1981 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் இந்திராகாந்தி அவர்களால் சேலம் இரும்பாலை திறக்கப்பட்டது. வெற்றிகரமாக லாபத்தில் இயங்கிவரும் இந்த நிறுவனத்தை கடந்த பார்ப்பன பி.ஜே.பி. அரசு தனியார்மயமாக்க எவ்வளவோ முயற்சியெடுத்தும், முற்போக்கு இயக்கங்களின் இடைவிடாத போராட்டத்தால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. இரும்பாலை நிறுவனத்தில் மொத்தம் 1700 ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். இவர்களில் பார்ப்பனர்கள் 200 பேர் மட்டுமே! எண்ணிக்கையில் பார்ப்பனர்கள் குறைவாகவே இருந்தாலும், முக்கியமான தலைமை நிர்வாகப் பொறுப்புகளில் இவர்கள் பதவி வகிப்பதால் சேலம் இரும்பாலை வளாகம் முழுவதும் பார்ப்பன வர்க்கத்தின் அதிகாரம் தூள் பறக்கிறது.
இரும்பாலைக்குள் செல்வதற்கு மொத்தம் மூன்று நுழைவாயில்கள் உள்ளன. முதல் நுழைவாயில் (கேட் எண்:1) அழகு சமுத்திரத்திலும், இரண்டாவது நுழைவாயில் (கேட் எண்:2) மோகன் நகரிலும், மூன்றாவது நுழைவாயில் (கேட் எண்:3) கணபதி பாளையத்திலும் அமைந்துள்ளன. மோகன் நகரில் இரும்பாலை வளாகத்தையொட்டி வெளியே இரண்டாவது நுழைவாயில் அருகில் பார்ப்பனர்களால் ஐந்தாண்டுகளுக்கு முன்னால் விநாயகன் கோவில் ஒன்று கட்டப்பட்டது. ஆரம்பத்தில் சிறிதாக கட்டப்பட்ட இந்தக் கோவில் நாளடைவில் மிகப் பெரிய அளவில் இரும்பாலை உற்பத்திக்காக இறக்குமதி செய்யப்படும் பொருட்களைப் பயன்படுத்தி பிரமாண்டமாக உருமாறி விட்டது. பெயருக்குத்தான் கோவில் வெளியே. ஆனால் இரும்பாலைக்குள்ளே இருந்துதான் இந்த விநாயகன் கோவிலுக்கு மின்சாரம். தண்ணீர் விநியோகமெல்லாம்!
விநாயகன் கோவிலுக்கு பூஜை, அபிஷேகம் போன்ற பித்தலாட்டங்களை செய்து வயிறு வளர்ப்பது பார்ப்பன அர்ச்சகர்கள் தான். கோயிலுக்கு வரும் இளம் பெண்கள் மற்றும் திருமணமான குடும்பப் பெண்களிடம் பக்திப் போர்வையைப் பயன்படுத்தி பார்ப்பன அர்ச்சகர்கள், கோயிலுக்குப் பின்புறம் இருக்கும் ஓய்வு விடுதியில் எத்தனையோ பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்திருக்கிறார்கள். இந்த ‘பகீர்’ உண்மைகளை ‘மன்மதக் குருக்கள்’ என்ற தலைப்பில் நக்கீரன் ஏடு, 2003 ஆம் ஆண்டு முதன் முதலில் அம்பலப்படுத்தியது. (அப்போது தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில், இந்த விநாயகன் கோவில் எதிரிலேயே மேடை அமைக்கப்பட்டு கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகப் பேச்சாளர் சீ. அன்பு ஆகியோர் விநாயகன் கோவிலில் நடக்கும் அக்கிரமங்களை தோலுரித்தனர்)
இந்த ஆபாசம் போதுமா? இன்னும் கொஞ்சம் வேண்டுமா? என்பதைப்போல் விநாயகன் கோவிலுக்குப் பின்புறமாக ‘கல்கி பகவான்’ ஆசிரமம் ஒன்று பார்ப்பனர்களால் அமைக்கப்பட்டு, இரவு நேரங்களில் ஆண்-பெண்களின் கட்டிப்பிடி ஆபாச நடனங்களின் அரங்கேற்றம்! இப்படி நடக்கும் அசிங்கத்தைப் பொறுக்க முடியாத பொது மக்கள் சிலர் தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்களிடம் கல்கி பகவான் ஆசிரம லீலைகளைக் கூறி இதை தட்டிக் கேட்கும்படி வேண்டுகோள் வைத்தார்கள்.
