்கள். மக்கள் ஒன்றாக அணி திரண்டு உயிர் வாழ்வுக்கு உத்தரவாதம் கோரி போராடுகிறார்கள். இதில் காவல்துறை எவரைக் காப்பாற்ற துப்பாக்கியைத் தூக்கியது?

அரசு போட்ட 144 தடை உத்தரவு சட்டத்தைக் காப்பாற்றவும் மாவட்ட ஆட்சித் தலைவர் கட்டிடத்தின் சுவர்கள் அங்கே போடப்பட்ட நாற்காலிகளைக் காப்பாற்றவும் துப்பாக்கிச் சூடு நடத்தியதா என்று கேட்கிறோம்?

மாவட்ட ஆட்சித் தலைவருக்குக் கீழே ஆறாவது நிலையில் இருக்கும் துணை வட்டாட்சியர்கள் தான் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டார்கள் என்று காவல்துறையின் முதல் தகவல் அறிக்கை கூறுவது நல்ல கேலிக் கூத்து. உத்தரவிட்ட உயர்நிலையில் உள்ளவர்களைக் காப்பாற்ற நடக்கும் சதி இது.

இவ்வளவு படுகொலை, மக்கள் மீதான கொடூரத் தாக்குதலுக்குப் பிறகு, ஆலையை நிரந்தரமாக மூடுவதாக முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். நல்ல முடிவு. மக்கள் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி தான். ஆனாலும் இப்படி ஒரு முடிவை எடுப்பதற்கு இவ்வளவு இரத்தம் சிந்தப்பட வேண்டுமா என்ற கேள்விக்கு ஆட்சியாளர்கள் பதில் சொல்லித்தான் தீரவேண்டும்.

ஸ்டெர்லைட் நிர்வாகம் இதை எதிர்த்து நீதிமன்றம் போவதற்கான வாய்ப்பு உண்டு; அப்போது தமிழ்நாடு அரசு உறுதியாக நிற்குமா என்ற கேள்விக்கு தமிழக முதல்வர் பதில் சொல்ல மறுத்திருப்பது சந்தேகங்களை உருவாக்கவே செய்கிறது.

எதிர்காலத்தில் நச்சுத் தன்மைகளை உருவாக்கிடும் எந்த ஆலையையும் தமிழகத்தில் திறக்க அனுமதிக்க முடியாது என்ற உறுதியான முடிவை சட்டமன்றத்தின் வழியாக தீர்மானிக்க வேண்டும்.

துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும்.

எக்காரணத்தை முன்னிட்டும் இந்த அதிகாரிகளை தப்பவிடவே கூடாது!

Pin It