புத்தர் விழா கொண்டாடி, அதில் விநாயகன் சிலைகளை பெரியார் உடைக்கச் சொன்னார் என்ற வரலாற்றை விடுதலை இராசேந்திரன் சுட்டிக் காட்டினார்.

ஆக. 31 மாலை 4 மணியளவில் விநாயகன் சிலை ஊர்வலங்களை நிறுத்தக் கோரி பெரியார் கைத்தடி ஊர்வலம் நடத்தி கைது செய்யப்பட்டு திருவல்லிக்கேணி சமூக நலக் கூடத்தில் கழகத்தினர் வைக்கப்பட்டிருந்தனர். அப்போது தோழர் களிடையே பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேசினார். அவரது உரை:

விநாயகன் சதுர்த்தி பக்தர்கள் கொண்டாடும் மதப் பண்டிகை. அது நடந்து முடிந்து விட்டது. அதற்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்து மதப் பண்டிகைகளை கொண்டாடாதீர் என்று பரப்புரை செய்கிறோம். கொண்டாடுவோரை எதிர்த்துப் போராடுவது இல்லை. இன்று நடப்பது மதத்தை அரசியலாக்கும் ஊர்வலம். சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் அரசியல் ஊர்வலம், மதச் சார்பின்மைக்கு எதிராக நாட்டை இந்துக்களின் நாடு என்று கூறி சிறுபான்மை மக்களையும், மதச்சார்பின்மை யாளர்களையும் மிரட்டிப் பார்க்கும் ஊர்வலம். எனவேதான் நாம் பெரியார் கைத்தடிகளை ஏந்தி வீதிக்கு வந்து போராடினோம். கடந்த 15 ஆண்டுகளாக இந்த எதிர்ப்பு ஊர்வலத்தை நாம் நடத்துகிறோம். இந்த ஆண்டு மதத்தை அரசியலாக்காதே என்ற முழக்கத்தோடு, மக்கள் வாழ்வுரிமைகளை பறித்தவர்கள் நடத்தும் விநாயகன் சிலை ஊர்வலங்களை புறக்கணியுங்கள் என்று ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு வேண்டுகோள் முழக்கத்தையும் இணைத்திருக்கிறோம்.

நீட் தேர்வு திணிப்பு, இந்தி திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு, ஜி.எஸ்.டி. வரி திணிப்பு, விவசாயிகளுக்கு இழைக்கும் துரோகம் என்று நடுவண் பா.ஜ.க. ஆட்சி, தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளைப் பறித்து வருகிறது.இந்த உரிமை பறிப்புக்கு ஆதரவாக ‘வெண் சாமரம்’ வீசிக் கொண்டு பா.ஜ.க.வின் ஊதுகுழலாக நிற்கும் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்ற அமைப்புகள்தான் இந்த விநாயகன் சிலை ஊர்வலங்களை ஒருங்கிணைத்து வருகின்றன. மோடி ஆட்சியின் திட்டங்களால் பாதிக்கப்படுகிற மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள். பா.ஜ.க. சங் பார்வையில் இவர்களும் ‘இந்துக்கள்’தான். இந்துக்களின் வாழ் வுரிமைகளை பார்ப்பன மேல்வர்க்க நலன்களுக்காக பறித்துவிட்டு சிலை தூக்குவதற்கு மட்டும் ஒடுக்கப் பட்ட ‘இந்து’க்களை பயன்படுத்துவது ஏன் என்று கேட்கிறோம். அதுதான் இந்தப் போராட்டத்திற்கு நாம் கூடுதலாக முன் வைத்துள்ள முழக்கம்.

பெரியார் 1953ஆம் ஆண்டு நடத்திய விநாயகன் சிலை உடைப்புப் போராட்டம் வர்ணாஸ்ரம எதிர்ப்புக்கான போராட்டம்தான். 1952இல் தமிழ்நாட்டில் தேர்தலில் போட்டியிட்டு மக்களை சந்திக்காமல் கொல்லைப்புற வழியாக பார்ப்பனர் இராஜகோபாலாச்சாரி முதல்வரானார். பார்ப்பன மேலாதிக்கத்தை நிறுவி வர்ணாஸ்ரமத்தை காப்பாற்ற வும் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி வாய்ப்புகளைப் பறிப்பதிலும் தீவிரம் காட்டினார். இன்றுமோடி ஆட்சி அமுல்படுத்திவரும் ‘வர்ணாஸ்ரம’ கொள்கைகள் தான் அன்றைக்கு இராஜகோபலாச்சாரியின் திட்டங்களாகவும் இருந்தன என்று கூறலாம்.