கழகத் தோழர்கள் மிகவும் உன்னிப்பாக கல்கி பகவான் ஆசிரமத்தைக் கவனிக்கத் தொடங்கினார்கள். ஒருநாள் இரவு பத்து மணிக்கு தோழர்கள் நங்கவள்ளி அன்பு, பவளத்தானூர் தனசேகரன், மாரியப்பன் மூவரும் பக்தர்களைப் போல் ஆசிரமத்திற்குள் ஊடுருவினார்கள். தோழர்கள் அங்கே சென்றபோது ஆசிரமத்தின் தலைவன் உயரமான ஒரு நாற்காலியில் காஞ்சி சங்கரனின் பாணியில் அமர்ந்து கொண்டு, கீழே தரையில் அமர்ந்திருக்கும் பக்தர்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்தான். இவனுக்கு இருபது வயதுக்குள்தான் இருக்கும். இவன் ஒரு வடநாட்டுப் பார்ப்பன இளைஞன். இவனை பக்தர்கள் ததாஜி என்று அழைக்கிறார்கள். பக்தர்களில் பெரும்பாலும் நம் இளிச்சவாய் தமிழர்கள் தான்!
ததாஜியின் பேச்சு முழுக்க பகவத்கீதை, சமசுகிருதம், இராமன், இராமாயணம், கல்கி அவதாரம் என பார்ப்பன நச்சு விதைகளின் தூவலாகவே இருக்க, திடீரென்று ததாஜி “இன்று இரவு நாம் இங்கே ரொம்ப சந்தோஷமா இருக்கணும். அதற்கு நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ம்.. என்ன செய்யலாம்?” என்று யோசித்துவிட்டு “ஆனந்தமாக டான்ஸ் ஆடலாம்!” என்றான். உடனே அங்கேயிருந்த இசைக்கருவிகள் முழங்க, ஆண்களும், பெண்களும் குதியாட்டம் போடத் தொடங்கினார்கள். இவர்களுடன் ததாஜியும் ஆடினான்.
இதுதான் சமயம் என்று ததாஜியை நெருங்கிய கழகத் தோழர்கள் அப்பாவித் தனமாக பேசுவதைப்போல் ததாஜியிடம் பகுத்தறிவு வினாக்களை வீசினர். தோழர்களின் வினாக்களுக்கு விடையளிக்க முடியாமல் வாய்க்குழறியபடி எழுந்து ஓடி ஒரு அறைக்குள் புகுந்து கொண்டான் ததாஜி. அப்போது பார்ப்பனர் ஒருவர் தோழர்களிடம் வந்து “நீங்கள் யாரென்று தெரியவில்லை. இங்கே நடந்தவைகளை வெளியில் யாரிடமும் சொல்லிவிடாதீர்கள். உங்களுக்கு எனன வேண்டுமென்று சொல்லுங்கள். ஏற்பாடு செய்கிறோம்” என்று பேரம் பேசினார். “பக்தியின் பெயரால் இதுபோன்ற ஆபாசங்கள் இனியும் தொடர்ந்தால் நீங்கள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள்!” என தோழர்கள் கடுமையாக எச்சரிக்கை விடுத்துவிட்டு வந்தனர். தண்ணீர், மின்சாரமும் இரும்பாலை வளாகத்திலிருந்துதான் கல்கி பகவான் ஆசிரமத்துக்கு விநியோகிக்கப்படுகிறது.
