தஞ்சை பெரிய கோயிலின் குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும் என்ற தமிழர்களின் கோரிக்கையை பார்ப்பன புரோகிதர்கள் எதிர்க்கிறார்கள். சமஸ்கிருத மந்திரங்கள் மட்டுமே சக்தி வாய்ந்தவை. தமிழுக்கு அந்த சக்தி இல்லை என்று தொலைக்காட்சி விவாதங்களில் வாதிடுகிறார்கள். காலங்காலமாக சமஸ்கிருதத்தில் தான் ‘கும்பாபிஷேகம்’ நடக்கிறது என்றும் வாதாடுகிறார்கள். திருவள்ளுவருக்கு காவி உடை போர்த்தி பெரியாரைத் தமிழ் விரோதி என்றும், தாங்களே தமிழ்ப் பற்றாளர்கள் என்றும் நீட்டி முழங்கி வந்த பா.ஜ.க.வினர், தமிழில் குடமுழுக்கு நடத்துவது குறித்து மவுனம் சாதிக்கிறார்கள். தங்களது சமஸ்கிருதப் பார்ப்பனப் பற்றை வெளிக் காட்டாமல் மூடி மறைத்துக் கொள்கிறார்கள். இந்த நிலையில் தமிழ் வழிபாடுகள் தான் நீண்டகால மரபாக இருந்திருக்கிறது என்றும், சிவன், சக்தி, திருமால் வழிபாடுகள் வேதத்திலேயே இல்லாத போது எப்படி சமஸ்கிருத வழிபாடு இருந்திருக்கும் என்றும் தமிழ் ஆய்வாளர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பார்ப்பனர்களிடமிருந்து பதில் இல்லை. தமிழ் வழிபாடு குறித்து பல ஆய்வு நூல்களை எழுதிய மறைந்த கு.ச.ஆனந்தன் எழுதிய கட்டுரையை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்கிறது.
சிவன், திருமால், சக்தி வழிபாடுகள் தமிழகத்தில் சங்க காலத்திற்கு முன்பிருந்தே தமிழ்த் துதி முறைமையுடன் நடைபெற்று வந்தன. அத் தெய்வங்கள் வேதங்களில் இல்லை. தமிழ் வழிபாட்டு நூலான ‘மூத்த திருப்பதிகம்’ பாடிய காரைக்கால் அம்மையார் தமிழிலேயே வழிபட்டு “முக்தி”யடைந்தார். அவர் அய்ந்தாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்தவர். 7 முதல் 12 ஆம் நூற்றாண்டு வரை தமிழகத் திருக்கோயில்களில் தேவாரத் திருப்பதிகங்களும் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தங்களும் ஓதப்பட்டன என்பதற்குப் பல இலக்கிய, கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. பத்து அல்லது பதினோராம் நூற்றாண்டில் ஒன்பது தமிழ்ப் புலவர்களால் ‘திருவிசைப்பா’ என்ற அரிய தமிழ் வழிபாட்டு நூல் எழுந்தது.
திருமந்திரம், தேவாரங்கள், திருவாசகம், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தங்கள் முதலியவற்றில் உள்ள தெய்வத் தமிழ்ப் பாடல்களும் மற்ற பக்திப் பனுவல்களில் உள்ள இறைப்பாட்டுக்களும் வெறும் இலக்கியங்களல்ல. தமிழ் வழிபாட்டு முறை நடப்பிலிருந்ததை விளக்கும் ‘தமிழ் வாய் மந்திரங்களும் மெய்யுணர்வுக் கருத்துகளும்’ ஆகும். அவை வடமொழி ஆகமங்களுக்கு அப்பாற்பட்டு தமிழ்ப் பண்பாட்டின் சிறப்புக் கூறாக மலர்ந்து நெடுங்காலமாக வளர்ந்தவை.
தமிழில் அர்ச்சனை செய்யக் கூடாது என்று வலியுறுத்துபவர்கள் அது ஆகமங்களுக்கு எதிரானது என்று வாதாடுகின்றனர். ஆகமங்கள் என்பவை யாரால் எப்போது எந்நிலையில் எழுதப்பட்டவை என்பதை யாரும் வரலாற்றின் அடிப்படையில் தக்க சான்றுகளோடு கூறுவதில்லை.
ஆகமங்களில் சைவ ஆகமம், வைணவ ஆகமம், சாந்தாகமம் என்பன போன்ற அந்தந்த கடவுளர்க்கு ஏற்ப பல பிரிவுகள் உண்டு. சிவஆகமங்கள் 28. அவற்றில் காமிகாகமம், காரணாகமம், வாதுள ஆகமம், சுப்பிரபோத ஆகமம், புட்கர ஆகமம் ஆகிய ஐந்து மட்டுமே கிரந்த எழுத்தில் அச்சிடப்பட் டுள்ளன.