பெரியார் வெகுண்டெழுந்து போராடினார். அந்த வரலாற்றுப் பின்னணியில் பெரியார் நடத்திய போராட்டங்களில் ஒன்றுதான் விநாயகன் சிலை உடைப்பு கிளர்ச்சி. “வர்ணாஸ்ரம முறையை ஜனநாயகத்தின் பெயரால் நிலைநாட்ட முனைகிறார் ஆச்சாரியார். இதோ, கடைசிச் சிகிச்சையாக கணபதி உருவ பொம்மையை 27.5.1953 அன்று மாலை 6.30 மணிக்கு தூள்தூளாக்கி மண்ணோடு மண்ணாய் கலக்கி விடுங்கள்” என்று அறிவித்தார் பெரியார். விநாயகன் எதிர்ப்புக்கு குறியீடாக பெரியார் புத்தரை முன் வைத்தார். “புத்தர் விழாவைக் கொண்டாடி பிள்ளையாரை விழாவில் உடையுங்கள்” என்றார். “கோயில்களில் இருக்கும் விநாயகர் சிலைகளை தூக்கி வந்து பெரியார் உடைக்கச் சொல்லவில்லை; கடைகளில் விநாயகன் பொம்மைகளை காசு கொடுத்து வாங்கி உடையுங்கள்” என்றார். “அரசு தடை போட்டால் தடையை மீற வேண்டாம். வீடுகளில், கடைகளில்,சொந்த இடங்களில் உடைத்து மண்ணில் கலந்து விடுங்கள்” என்றார். இப்போது இந்து முன்னணியினர் இரசாயன விநாயகன் சிலைகளை கடலில் கரைக்கச் சொல் கிறார்கள். நீர் நிலைகளை மாசுபடுத்துகிறார்கள். ஆனால் விநாயகன் சிலையை உடைக்கச் சொன்ன பெரியார், மண் பொம்மைகளை உடைத்து தூளாக்கி மண்ணோடு மண்ணாகக் கலக்கி விடுங்கள் என்று கூறியிருக்கிறார். திருச்சியில் பெரியாரே சிலையை உடைத்தார். பார்ப்பனர்களும், பார்ப்பனியத்துக்கு பலியான ‘சூத்திரர்களும்’ இதற்கு எதிர்ப்பாக பெரியார் உருவப்படத்தை எரிக்கிறார்கள் என்று செய்திகள் வந்தன. அப்போது பெரியார், “எரிப்பதற்கு என்னுடைய படத்தையும் அதற்கான செலவுத் தொகையையும் நானே தருகிறேன்” என்று ‘விடுதலை’ நாளேட்டில் அறிவித்தார். எதிரிகளின் எதிர்ப்பு வழியாகவே தனது கொள்கைகளை மக்களிடம் கொண்டு சென்றவர் பெரியார்.

1971ஆம் ஆண்டு சேலத்தில் பெரியார் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தில் இராமன், விநாயகன், கிருஷ்ணன் ஆபாச பிறப்புகளை ஓவியங்களாக எடுத்துச் சென்றபோது சிலர் ஊர்வலத்தினர் மீது செருப்பு வீச, அதே செருப்பை பெரியார் தொண்டர்கள் எடுத்து, இராமன், விநாயகன், கிருஷ்ணன் மீது அடித்தார்கள். அதற்காக பெரியார் படத்தை சில ஊர்களில் எதிர்ப்பாளர்கள் எரித்தார்கள். செருப்பால் அடித்து போராட்டம் நடத்தினார்கள். அப்போதும் பெரியார், “நானே எனது படத்தையும் செருப்பையும் பாதி விலைக்கு தருகிறேன். நன்றாக அடியுங்கள். உங்கள் எதிர்ப்பு வழியாகவே எனதுகொள்கைகள் பரவும்” என்று அறிக்கை விடுத்தார்.

விநாயகன் சிலை உடைப்புப் போராட்டத்தை புத்தர் விழாவோடு பெரியார் ஏன், இணைத்தார் என்பதை நாம் கருதிப் பார்க்கவேண்டும். புத்த மார்க்கத்தில் மிகவும் போற்றப்படுவது அரச மரம். அந்த மரத்தின் கீழ் தான் புத்தருக்கு அறிவு ஒளி கிடைத்தது என்று ஒரு கதையும் உண்டு. எனவே அரசமரத்தடிகளில் புத்தர் சிலைகள் வைக்கப்பட் டிருந்தன. புத்தமதத்தை வன்முறை ஊடுருவல் சூழ்ச்சி முறைகளில் ஒழித்த பார்ப்பனர்கள், மரத்தின் கீழே அப்போது வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலைகளை அழித்து, அங்கே விநாயகன் சிலைகளை வைத்தார்கள் என்றும் ஆய்வுகள் உண்டு.

