தில்லை நடராசர் தரிசனத்திற்கு ஆளுநர் தமிழிசை சென்றிருக்கிறார். அங்கே கோவில் படிக்கட்டில் அவர் அமர்ந்திருக்கிறார். தீட்சதர் ஒருவர் வந்து நீங்களெல்லாம் இங்கே உட்காரக் கூடாது என்று அவரை அவமானப்படுத்தி இருக்கிறார். இதை தமிழிசையும் ஒப்புக் கொண்டிருக்கிறார். ‘அப்படி ஒரு தீட்சதர் கூறியது உண்மைதான். ஆனால் அந்த இடத்தை விட்டு நான் நகரவில்லை, அங்கே தான் அமர்ந்திருந்தேன். தீட்சதர்கள் பிரச்சனையை தீர்க்கப்போனால் அவர்கள் பிரச்சனையை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள்' என்று ஒரு பேட்டியிலே கூறியிருக்கிறார். வந்தவர் ஒரு ஆளுநர். ஆனால் தில்லைக் கோவிலில் ஆளுநரை விட அதிகாரம் படைத்தவர்கள் தீட்சதப் பார்ப்பனர்கள். கோவிலுக்குள் எந்த சட்டமும் செல்லாது என்று உச்சநீதிமன்றத்திலே அவர்கள் தீர்ப்பை வாங்கி வைத்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் பாஜகவின் தலைவராக இருக்கக் கூடிய அண்ணாமலை, தமிழிசைக்கு ஏற்பட்டிருக்கிற இந்த அவமானம் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மாறாக இதிலும் தமிழ்நாடு அரசை குறை கூறி 'சம்பவம் நடந்தது உண்மையா என்று விசாரிக்க வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு அரசுக்குத் தான் உண்டு என்று தமிழ்நாடு அரசை குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறார். தமிழிசைக் கூறியதைக் கூட அவர் நம்புவதற்கு தயாராக இல்லை. இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

ஆகமக் கோவில்களில், இன்றைக்கும் பெண்கள் அர்ச்சகர்களாக அனுமதிக்கப்படுவ தில்லை. அவர்கள் என்னதான் வேத சாஸ்திரங்களை கரைத்துக் குடித்திருந்தாலும் கூட பெண்களுக்கு அந்த அனுமதி கிடையாது. அவர்கள் தீட்டு பட்டவர்களாகவே கருதப்படு கிறார்கள். சமூகத்தில் சரி பாதியாக இருக்கக் கூடிய பெண்களை ஒரு மதம் இன்னும் தீண்டப்படாத வர்களாக கோவில் வழிபாடுகளுக்குள் ஒதுக்கியே வைத்துள்ளது. சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் போகலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்த பிறகும் கூட அதை நிறைவேற்ற முடியாத அளவிற்கு பார்ப்பன அதிகார செல்வாக்கு நாட்டில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் கூட இன்னமும் பெண்கள் உறுப்பினர் ஆக முடியாது. அதன் முன்னணி அமைப்புகளில் வேண்டுமானால் பெண்கள் ‘துர்கா வாகினி’ அமைப்பில் சேர்ந்து துப்பாக்கிப் பயிற்சி எடுக்கலாம். ஆனால், சுயம் சேவக்குகளாக பெண்கள் வர முடியாது. இன்று வரை அந்த தடை நீடித்துக் கொண்டிருக்கிறது. சாகாக்களில் நீங்கள் பார்க்க முடியும், எந்த ஒரு பெண்ணும் சாகாவில் அணிவகுத்து வருவதற்கான வாய்ப்பே கிடையாது.

வாடிகன் நகரத்தில், 86 வயது நிறைந்த போப் கடந்த வாரம் ஒரு பேட்டியை அளித்திருக்கிறார். “வாடிகனில் தங்களுடைய கிறிஸ்துவ மதத்தில், பெண்களுக்கு உயரிய பதவியையும், சம உரிமை களையும் வழங்குவதற்கு தாங்கள் தயாராகி விட்டதாகவும், அதற்கான புதிய சட்டங்களை உருவாக்கி விட்டதாகவும்” அவர் கூறியிருக்கிறார். “இனி வாடிகன் போப்பைத் தேர்வு செய்யும் குழுவில் இதுவரை ஆண்கள் மட்டும் தான் இருந்து வந்திருக்கிறார்கள். இப்போது பெண்களும் அந்தக் குழுவில் இடம் பெறுவார்கள். பெண்களும் போப் ஆகின்ற உரிமை விரைவில் வந்து சேரும்” என்று அவர் கூறியதோடு தன்னுடைய நிர்வாகத்தில் உயர் பதவிகளில் பெண்களை நியமித்து வருவதாகவும் தற்போது வாடிகனில் இரண்டு பெண்கள் அறிஞர் களாக இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

கிறிஸ்துவ மதம் காலத்தின் தேவைக்கேற்ப தன்னை வளர்த்துக் கொண்டு பெண்களுக்கு சம உரிமை வழங்குவதற்கு முன் வருகிறது. அந்த மதம் இந்த நாட்டில் இந்துக்களின் பார்வையில் தேச விரோத மதம். ஆனால், சமூகத்தில் சொந்த இந்து மதத்தில் சரி பகுதியாக இருக்கக் கூடிய பெண்களை கவர்னராக இருந்தாலும் அவமானத் துள்ளாக்குவது வேத மதம்; வைதீக மதம்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It