வைணவ ஆகமங்கள் 108. பாஞ்சராத்திரங்கள், பாகவத சாத்திரம் என இரு வகையாகப் பிரிக்கப்படுகின்றன. பாஞ்சராத்திர முறைப்படி சாதி, குலம், பிரிவு, பால், வருணம் ஆகியவைகளைக் கடந்து வீடுகளிலும் கோயில்களிலும் வழிபாடுகள் நடத்துவதற்கு எல்லா வைணவர்களும் உரிமை பெறுகின்றனர்.
மகராசன் குழுவின் அறிக்கை
தமிழக அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி மகராசன் ஆணைக் குழு தமிழகத் திருக்கோயில்களில் ஆகம விதிகள் மீறப்பட்ட துறைகள் பற்றி விரிவாகப் பேசுகிறது. சோழருக்குப் பின்னர் விசய நகரப் பேரரசு வரை 150 ஆண்டுகள் ஆகம முறைப்படி பல கோயில்கள் நடைபெறவில்லை. சிதம்பரம், திருவரங்கம் கோயில்களில் நீண்ட காலம் பூசைகள் இல்லை. பல கோயில்கள் ஆகம முறைக்கு முரணாகத் தோன்றியுள்ளன. ஆலய அமைப்பு முறைகளும் ஏழாம் நூற்றாண்டிலிருந்து மாறி வந்துள்ளன. எனவே ஆகமங்கள் படிதான் திருக்கோயில்கள் நடைபெறுகின்றன என்பது பொருந்தாது.
கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் சங்கராச்சாரியால் சிவன், திருமால், முருகன், கணபதி, சூரியன், சக்தி ஆகிய தெய்வங்களுக்குரிய வடமொழி வழிபாட்டு முறைகள் வல்லந்தமாகக் கொண்டு வரப்பட்டன. அதற்கு முன் தமிழிலேயே வழிபாடுகள் நடப்பிலிருந்தது.
அர்ச்சனை - பூசனை
ஒவ்வொரு பக்தரும் தம்முடைய நன்மைக்காக அர்ச்சகர் மூலமாக இறைஞ்சிச் சொல்லுகிற வேண்டுகோள்தான் அர்ச்சனை. அர்ச்சனை என்பது பரார்த்த பூசையின் ஓர் அங்கமல்ல. இது ஆகமங்களில் சொல்லப்படவில்லை. ஆகமங்களில் கூறப்பட்ட ‘அர்ச்சனா விதிப்படலம்’ பூசை விதி பற்றிக் கூறுகிறது. அதாவது குறித்த தெய்வத்திற்குச் செய்யப்படும் பூசை. இங்கு அருச்சனை என்றால் பூசனை என்று பொருள்.
அஷ்டோத்திரம் (108), திரிகதி (300), சகஸ்ரநாமம் (1008) ஆகிய மூவகை அருச்சனைகளும் புராணத் தன்மை கொண்டனவேயன்றி ஆகம - வேத அடிப்படைகளற்றவை. கணேச சகஸ்கர நாமம் கணேச புராணத்திலும் விஷ்ணு சகஸ்கர நாமம் விஷ்ணு புராணத்திலும் எடுக்கப்பட்டவை. இவை எந்த ஆகமத்திலும் இல்லை. அவற்றில் மந்திரங்கள் இல்லை. அவை வெறும் நாமவளிகளே (பெயர் உச்சரிப்புகள்). தமிழில் அருச்சனை செய்யக் கூடாது என எந்த ஆகமும் தடைவிதிப்ப தில்லை.
இந்தியாவிலுள்ள ஜோதி லிங்கங்கள் 12. அத்திருக்கோயில்களில் இராமேசுவரம் தவிர மற்றவற்றில் அனைவராலும் தாமே பூவிட்டுத் தொட்டு தம்மொழியில் போற்றி வணங்கி வழிபாடு நடைபெறுகின்றன. அருச்சகர்கள் துணையாக மட்டும் இருப்பர். கி.பி. 1644 வரை பழனித் திருக்கோயிலில் தமிழ் வழிபாடும் பண்டாரப் பூசனையும் நடைபெற்று வந்தன. திவான் இராமப்ப அய்யரால் அங்கு வடமொழி வழிபாடும் ஆகம முறையும் திணிக்கப்பட்டன.
(நந்தன் இதழில் : நவ.16-30, 1998இல் வெளி வந்த கட்டுரை)