நாம் சென்னையில் நடத்திய மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில்கூட இதுபற்றி விவாதித்தோம். அடுத்த ஆண்டு புத்தர் விழாக்களை அதாவது அம்பேத்கர் - பெரியார் - புத்தரைப் பார்த்த அதே கண்ணோட்டத்தில் புத்தர் விழாக்களை நடத்தி, புத்த மார்க்கத்தை பார்ப்பனர் வீழ்த்திய வரலாறுகளை விளக்கி, அதற்குப் பிறகு விநாயகன் சிலை ஊர்வல எதிர்ப்பை நடத்தலாம் என்று கூட பேசினோம். அதேபோல் புத்த மார்க்கம் தழுவிய புரட்சியாளர் அம்பேத்கர், எடுத்த 22 உறுதிமொழி களில் இராமன், கிருட்டிணன், விநாயகன் ஊர்வலங்களை வணங்க மாட்டேன் என்பதும் அடக்கம். அந்தக் கருத்துகளை துண்டறிக்கைகளாக அச்சிட்டு ஒடுக்கப்பட்ட மக்களிடம் வழங்கும் இயக்கத்தையும் நடத்துவது குறித்தும் விவாதித்தோம்.

பெரியார், புத்தரை மிகவும் மதித்த தலைவர், புத்தரின் விழாக்களில் பங்கேற்றுப் பேசியிருக்கிறார். வரலாற்றில் வர்ணாஸ்ரமத்துக்கு எதிராக மக்கள் இயக்கத்தைத் தொடங்கி வைத்தவர் புத்தர்தான்.

புத்தர் இயக்கம் முன் வைத்த மூன்று முழக்கங்களை பெரியார் விரும்பி ஏற்று, அதையே தனதுஇயக்கத்துக்கான முழக்கமாகவும் ஆதரித்துப் பேசினார். ‘புத்தம் சரணம்கச்சாமி; தம்மம் சரணம் கச்சாமி; சங்கம் சரணம் கச்சாமி’ - இதுதான் புத்தர் முன் வைத்த முழக்கம்.

“அறிவைப் (புத்தம்) போற்றுவோம்;

சமநீதி தத்துவத்தைப் (தம்மம்) போற்றுவோம்;

இயக்கத்தைப் (சங்கம்) போற்றுவோம்”

- என்பதே இந்த முழக்கங்கள் முன் வைத்த கருத்து.

“பிராமணனைப் போற்று; அவன் கூறும் கடவுளுக்கு பயந்து அதற்கான கடமைகளை மேல் உலகம் போவதற்கான வேத சடங்குமுறைகளை பின்பற்று” என்று வேதகாலப் பார்ப்பனியம் மக்களை சுரண்டிய காலத்தில் புத்தர் இந்த புரட்சி முழக்கங்களை முன் வைத்ததை நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அந்தக் காலத்தில் இது புரட்சியின் குரல்தான்!

புத்தர் செய்த ஒரே தவறு - பார்ப்பனர்களை அவர்களும் ‘தம்மத்தை’ ஏற்பதாகக் கூறியதை ஏற்று மனித நேயத்தோடு தனது இயக்கத்தில் சேர்த்ததுதான். பார்ப்பன ஊடுருவலே புத்த மார்க்கத்தின் கொள்கைகளை சிதைத்தது. எந்த மண்ணில் புத்த மார்க்கம் வேர் விட்டதோ, அந்த மண்ணிலே துடைத் தெறிந்து அழித்தது. இந்த வரலாற்றுப் படிப்பினை தான் பெரியாரை விழிக்கச் செய்தது. திராவிடர் கழகத்தில் பார்ப்பனர்களுக்கு இடமில்லை; கொள்கையை ஏற்பவர்கள் இருந்தால் வெளியி லிருந்து தாராளமாக ஆதரிக்கலாம் என்பதில் பெரியார் உறுதியாக இருந்தார். அத்தகைய ஊடுருவல் புத்த மார்க்கத்தில் நிகழ்ந்ததுபோல் நடந்து விடக் கூடாது என்பதற்குத்தான், ‘திராவிடர்’ என்ற குறியீட்டுச் சொல்லை இயக்கத்தின் அடையாள மாக்கினார். “கடவுள் இல்லை இல்லவே இல்லை; கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்; பரப்பியவன் அயோக்கியன்; வணங்குகிறவன் காட்டுமிராண்டி” என்ற சமரசமற்ற முழக்கங்களை தனது சிலைகளுக்கு கீழேயும் கல்வெட்டுகளாகவும் பெரியார் பதியச் சொன்னார் என்பதைப் பார்க்கும்போது, புத்த மார்க்கத்துக்கு நேர்ந்த விபத்து, திரிபுவாதங்கள் எதிர்காலங்களில் தனது கொள்கைகளுக்கும் நேர்ந்துவிடக் கூடாது என்ற கருதிதான் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