இரண்டாவது நுழைவாயில் மோகன் நகரில் விநாயகன், கல்கி பகவான் கோவில்களை பார்ப்பனர்கள் கட்டி மக்கள் கூட்டத்தை வரவழைப்தைப் பார்த்த பார்ப்பனரல்லாத சிலர், இரண்டு வருடங்களுக்கு முன்பு முதல் நுழைவாயில் அழகு சமுத்திரத்தில் இரும்பாலை வளாகத்தையொட்டி 27 அடி உயரத்தில் முனியப்பன் சிலை ஒன்றை அமைத்தனர். இந்த சிலையின் கையில் வைப்பதற்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் 1000 கிலோ எடையுள்ள எவர்சில்வர் வாள் ஒன்று இரும்பாலையில் தயாரிக்கப்பட்டு, அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
தற்போது உயர்நீதிமன்ற உத்தரவின்படி நாடு முழுவதும் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. சாலையோரத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான வீடுகள், கடைகளை இரும்பாலை பகுதிகளில் கடந்த செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதியன்று அதிகாரிகள் அகற்றினர். மோகன்நகர் விநாயகன் கோவில். கல்கி பகவான் ஆசிரமம் மற்றும் முனியப்பன் சிலையும் சாலையோர ஆக்கிரமிப்பில் இருப்பதால் அதிகாரிகள் இவை மூன்றையும் இடித்து தள்ள முடிவெடுத்தனர். ஊர் பொதுமக்கள் முனியப்பன் சிலையை இடிக்க வேண்டாமென்றும், சிலையை கிரேன் மூலம் அப்படியே வேறுஇடத்திற்கு உடைக்காமல் எடுத்து செல்வதாக வேண்டினார்கள். அதற்கு அதிகாரிகளும் சம்மதித்தனர். ஆனால், சிலையை தூக்க முடியாததால், இரண்டு பொக்லைன் இயந்திரங்களால் முனியப்பன் சிலை கீழே தள்ளப்பட்டு இரண்டு மூன்று துண்டுகளாக சிதறி விழுந்தது. கூடியிருந்த பக்தர்கள் ‘முனியப்பா முனியப்பா’ என்று கதறியழுதனர். முனியப்பனால் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை.
மோகன்நகர் விநாயகர் கோவிலும் இடித்துத் தள்ளப்பட்டு விட்டது. ஆனாலும், இரும்பாலை வளாகத்துக்குள்ளேயே சிறிய அளவில் தகரக்கூரை அமைத்து அதனடியில் மோகன் நகர் விநாயகனை வைத்து கோவில் உருவாக்கிவிட்டார்கள். இங்கேயே பூஜை, அபிஷேகம் என்று செய்வதால் பார்ப்பனர்களின் வருமானத்திற்கு எந்தப் பிரச்சினையுமில்லை. இரும்பாலை வளாகத்துக்குள்ளேயே பெரிய அளவில் விநாயகன் கோவில், கல்கி பகவான் ஆசிரமம் கட்டுவதற்கு பார்ப்பனர்களால் தற்போது ஆலோசனை நடைபெற்று வருகிறதாம்.
இரும்பாலை ஊழியர்களில் ‘முத்தமிழ் மன்றம்’ என்ற அமைப்பு சில ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது, அவ்வப்போது சில தமிழ் அறிஞர்களை அழைத்து வந்து அற்புதமான நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம். இந்த அமைப்பிலும் ஊடுருவிய பார்ப்பன அதிகாரிகள், சமீபத்தில் பரமஹம்ச ஸ்ரீ நித்யானந்த சுவாமிகள் என்கின்ற பார்ப்பன துறவி(?)யை அழைத்து வந்து ஆன்மீகச் சொற்பொழிவை நடத்தினார்கள். ஆன்மீகச் சொற்பொழிவு நடப்பது இது தான் முதல்முறையாம். மன்ற உறுப்பினர்கள் யாரையும் கலந்தாலோசிக்காமலேயே இந்த நிகழ்ச்சியை பார்ப்பன உறுப்பின அதிகாரிகள் நடத்திவிட்டார்களே என்று மற்ற உறுப்பினர்கள் புலம்புகிறார்கள்.
இரும்பாலை வளாகத்திற்குள் விநாயகன் கோவில் பெரிய அளவில் கட்டப்படுமானால் முஸ்லீம், கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்த ஊழியர்களும் தங்கள் மதக் கடவுள்களுக்கு கோவில் அமைப்பதென முடிவு செய்திருக்கிறார்கள். அமைதியாக இருக்கும் இரும்பாலைக்குள் மதக் கலவர அபாயங்கள் ஏற்படும் சூழ்நிலைகள் தற்போது உருவாகி வருகிறது.
மத்திய அரசு உடனடியாக தலையிட்டு பார்ப்பனர்களின் பிடியில் சிக்கித் திணறும் சேலம் இரும்பாலையை சீர்படுத்த வேண்டும். இல்லையென்றால்... இரும்பாலை வளாகத்துக்குள் பார்க்கும் இடமெல்லாம் கோவில்களே காட்சியளிக்கும்; இயந்திரங்களின் ஓசைகளுக்குப் பதிலாக வேத மந்திரங்களும், பஜனை கூச்சல்களுமே ஒலிக்கும்!