“சிரமறுத்தல் மன்னருக்குப் பொழுது போக்கு, மக்களுக்கோ உயிரின் வாதை” புரட்சிக் கவிஞர் பாரதிதாசனாரின் வரிகள் இவை.
தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு. காவல் துறையின் அத்துமீறல், தடியடி. காயம்பட்டோர் ஏராளம், உறுப்புகள் சிதைந்தோர் கதறல்கள். துப்பாக்கிச் சூட்டில் சிரம் தொங்கி உயிரின் வாதையில் தூத்துக்குடி.
நட்சத்திர விடுதி. ‘பூப்புனித நீராட்டு’ நிகழ்ச்சி. துணை முதல்வர் ஓ.பி.எஸ். அவரின் அமைச்சர்கள் சிலர் இந்த நிகழ்ச்சியில் பொழுது போக்கியிருக்கிறார்கள், தூத்துக்குடியை மறந்து.
துப்பாக்கிச் சூடு குறித்து விவரம் தெரியவில்லை என்கிறார் முதல்வர் எடப்பாடி. 144 தடை சட்டம் இருப்பதால், தான் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கத் தூத்துக்குடி போகவில்லை என்றும் சொல்கிறார்.
எல்லாம் சரி! அங்கே தூப்பாக்கிச் சூடு நடத்த உத்திரவிட்டது யார்?
மாவட்ட ஆட்சியரா? காவல் கண்கானிப்பாளரா? காவல்துறை துணைத் தலைவரா? மாநிலக் காவல்துறைத் தலைவரா? அல்லது இரகசியமாக அங்கே ஊடாடிய முன்னாள் காவல்துறைத் தலைவர் அலெக்சான்டரா?
எதுவுமே தெரியாது என்றால், முதல்வராக இருக்க என்ன தகுதியிருக்கிறது எடப்பாடிக்கு?
இது வரை 13 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள், எடப்பாடி அரசால், அவரின் கீழ் உள்ள காவல்துறையால்.
எதனால் சமூக ஊடகங்களை முடக்கினீர்கள்? அரசின் கோர அடக்கு முறைத் தாக்குதல்கள் வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகவா?
தூத்துக்குடி மக்கள் போராட்டத்தைத் தமிழகக் காவல்துறையால் அடக்க முடியாதாம். மத்திய துணை இராணுவப் படையை உதவிக்குக் கேட்டிருக்கிறாராம் தலைமைச் செயாலாளர் கிரிஜா வைத்தியநாதன்.
தமிழ்நாட்டில் ஒரு மாவட்டத் தமிழ் மக்கள் மீது உள்நாட்டு யுத்தம் நடத்துகிறதா தமிழக அரசு!
இன்று மாவட்ட ஆட்சியர் சொல்கிறார் ஸ்டெர்லைட் ஆலை முடப்படும் என்று. இதை ஏன் நேற்று சொல்லவில்லை.
மாவட்ட ஆட்சியரின் ஒற்றை வார்த்தையில் ஸ்டெர்லைட்டை மூட முடியாது. இது குறித்து முதல்வர் திட்டவட்டமாக எதையும் சொல்லவில்லை, இதுவரை.
“நான் சொல்வேன், நீ கோர்ட்டுக்குப் போ” என்ற விளையாட்டு இங்கே வேண்டாம். பா.ஜ.க.வின் எடுபிடியான எடப்பாடியால் ஸ்டெர்லைட்டை இழுத்து மூடி முடியாது. அனில் அகர்வால் மோடியின் நண்பர்.
அதற்காக அந்த ஆலையை மூடாமல் விடவும் மாட்டார்கள் மக்கள். மக்களின் சக்தியை மீறிய சக்தி உலகில் எங்கும் இல்லை.
இ.பி.எஸ் & ஓ.பி.எஸ் இனியும் பதவியில் தொடரக்கூடாது.
உடனே பதவி விலகு, அரியணையை விட்டு இறங்கு, ஸ்டெர்லைட்டை மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.