குழந்தைகளுக்கு பெரியார் சூட்டிய பெயர்களைப் பார்த்தாலே தெரியும். சித்தார்த்தன், புத்தன், கவுதமன், அசோகன், கவுதமி இப்படிப்பட்ட பெயர்களைத் தான் ஏராளமாக சூட்டியிருக்கிறார். புத்த மார்க்கம் பெரியாரை எப்படி ஈர்த்திருந்தது என்பதற்கு இவையெல்லாம் சான்றுகளாக நாம் கருதலாம்.

கி.மு.563இல் கபிலவஸ்துவில் பிறந்த சித்தார்த்தரின் தந்தை சுத்தேதனர், அப்பகுதியின் அரசர் என்றாலும் மனுதர்ம விதிப்படி ஆட்சி செய்யும் சத்திரியர் குலம் அல்ல என்றும், அவர் ஆட்சி செய்த பகுதி முடியரசாகவோ அல்லது குடியரசாகவோ நடக்கவில்லை என்றும் சுழற்சி முறையில் ஆட்சி அதிகாரம் நடந்தது என்றும் அம்பேத்கரும் தேவி பிரசாத் சட்டோபாத்யா போன்ற இந்திய தத்துவ ஆய்வாளர்களும் கூறுகிறார்கள். புத்தர் பிறந்த இனக்குழுவான சாக்கியர் குலம் சத்திரியர் வம்சம் அல்ல என்கிறார்கள்.

அப்போது இந்தியா என்ற நாடு இல்லை. இப்போதுள்ள வடநாடு தென்னாட்டுப் பகுதிகளில் வாழ்ந்தவர்கள் நாகர்கள். அவர்கள்தான் திராவிடர்கள். இந்தியா முழுதும் பேசப்பட்ட மொழி தமிழ் என்கிறார் புரட்சியாளர் அம்பேத்கர். தென் பகுதியில் நாகர்கள் சமஸ்கிருதத்தை ஏற்க மறுத்ததால் திராவிடர்கள் என்ற அடையாளத்தைத் தக்க வைத்துக் கொண்டனர் என்றும் அம்பேத்கர் கூறுகிறார். புத்தர் பிறந்த சாக்கியர் குலம், நாகர்கள் மரபு வழிப்பட்டவர்கள். அவர்கள் பேசிய பாலி மொழி, திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். சாக்கியர்கள், “பிராமணர்களை வணங்குவதோ, மதிப்பதோ இல்லை. தானம் கொடுப்பதும் இல்லை” என்று கடும் சினத்துடன் அம்பக்தன் என்ற ‘பிராமணன்’ புத்தரிடம் கேட்டதாகவும் புத்தரின் சாக்கியர் குலம் இழிவானது என்று கூறியதாகவும் பவுத்த கருத்துகளின் தொகுப்பான ‘திரிபிடகம்’ கூறுகிறது. புத்தரின் சாக்கிய குலம் வர்ணாஸ்ரம தர்மப்படி பார்ப்பன மேலாதிக்கத்தை எதிர்த்து வந்திருக்கிறது என்ற முடிவுவக்கு வர முடிகிறது. திராவிட சாக்கிய மரபில் பிறந்த புத்தர், ஒரு ‘சூத்திரர்’ என்று வரலாற்றாளர்கள் கூறுகிறார்கள்.

புத்தர் அறிவைத் தேடி புறப்பட்டபோது அவருக்கு வயது 29. அவர் துறவுக்குக் காரணமாக சொல்லப்படும் கதையை அம்பேத்கர் மறுக்கிறார். ஒரு நோயாளி,  ஒரு முதியவர், ஒரு பிணம். இதைப் பார்த்து கவலைப்பட்ட புத்தர் துன்பங்களிலிருந்து விடுதலை பெற அறிவைத் தேடும் முயற்சியாக துறவியாக முடிவு செய்தார் என்ற கதை அறிவுக்குப் பொருந்தக் கூடியதாக இல்லை. 29 வயது வரை இத்தகைய துன்பத்துக்கு உள்ளாகும் மனிதர்களை புத்தர் சந்திக்காமலேயே இருத்திருப்பாரா? அப்படி இருந்திருக்க முடியாது. புத்தரின் துறவுக்கு வரலாற்று ரீதியான காரணத்தை அம்பேத்கர் விளக்குகிறார்.

(தொடரும்)

Pin It